நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கு குவியும் சர்வதேச ஆதரவு! | தினகரன் வாரமஞ்சரி

நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கு குவியும் சர்வதேச ஆதரவு!

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்துமீள்வதற்குப் பல்வேறு முயற்சிகளை அரசாங்கம்முன்னெடுத்து வருகின்றது. அரசியல் ரீதியாகஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ஒரு பக்கம் முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், கடன் மறுசீரமைப்பு, சர்வதேச நாணய நிதியம்உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சர்வதேச நாடுகளுடன் காணப்படும் நட்புறவுகளை வலுப்படுத்தி அவற்றின் பூரண ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முழு முயற்சியுடன் ஈடுபட்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.

பிரிட்டிஷ் மகாராணி எலிசபத் இறுதிச் சடக்கிற்காக பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரித்தானியாவின் மன்னர் சார்ள்ஸ், பொதுநலவாய செயலாளர் நாயகம் உள்ளிட்ட உலகத் தலைவர்களைச் சந்தித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு பல்வேறு உலகத் தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தி இலங்கையுடன் இணைந்து செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக ஜப்பான் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு சிங்கப்பூர் பிரதமரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு அழைப்பு விடுத்திருந்த ஜனாதிபதி, இரு நாட்டுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

அடுத்தவருடம் இலங்கையின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வருகை தருமாறும் சிங்கப்பூர் பிரதமருக்கு இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டது.

ஜனாதிபதியின் இந்த ஜப்பான் விஜயத்தின் போது அந்நாட்டின் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய சக்கரவர்த்தி நருஹிதோ ஆகியோரைச் சந்தித்து இரு நாட்டு ஒத்துழைப்புக்கள் குறித்துக் கலந்துரையாடியிருந்தார்.

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியைச் சந்தித்த போது, சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை அவர் வரவேற்றிருந்தார்.

வழங்குனர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்புப் பேச்சுவார்த்தையில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், இலங்கையின் கடந்த ஆட்சியில் பல முதலீட்டுத் திட்டங்களை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கம் தெரிவித்திருந்ததுடன், அந்த முதலீட்டுத் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் கூறியிருந்தார்.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் நீண்டகால நட்புறவு காணப்பட்ட போதும், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஜப்பானின் முதலீடுகள் நிராகரிக்கப்பட்டமையால் இரு நாட்டுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இருந்தபோதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னர் பிரதமராகப் பதவியேற்றிருந்த காலத்திலிருந்து இரு நாட்டுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தார்.

இது தொடர்பில் நடைபெற்ற தொடர்ச்சியான கலந்துரையாடல்களையடுத்து இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட விருப்பம் தெரிவித்த ஜப்பான், தொடர்ச்சியான உதவிகளை அறிவித்திருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவரான ஜே.ஆர்.ஜயவர்த்தன ஜப்பானோடு நெருக்கமான உறவுகளைப் பேணி வந்திருந்தார். இதனை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வலுப்படுத்தியிருப்பதாகவே தோன்றுகிறது.

ஜப்பான் மாத்திரமன்றி பல்வேறு உலக நாடுகளுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்புகளைப் புதுப்பித்து முடிந்தளவான ஒத்துழைப்புக்களைப் பெற்று வருகின்றார்.

பிரித்தானிய விஜயத்தின் போது அங்குள்ள புலம்பெயர்ந்துவாழ் இலங்கையர்களைச் சந்தித்து நாட்டின் முன்னேற்றத்துக்கும், பொருளாதார மீட்சிக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தக் கோரிக்கையை பல புலம்பெயர்ந்துவாழ் சமூகத்தினர் சாதகமாகப் பார்த்திருப்பதாகவே தெரிகிறது. ஏற்கனவே ஒரு சில புலம்பெயர் முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்த பேச்சுக்களை ஆரம்பித்துள்ளமை சிறந்ததொரு விடயமாகவே காணப்படுகிறது.

இது தவிரவும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச உதவி வழங்கும் அமைப்புக்களுடனான இணைப்புக்களும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55ஆவது வருடாந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.

கொவிட் 19தொற்று மற்றும் உக்ரைன் யுத்தம் காரணமாக ஏற்பட்ட உலகப் பொருளாதார ஸ்திரமின்மையின் பாதக விளைவுகள் காரணமாக உணவு, எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்நிலைமையானது பாரிய சுமையாக மாறியுள்ளதாக இம்மாநாட்டில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி சுட்டிக்காட்டத் தவறவில்லை.

'உணவு மற்றும் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பு நடுத்தர வர்க்கத்தினரின் வளர்ச்சியை குறைத்துள்ளதுடன், இந்து சமுத்திர பிராந்திய நாடுகளில் வசிக்கும் நடுத்தர குடும்பங்களின் வாழ்க்கை முறையில் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“பெரும் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில், நாட்டின் கடன் நிலைத்தன்மையை மீளமைப்பதற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் கடனை நிலைநிறுத்துவதற்கான இந்த முயற்சிகளுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

இந்த ஆழ மற்றும் அழுத்தமான மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் அதேவேளை சமூகத்தில் அதிகம் பாதிக்கப்படக் கூடிய தரப்பினர் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அதற்கேற்ப சமூகப்பாதுகாப்பிற்கு அதிக நிதி மற்றும் வளங்களை ஒதுக்குவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

எமது பொருளாதாரத்தை இன்று நாம் ஸ்திரப்படுத்தியுள்ளோம். நாம் எவ்வாறு இந்த நெருக்கடியை தீர்க்கிறோம் என்பதை பல நாடுகளைப் போலவே பங்குதாரர்களும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” என ஜனாதிபதி அங்கு கூறியிருந்தார்.

இலங்கையின் உண்மையான நிலைமை நாட்டு மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்பதில் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பம் தொட்டே உறுதியாக இருந்தார். ஜனாதிபதியாகப் பதவி ஏற்பதற்கு முன்னர் பிரதமராகப் பதவி வகித்தபோது நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வு வாரத்திலும் தெளிவுபடுத்தியிருந்தார்.

உண்மை மறைக்கப்பட்டு மக்களை ஒரு மாயத்தோற்றத்தில் வைத்திருக்கத் தேவையில்லையென்பது அவருடைய நிலைப்பாடாக இருந்தது. இவ்வாறான பின்னணியில் இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு நாடப்பட்டு வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் உதவியைப் பெற்றுக் கொள்ள பணியாளர்கள் மட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதா, இல்லையா என்பது தொடர்பில் குழப்பம் நிலவிய காலகட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமே உறுதியான முடிவை எடுத்து சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்றது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலைக்குச் செல்வதற்குத் தலைமைத்துவம் வகிப்பதிலும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடத்தக்க பங்கினை வகித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கள் குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன்தொகையைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். இதற்கான முயற்சிகளை அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.

இது ஒருபுறமிருக்க அரசியல் ரீதியாகவும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு அங்கமாக பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக தேசிய பேரவை அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பாராளுமன்ற குழுக்கள் பலப்படுத்தப்பட்டு வெளிப்படைத் தன்மையான முறையில் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சம்யுக்தன்

Comments