நகர்ப்புறங்களில் வீட்டுத்தோட்டங்கள் | தினகரன் வாரமஞ்சரி

நகர்ப்புறங்களில் வீட்டுத்தோட்டங்கள்

இன்றைய பொருளாதார நெருக்கடிகளின் காரணமாகவும், சுத்தமான, பசுமையான மரக்கறிகள், கீரைகள் போன்றவற்றை தமக்குத் தேவையான போது பெற்றுக் கொள்வதற்கு வசதியாக கிராமியப் பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய நகர்ப்புறங்களிலும், ஓரளவான நகர்புறங்களிலும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வசிக்கும் பெரும்பாலான மக்கள் தாங்கள் வாழும் இடங்களில் ஒரு வீட்டுத்தோட்டத்தை வைத்திருக்க விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் தாம் விரும்பியவாறு சிறியதொரு தோட்டத்தையேனும் ஸ்தாபித்துக் கொள்வதற்கு போதியளவான இடவசதிகள் இல்லாமை அவர்களது முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. அத்தோடு, பயிர்களை நடுவதற்கு போதியளவான, பொருத்தமான வளர்ப்பூடகங்கள் இல்லாமை, பயிர்களின் வளர்ச்சிக்கு தேவையான சூரிய வெளிச்சம் போதியளவில் கிடைக்காமை போன்றனவும் இப்பிரச்சினையை மேலும் தீவிர மாக்கியுள்ளது. இருப்பினும், இடவசதி குறைவாகக் காணப்படும் வீட்டுத்தோட்டங்களில் கிடைக்கக்கூடிய இடத்தை மிகவும் வினைத்திறனாகப் பயன்படுத்தினால் மரக்கறிகள், பழங்கள், கீரைகள், மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் போன்ற பயிர்களை திறம்பட பயிரிட்டு தமது தேவைக்கு அமைய இலகுவாகப் பராமரிக்க முடியும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இலகுவானதொரு வழி முதலில் உங்களது வீடுகளில் வரையறுக்கப்பட்ட இடங்களில் பயிர்களை நட்டு பராமரிக்கக் கூடிய இடங்கள் எவை என்பதை முதலில் இனங் கண்டு கொள்ள வேண்டும். பின்வரும் இடங்கள் பொதுவாக பயிர்களை வளரக்கூடிய இடங்களாக நாம் அடையாளம் காண முடியும்.

உங்கள் வீட்டின் மேல்மாடம் (பால்கனி), கூரை

மாடி வீடுகளாயின் மாடி மேல்மாடம் (பால்கனி)

வீட்டு வாயில், முன் புறம் உள்ள மேல்மாடம், மொட்டை மாடி போன்ற இடங்களை பயிர்களைச் செய்கை பண்ண மிக இலகுவாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட இடங்களிற்கு ஏற்ற பொருத்தமான பயிர்களைத் தெரிவு செய்ய வேண்டியது மிகவும் முக்கியமாகும். இதற்காகப் பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும். குறிப்பாக நகர்ப்புறங்களில், அதிக உயரமாக வளரும் பல்லாண்டு பயிர்களை பயிரிடுவதும், பராமரிப்பதும் ஓரளவு கடினமானதாகும். எமக்குத் தேவையான பழங்கள் போன்ற பல்லாண்டுப் பயிர்களைப் பயிரிட சூரியவெளிச்சம் நன்கு விழும் இடங்களான நிலாமாடம், மொட்டை மாடி போன்றவற்றை எளிதாகப் பயன்படுத்தலாம். கங்குன், பசளிக் கீரை, கீரை, பொன்னாங்காணி போன்ற கீரை வகைகளை நிழலான இடங்களில் நடுங்கள்.ஓரளவு வெயில் விழும் இடங்களில் வல்லாரை, வற்றாளை போன்ற பயிர்களை நடுகை செய்ய முடியும்.

மரக்கறிப் பயிர்களுக்கு நல்ல சூரிய வெளிச்சம் தேவை. எனவே மரக்கறி பயிர்களுக்கு சூரிய ஒளி நன்கு விழும் இடங்களைத் தெரிவு செய்யவும்.

வீட்டின் முன் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் செங்குத்தாக உள்ள இடத்தைப் பயன்படுத்தவும். எனவே இங்கு பந்தல் பயிர்கள், வளைவுகளில் படர விடப்படும் பயிர்கள் போன்றவற்றை நடவும். இதற்காக பாகல், புடோல், பீர்க்கு, மூக்குத்தி அவரை, சிறகவரை, அவரை போன்ற பயிர்களைப் பயன்படுத்தவும்.

மேல் மாடியில் அல்லது மொட்டை மாடியில் சூரிய வெளிச்சம் நன்கு விழுமாயின், அதுவே மரக்கறிப் பயிர்களுக்கு ஏற்ற இடமாகும். அதில் பந்தலில் வளரும் பயிர்களையும் பயிரிட்டு அவ்விடத்தை மேலும் அலங்கரிக்கலாம். அவ்விடங்களில் வாழை, பப்பாசி போன்ற பயிர்களையும் எளிதில் பயிரிடலாம்.

நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை மட்டுப்படுத்தப்பட்ட இடவசதிகளே காணப்படும். நாம் மரக்கறிகளைப் பயிரிடுவதற்குப் போதியளவில் நிலம் காணப்பட மாட்டாது. எனவே இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான இலகுவான வழி கிடைக்கக் கூடிய பாத்திரங்கள் அதாவது சாடிகள், பைகளை போன்றவற்றைப் பயன்படுத்தி மரக்கறிகளைச் செய்கைபண்ண முடியும். ஏற்கனவே நீங்கள் இனங் கண்ட இடங்களிற்குப் பயன்படுத்தக் கூடிய பொருத்தமான வளர்ப்புச் சாடிகளை நீங்கள் வீட்டில் கழிவாக அகற்றும் பெரும்பாலான பொருட்களிலிருந்து எளிதாகவும், இலகுவாகவும் தயாரித்துக் கொள்ள முடியும்.

அத்தகைய பயிர் சாடிகளுக்கு மேலதிகமாக பயிர் உற்பத்தி வடிவங்கள், வெளியிலிருந்து வாங்கப்படும் சாடிகள் ஆகியவற்றைப் பயிர்களை நடப் பயன்படுத்துவதன் மூலம் வீட்டுத்தோட்டங்களை அலங்கரிப்பதோடு, உங்கள் உணவுத் தேவைகளையும் எளிதாக பூர்த்தி செய்யலாம்.

இட வசதி குறைந்த வீடுகளில் மரக்கறிகளை நடுவதற்குப் பயன்படுத்தக் கூடிய பயிர்ச்செய்கை முறைகள்

பிளாஸ்ரிக் கொள்கலன்களில் மரக்கறிகள், கீரைகளை நடல்

கொள்கலன்களின் அல்லது சாடிகளின் அளவிற்கேற்ப காய்கறிகள், பழங்கள், ஏனைய பயிர்களை பயிரிட அவற்றைப் பயன்படுத்தலாம்.

மரக்கறிகளை நடுகை செய்வதற்கு, குறைந்தது 12 அங்குல விட்மும் 1 – 1 1/2 அடி உயரமும் கொண்ட கழிவாக அகற்றப்பட்ட கொள்கலன்களை எளிதாகப் பயன்படுத்தப்படலாம்.

ஒரு பழ நாற்றை நடுவதாயின் கழிவாக அகற்றப்படும் 1/ - 2 அடி விட்டமும், 2 – 2 1/2 அடி (200 லீற்றர்) உயரமும் கொண்ட பீப்பாய்கள், கழிவாக அகற்றப்படும் வெற்றுக் கொள்கலன்கள் ஆகிவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சீரங்கன் பெரியசாமி
ஓய்வுநிலை பணிப்பாளர்,
விவசாயத் திணைக்களம்

Comments