தமிழினத்தின் மீது அரசாங்கம் வெளிப்படுத்திய நல்லெண்ணம்! | தினகரன் வாரமஞ்சரி

தமிழினத்தின் மீது அரசாங்கம் வெளிப்படுத்திய நல்லெண்ணம்!

தமிழ் அரசியல் கைதிகளில் எட்டுப் பேரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையிலேயே அவர்களை விடுதலை செய்வதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர்களில் எட்டுப் பேரை விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதைத் தொடர்ந்து, தமிழ் மக்களுடனான நல்லிணக்கம் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகளில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையும் ஒன்றாக அமைகின்றது. இவ்விடுதலையைப் பொறுத்தவரை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ மேற்கொண்ட அயராத முயற்சிகளை இங்கு குறிப்பிடுதல் அவசியம்.

விடுதலை செய்யப்படுகின்ற அரசியல் கைதிகளில் ஐந்து வருடம் தொடக்கம் 200 வருடகாலம் வரை சிறைத்தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளவர்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாங்கள் விடுதலை செய்யப்படுவோமென்ற நம்பிக்கை துளியளவும் இல்லாத நிலையிலேயே அவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ஆகியோருக்கு நன்றி செலுத்த வேண்டிய கடப்பாடு அக்கைதிகள் மற்றும் உறவினர்களுக்கு மாத்திரமன்றி, தமிழ் சமூகத்துக்கும் உண்டென்பதை மறுப்பதற்கில்லை.

அதேசமயம் தமிழ் மக்களுடன் நெருக்கமாகவும் நல்லிணக்கத்துடனும் பயணிப்பதற்கு அரசாங்கம் விரும்புகின்றதென்ற மறைமுகமான செய்தியொன்று அரசியல் கைதிகளின் தற்போதைய விடுதலையில் அடங்கியுள்ளதை ஒட்டுமொத்த தமிழினமும் புரிந்து கொள்வது இப்போது அவசியம்.

இலங்கையில் தமிழ், சிங்கள இனங்களிடையே நீண்ட காலமாக ஐக்கியம் எட்டப்படாமைக்கு பெரும்பான்மை அரசியல்வாதிகளை மாத்திரம் குற்றம் கூறிவிட முடியாது. தமிழ் அரசியல்வாதிகளிலும் தவறுகள் உள்ளன. கடந்தகால அரசியல் வரலாற்றில் இணக்கப்பாட்டுக்கான வாய்ப்புகள் பலதடவைகளில் கனிந்து வந்த போதிலும், அவற்றை புலிகள் இயக்கம் மாத்திரமன்றி தமிழ் அரசியல் தலைவர்களும் உதாசீனம் செய்துள்ளனர். அதன் பலனாகவே நீண்டகால கொடிய யுத்தமொன்றை இந்நாடு கடந்துவர வேண்டியிருந்தது.

புலிகள் ஒழிக்கப்பட்டு யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டாலும் கூட, நாட்டில் சிக்கல் இன்னும் தீர்ந்து விடவில்லை. இந்த விடயத்தில் நிரந்தரமான தீர்வு எட்டப்பட்டாலேயே இருதரப்பினருக்கும் உண்மையான வெற்றி கிட்டுமென்பது உண்மை. இந்த யதார்த்தத்தை தமிழ், சிங்கள சமூகங்கள் புரிந்து கொள்கின்ற வரை நாட்டில் ஐக்கியம் தோன்றப் போவதில்லை.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானது இன்றைய அரசின் நல்லிணக்க மனோநிலையை வெளிப்படுத்துகின்றது. இவ்விடுதலைக்காக தமிழ் அரசியல் தரப்புகள் வெளிப்படையாக மனம்திறந்து அரசுக்கு நன்றி கூற வேண்டியது அவசியம். எக்காலமும் சாத்திமாகாதென்று கருதப்பட்ட விடயம் தற்போது சாத்தியமாகியுள்ளது. இந்த விடயம் ஒருபுறமிருக்க, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு அவசியமென்ற குரல்கள் சமீபகாலமாக அரசுக்குள் ஒலிக்கத் தொடங்கியுமுள்ளன. அக்குரல்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியதும் தமிழ் அரசியல்தரப்பின் பொறுப்பாகும்.

Comments