ஈழத்தின் முதலாவது பெண் சரித்திர நாவலாசிரியை ‘திக்கம்’ சிவயோகமலர் ஜெயக்குமார் | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்தின் முதலாவது பெண் சரித்திர நாவலாசிரியை ‘திக்கம்’ சிவயோகமலர் ஜெயக்குமார்

தினகரன் வாரமஞ்சரியில் 1999ஆம் ஆண்டு தொடராக வெளியான 21 அத்தியாயங்களைக் கொண்ட “அடிமையின் காதலி” சரித்திர நாவல் மூலம் ஈழத்தின் முதலாவது பெண் சரித்திர நாவலாசிரியை என்ற சாதனையையும், பெருமையையும் பெற்ற எழுத்தாளர் ‘திக்கம்’ சிவயோகமலர் ஜெயக்குமார் அமரத்துவம் அடைந்து 16.01.2017ஆம் திகதியுடன் மூன்றாண்டுகளாகின்றன.
“தினகர”னில் பிரசுரமான இச்சரித்திர நாவல வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுக் கொண்டது. இச்சரித்திர நாவல் என்றுமில்லாத அளவுக்கு இவருக்குப் பாராட்டுக்களைக் குவித்தது. இலங்கையில் வாழும் மலாய் வம்சத்தினர் தமது வரலாறு பற்றிய உண்மையை இந்த நாவல் மூலம் அறிய வைத்தமைக்குத் ‘தினகரன்’ மூலம் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
‘திக்கம் சிவயோகமலர் அமரத்துவம் அடைந்து மூன்றாண்டுகளாகின்ற போதிலும் அவரது படைப்புக்கள் பற்றி இன்றும் பாராட்டிப் பேசப்பட்டு வருகின்றது. ஈழத்தின் பிரபல எழுத்தாளர்கள் குறிப்பாகப் பெண் எழுத்தாளர்களில் தனியான முத்திரை பதித்துள்ளவர் மறைந்த திக்கம் சிவயோகமலர் ஆவார். இவர் வடமராட்சிப் பகுதியில் உள்ள ‘திக்கம்’ என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்.
உலகளாவிய பெயரும், புகழும் பெற்றுத் தான் பிறந்த மண்ணுக்குப் பெருமை தேடித்தந்த சிவயோகமலர் ஜெயக்குமார் 1950ஆம் ஆண்டு திக்கத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி கணேசுக்கும், சின்னம்மாவுக்கும் சிரேஷ்ட புதல்வியாகப் பிறந்தார். ‘திரவி’ என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட இவர் திக்கம் மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியையும், பின்னர் பருத்தித்துறை மெதடிஸ்த மகளில் உயர் கல்லூரியில் ஜீ.சீ.ஈ. உயர்தரம் முதலாம் வருடம் வரை கல்வி பயின்றார். பின்னர் மருதனாமடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இலக்கிய நிகழ்வுகள் இலக்கியப் போட்டிகள் பலவற்றிலும் பங்கு கொண்டு பல பரிசில்களைப் பெற்றுத்தபின் படித்த கல்லூரிகளுக்குப் பெருமை தேடிக் கொடுத்ததார்.
பின்பு பல்கலைக்கழகத்தில் இணைந்து கலைப்பட்டதாரியானார் பின் ஆசிரியத் தொழிலில் பிரவேசித்த இவர் பின்னர் தேர்தல் திணைக்களம், யாழ். தேசிய வீடமைப்புத் திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றி அரச அதிகாரி சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
1980ஆம் ஆண்டிலிருந்து இவரது சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகள். ஈழத்துப் பிரபல தினசரிகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவரத் தொடங்கின. இவரது இலக்கியப் படைப்புக்கள் தினகரன், வீரகேசரி, தினக்குரல், சுடர் ஒளி, ஈழநாடு, தினபதி- சிந்தாமணி, சிரித்திரன், முரசொலி, ஈழமுரசு, தின முரசு, லண்டன் தமிழ் உலகம், கற்பகம், அருள் ஊற்று, நமது தூது ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமாகின. இவர் அமரத்துவம் அமைந்த பின்னரும் 2014மார்ச் மாதத்தில் இருந்து அமரர் எழுதிய காத்திருக்கப் போகிறாள் என்னும் தொடர்கரை “ஒளி அரசி” மாத சஞ்சிகையில் பிரசுரமாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
அரசாங்க சேவையில் கணக்காளராகவும், கணக்காய்வாளராகவும் கடமையாற்றிய வடமராட்சி கரணவாய் தெற்கைச் சேர்ந்த இவரது கணவர் எஸ். ஜே. ஜெயக்குமார் நாடறிந்த சிரேஷ்ட ஊடகவியலாளருமாவார். பிரபல ஊடகவியலாளர் ஒருவரைக் கணவராகப் பெற்ற பிரபல எழுத்தாளர் சிவயோகமலர் தனது குடும்ப வாழ்க்கையில் இலக்கித் தம்பதியாக விளங்கியதில் வியப்பேதும் இல்லை.
யாழ்ப்பாணத்து மக்களின் சமகாலப் பிரச்சினைகளைத் தனது சிறுகதைகள் மூலம் அவ்வப்போது வாசகர்களுக்கு வழங்கி வந்தவரான அமரர் திக்கம் சிவயோகமலர் வடமராட்சி மண்ணின் பண்பாட்டு விழுமியங்களை மையமாக தனது படைப்புக்களை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள், நாவல்களில் இந்த வடமராட்சிப் பாரம் பரியமும் சமூக விழுமியங்களும் பரந்து காணப்படுகின்றன.
வடமராட்சியின் இலக்கிய பாரம்பரியத்தில் திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார் பெண் எழுத்தாளர் என்ற வகையிலும், ஈழத்தின் முதலாவது பெண் வரலாற்று நாவலாசிரியை என்ற வகையிலும் ஒரு மையப் புள்ளியாகக் கொண்டு பார்க்கத் தொடங்கலாம். ஈழத்தின் தரமான பெண் எழுத்தாளர்களில் ஒருவரான இவரது சிறுகதைகள் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன.
கலாநிதி க. குணராசா (செங்கையாழியான்) எழுதிய “ஈழத்துச் சிறுகதை வரலாறு” என்னும் நூலில் அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. சமகாலப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள், பெண்களின் வாழ்வியல் குடும்பக் காலசாரங்கள் ஆகியன இவரது சிறுகதைகளில் பிரதிபலிக்கும், இவர் மண் வாசனைக்கு முதன்மையும், முக்கியத்துவமும் கொடுத்துள்ளார். சரளமான தமிழ்நடையும் இலக்கியநயமும் கொண்டதாகவும் இவரது சிறுகதைகள் அமைந்துள்ளன.
1998ஆம் ஆண்டு “வீரகேசரி”யில் வெளியான இவரது “பாவத்தின் சுவடுகள்” சிறுகதை கலாசார சமய அலுவல்கள் அமைச்சினால் அவ்வாண்டின் சிறந்த சிறுகதையாகத் தெரிவு செய்யப்பட்டு அப்போதைய கலாசார சமய அலுவல்கள் பிரதியமைச்சர் பேராசிரியர் ஏ. வி. சுரவீரவினால் சிறந்த பேராசிரியர் ஏ. வி.சுரவீரவினால் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருதும், பணப்பரிசும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
‘மல்லிகை’ மாத சஞ்சிகை 1999ஆம் ஆண்டு ஜனவரிமாத இதழில் (34 ஆவது ஆண்டு மலர்) அட்டைப்படத்தில் இவரது புகைப்படத்தைப் பிரசுரித்துக் கௌரவித்துள்ளது.
“மல்லிகை” 43 ஆவது ஆண்டு மலரின் (ஜனவரி 2008) “ஈழநாடு” இதழின் “புனைகதைப் பங்களிப்பு” என்னும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையில் திக்கம் சிவயோகமலரை ஏழாந்தலை முறைப்படைப்பாளியாகக் குறிப்பிட்டு இவரின் நல்ல சிறுகதைகளாக “அவள் அகதி இல்லை”, “மயங்குகிறாள் ஒரு மாது”, மலர்தாவும் வண்டுகள் வெளிவந்துள்ளன என விதந்துரைக்கப்பட்டு உள்ளன.
1997ஆம் ஆண்டு பாரிசில் உள்ள தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் பிரெஞ்சுக்கிளையினர் நடத்திய பாவலர் தெ.து. துரையப்பாபிள்ளை நினைவு அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது “பிறந்த மண்” சிறுகதை முதற்பரிசைப் பெற்றுக் கொண்டது. மோல்டே தமிழ், கலை, கலாசார மன்றம் பத்தாவது வருட நிறைவையொட்டி உலகளாவிய ரீதியல் நடத்திய நாடக எழுத்துப் போட்டியில் இவரது “புலம்பெயரும் பாசங்கள்” நாடகப் பிரதி முதற்பரிசைப் பெற்றது.
“தினகரன்” பத்திரிகையும், துரைவி நிறுவனமும் இணைந்து நடத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய “சாமேளம்” சிறுகதை பரிசைப் பெற்றுக் கொண்டது. இச்சிறுகதை “பரிசு பெற்ற சிறுகதைகள் 1998” என்றும் நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இச்சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற ஒரே பெண் எழுத்தாளர் என்ற பெருமையையும் பெற்றார்.
“சிரித்திரன்” சஞ்சிகை 1990ஆம் ஆண்டு நடத்திய சித்திரச் சிறுகதைப் போட்டியில் இவரின் “வானம் பொய்க்கவில்லை” சிறுகதை முதற்பரிசைப் பெற்றது. ஹொரணை பிரதேச சபை 2013ஆம் ஆண்டு நடத்திய சரத்சந்திர ஐயகொடி சாகித்திய விழாவையொட்டிய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசைப் பெற்றார். யாழ். இலக்கிய வட்டமும், ‘ஈழநாடு’ பத்திரிகையும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் “கல்லூக்குள் ஈரம்” என்ற இவரது குறுநாவல் பரிசுபெற்றது. யாழ். இலக்கிய வட்டமும் முரசொலி பத்திரிகையும் இணைந்து நடத்திய குழந்தைப் பாடல் தொகுப்புப் போட்டியிலும் இவரது ‘தேட்டம்’ குழந்தைப் பாடல்கள் தொகுப்பு பரிசு பெற்றது.
சப்ரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை சமூக, விஞ்ஞான மொழிகள் பீடத்தினால் இவரின் சிறுகதைகள் நாவல்கள், தொடர்கதைகள், ‘அடிமையின் காதலி” சரித்திர நாவல், இலக்கியப் படைப்புக்கள் ஆய்வு செய்யப்பட்டு “திக்கம் சிவயோகமலரின் இலக்கிய முயற்சிகள் பற்றிய ஆய்வு” என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
கல்கின்னை மூத்த எழுத்தாளர் ஹனியாவின் 100 ஆவது நூல் வெளியீடான “மலை ஒளி” நூல் தொகுப்பில் இவரது “சுயம்” சிறுகதை விடம் பெற்றுள்ளது. எழுத்தாளர் ‘திக்கம்’ சிவயோகமலர் ஜெயக்குமாரின் பின்வரும் படைப்புக்கள் அவரை ஒரு காத்திரமான படைப்பாளியாக ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு அடையாளப்படுத்தி உள்ளன.
(தினகரன்) அன்சார் தேடும் அர்ச்சனா, விழித்துணை, நினைப்ப தெல்லாம், சாமேளம், (வீரகேசரி) பாவத்தின் சுவடுகள், வானமே கூரையாக, மீண்டும் வரும் உயிர்ப்புக்கள், (தினக்குரல்) தூரத்துத்தண்ணீர், இவர்கள் மனிதர்கள் (சுடர் ஒளி) அந்திரக்ஸ் அந்தரம், (ஈழநாடு) அவள் அகதி இல்லை, காலமெல்லாம் காத்திருப்பேன், மயங்குகிறாள் மங்கை, மலர்தாவும் வண்டு (சிந்தாமணி) மகன் தேடிய வீடு, பறக்குது பலூன், விடியலைத் தேடும் தியாகங்கள், ரயில் தரிசனம், (முரசொலி) அந்திமங்கள் இலவசமாக, (கற்பகம்) பார்வை, உணர்வுகளில் உறவுகள், (ஈழமுரசு) மறுபக்கம், (தினமுரசு) தூரத்துப்பச்சை, வெற்றிலை போடாமல் சிவந்தவர், இறுதி ஆசையின் இறுதி யாத்திரைகள், இன்னும் காத்திருக்கப் போகிறாள் (லண்டன் தமிழ் உலகம்) மலரும் மொட்டுக்கள்.
இவர் இறக்கும் வரை ஈழத்து இலக்கிய உலகில் சுடர் விட்டுப் பிரகாசித்தார். அவரது படைப்புக்கள், ஆக்க முயற்சிகள் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றன. றுக்மாங்கதன் என்னும் பெயர் கொண்ட ஏக புதல்வனின் தாயான இவர் தனது குடும்பத்துக்கும், ஈழத்து இலக்கிய உலகுக்கும் புகழ் சேர்த்துத் தனது 64 ஆம் வயதில் மறைந்தது இலக்கிய உலகுக்குத் துரதிர்ஷ்டமே எனலாம்.
உலகளாவிய ரீதியில் தனது எழுத்தாற்றலால் வடமராட்சி மண்ணுக்குப் பெருமையும், புகழும் சேர்த்த அமரர் ‘திக்கம்’ சிவ யோகமலர் ஜெயக்குமார் இலக்கிய உலகில் பல சாதனைகளைப் புரிந்து ஒரு தணியப் புகழ் பெறும் இடத்தைப் பிடித்திருக்கிறார். அவரது நினைவுகளும், இலக்கியப் படைப்புக்களும் காலத்தால் அழியாத சுவடுகளாக என்றும் தடம் பதிக்கும். 

Comments