பெண்ணின் உடலிலும் தேசியவாதம் | தினகரன் வாரமஞ்சரி

பெண்ணின் உடலிலும் தேசியவாதம்

ஒரு நாட்டின்  தேசியம், அடிப்படைவாதம் போன்றவற்றிலும் பெண் உடலை பேசுபொருளாக்கி பெண்மையின் பெருமையை மலினப்படுத்தி விடுகின்றனர். எமது நாட்டில் ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து உருவான பல பிரச்சினைகளில் பெண்ணின் தாய்மை, கற்பப்பை விவகாரமும் பிரலயமானது.

அரசியலும் அரசியல் சார்ந்த விடயங்களும் குழப்பங்களும், குற்றச்சாட்டுக்களும் அவளையே மையப்படுத்தியே உள்ளன. மகப்பேற்று வைத்தியர் சாபி ஆயிரக்கணக்கான பெண்களுக்கு கருத்தடை செய்தார் என்ற குற்றசாட்டு அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தியாக இருந்தது. இன்று வரை பரபரப்பாக பேசப்படுகிறது. இதேபோல் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான உணவகத்தில் இன விருத்தியை தடை செய்யும் மாத்திரைகள் கலக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு பெரும் கலவரமாக வெடித்தது. சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையினரின் இனப்பெருக்கத்தை முடக்குவதாகவும் தங்கள் இனத்தை பெருக்க எடுக்கும் முயற்சி என்ற பயமும் அவர்களுக்கு உண்டு. தமிழர்களும் முஸ்லிம்களும் பெருகுகிறார்கள் ஆகவே இலங்கை இஸ்லாமிய நாடாகிவிடும். இது சிங்களவர்களை அழித்துவிடும் என்ற பயமும் தான் அடிப்படை காரணம்.

இனம் பெருகினால்தான், தான் சார்ந்த தேசியம் நிலைக்கும். அந்த தேசியத்துக்கான போராட்டமும் நிலைக்கும் என்று ஒவ்வொரு இனத்தவரும் நினைக்கின்றனர். இதற்கு அவர்களுக்கு தேவையான மூலதனம்  பெண்ணும் அவளின் உடலும். அந்த உடல் அந்தந்த இனத்தை, இனவிருத்தியை செய்யும் மூலதனம் என்ற நிலை தெளிவாக உள்ளது. இதை யாரும் மறுக்கமுடியாது.

இங்கே ஒன்றை ஆழமாக நாம் பார்க்க வேண்டும். இலங்கையை எடுத்துகொண்டால்  தமிழ், முஸ்லிம் சிங்கள பெண்களை மற்றைய இனத்தவரிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற பரப்புரைகள் காலகாலமாக நடக்கின்றது. உதாரணமாக சமூக வலைத்தளங்களில் முக்கியமாக ஆண்களால், தமிழ் பெண்ணை முஸ்லிம் ஆண்கள் தங்கள் வலையில் சிக்க வைக்கின்றனர், தமிழ் பெண்களை கிண்டலடிக்கின்றனர், பாலியல் துஷ்பிரயோகம் செய்கின்றனர், திருமணம்  செய்கின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஆவேசமான வன்முறையை தூண்டும் கருத்துக்கள் பதியப்படுகின்றன. தமிழ் பெண்களை தமிழர்கள் மட்டுமே திருமணம் செய்யலாம், காதல் வலையில் சிக்க வைக்கலாம், காதலிக்கலாம், தமிழ் பெண் தமிழ் ஆண்களை மட்டும் தான் திருமணம் செய்து பிள்ளைகளை பெற்று கொடுக்கவேண்டும். அதாவது வன்புணர்வு அல்லது பாலியல் சேட்டைகள் அல்லது பெண்களை கேலி செய்வது  முஸ்லிம் ஆடவரால் நடந்தாலோ குற்றம் சாட்டப்பட்டாலோ தமிழ் ஆண்களின் ஆவேசமும் கோபமும் அதிகரிக்கிறது. இதே ஆவேசத்தை  தமிழரால் தமிழ் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம், சேஷ்டைகள், வன்புணர்வுக்கு உட்பட்டால் காண முடிவதில்லை. தமிழ் பெண்களை தமிழ் ஆண்கள் கிண்டல் செய்யலாம், கேலி செய்யலாம், பாலியல் துஷ்பிரயோகம் செய்யலாம். அதற்கான முழு உரிமையையையும் அவர்களுக்கு உள்ளது. இதேபோல், தான் முஸ்லிம், சிங்களவர்களின் நிலைப்பாடும்.

இச் சிந்தனைகளும் செயற்பாடுகளும் பெண்ணின் இனபெருக்க உரிமையை கட்டுபடுத்தும் கருத்தியலாகவே தென்படுகிறது. ஓர் இனத்தை சார்ந்த பெண்ணின் கரு உருவாக்கத்தை தடுத்தால் அந்த இனம் அழிந்து விடும் என்ற  நிலை காணப்படுகிறது. எனவே பெண்ணின் கர்ப்பப்பைக்கு அதி முக்கியத்தும் வழங்கப்படுகின்றது. இதனால் ஒரு  பெண் தன் வாழ்க்கை துணையை சுயமாக சிந்தித்து தான் விரும்பியவரை தெரிவு செய்வது சகல சமூகத்திலும் தடுக்கப்பட்டுள்ளது. அவள் யாரை தெரிவு செய்ய வேண்டும், யாருக்கு அவள் பிள்ளைகளை பிரசவிக்க வேண்டும், அவள் எங்கு வாழவேண்டும், எப்படியான உடை அணிய வேண்டும் என்பவற்றை தேசியவாதமே தீர்மானிக்கின்றது. முழுமையாக தேசியவாதம் என்பது பெண்ணின் உரிமை மறுக்கும், அவளின் உரிமையை மீறும், அவள் தன் உரிமையை அனுபவிக்க தடை போடும் காரணியாகும். இதில் பாதிக்கப்படுவது பெண்களும் பெண் பிள்ளைகளும் மட்டுமல்ல, முழு நாடும் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகின்றது. 

தேசியத்தை  பெண்களில் திணிக்கவே தாய் மொழி, தாய் நாடு என்று பெண்களை நாட்டுக்கு ஒப்பிட்டுள்ளனர். இந்தியாவில் பாரதிய மாதா , இங்கே ஸ்ரீலங்கா அன்னையே, தமிழிச்சி, ஈழத்து பெண், கேரளத்து பைங்கிளி என்று பெண்களை அவள் சார்ந்த நாட்டுடனோ அல்லது இனத்துடனோ சேர்த்து உருவகப்படுத்தும் தன்மை காணப்படுகிறது. அகவே இந்த அடையாளங்களை பாதுகாக்கும் கடமையும் பெண்களின் மேல் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது.

தேசியம் என்பது ஓர் இனத்தின் அடையாளத்தை கட்டிக் காப்பதாகும், அந்த அடையாளம் அழிந்து போகாமல் இருக்க வேண்டும். அந்த இனம் சுய கௌரவத்துடன் வாழ வழி செய்வதாகும். அந்த இனம் பெருக வேண்டும்.பெருகினால்தான் அந்த இனத்தின் அடையாளம் தக்க வைக்கப்படும். அந்த இனம் உயிர் வாழும், அந்த இனத்தின் கலாசார விழுமியங்களும் மொழியும் பாதுகாக்கப்படும். தேசியவாதம் பெண்ணின் உடலில் திணிக்கப்பட்டுள்ள  கருத்தியில் என்பது தெளிவாகின்றது. பெண் தனது உரிமையை அனுபவிக்க விடாமல் தடுக்கும் கருத்தியல். தேசியவாதம் ஆணாதிக்க, பெண்ணின் உடலை மையமாக கொண்ட கருத்தியலாகும்.

நளினி ரட்ணராஜா

Comments