
சர்வதேச அரசியல் பரப்பில் மீண்டும் ஒரு இராஜதந்திர நிகழ்வு பதிவானதாக ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வருகின்றன. குறிப்பாக வடகொரிய -அமெரிக்க முறுகல் நிலை புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இராஜதந்திரமானது மேற்குலகத்தின் கலையாகப் பார்க்கப்பட்டாலும் சீனர்களும் அதில் சளைத்தவாகள் இல்லை என்பதை பலதடவை நிறுவியுள்ளனர். இங்கு சீனா ரஷ்யா, வடகொரியா அமெரிக்கா சார்ந்த பெரும் பரப்பொன்றின் நகர்வுகள் நிகழ்ந்து முடிந்துள்ளன. ட்ரம்ப்- _கிம் சந்திப்பானது வரலாற்றில் பதிவுகளாகப் பேசப்படும் அளவுக்கு கடந்த வாரநிழ்வு பதிவாகியுள்ளது. வடகொரியா தொடர்பில் இரண்டு வரலாற்றுப் பதிவுகள் ஏற்பட்டுள்ளன. அதாவது 14வருடத்திற்குப் பின்னர் சீன ஜனாதிபதியும் 66வருடத்திற்கு பின்னர் அமெரிக்க ஜனாதிபதியும் வடெெகாரியாவின் மண்ணைத் தொட்டுள்ளனர் என்பதாகும். இத்தகைய பதிவில் ட்ரம்ப்பின் விஜயம் அதிக முக்கியத்துவமுடையதாக ெதரிகிறது. இக்கட்டுரையும் ஏன் ட்ரம்ப் திடீரென வடகொரியத் தலைவரை சந்தித்தார் என்பதை தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
இச்சந்திப்பானது அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பின் பேரிலேயே நிகழ்ந்ததாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. முதல் முதலில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் வடகொரியாவுக்குள் வருகை தந்ததாக வடகொரிய ஊடகங்கள் பெருமிதம் கொண்டுள்ளன. இதனாலேயே இச்சந்திப்பினை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததென அவை தெரிவிக்கின்றன. இவர்களது சந்திப்பு ஏறக்குறைய ஒரு மணித்தியாலம் நீடித்ததாகவும் மீண்டும் நின்று போன பேச்சுக்களை ஆரம்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரு தலைவர்களும் எதிர்காலத்தில் நெருங்கிய தொடர்பில் இருக்கவும் கொரிய தீபகற்பத்தை அணுவாயுதமற்ற தேசமாக மாற்றுவதற்கும் முயற்சிக்கும் என்றும் குறிப்பிடப்படுகிறது. அது மட்டுமன்றி இரு தரப்புக்குமிடையில் ஒரு புதிய முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புக் கிடைத்துள்ளதை உணரமுடிகிறது. அதுமட்டுமன்றி மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கான சூழல் அமைந்துள்ளதாகவும் அதற்கான குழுவை உருவாக்குவது பற்றிப் பேசப்பட்டதாகவும் தெரியவருகிறது. அத்துடன் இரு தலைவர்களும் பேசிக்கொண்டவற்றைப் பார்க்கும் போது விட்டுக் கொடுப்பும் நட்பும் நம்பிக்கையும் தென்பட்டது. இது ஒரு உலகத்திற்கான நம்பிக்ைக தரும் என ட்ரம்ப் குறிப்பிட்ட கடந்தகாலத்தை மறந்துவிட்டு புதிய எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை தொடங்க அமெரிக்கா வித்திட்டுள்ளதாக கிம் குறிப்பிட உரையாடல் மிக நெருக்கமான நட்பை வெளிப்படுத்தியது. இறுதியில் இரு தலைவர்களும் தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் சந்திப்பு முடிவுக்கு வந்தது. ஆனால் மேற்குலக ஊடகங்கள் மிகத் தெளிவாக இதனை ஒரு இராஜதந்திர நிகழ்வாகவே பதிவு செய்து வருகின்றன.
இங்குள்ள பிரதான கேள்வி மேற்குலகம் இராஜதந்திரமாக கருதும் போது வடகொரிய ஊடகங்களும் கீழைத்தேச ஊடகங்களும் வரலாற்று நிகழ்வாகப் பதிந்துள்ளன என்பதாகும். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் வடகொரியாவுக்குள் வருகை தருவதென்பது வரலாற்று நிகழ்வானாலும் அது ஒரு இராஜதந்திர நகர்வாகவே அமையும். காரணம் பெரும் எதிரிகளாகக் காணப்பட்ட இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு வந்தது மட்டுமல்ல, அதிலும் அதிக முரண்பாட்டுடன் வெளியேறியதும் எல்லோரும் பார்த்த விடயம் . ஆனால் தொடர்ச்சியாக முரண்பாட்டு தகவலும் அதேநேரத்தில் சுமுகமான ருவிட்டர் குறிப்புகளும் கடிதப் பரிமாற்றமும் நிகழ்ந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆனால் வடகொரியாவுக்குள்ளேயே சென்று ஒரு வல்லரசு நாட்டின் தலைவர் சந்திப்பை ஏற்படுத்தியது என்பது தந்திரமாகக் கொள்வதனை விட வேறு எதுவாகவும் அமைய வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும்.
அத்தகைய தந்திரத்திற்கான அடிப்படை நிச்சயமாக ரஷ்ய, சீன, ஜனாதிபதிகளின் விஜயங்கள் ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு அதிகம். அவர்கள் இருவரும் புவிசார் அரசியல் தளத்திலும் பொருளாதார இராணுவத் தளத்திலும் மிக நெருக்கமாகவும் பாதுகாப்புத் தடுப்பு சுவராகவும் செயல்படும் போக்கு காணப்படுகிறது. அதன் அடிப்படையில் இரு தலைவர்களும் ஜப்பான் மகாநாட்டில் சந்தித்ததன் விளைவுகளாகக் கூட அமைய வாய்ப்பிருந்தது. அதனால் தவிர்க்க முடியாது வடகொரியத் தலைவரை சந்திப்பது ட்ரம்ப்க்கு முடியாததொன்றாக அமைந்திருக்கலாம்.
இரண்டாவது, வழமையான விடயமானாலும் அதுவே அடிப்படையானது. அப்பத்தியில் பலதடவை குறிப்பிடப்பட்ட விடயம் தான் வடகொரியாவின் அணுவாயுத பலம். அதன் மீது வடகொரியா கட்டிவரும் அரசியல் மிகப்பிரமாண்டமானது. அதாவது வடகொரியாவின் அணுவல்லமையும் அது உருவாக்கி வரும் ஏவுகணைத் தொழிநுட்பமும் அதிக அச்சத்தை அமெரிக்காவுக்கும் அதன் கிழக்காசிய கூட்டுக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது வடகொரியா பரிசோதிக்கும் ஏவுகணைகளை பற்றிய முழு விவரமும் அமெரிக்காவுக்கு ெதரியாததது மட்டுமன்றி அதன் வீச்சு எல்லைக்குள் அமெரிக்காவின் தலைநகரமும் ஒக்கினாவாவும் தென்கொரியத் தளங்களும் காண்பிக்கப்படுகின்றன. இதனால் அமெரிக்கத் தரப்பாக விளங்கும் ஜப்பானுக்கும் அத்தகைய அச்சுறுத்தல் காணப்படுகிறது. இதனால் வடகொரியாவுடன் சுமூகமாகப் பயணிப்பதென்ற முடிவுடன் அமெரிககத் தரப்பு நகர ஆரம்பித்துள்ளது.
மூன்றாவது, அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள ட்ரம்ப் வடகொரியாவுடனான உறவை முக்கிய வரலாற்று பதிவாக பயன்படுத்த முடிவெடுத்துள்ளதை உணரமுடிகிறது. அவரது காலத்தில் சர்வதேச அரசியலில் அமெரிக்கா அதிகமானவற்றை இழந்துள்ளதாக பெரும் விமர்சனம் உண்டு. அதனை முறியடிக்கும் விதத்தில் இவ்விதமான நிகழ்வுகளை பதிவு செய்ய முயன்றதன் விளைவாக அமையலாம். அமெரிக்க ஜனாதிபதி பதவி என்பது அமெரிக்காவுக்கானது என்பதை விட சர்வதேசத்திற்கானது என்பதே முதன்மையானதாக அமைந்திருந்தது. காரணம் அத்தகைய பதவியினாலேயே அமெரிக்காவின் அரசியல் மட்டுமல்ல பொருளாதாரமும் இராணுவ பலமும் பலமடங்காக வளர்ந்தது. அதனாலேயே அமெரிக்க அரசியலமைப்பிலேயே அத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி உலகத் தலைவராக மதிக்கப்படுவதும் அத்தகைய மனேநிலையை மையப்படுத்தியே. எனவே அந்த நோக்கு நிலையில் ட்ரம்ப் செயல்பட்டிருக்க வாய்ப்பு அதிகமுண்டு.
நான்கு, ஜி-20மகாநாட்டில் சீன ஜனாதிபதியுடனான சந்திப்பை அடுத்து இருநாட்டுக்குமான வர்த்தகப் போரை இலகுபடுத்த ட்ரம்ப் முடிவெடுத்துள்ளதை அறிவித்துள்ளார். அதனால் சீனாவுடனும் ரஷ்யாவுடனும் சுமுகமான உறவை கொண்டிருக்க முனைந்ததன் விளைவாக வலிந்து தேடிசந்திப்பு நிகழ்ந்திருக்க முடியும்.ரஷ்ய ஜனாதிபதி புடினுடனான சந்திப்பின் போது அடுத்த தேர்தலில் தலையிடாது இருக்குமாறு உரையாடிக்கொண்டதாக ஊடகங்கள் சிலாகித்திருந்தன. அவ்வாறு செயல்பட்டதன் மூலம் ரொய்ட்டர், சிஎன்என் போன்றவற்றை அவர் எப்படிபார்த்துள்ளார் என்பதையும் கவனித்தல் வேண்டும். காரணம் இரு ஊடகங்களும் ட்ரம்ப்யையும் புடினையும் அதிகமாக விமர்சித்து வருகின்றன. அதனையும் கடந்து அவரது அணுகுமுறை தனித்துவமானதாக அமைந்திருந்தது.
ஐந்து, சீனாவுடனான வர்த்தகப் போரில் அமெரிக்காவின் வளர்ச்சியைவிட சீனாவின் வளர்ச்சி அதீதமானதாக உள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது. ஏறக்குறைய அமெரிக்க உலகப் பொருளாதாரம் 5.6சதவீதமாக அமைய சீனாவினுடைய வளர்ச்சி 24.56வீதமாக உள்ளதாக தெரியவருகிறது.
அதனால் சீனாவுடன் ஒரு சுமூக உறவை ஏற்படுத்துவது அல்லது போர் தவிர்ப்பை ஏற்படுத்துவதற்கான நகர்வாக அமைந்திருக்கலாம் வடகொரிய விஜயத்தின் மூலம் இதற்கு மேலும் ஆதாரமாக சீன ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்ததாக போது வடகொரியா மீதான பொருளாதாரத் தடையை தளர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கான பதிலாகவும் இந்நிகழ்வு அமைந்திருக்கலாம்.
எனவே இருதரப்பு சந்திப்பானது வரலாற்று நிகழ்வாக அமைந்தாலும் அடிப்படையில் அமெரிக்காவின் தந்திரோபாயமாகவே அமைந்துள்ளது. வரலாற்றில் இத்தகைய தலைவர்கள் மிக அரிதாக இருப்பதனாலும் அதனைக் கண்டறியும் தரப்புக்கள் இன்மையும், இவ்வகை சம்பவங்கள் குறைவாக உள்ளமைக்கான காரணமாக அமையும். அடிப்படையில் அரசியல் தந்திரம் நிறைந்ததொன்றாகும். அதற்கான ஆளுமையும் உத்திகளும் கொண்ட தலைவர்கள் எம்மத்தியில் இல்லை என்பது குறைபாடே அன்றி வேறு எதுவும் முக்கியமானதல்ல. எனவே ட்ரம்ப் தனது ஆட்சிக்காலத்தில் ஒரு பதிவை ஏற்படுத்தியுள்ளார். அதிலும் எதிர்த்தரப்பிடம் அவர் ஒரு தந்திரோபாய நகர்வை செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்