
சர்வதேச இன்னர் வீல் பெண்கள் அமைப்பின் இலங்கைக்கான வருடாந்த மாநாடு கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் 27ஆம் திகதி இலங்கை இன்னர் வீல் மாவட்ட 322தலைவி டயானா ரகுமான் தலைமையில் நடைபெற்றது. சர்வதேச இன்னர் வீல் பெண்கள் அமைப்பு அநேக பெண்கள் அறிந்திராக விடயமாகும். 'நட்புறவுடனான சேவை' என்ற தொனிப் பொருளில் உலகம் முழுவதும் பெண்களை மேம்படுத்தும் அனைத்து சேவைகளையும் ஆரவாரமின்றி அமைதியாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இவ் அமைப்பு 1924ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி 34உறுப்பினர்களை கொண்டு உருவாக்கப்பட்டதாகும். சர்வதேச ரோட்டரிக் கழகத்தில் இருந்த தலைவர்கள், செயலாளர்கள், அங்கத்தவர்களின் மனைவிமார்கள் மற்றும் மகள்மார்கள் இணைந்தே இவ்வமைப்பை தாபித்துள்ளனர்.
திருமதி மார்க்கட் கோல்டி என்ற பெண் தாதியாக பணியாற்றி பின்னர் வர்த்தகத்தில் உயர்வடைந்து இக் கழகத்தினை ஆரம்பித்துள்ளார்.
இன்று சர்வதேசம் முழுதும் சிறந்து விளங்கும் பெண்கள் இவ்வமைப்பில் இணைந்து கொண்டுள்ளனர். இந் நிலையில் 1இலட்சம் அங்கத்தவர்களைக் கொண்டு 106நாடுகளில் இவ் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வுக்கு 106நாடுகளின் சர்வதேச இன்னர் வீல் தலைவி திருமதி பில்லிஸ் சாட்டர் கலந்து கொண்டார். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தளை, வத்தளை போன்ற பிரதேசங்களில் 20கிளைகளின் தலைவிகள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டு தத்தமது பிரதேச பெண்களின் வாழ்வதாரம், சுயதொழில் முயற்சி, சிறுவர்களுக்கான உதவி, பாடசாலைகளுக்கான உதவித் திட்டங்களை கையளித்தனர். 2020ஆம் ஆண்டு ஆசிய நாடுகளின் இன்னர் வீல் மாநாடு பங்களாதேஷ் டக்காவில் மார்ச் மாதத்திலும் சர்வதேச மாநாடு இந்தியா ஜெய்ப்பூர் நகரிலும் நடைபெறவுள்ளது. சர்வதேச ரீதியில் வறுமைக் கோட்டில் வாழும் பெண்கள், சிறுவர்கள் பிரச்சினைகளுக்கான திட்டங்கள், முடிவுகள் தொடர்பாக நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் கலந்துரையாடவுள்ளதாக பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சர்வதேச தலைவி பில்லிஸ் சாட்டர் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள இன்னர் வீல் கிளையினர் தத்தமது பிரதேசத்தில் பெண்களுக்கான மருத்துவ முகாம், அங்கவீன பெண்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், முச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளனர். கணவனை இழந்த பெண்களுக்கு சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதற்காக உபகரணங்கள் அன்பளிப்பு, இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவுதல், மரநடுகைத் திட்டம், மாணவர்களுக்கான கல்வி உதவித்திட்டம், புலமைப்பரிசில் திட்டம் போன்றன இவ்வமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அத்துடன் பரோபகாரிகளிடமிருந்து நிதிகளை சேகரித்து பெண்களுக்கான உதவிகளை செய்து வருகின்றனர். இலங்கையில் இதுவரை 20கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணக் கிளையினால் வீட்டு வன்முறைகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான தீர்வுகள் ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வருகின்றது. அரிமா சங்கத்துக்கு நிகராக பெண்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் பெண்களுக்கான சிறப்பான பணிகளை மேற்கொள்ளும் இன்னர் வீல் பெண்களை முன்னோக்கி பயணிப்பதற்கு வழிவகுக்கின்றது.
அஸ்ரப் ஏ சமத்