'ஒன்றியம்' என்பதற்கு பல அர்த்தங்கள் | தினகரன் வாரமஞ்சரி

'ஒன்றியம்' என்பதற்கு பல அர்த்தங்கள்

சென்னை  விக்ரம் படத்தில் கமல்ஹாசன் பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார். இதுபெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, சென்னையில் உள்ள ஹயாத் ஓட்டல்  நடிகர் கமல்ஹாசனின் நடித்து வெளிவரவுள்ள விக்ரம் படத்திற்கான செய்தியாளர்  சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  அப்போது பேசிய கமல்ஹாசன் கூறுகையில், " 4 வருடங்களாக என் நடிப்பில் எந்த  படமும் வெளியாகவில்லை. 4 வருடங்கள் காத்திருக்க வைத்ததற்காக எனது அன்பான  ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். விக்ரம்' படத்தின் அடுத்த  பாகம் குறித்து லோகேஷ் கனகராஜ்தான் சொல்ல வேண்டும்; அதற்கும் இவர்தான்  இயக்குநர் என நான் முடிவு செய்துவிட்டேன்" என தெரிவித்தார்.  அப்போது பாஜகவினர் கமல் எழுதி பாடியுள்ள 'ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும்  இல்ல இப்பாலே' என்ற வரிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனரே என  செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த  அவர், தமிழில் நல்ல வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் உள்ளன.  பத்திரிகையாளர்கள் சேர்ந்து இருக்கிறீர்கள். இதுவும் ஒரு ஒன்றியம்தான்.  டைரக்டர்ஸ் எல்லோரும் சேர்ந்து யூனியன் வைத்திருக்கிறார்கள். இதுவும் ஒரு  ஒன்றியம்தான். அதேபோல், தயாரிப்பாளர்கள் சேர்ந்து யூனியன்  வைத்திருக்கிறார்கள். அதுவும் ஒரு ஒன்றியம்தான். இங்கெல்லாம் தவறு நடந்தால்  எப்படி இருக்குமோ,அதுபோல்தான் அந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன என தனக்கே  உரிய பாணியில் பதில் கூறினார் கமல். இதனைக்கேட்டு அங்கிருந்தவர்கள்  வாயடைத்து போயினர்.  அதையடுத்து மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3 ஆம் திகதி விக்ரம் திரைப்படத்தினை வெளியீடுகிறீர்களே ? ஏதாவது சிறப்பு  காரணங்கள் உள்ளனவா ? என கேட்டதற்கு, கருணாநிதி எனக்கு மிகவும் பிடித்த  தலைவர். அவரை சந்திக்கும்போதெல்லாம் அவர் எனக்கு நல்ல புத்தகங்களை பரிசாக  வழங்குவார்.  அந்த புத்தகங்களில் உள்ள கருத்துகள் திரைப்படத்தில் வந்தால் நன்றாக  இருக்கும் என ஒரு ஆசான்போல் அறிவுரை கூறுவார். அவ்வளவுதான், அவரது  பிறந்தநாள் அன்று இத்திரைப்படத்தினை வெளியிடுவதற்குக் காரணங்கள் இல்லை.  அதற்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமில்லை எனக் கூறினார்.  நான் சம்பாதித்த பணத்தையெல்லாம் திரும்ப சினிமாவில் தான் போடுவேன் என  சொன்னபோது கை தட்டினார்கள். ஆனால், இப்போது சம்பாதித்ததை சினிமாவையும்  தாண்டி அரசியலிலும் போட விரும்புகிறேன் என கூறினார்.  இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட்  மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.  "ஒன்றியத்தின் தப்பாலே" என்ன சார் அர்த்தம்..? - "படம் பாருங்க புரியும்"

Comments