பயணம் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

பயணம் ஆரம்பம்

சரியாக இற்றைக்கு ஓர்ஆண்டுக்கு முன் இலங்கைடி20உலகக் கிண்ணத்தைவெல்லும் எதிர்பார்ப்புடன் ஐக்கிய அரபுஇராச்சியத்திற்கு புறப்பட்டுச் சென்றது.அணியை பார்த்தால் குத்துமதிப்பாகவலுவாகத்தான் இருந்தது. ஆனால்நம்பிக்கைதான் சற்றுக் குறைவு.

அணித்தலைவர் தசுன் சானக்கவின் வார்த்தைகளிலும் அந்த நிச்சயமற்ற தன்மை தெளிவாகத் தெரிந்தது. “எமது வீரர்கள் தமது பலத்துடன் ஆடினால் இந்தத் தொடரில் எமக்கு நீண்ட தூரம் செல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன்” என்று அப்போது அவர் கூறியிருந்தார்.

ஆனால் அந்தப் போட்டி இலங்கைக்கு சாதகமாக இருக்கவில்லை. அங்கங்கே திறமைகள், சில வெற்றிகள் தெரிந்தாலும் ஒட்டு மொத்தமாக சேர்த்துப் பார்த்தால் அணியின் ஆட்டப் போக்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை.

என்றாலும் 2021இல் இலங்கை உலகக் கிண்ணத்துக்குச் செல்லும்போது அணிக்கு மாத்திரமல்ல, யாருக்கும் இலங்கை அணி பற்றி நம்பிக்கை இருக்கவில்லை. குருட்டு அதிஷ்டத்தில் வென்றால் ஒழிய உலகக் கிண்ணம் என்பது எட்டாக் கனிதான் என்பது எல்லோரினதும் கருத்தாக இருந்தது.

சரியாக ஓர் ஆண்டு கழித்து இலங்கை அணி மீண்டும் ஒரு உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்போடு அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றிருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன் இலங்கை வெற்றிகரமான ஆசிய கிண்ணம் ஒன்றை எதிர்கொண்டு விட்டு அவுஸ்திரேலியா சென்றிருப்பதால் இப்போதைய சூழல் வேறு.

ஆப்கானிடம் படுதோல்வி அடைந்து ஆசியக் கிண்ணத்தை ஆரம்பித்த இலங்கை அடுத்தடுத்த வெற்றிகளுடன் இந்தியா, பாகிஸ்தானையே ஆட்டம் காணச் செய்து கிண்ணத்தை சுவீகரித்தது.

இப்போது சானக்கவின் வார்த்தைகளில் உறுதியான நம்பிக்கை தெரிகிறது. “எமது திட்டங்களை சரியாக செயற்படுத்தினால் எம்மால் நிச்சம் வெற்றிகளைப் பெற முடியும்” என்று அவுஸ்திரேலியா புறப்பட்டு செல்வதற்கு முன் நடந்த கடைசி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

“(கடந்த உலகக் கிண்ணத்தை விடவும்) நம்பிக்கை அதிகமாக உள்ளது. என்றாலும் தீவிர அவதானத்துடனேயே இப்போது உள்ளேன். கடந்த உலகக் கிண்ணத்தில் கூட, குறைந்தது அரையிறுதிக்கு முன்னேறும் அளவுக்கேனும் எம்மிடம் திறமை இருந்ததாக நான் உணர்ந்தேன். எமது திறமைகளை அந்த நாளில் வெளிப்படுத்துவதுதான் முக்கியம்” என்கிறார் சானக்க. 

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி தனது முதல் சுற்றுப் போட்டியில் வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி நமீபியாவை எதிர்கொள்கிறது. அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே இலங்கை அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றிருக்கிறது. புறப்பட்டுச் செல்வதற்கு முன் கண்டியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். உலகக் கிண்ணத்திற்கான இலங்கையின் தயார்படுத்தல்கள் உற்சாகமாக உள்ளன.

அதிகம் பரீட்சயம் இல்லாத சூழலில் இம்முறை டி20உலகக் கிண்ணம் நடைபெறுவதால் அதிகம் கரிசனை எடுத்துக்கொள்வது முக்கியம். அவுஸ்திரேலியா என்றாலே பந்து அதிகம் மேலெழும். வேகப்பந்துக்கு அதிகம் சாதகமாக இருக்கும். அதுவே சில நேரம் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.

எனவே வேகப்பந்துதான் சரிப்பட்டு வரும் என்று பொடுபோக்காகவும் இருந்துவிட முடியாது. சுழற்பந்திலும் அவதானம் செலுத்த வேண்டும். இலங்கை குழாத்தில் வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன என இரண்டு முன்னணி சுழல் வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எந்தச் சூழலிலும், எந்த ஆடுகளத்திலும் சோபிக்கக் கூடியவர்கள் என்பதால் பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை.

என்றாலும் வேகப்பந்து வீச்சில் சற்று அதிகம் அவதானம் எடுத்துக்கொள்ள வேண்டும். துஷ்மன்த சமீர மற்றும் லஹிரு குமாரவுடன் டில்ஷான் மதுஷங்கவும் இலங்கை வேகப்பந்து முகாமில் இருக்கிறார்கள். இந்த மூவராலும் மணிக்கு 140கிலோமீற்றர் வேகத்தில் பந்துவீச மூடியும். அது ஆஸி. ஆடுகளத்திற்கு பொருந்துவதாக இருக்கும்.

என்றாலும் முதல் இருவரது உடல் தகுதி பற்றி கவலை இருக்கத்தான் செய்கிறது. உபாதை காரணமாக ஓய்வுக்குப் பின்னரே துஷ்மன்த, லஹிரு அணிக்குத் திரும்பி இருக்கிறாரர்கள். ஆனால் கண்டி பயிற்சி முகாமில் இருவரும் எந்த அசெளகரியத்தையும் வெளிப்படுத்தவில்லை.

“லஹிரு மற்றும் துஷ்மன்த இருவரும் எமது முகாமில் அங்கம் வகித்து, எந்தப் பிரச்சினையும் இன்றி தமக்கு வழங்கப்பட்ட பந்துவீச்சு கோட்டாவை பூர்த்தி செய்தார்கள். அவர்கள் உலகக் கிண்ணத்திற்கு சிறந்த முறையில் தயார் நிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன்” என்கிறார் தசுன் ஷானக்க.

வேகப்பந்தில் இடைவேளியை நிரப்புவதற்கு சாமிக்க கருணாரத்ன மற்றும் தசுன் சானக்க இருந்தபோதும் இந்த மூவரும் அணியில் இருப்பது அவசியம்.

“எமது திட்டங்களை வலுப்படுத்துவதை உறுதி செய்வதற்கும் அவுஸ்திரேலிய ஆடுகளத்தில் எமது திறமையை வெளிப்படுத்துவதை உறுதி செய்வதற்கும் யோக்கர்களை வீசுவதில் தொடர்ந்து பயிற்சி கொடுத்து வருகிறோம்” என்கிறார் இலங்கை அணி பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட்.

யோக்கருக்கு பிரபலமான இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இலங்கையின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்படுவது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.

அவுஸ்திரேலியா என்பது இலங்கைக்கு அந்நியப்பட்ட இடம் என்பதால் வழக்கமான தயார்படுத்தல்கள் கைகொடுக்காது. ஆசிய கிண்ணத்தை வென்று விட்டோம் இனி உலகக் கிண்ணம் தான் பாக்கி என்று குருட்டுத் தனமாக இருந்தால் காரியம் ஆகாது.

அதனாலேயே கண்டியில் சிறப்பு பயிற்சிகள் இடம்பெற்றன. “என்ன பயிற்சி பெறுகிறோம் என்பதை நாம் வகைப்படுத்தி பயிற்சி பெற்றோம். உதாரணமாக, கண்டியில் நாம் சுப்பர் ஓவருக்கு முகம்கொடுப்பதற்கு பயிற்சி பெற்றோம். அது வேடிக்கையாக இருந்தபோதும், சுப்பர் ஓவர் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை அவதானித்தோம். அது விரைவாக நிகழும் நிலையில் நாம் எமது நிலையை உறுதிப்படுத்திக்கொண்டோம்” என்கிறார் சில்வர்வுட்.  

இலங்கை உலகக் கிண்ணத்தில் தனது ஆரம்பம் போட்டியில் வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி நமீபிய அணியை எதிர்கொள்ளவுள்ளது. அந்தப் போட்டிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே இலங்கை அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது. அவுஸ்திரேலிய சூழலை பழகிக்கொள்வதற்கு அது அவசியமானதாக இருக்கும். ஏனென்றால் அவுஸ்திரேலியாவில் பெரிய அனுபவம் உள்ள வீரர்கள் இந்த இளம் அணியில் இல்லை. எனவே, அவுஸ்திரேலிய மண்ணில் மேலதிக நேரம் என்பது தீர்க்கமானது.

“நமீபிய போட்டிக்கு முன் எமக்கு சில பயிற்சி போட்டிகள் இருக்கின்றன. நாம் பயிற்சி பெற்றதை எம்மால் செய்ய முடியும் என்பதை உறுதி செய்வதற்கு அதற்கு முன் நாம் எமக்கும் போட்டிகளில் ஆடுவோம்” என்று சில்வர்வுட் அவுஸ்திரேலியா புறப்பட்டுச் செல்லும் முன் தெரிவித்திருந்தார்.

இலங்கை துடுப்பாட்ட வரிசை டி20போட்டிக்கு பொருந்துகின்ற வகையில் வலுவாக உள்ளது. என்றாலும் ஆஸியில் மேலெழும் ஆடுகளத்தில் பந்தை எதிர்கொள்வதற்கு பழகிக் கொள்வது அவசியம். குறிப்பாக பெளன்ஸர் பந்து விழுந்தால் ஹுக் செய்ய வேண்டும் என்ற பாடப் புத்தகக் கிரிக்கெட்டுக்கு அப்பால் சிந்திப்பது அவசியம்.

ஆரம்ப வீரர் பத்தும் நிசங்க மற்றும் சரித் அசலங்க போன்றவர்கள் ஹுக் செய்து ஓட்டங்களை குவிப்பதில் விருப்பம் காட்டுபவர்கள். அவுஸ்திரேலிய மண் அதற்கு சாதகமாக இருந்தாலும் பாடப்புத்தகக் கிரிக்கெட் மைதானத்தில் முழுமையாகக் கைகொடுக்காது.

குசல் மெண்டிஸ், பானுக்க ராஜபக்ஷ மற்றும் தசுன் சானக்க மூவரும் அண்மைக் காலத்தில் சோபித்து வருகிறார்கள். இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு பொருந்திப்போவது அவசியம். குறிப்பாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பெரிய மைதானங்களில் நினைத்தபடி சிக்ஸர் விளாசுவது கடினம். ஏனைய மைதானங்களை அளவிட்டு அங்கே சிக்ஸர் அடிக்கப்போனால் பிடியெடுப்பில்தான் முடியும்.

“அவுஸ்திரேலிய மைதானங்களின் அளவை நாம் அவதானிக்க வேண்டும். அங்கே சில மிகப்பெரிய மைதானங்கள் இருக்கின்றன. அவைகளை கையாள்வதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று சில்வர்வுட் கூறுவதும் மைதானங்களின் அளவும் போட்டியின் முடிவை தீர்மானிப்பதாக இருப்பதால்தான்.

ஆசிய கிண்ண வெற்றியை உலகக் கிண்ணத்தில் பயன்படுத்துவதென்றால் முதலில் ஆசிய கிண்ணத்தில் எமக்கு இருந்த சாதகமான சூழல் கூட உலகக் கிண்ணத்தில் எமக்கு பலவீனமாக இருக்கலாம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஆசிய கிண்ணத்துக்கு அப்பால் நாம் இன்று மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விடயங்களை அடையாளம் காண வேண்டும்.

ஆசிய கிண்ணத்தை பொறுத்தவரை, இலங்கை நாணய சுழற்சியில் வென்று நிர்ணயிக்கும் ஓட்டங்களை துரத்தியே பெரும்பாலும் வெற்றிகளை குவித்தது. இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் தோற்று எதிரணிக்கு வெற்றி இலக்கை நிர்ணயித்து கிண்ணத்தை கைப்பற்றியதை தவிர்த்துப் பார்த்தால் இலங்கையின் சாதகமான புள்ளி இது தான். மறுபக்கம் இதுவே பலவீனமாகவும் இருக்கிறது.  

“எப்போதும் நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டிய விடயங்கள் இருக்கின்றன. (ஆசிய கிண்ண) இறுதிப் போட்டியில் சிறந்த முறையில் வெற்றி இலக்கொன்றை நிர்ணயித்தபோதும் அது பற்றி அதிகம் அவதானம் செலுத்த வேண்டி இருக்கிறது” என்று கூறும் சில்வர்வுட், “நாம் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகவே அது இருக்கிறது” என்றார். 

எப்போதும் ஆடுகளத்தின் போக்கை தீர்மானிக்க முடியாத சூழலில், அல்லது காலநிலை மற்றும் இன்ன பிற காரணங்களில் உறுதியான முடிவு எடுக்க முடியாத சூழலில் அணி ஒன்று எப்போதும் எதிரணிக்கு வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்குமாறு அழைப்பு விடுக்கும். இது ஒரு தவிர்க்க முடியாத நிலை என்றபோதும், அதையே வழக்கமாகக் கொள்வது நல்லதல்ல.

என்னதான் கூறியபோதும் வெற்றிக்கு தன்னம்பிக்கை முதலில் அவசியம். அதுவே எதிர்பார்ப்பை அதிகரிக்கும். நீண்ட காலத்திற்குப் பின் இலங்கை தன்னம்பிக்கையுடன் பெரும் எதிர்பார்ப்போடு பிரதான போட்டித் தொடர் ஒன்றில் களமிறங்குகிறது. உண்மையில் இது பாதி வெற்றிக்குச் சமன்.

“நான் இதை வித்தியாசமாகப் பார்க்கிறேன். இலங்கையின் எதிர்பார்ப்பு திரும்பியுள்ளது. ரசிகர்களிடம் உள்ள ஆர்வம் அபாரமாக இருக்கிறது. அதனை வீரர்களும் உணர்கிறார்கள். அதனை எமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்” என்கிறார் சில்வர்வுட்.

“உண்மை என்னவென்றால் எல்லோரும் எமக்கு பின்னால் நிற்கிறார்கள். முழு நாடும் எமக்குப் பின்னால் உள்ளது. நாம் எல்லோரது முகத்திலும் மீண்டும் புன்னகையை கொண்டுவர முயற்சிக்கிறோம். இதனை எமக்கு உத்வேகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏற்கனவே உடைமாற்றும் அறையில் இதனை ஒரு உத்வேகமாக பயன்படுத்தியுள்ளோம்” என்றும் சில்வர்வுட் கூறுகிறார். 

தசுன் சானக்க இதனை சற்று தீவிரமாகப் பார்க்கிறார். “ஆசிய கிண்ணத்தை வென்றது நல்லது, ஆனால் அது ஒரு தொடர் மாத்திரம் தான். நாம் அதனைப் பற்றி இப்போது சிந்திப்பதில்லை. அது கடந்த காலம். ஏனென்றால் அதனை நாம் பார்த்துக்கொண்டிருந்தால் முன்னோக்கிப் பார்த்து தேவையான திறமையை வெளிப்படுத்த முடியாமல் போய்விடும்” என்கிறார்.

எப்படியோ, கடந்த ஆறேழு வருடங்களில் இல்லாத அளவு இலங்கை அணி மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் இம்முறை உலகக் கிண்ணமும் முன்னரை விட சுவாரஸ்யமாக இருக்கும்.

Comments