இன்பம் தரும் தீபாவளி | தினகரன் வாரமஞ்சரி

இன்பம் தரும் தீபாவளி

இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தப் பண்டிகை எப்படித் தோன்றியது என்பது குறித்து ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது.

இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்கீட்டின்படி பெரும்பாலான வருடங்களில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. சில வருடங்களில் மட்டும் அமாவாசைக்கு முந்தைய தினம் கொண்டாடப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியின்படி, அக்டோபர் 17 முதல் நவம்பர் 15க்குட்பட்ட நாட்களில் தீபாவளிப் பண்டிகை அமைகிறது.

இந்தியா மட்டுமல்லாது, வேறு சில நாடுகளிலும் இந்தப் பண்டிகை தினத்தன்று அரச விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்துக்கள் மட்டுமல்லாது, சமணர்கள், சீக்கியர்கள் போன்றவர்களும்கூட இந்தப் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை குறித்து பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று, ராமரோடு தொடர்புடையது. அதாவது ராமன் தனது 14 வருட வனவாசத்தை முடித்துக் கொண்டு, லட்சுமணன், சீதையுடன் அயோத்திக்கு திரும்பிய தினத்தை அந்நாட்டு மக்கள் விளக்கேற்றிக் கொண்டாடினர். அதுவே தீபாவளி தினம் என்ற ஒரு கதை வழக்கில் இருக்கிறது.

மற்றொரு கதையில், பெரும் அட்டகாசம் செய்துவந்த நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தபோது, தான் இறந்த தினத்தை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமென அந்த அசுரன் கேட்டுக்கொண்டதாகவும், அதன்படியே தீபாவளி கொண்டாடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், பண்டித அயோத்திதாஸர் தீபாவளி பண்டிகை பௌத்தப் பண்டிகை என்கிறார். தீபாவளிப் பண்டிகை குறித்து கட்டுரை ஒன்றை 1907ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி எழுதியிருக்கிறார் அயோத்திதாஸர். தீபாவளி பண்டிகை என்னும் தீபவதி ஸ்னான விவரம் என்ற அந்தக் கட்டுரையில், தீபாவளிப் பண்டிகையை ஒரு பௌத்தப் பண்டிகை என குறிப்பிடுகிறார் அயோத்திதாஸர்.

ஆனால், சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்ற பண்டிகைதான் தீபாவளி என்றும் சொல்லப்படுகின்றது. சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்தில் அரசனின் அரண்மனையில் தங்கியிருந்தபோது, அங்குள்ள மக்களுக்கு அறவுரை வழங்கினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்லாமல் ஆங்காங்கே உறங்கிவிட்டனர். மகாவீரரும் தனது இருக்கையிலேயே வீடுபேறடைந்திருந்தார்.

பொழுதுவிடிந்ததும் விழித்துப் பார்த்த மக்கள் மகாவீரர் வீடுபேறடைந்திருந்ததை உணர்ந்தனர். தகவல் அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த அரசன் மற்ற அரசர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு ஞானஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும் பொருட்டு அந்த நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றிவைத்து விழா கொண்டாடும்படி செய்தான். மகாவீரர் விடியற்காலையில் வீடு பேறு அடைந்ததால்தான் தீபாவளியும் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது என்கிறார் சீனி. வேங்கடசாமி எனும் ஆய்வாளர்.

ஆனால், இவையெல்லாம் தீபாவளி பின்னணி குறித்த கதைகளே தவிர, அவை கொண்டாடப்பட்டது குறித்த ஆவணமல்ல. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது தமிழில் தீபாவளி குறித்த பதிவுகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன.

"தமிழ் வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி குறித்த குறிப்புகள் ஏதும் கிடையாது. வீரமாமுனிவரின் சதுரகராதி 1732ல் வெளியிடப்பட்டது. அதில் தீபாவளி என்ற சொல் கிடையாது. தமிழ் இலக்கியங்களிலும் 19ஆம் நூற்றாண்டுவரை தீபாவளி என்ற சொல் ஏதும் கிடையாது. 1842ல் இலங்கையில் வெளியிடப்பட்ட மானிப்பாய் தமிழ் - தமிழ் அகராதியில் இந்தச் சொல் இருக்கிறது. அதற்கு புராண விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அந்தத் தருணத்தில் இந்த விழா அறிமுகமாகியிருக்கலாம்" என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி. தமிழ் மரபின்படி, நம்முடைய விழாக்கள் அனைத்துமே அறுவடைக்குப் பிந்தைய காலகட்டத்தில்தான் கொண்டாடப்படுவது வழக்கம். 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த விழா பிரபலமாக இருந்ததாகச் சொல்ல முடியாது என்கிறார் பொ. வேல்சாமி. உ.வே. சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாற்று நூலான என் சரித்திரத்தில் தீபாவளி குறித்து ஏதும் பெரிதாகக் கிடையாது என்பதையும் பொ. வேல்சாமி சுட்டிக்காட்டுகிறார்.

தவிர, தமிழ்நாட்டிற்கு வந்து தங்கியிருந்து பயணக் குறிப்புகளையும் மக்களின் சமூக பழக்கவழக்கங்களையும் எழுதிய வெளிநாட்டவரின் குறிப்புகள் எதிலுமே தீபாவளி குறித்த பதிவுகள் கிடையாது என்கிறார் வேல்சாமி.

ஆனால், கார்த்திகை மாதத்தில் தீபம் அல்லது நெருப்பை ஏற்றி சடங்குகளைச் செய்யும் நிகழ்வுகள் இருந்திருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டும் பொ. வேல்சாமி, அவற்றுக்கும் நாம் தற்போது கொண்டாடும் தீபாவளிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்.

பண்பாட்டு ஆய்வாளரான தொ. பரமசிவனும் பழந்தமிழ்நாட்டில் தீபாவளி என்ற பண்டிக்கை இல்லை என்கிறார். 'சமூக வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள்' என்ற கட்டுரையில் இது குறித்துப் பேசும் தொ. பரமசிவன், "தமிழ்நாட்டுத் திருவிழாக்களின் பொதுவான கால எல்லை தை மாதம் முதல் ஆடி மாதம் வரையே ஆகும். தமிழகம் வெப்ப மண்டலத்தில் உள்ள நிலப்பகுதியாகும். எனவே வேளாண் தொழில்சார்ந்த பணிகள் இல்லாத காலப்பகுதியே தமிழர்களின் திருவிழாக் காலமாகிறது. தமிழ்நாட்டின் நாட்டார் தெய்வங்கள் இந்தக் கால அளவில்தான் கொண்டாடப்படுகின்றன

இன்று பரவலாகக் கொண்டாடப்படும் தீபாவளி, விசயநகர மன்னர்களின் காலத்தில் தெலுங்கு பிராமணர் வழியாக தமிழ்நாட்டிற்கு வந்த திருவிழாவாகும். வடநாட்டில் இது சமணசமயத்தைச் சேர்ந்த திருவிழா ஆகிறது" என்கிறார் தொ. பரமசிவன்.

ஆனால், பெரும்பாலானவர்கள் ஒரு பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும்போது அது எங்கிருந்து வந்தது, அதனை நாம் கொண்டாடலாமா என்ற ஆராய்ச்சிக்குள் புகுவதைவிட்டுவிட்டு, விருப்பமிருந்தால் கொண்டாடுவதே சிறந்தது என்கிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான ஆ. சிவசுப்பிரமணியம்.

அ.கனகசூரியர்

 

Comments