களைப்பை விஞ்சுமா அனுபவம்? | தினகரன் வாரமஞ்சரி

களைப்பை விஞ்சுமா அனுபவம்?

இலங்கை அணி டி20உலகக் கிண்ணத்தின் சுப்பர் 12சுற்றுக்கு முன்னேறிவிட்டது. ஆரம்பப் போட்டியிலேயே நமீபியாவிடம் படுதோல்வி, ஐக்கிய அரபு இராச்சியத்திடம் அபார வெற்றி, நெதர்லாந்து அணிக்கு எதிரான போராட்டத்துடன் வெற்றி என்று இதுவரை இலங்கை அணியின் திறமை ஒரு கலவையாகவே தெரிகிறது.

உண்மையில் ஆரம்ப சுற்று என்பது ஒட்டுமொத்த உலகக் கிண்ணத்தை பார்க்கும்போது செல்லுபடியாகாது. அது உண்மையான உலகக் கிண்ணத்திற்கு நுழைவதற்கான போட்டி மாத்திரமே. தற்போது ஆரம்பமாகி இருக்கும் சுப்பர் 12சுற்றுடனேயே உலகக் கிண்ணத்தின் பரபரப்பு தொடங்கும்.

நேரடி தகுதி பெற்ற வலுவான எட்டு அணிகள் தனது உலகக் கிண்ண போட்டிகளை ஆரம்பித்துள்ளன. இலங்கை அணி ஆரம்ப சுற்றின் ஏ குழுவில் முதல் இடத்தை பெற்றே அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. முதல் இடம் பெற்றது இலங்கையின் தனி முயற்சி அல்ல. நமீபியா, ஐக்கிய அரபு இராச்சியத்திடம் தோற்றதால் இந்தத் தகுதி கிடைத்தது.

எப்படியோ சுப்பர் 12சுற்றில் குழு 1இல் இடம்பெற்றிருக்கும் இலங்கை அணியின் எதிரணிகள் என்று பார்த்தால் போட்டியை நடத்தும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடம்பெற்றிருக்கின்றன. எந்த அணியையும் பலவீனமாகப் பார்க்க முடியாது.

அதிலும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் சவால் மிக்கவை. மூன்று வலுவான அணிகளும் ஆசியாவுக்கு வெளியில் உள்ளவை. ஆஸி. ஆடுகளங்கள் வேகப்பந்துக்கு கொஞ்சம் அதிகம் உதவுவதால் இந்த அணிகளுக்கு பரீட்சயமானவை.

என்றாலும் இந்த அணிகள் சுழற்பந்துக்கு சற்று தடுமாற்றம் காணும். இலங்கையில் இரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது ஒரு சாதகமான சூழல் தான். என்றாலும் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் எதிரணியின் வலுவான வேகப்பந்து படையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அது ஆரம்ப சுற்றின் நிலையில் இருந்து முற்றாக மாறுபட்டிருக்கும்.

இதுவரை இலங்கையின் துடுப்பா ட்ட வரிசையை ஒப்பிட்டுப் பார்த்தால் ஆரம்ப வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் பத்தும் நிசங்க நன்றாக ஆடுகிறார்கள். தனஞ்சய டி சில்வா சற்று நிதானத்தோடு ஆடுவது ஆஸி. ஆடுகளத்திற்கு பொருத்தமானதாக இருக்கும். பானுக்க ராஜபக்ஷ ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் சோபிக்காதபோதும் தேவையான நேரத்தில் தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பும் திறமையை கொண்டவர்.

ஆசிய கிண்ணத் தொடரில் சோபிக்காமல் பார்வையாளராக வைக்கப்பட்டிருந்த சரித் அசலங்க நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 31பந்துகளில் 30ஓட்டங்களை பெற்றது நல்ல செய்தி.

இந்த முதல் ஐந்து வரிசையில் இருவரேனும் நன்றாக ஆடினால் இறுதி ஓவர்களில் அணித் தலைவர் தசுன் ஷானக்கவின் வேலை இலகுவாகிவிடும். அதேபோன்று சகலதுறை வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் சாமிக்க கருணாரத்னவின் பங்கு துடுப்பாட்டத்திலும் முக்கியமானது.

என்றாலும் அடுத்தடுத்த காயங்களால் இலங்கை வேகப்பந்து வரிசை தான் சற்று சிக்கலாக இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனுபவ வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர் டில்சான் மதுசங்க இருவரும் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார்கள். இவர்களுக்கு பதில் வந்திருக்கும் கசுன் ராஜித்த, பினுர பெர்னாண்டோவுடன் ஏற்கனவே அணியில் இருக்கும் லஹிரு குமார மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோரிலேயே இலங்கை அணி தங்கியிருக்கிறது.

டெஸ்ட், ஒருநாள் போட்டி போலன்றி டி20இல் குறுகிய ஓவர்களில் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக இந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மற்றும் சூழல் தென்படுகிறது. அதனை தெரிந்துகொள்ள போட்டியில் ஆடித்தான் பார்க்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலே ஆடுகளம் மற்றும் காலநிலை பற்றி அதிகம் கரிசனை காட்டினால்தான் முன்னேற முடியும். மழையுடன் கூடிய காலநிலை ஒன்று இருப்பதால் ஆடுகளங்களின் புற்தரை மெதுவடைந்து அதன்மீது பந்து மெதுவாகவே செல்கிறது. உயர அடிக்கும் பந்துகள் மைதானத்தில் குத்தி நிற்பதால் பெளண்டரிக்கு செல்லவே சிரமப்படுகிறது.

ஆரம்ப சுற்றில் இலங்கை அணி ஆடிய கிலொங் மைதானத்தில் இதனை அதிகம் பார்க்க முடிந்தது. இதுவே இலங்கை அணி வீரர்கள் காயமடைவதற்கும் பெரிதும் காரணமாக இருக்கக் கூடும். ஆரம்ப சுற்று முடிவதற்குள்ளேயே இலங்கை அணியின் மூன்று வீரர்கள் உபாதை காரணமாக வெளியேறிவிட்டார்கள்.

இடது கை துடுப்பாட்ட வீரர் குணதிலக்கவுக்கு பதில் அஷேன் பண்டார சேர்க்கப்பட்டிருக்கிறார். சரித் அசலங்க தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பினால் இந்த உபாதை பெரும் பொருட்டாக இருக்காது.

பத்தும் நிசங்க மற்றும் பிரமோத் மதுசானுக்கு ஏற்பட்டிருக்கும் காயங்கள் அதிக தீவிரம் கொண்டவை அல்ல. என்றாலும் எதிர்வரும் போட்டிகளில் ஆடுகளங்களும் தீர்க்கமான பங்காற்றும் என்பது ஆரம்பப் போட்டிகளைப் பார்க்கும்போது தெரிகிறது.

ஆரம்பப் போட்டி முடிவதற்குள்ளேயே இலங்கை அணி காயங்கள், எதிர்பார்த்ததை விடவும் போராட்டங்கள் என்று அதிகம் களைப்படைந்துவிட்டது. என்றாலும் அது எதிர்வரும் போட்டிகளுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். இது சுப்பர் 12சுற்றுக்கு நேரடித் தகுதி பெற்ற எட்டு அணிகளுக்கு கிடைக்காத அனுபவமாகவும் மாற வாய்ப்பு இருக்கிறது.

எஸ்.பிர்தௌஸ்

Comments