சட்டக் கல்லூரி பரீட்சைகள் இனிமேல் ஆங்கிலத்திலா? | தினகரன் வாரமஞ்சரி

சட்டக் கல்லூரி பரீட்சைகள் இனிமேல் ஆங்கிலத்திலா?

இதுவரைகாலமும் சட்டக் கல்லூரியின் பரீட்சைகளுக்கு தாம் விரும்பிய மொழியில் மாணவர்கள் தோற்றுவதற்கு இடமளிக்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை அதில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்விப் பேரவை தீர்மானித்துள்ளது. அதாவது, இவ்வருடத்திலிருந்து (2022) இப்பரீட்சைகளை ஆங்கில மொழியில் நடத்துவதற்கு அப்பேரவை தீர்மானித்துள்ளது. அதேவேளை சட்டக் கல்லூரியின் புகுமுகப் பரீட்சைகளையும் ஆங்கிலத்தில் நடத்த முயற்சிகள் ஆண்டாண்டு காலமாக மேற்கொள்ளப்படுகின்றன.
 
வழமையாக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் இப்பரீட்சைகள் இடம்பெற்று வந்த நிலையில், அண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து, இவ்வருடம் டிசெம்பர் மாதத்தில் இப்பரீட்சைகள் இடம்பெறுவதிலிருந்து இந்நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிய வந்துள்ளது. இலங்கை சட்டக் கல்லூரிப் பரீட்சையானது, ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்தப்பட வேண்டும் என்று 2208 / 13ஆம் இலக்க வர்த்தமானி கடந்த 2020ஆம் ஆண்டு டிசெம்பர் 30ஆம் திகதியிடப்பட்டு, கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்விப் பேரவையினால் வெளியிடப்பட்டது.
 
அதில் இலங்கை சட்டக் கல்லூரியினால் நடத்தப்படுகின்ற அனைத்துக் கற்கைநெறிகளும் ஆங்கில மொழியில் நடத்தப்பட வேண்டும் என்பதோடு, ஆங்கிலமே இப்பரீட்சையின் கட்டாய மொழி மூலமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், 2022ஆம் ஆண்டிலிருந்து தொடங்கும் ஆரம்பநிலை வருடத்தில் சட்டக் கல்லூரியில் 8 பாடங்களில், குறைந்தபட்சம் 3 பாடங்களுக்கு ஆங்கில மொழியில் விடையளிக்க வேண்டும் எனவும், இடைநிலை வருடத்தில் 7 பாடங்களில், குறைந்தபட்சம் 5 பாடங்களுக்கு ஆங்கில மொழியில் விடையளிக்க வேண்டும் எனவும், இறுதி வருடத்தில் 8 பாடங்களில், அந்த 8 பாடங்களுக்கும் ஆங்கில மொழியில் விடையளிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஒரு பரீட்சை தொடர்பில் சடுதியாக அவ்வாறான முடிவுகளை எடுப்பது பற்றி பல்வேறு தரப்பினர் தமது கவலைகளைத் தெரிவித்தனர்.
 
இலங்கை சட்டக் கல்லூரி மாணவரான சுப்பையா கமல்
 
ஆங்கில மொழியில் சட்டக் கல்லூரி பரீட்சையை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவினால், அதிக போட்டித்தன்மையுடன் காணப்படும் இந்தப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் இரண்டு வகையான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
 
இத்திடீர் முடிவானது குறிப்பாக, ஆங்கில மொழி அறிவு குறைவாகவுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு போட்டித்தன்மை மிக்க இப்பரீட்சையில் எதிர்கொள்வதில் பாரிய சிரமத்தை ஏற்படுத்தலாம்.
 
பொதுமக்களுக்கு தங்களது சொந்த மொழியை பயன்படுத்துவதற்கான சுதந்திரமானது, எமது நாட்டின் மிக உயர்ந்த சட்டமான அரசியலமைப்பு சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமையாகும். அரசியலமைப்பின் மொழி குறித்த அத்தியாயத்தில் இது தொடர்பில் மேலும் கூறப்பட்டுள்ளது. இலங்கை சட்டக் கல்லூரியில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் இருந்து வந்த மொழித் தடைகள் உடைக்கப்பட்டு வட்டார மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு மிக நீண்டகாலமாகி விட்டது.
 
 
 
 
சட்டத்தரணி சுகுமாரி சிதம்பரப்பிள்ளை
 
ஆங்கில மொழியில கல்வி கற்பதானது, மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் என்பதோடு, ஆங்கில மொழியில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதில் கூட நன்மையும் இருக்கத்தான் செய்கின்றது. அதாவது, அங்கு பாரபட்சத்துக்கு இடமில்லை. ஏனெனில், ஒரே மொழியிலே​ேய பரீட்சையும் புள்ளிகளும் வழங்கப்படும்.
 
அத்தோடு, பெரும்பாலான வழக்குத் தீர்ப்புகள் ஆங்கில மொழியில் காணப்படுவதால், அவற்றிலிருந்து எமக்குத் தேவையான தேடல்களை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். இதனால் ஆங்கில மொழி பரீட்சையானது, எமது எதிர்காலத்துக்கு இலகுவானதாக அமையலாம் என்பதோடு, வேலைவாய்ப்பு, வெளிநாடுகளில் உயர் கல்வி, பொது அறிவு மற்றும் ஆளுமையை விருத்தி செய்வதற்கும் வழிவகுக்கும்.
 
சட்டக்கல்லூரியின் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஆண்டுப் பரீட்சைகளை ஆங்கிலத்தில் தோற்றுவதற்கான முயற்சிகள் போன்றே புகுமுகப் பரீட்சைகளை ஆங்கிலத்தில நடத்துவதற்கும் பல காலமாக இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எமது நாட்டின் கல்வியைப் பொறுத்தவரையில் ஆரம்பக் கல்வியானது சில சில இடங்களில் ஆங்கில மொழியில் கற்பிக்கப்பட்டாலும், கிராமப்புறங்களில் அவ்வாறில்லை. இந்நிலையில், தங்களது தாய்மொழியான சிங்கள மொழியிலோ அல்லது, தமிழ் மொழியிலோ ஆரம்பக் கல்வியை கற்ற மாணவர்கள், திடீரென இவ்வாறு ஆங்கில மொழியில் சட்டக் கல்லூரி பரீட்சையை எதிர்நோக்கும் பட்சத்தில், அது அவர்களுக்கு கடினமானதாகவே இருக்கும்.
 
திடீரென ஆங்கில மொழியில் இப்பரீட்சை நடத்தப்படும் பட்சத்தில், அப்பரீட்சைக்கு தோற்றவுள்ள கிராமப்புறம் உள்ளிட்ட பின்தங்கிய இடங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதுவரையில் தயாராகாத நிலைமை காணப்படுவதோடு, சிறந்த புள்ளிகளை அவர்கள் இழக்கும் வாய்ப்பும் காணப்படும்.
 
இந்நிலையில், ஆங்கில மொழியில் இப்பரீட்சைக்கு மாணவர்கள் தோற்ற வேண்டுமாயின், அவர்கள் அதற்கேற்றவாறு தம்மை தயார்ப்படுத்தும் வகையில் குறைந்தபட்சம் 5 வருடகால அவகாசமாவது மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
 
எமது நாடானது பல்மொழிக் கலாசாரத்தை கொண்டமைந்துள்ளதால், அதில் பாரபட்சம் காட்டப்படக்கூடாது என்பதோடு, அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தான் கூற விரும்புகிறேன்.
 
சட்டத்தரணி தர்மராஜ் விநோதன்
 
சட்டத்துறையானது அநீதிக்கு எதிராகப் போராடி நீதியைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய புனிதமான தொழிலாகும். இப்புனிதமான தொழிலை புரியும் சட்டத்தரணிக்குரிய அடிப்படைப் பண்புகளாக கல்வித்தகைமை, தராதரம், நன்நடத்தை, அக்கறை, முயற்சி, ஈடுபாடு மற்றும் எனையோருடனான அணுகுமுறை கருதப்படுகின்றன. ஆகவே, இப்புனிதமான தொழிலில் ஈடுபட வேண்டுமாயின், அனைத்து வகைகளிலும் நாம் தகுதியுடையவராக இருப்பதற்கு அடிப்படைப் பண்புகள் சில காணப்படுகின்றன.
 
இந்நிலையில், சட்டக் கல்லூரிப் பரீட்சையானது, ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்தப்பட வேண்டும் என்பது என்னைப் பொறுத்தவரையில் வரவேற்கத்தக்க விடயமாகவே கருதுகிறேன்,
 
இத்தொழிலின் தராதரத்தை பேணுவதற்காக அடிப்படையிலிருந்து தகுதியுடையவர்களை தெரிவு செய்வதற்கு ஆங்கில மொழிப் பரீட்சை வழிவகுக்கின்றது. இதில் மொழி உரிமை மீறப்படுகின்றது அல்லது, அடிப்படை உரிமைகள் எனும் விடயத்துக்கு முரண்பாடாகக் காணப்படுவதாக சிலர் எண்ணலாம். ஆனால், தன்னைப் பொறுத்தவரையில் இதில் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், இதுவொரு அடிப்படைக் கல்வி இல்லை என்பதோடு, தொழிலுக்குள் நுழைவதற்கான உயர்தரக் கற்கையாகும்.
 
பல்கலைக்கழக கல்வியும் சட்டக் கல்லூரிக் கல்வியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானதாக கருதப்படுகின்றது. ஏனெனில், சட்டத்தரணிகளைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்டாலும் கூட, சட்டக் கல்லூரிக்குச் சென்று அங்குள்ள தகுதிகாண் பரீட்சையில் சித்தியடைந்த பின்னரே, சட்டத்தரணி எனும் நிலைக்கு வர முடியும். இந்நிலையில், சட்டக் கல்லூரியானது மாணவர்களை புடம் போட்டு எடுக்கின்ற ஓர் இடமாகும்.
 
ஆகவே, நாம் ஆங்கில மொழித் திறமையைக் கொண்டிருந்தால் மாத்திரமே இத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதோடு, நீடித்து நிலைக்கவும் முடியும். அத்தோடு, எமது ஆளுமையை வளர்த்து சமூகத்துக்கேற்ப செயற்படவும் ஆங்கில மொழிப் புலமை கட்டாய தேவையாகும்.
 
இதில் மொழி உரிமை மீறப்படுவதாக கூறப்படுவதற்கு இடமில்லை. இதுவொரு சரியான விடயமாகும். எமது தராதரத்தை நாம் இழக்கலாகாது.
 
மேலும், சட்டத்தரணி எனும் தொழிலை பொறுத்தவரையில் சட்டத்தில் ஆழமான, நுட்பமான அறிவு இருக்கும் பட்சத்திலேயே, நீதியை பெற்றுக்கொடுக்க முடியும். சட்டத்துடன் சேர்ந்து நின்று அதிலுள்ள விடயங்களை நுணுகி ஆராய்ந்தே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும். அதுவே உண்மையானதும் நிலையானதுமான நீதியாகும். இவ்வாறு நிலையானதும் உண்மையானதுமான நீதியைப் பெற்றுக்கொடுக்க எமக்கு தேடல் அதிகமாக இருக்கும். இத்தேடலை நுணுகி ஆராய வேண்டும். இவற்றுக்கு எல்லாம் ஆங்கில மொழிப் புலமை கட்டாய தேவையாகும். சட்டத்துறைக் கற்றல்களும் ஆங்கில மொழியைச் சார்ந்தே உள்ளன.
 
மேலும், சர்வதேச ரீதியில் காணப்படும் சட்டங்களை அறிந்துகொண்டு அவற்றிலுள்ள விடயங்களின் உதவியுடன், எமது நாட்டிலுள்ள மக்களின் பிரச்சினைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக, ஆக்கபூர்வமாக சட்ட விடயங்களை உள்வாங்கி நீதியைப் பெற்றுக்கொடுக்க ஆங்கில மொழிப் புலமை அவசியமாகிறது.
 
தமிழ்மொழிப் பாட ஆசிரியர் ஆர்.சச்சிதானந்தன்
 
திடீரென ஆங்கில மொழியில் சட்டக் கல்லூரி பரீட்சை நடத்தப்பட வேண்டும், சட்ட ப் பரீட்சைகள் எல்லாம் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்படுவதால், கிராமப்புறங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது.
 
நகர்ப்புறங்களில் ஆங்கில மொழிக் கல்வியை மாணவர்கள் இலகுவாக கற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் தாராளமாக காணப்படும் அதேவேளை, கிராமப்புறங்களில் ஆங்கில மொழிக் கல்வியை கற்றுக்கொள்வதற்கான வசதிகள் மாணவர்கள் மத்தியில் குறைவாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஆகவே, சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் நடத்துவதால், கிராமப்புற மாணவர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்.
 
தாய்மொழியே சிந்தனையைத் தூண்டும் மொழியாகக் காணப்படுவதால், தாய்மொழியில் மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதே சிறந்தது என்பதோடு, அவர்கள் தமது தாய்மொழியில் உரிய முறையில் சிந்தித்து பரீட்சைக்கு உரிய விடையளிக்க இலகுவான சந்தர்ப்பமும் கிடைக்கின்றது.
 
அத்தோடு, மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளுடன் பரீட்சையில் சித்தியடைவதற்கும் வாய்ப்புக் காணப்படுகின்றது. கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில மொழிப் புலமை குறைந்து காணப்பட்டாலும், தமது தாய்மொழியில் சட்டக் கல்லூரி பரீட்சை எழுதும்போது, சிறந்த முறையில் சித்தியடைந்து சட்டத்தரணியாக பணியாற்ற அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டுகின்றது.
 
ஏற்கெனவே தாய்மொழியில் சட்டக் கல்லூரி பரீட்சைக்கு தோற்றி, அதில் சித்தியடைந்து பல சட்டத்தரணிகள் கிராமப்புறங்களிலிருந்து உருவாகியிருந்ததோடு, தங்களது கிராமப்புறங்களிலுள்ள அடிமட்ட மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் இலகுவாக நீதியைப் பெற்றுக்கொடுத்துள்ளார்கள்.
 
திடீரென ஆங்கில மொழியில் சட்டக் கல்லூரி பரீட்சை நடத்தப்படுவதால், கிராமப்புறங்களிலிருந்து சட்டத்தரணிகள் உருவாகும் வாய்ப்பு அருகிச் செல்வதற்கு சாத்தியம் காணப்படுவதோடு, கிராமப்புற மக்களின் பிரச்சினைகளுக்கு நீதி கிடைக்காமல் போகும் நிலைமையும் காணப்படும்.
 
ஆர்.சுகந்தினி

Comments