மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படும் தொல்லியல் திணைக்களம் | தினகரன் வாரமஞ்சரி

மக்களின் உணர்வுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படும் தொல்லியல் திணைக்களம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் அபிலாசைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து நியாயமான
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் முதலாவது கலந்துரையாடல் கடந்த
செவ்வாய் கிழமை நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜேயதாஸ ராஜபக்‌ஷ மற்றும் அலி சப்ரி ஆகியோர் அங்கம் வகிக்கின்ற இந்த உபகுழுவின் முதலாவது சந்திப்பில், அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய பட்டியல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

அந்தப் பட்டியலில் சொல்லப்பட்ட விடயங்களை ஆராய்ந்து, எவ்வாறான விடயங்களை முன்னிலைப்படுத்தி, எவ்வாறு விடயங்களை அணுகுவது என்பது தொடர்பாக எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள சந்திப்புக்களில் ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் சுருக்கமாக.....

முப்படையினரினால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தனியார் காணிகள்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வலி. வடக்கு பிரதேசத்தில் இன்றும் சுமார் 3000 ஏக்கர் தனியாருக்குச் சொந்தமான காணிகள் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இவற்றுள் 1005 ஏக்கர் தனியார் காணிகள் உரியவர்களிடம் கையளிப்பதற்கு அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில், உடனடியாக அவற்றை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விடுவிக்கப்படுகின்ற காணிகளில் மீள்குடியேற்றத்தினை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஸ்ரீமத் நாராயண சுவாமி ஆலயம், ஈழத்து திருச்செந்தூர் என்று அழைக்கப்படுகின்ற கதிராண்டவர் ஆலயம் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க வழிபாட்டு தலங்களும் பல்வேறு பாடசாலைகளும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள்

தொல்லியல் திணைக்களத்தினால் வடக்கு மாகாணத்தில் இதுவரை 251 இடங்கள் தொல்லியல் முக்கியத்துவமிக்க பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும், 108 இடங்களுக்கு மாத்திரமே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது. அதைவிட மேலும் 143 இடங்களில் தொல்லியல் சின்னங்கள் இருப்பதாக இனங்கண்டுள்ள தொல்லியல் திணைக்களத்தினர் அவற்றையும் அடையாளப்படுத்துவுள்ளதாக தெரிவித்து வருவதுடன், அவ்வாறான பிரதேசங்களில் மக்கள் அன்றாடச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டு வருகின்றது. இதனால் விவசாயிகளும் நீர்வேளாண்மை உற்பத்திகளில் ஈடுபடுகின்றவர்களும் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழக்கும் நிலை ஏற்படுத்தப்படுகின்றது.

அதைவிட, வவுனியா மாவட்டத்தில் வெடுக்குநாரி மலை, முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை மற்றும் திருகோணமலையில் கிண்ணியா வெந்நீரூற்று போன்ற இடங்களில் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் இந்து மதத்தினை பின்பற்றுகின்ற மக்களின் உணர்வுகளைப் பாதிப்பதாக அமைந்துள்ளது.

எனவே, இவ்வாறான இடங்களில் தொல்லியல் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலான நிபந்தனைகளுடன், மக்கள் தங்களுடைய பூஜை வழிபாடுகளில் சுதந்திரமாக ஈடுபடக்கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதேபோன்று நீதிமன்ற உத்தரவுகளை கணக்கில் எடுக்காமல் சட்ட விரோதச் செயற்பாடுகளை யாராவது மேற்கொள்வார்களாயின் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அத்துடன், எதிர்காலத்தில் தொல்லியல் சின்னங்கள் உள்ள இடங்களை அடையாளப்படுத்துகின்ற போது, சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் வாழுகின்ற அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யகின்ற அதிகாரிகளின் பங்குபற்றலும், அவர்களின் கருத்துக்களும் உள்வாங்கப்படுமாயின், பிரதேச மக்களின் அபிலாசைகளையும் சமரசம் செய்து, குறித்த செயற்பாடுகளை சுமுகமாக முன்கொண்டு செல்ல முடியும்.

வன வளம் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைவதற்கு முன்னர், வடக்கு மாகாணத்தில் சுமார் 128,692 ஹெக்டேயர் காணி வனவளப் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2019ஆம் ஆண்டிற்கு பின்னரான காலப் பகுதியில் 168,920 ஹெக்டேயர் வனவளப் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதனைவிட, இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் 75,158 ஹெக்டேயர் காணி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு புதிதாக அடையாளப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுடைய விவசாயப் பண்ணைகளும் காணப்படுவதானால், இந்தச் செயற்பாடுகளை மக்களினால் சகித்துக் கொள்ள முடியாத மனோநிலையே காணப்படுகின்றது.

மேய்ச்சல் தரை

வடக்கு மாகாணத்தில் சுமார் 460,000 கால்நடைகள் காணப்படுகின்றன. அவற்றுள் சுமார் 310,000 கால்நடைகள் மேய்ச்சல் தரைகளை நம்பியே வளர்க்ப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு குறைந்த பட்சம் 20,000 ஏக்கர் மேய்ச்சல் தரை தேவையாக இருக்கின்ற நிலையில், கடந்த காலங்களில் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்ட காணிகளில் கணிசமானவை, 2012ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சினால் வனவளப் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளமையினால் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களின் கால்நடைகளுக்கு தேவையான உணவுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இயற்கை வளப் பாதுகாப்பு முயற்சியினால் நீர்வேளாண்மைக்கு பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் விடத்தல்தீவு, இலுப்பைக் கடவை, தேவன்பிட்டி, மூன்றாம்பிட்டி, வங்காலை போன்ற இடங்கள் நீர்வேளாண்மை எனப்படுகின்ற பண்ணை முறையிலான இறால், நண்டு, மீன் வளர்ப்பிற்கு பொருத்தமான இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பிரதேசங்களில் பல இடங்கள் பயன்படுத்தப்படாத இடங்களாகக் காணப்படுகின்றன. அதேபோன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமாராட்சி கிழக்கில் சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் என்ற அடிப்படையில் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், களப்பு நீர்நிலைகள் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்படுகின்றமையினால், களப்பு நீர்நிலைகளில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்து வருகின்ற மக்கள் வாழ்வாதாரத்தினை இழக்கும் அபாயமும் ஏற்படுகின்றது.

எனவே, இவ்வாறான இடங்களில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நீர்வேளாண்மை ஊடாக அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சரியான பொறிமுறை உருவாக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படல் ஆரோக்கியமானது.

மாகாவலி எல் வலயம்

மகாவலி அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 34 கிராம சேவகர் பிரிவுகள் மகாவலி எல் வலயமாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அந்தந்த கிராம சேவகர் பிரிவுகளின் அபிவிருத்தி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் அதிகாரத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய நிலையை உருவாக்கி இருக்கின்றது.

இது அந்தப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற மக்களின் அபிலாசைகளுக்கு மாறாக, அவர்களுடன் எந்தவிதமான கருத்தாடல்களையும் மேற்கொள்ளாமல் இடம்பெற்றிருக்கின்றது. இவ்வாறன செயற்பாடுகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக் கூடாது என்பதே அந்தப் பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், அந்தச் சட்டத்திற்கு ஏற்ற வகையில், மாகாவலி அபிவிருத்தி அதிகாரசபை சட்டம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டம் போன்ற சில சட்டங்களை மறுசீரமைக்க வேண்டிய தேவை இருக்கின்ற போதிலும், அவ்வாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமை இவ்வாறான முரண்பாடுகள் ஏற்படக் காரணமாக இருக்கின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

காணாமல் போனோர் விவகாரம்

காணாமல் போனோரின் உறவினர்களினால், தங்களின் உறவுகள் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் என்று பல்வேறு தரப்புக்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, புலிகளினால் தமது உறவுகள் காணாமல் செய்யபட்டதாக ஒரு பகுதியினர் தெரிவிக்கின்றனர். முன்னாள் ஆயுதக் குழுக்களினால் காணாமல் செய்யப்பட்டதாக சிலர் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு படைகள் சம்பந்தப்பட்டிருப்பதாக இன்னொரு பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்திய அமைதிப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டதாக இன்னுமொரு பிரிவினர் தெரிவிக்கின்றனர். அதேபோன்று இனந்தெரியான நபர்களினால் காணாமல் போயுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

எனவே பாதிக்கப்பட்டுள்ள உறவுகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களில் இருந்து அவர்களை மீட்பதற்கான வழிவகைகளை மேற்கொள்வதுடன், இந்த விவகாரத்திற்கு நிரந்தரமான தீர்வினை வழங்கும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இருக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், காணாமல் போனோரின் உறவுகளின் எதிர்காலத்தினை வலுப்படுத்துதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் கைதிகள் விவகாரம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களில் 22 பேர் தடுப்புக் காவலிலும், 16 பேர் தண்டனை வழங்கப்பட்ட கைதிகளாகவும் இருக்கின்றனர்.

தடுப்புக் காவலில் இருக்கின்றவர்களுக்கு பிணை வழங்குவதற்கும், தண்டனைக் கைதிகளாக இருக்கின்றவர்களை ஜனாதிபதிக்கு இருக்கின்ற பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்திற்கு அமைய விடுதலை செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அரசிலமைப்பின் 16 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி அலுவலக மொழியாகவும் நிர்வாக மொழியாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதையும் குறித்த மாகாணங்களில் அனைத்து ஆவணங்களும் தமிழ் மொழியிலேயே கையாளப்பட வேண்டும் என்பதையும் அரசியலமைப்பின் 16ஆவது திருத்தச் சட்டம் வலியுறுத்துகின்றது.

எனினும், அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. குறித்த விடயம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுமானால் அந்த மாகாணங்களை சேர்ந்த மக்கள் எதிர்கொள்கின்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை கட்டுப்படுத்த முடியும் என்பதுடன் அந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்த முடியும்.

எல்.ஆர்.சி. காணிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் சுமார் 1500 ஏக்கர் காணிகள் காணப்படுகின்றன. அந்தக் காணிகள் நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதில் முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. இவை சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுடனோ, மாவட்ட அரசாங்க அதிபருடனோ, மாவட்ட காணி பயன்பாட்டு குழுவினருடனோ எந்தவிதமான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டாது பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் காணிகள் அற்ற மக்கள் ஏராளமானோர் இருக்கின்ற நிலையில், குறித்த காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற போது, அந்த மாவட்டத்தினை சேர்ந்த காணிகள் அற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், சரியான ஒழுங்குமுறைகள் ஊடாக அவை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

வடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை

அண்மைய தகவல்களின் அடிப்படையில், வடக்கு மாகாணத்தில் அச்சுறுத்தும் வகையில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்ற நிலையில், அவை தொடர்பாக விசேட கவனம் எடுத்து விரைவான – கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்துவற்கு தேவையான புனர்வாழ்வு நிலையம் ஒன்று உடனடியாக வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட வேண்டும்.

அதேபோன்று, போதைப் பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகின்றவர்களை சிறைசாலைகளுக்கு அனுப்பாமல் புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைப்பது தொடர்பான ஆலோசனைகளை நீதிச்சேவை ஆணைக்குழு நீதவான் நீதிமன்றங்களுக்கு வழங்க வேண்டும். தேவையேற்படின் சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு வடக்கு, கிழக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களையும், அன்றாடம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளையும் உள்ளடக்கிய பட்டியல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கையளிக்கப்பட்டள்ள நிலையில், இதுதொடர்பான செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு, நியமிக்கப்பட்டள்ள அமைச்சரவை உபகுழுவினால் நியாயமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற பட்சத்தில், தமிழ் மக்களினால் அவை நிச்சயமாக வரவேற்கப்படும்.

Comments