மீண்டும் ஏமாற்றிய இலங்கை | தினகரன் வாரமஞ்சரி

மீண்டும் ஏமாற்றிய இலங்கை

இலங்கை அணிக்கு இந்திய மண்ணில் மற்றொரு ஏமாற்றமே கிடைத்தது. டி20 தொடரை 1–2 என இழந்த இலங்கை, ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்து பறிகொடுத்தது. இன்று (15) கடைசி ஒருநாள் போட்டி நடைபெறவிருப்பதோடு இலங்கை ஆறுதலுக்கேனும் வெற்றிபெறுமா என்று பார்ப்போம்.

இந்திய மண்ணில் இலங்கை அணி தொடர் வெற்றி ஒன்றை பெறுவதற்கு இன்னும் காத்திருக்க வேண்டி இருக்கும் என்பதோடு அதற்கு இலங்கை அணிக்கு இன்னும் அனுபவம், முதிர்ச்சி, திறமை ஏன் அதிர்ஷ்டம் கூட தேவையாக இருக்கும்போல்.

டி20 தொடரை பொறுத்தவரை முதல் இரு போட்டிகளிலும் இலங்கை அணி சரிக்கு சமமாக ஆடி முதல் போட்டியில் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்ததோடு இரண்டாவது போட்டியை வெற்றியீட்டியது. மூன்றாவது டி20 போட்டி என்பது முழுக்க முழுக்க சூர்யகுமார் யாதவ்வின் ஆட்டமாக மாறியதால் இலங்கை அணியால் ஒன்றும் செய்ய முடியாமல்போனது.

ஆனால் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் பின்னடைவு தெளிவாகத் தெரிந்தது. குவாஹாத்தியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் கண்டபடி ஆடி 373 ஓட்டங்களை விளாச, இலங்கை அணி அதனை துரத்துவது எப்படி என்று தெரியாமல் தோல்வியை சந்தித்தது.

ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை மத்திய ஓவர்களில் நம்பிக்கை தரும்படி ஆடியது. என்றாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தபோது தோல்வியை விட்டுக்கொடுத்தது போல் மந்தமாக ஆடியது. இத்தனைக்கும் அணித்தலைவர் தசுன் ஷானக்க கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் 35, 40ஆவது ஓவர் வாக்கில் வேகமாக ஆடி இருந்தால் கூட இலக்கை நெருங்கி இருக்கலாம் அல்லது முன்கூட்டியே தோல்வியை கூட சந்தித்திருக்கலாம்.

முதல் போட்டியில் இலங்கை அணி பந்துவீச்சு மோசமாக இருந்தது மாத்திரமல்ல துடுப்பாட்டத்தில் வெற்றி இலக்கை எப்படித் துரத்துவது என்ற திட்டம் தெளிவாக இருக்கவில்லை என்பது போட்டியின் போக்கை பார்த்தால் புரிந்துவிடும்.

கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி இதற்கு தலைகீழாக இருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு நிர்ணயிக்க வேண்டிய வெற்றி இலக்கு பற்றி குழப்பம் இருந்தது. ஆரம்ப வரிசை ஓட்டங்களை குவித்தபோதும் மத்திய வரிசை சோபிக்கவில்லை. எப்போது ஓட்ட வேகத்தை அதிகரிப்பது எப்போது நிதானமாக ஓட்டங்களை பெறுவது என்ற குழப்பம் இருந்தது.

இதனால் 40 ஓவர்களுக்கு முன்னதாகவே 215 ஓட்டங்களுக்கு சுருண்டது. எஞ்சிய பத்து ஓவர்களுக்கு மேலும் ஓட்டங்களை பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்பது இந்தியாவின் துடுப்பாட்டத்தை பார்த்தாலே புரிந்திருக்கும். இந்திய அணி அந்த வெற்றி இலக்கை 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியே எட்டியது.

ஒட்டுமொத்தத்தில் இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் இன்னும் தன்னை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக துடுப்பாட்ட வரிசை சோபிக்கத் தவறி இருக்கிறது. மத்திய வரிசை வீரர்கள் 50 ஓவர்களுக்கு துடுப்பெடுத்தாட வேண்டும் என்ற நிதானம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆரம்ப வரிசையும் வேகத்தோடு விக்கெட்டை காத்துக்கொள்ள பழக வேண்டி இருக்கிறது.

வனிந்து ஹசரங்கவுக்கு மட்டையை நேர்த்தியாக சுழற்ற முடியும் என்றாலும் தேவையின்றி தவறிழைக்காமல் ஆடப் பழகினால் ஒரு தேர்ந்த சகல துறை வீரராக வர முடியும். சாமிக்க கருணாரத்னவின் துடுப்பாட்டம் ஆகட்டும் பந்துவீச்சாகட்டும் அரைகுறையாகவே உள்ளது. அதிலும் அண்மைய போட்டிகளில் அவரது துடுப்பாட்ட பணியே குழப்பமாக இருக்கிறது. எனவே, சாமிக்க தனது ஆட்டத்தை மேப்படுத்த வேண்டி இருப்பதோடு மற்றொரு வேகப்பந்து சகலதுறை வீரரின் தேவையும் அதிகமாக இருக்கிறது.

இலங்கை அணி இந்த ஆண்டு கடைசியில் ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் ஆடுவதற்குத் தான் மீண்டும் இந்தியா செல்லவிருக்கிறது. அதற்குள் இலங்கை ஒருநாள் அணி தன்னை திருத்திக்கொள்ள வேண்டிய கோளாறுகள் எத்தனையோ இருக்கின்றன. இந்திய மண்ணில் இலங்கை வெற்றி பெறாவிட்டாலும், இருக்கும் குறைகளையாவது தெரிந்து கொள்ள இந்த சுற்றுப்பயணம் உதவியது என்று ஆறுதல் பெறலாம்.

எஸ்.பிர்தெளஸ்

Comments