வானத்தை வசப்படுத்தும் இந்திய சாதனைப் பெண்கள்! | தினகரன் வாரமஞ்சரி

வானத்தை வசப்படுத்தும் இந்திய சாதனைப் பெண்கள்!

விண்வெளி அறிவியல்துறையில் உலக அரங்கில் உச்சத்தைத் தொட்டிருக்கின்றது இந்தியா. இதுவரை காலமும் கண்டறியப்படாத மர்மங்கள் நிலவிய நிலவின் தென்துருவப் பகுதிக்கு உலகில் முதன்முதலில் சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி தரையிறக்கியதனால் உருவான சர்வதேசப் பரபரப்பு அடங்குவதற்கிடையில், சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை நேற்றுக்காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது இந்தியா.

விண்வெளி ஆய்வு சோதனைகளைப் பொறுத்தவரை ‘வானம் வசப்படும்’ என்பதைப் போன்று, அடுத்தடுத்து சாதனைகளை குவித்தவாறு செல்கின்றது பாரத தேசம். இந்தியாவின் இந்த அறிவியல் சாதனைகளைப் பொறுத்தவரை அயல்நாடு என்ற ரீதியிலும், இன்னல் வேளையில் தோள்கொடுக்கும் நட்புநாடு என்ற வகையிலும் இலங்கையும் மகிழ்ச்சியடைய முடியும்.

இந்திய விண்வெளி ஆய்வு நிலையமான இஸ்ரோ சூரிய ஆய்வுக்காக நேற்று விண்ணில் செலுத்திய ஆதித்யா எல்-1 விண்கலமானது 100 தொடக்கம் 120 நாட்கள் வரை பயணித்து L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து ஆய்வில் ஈடுபடவுள்ளது. சூரியப் புயல்,

ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு போன்றன குறித்து ஆய்வு செய்ய உள்ளது ஆதித்யா L1 . இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலம் இதுவென்பதால் அத்தனை உலகநாடுகளின் பார்வையும் இந்தியா மீதே இப்போது குவிந்துள்ளது.

சந்திரயான்- 3 விண்கலம் உட்பட இஸ்ரோவின் அத்தனை ஆய்வு அணியிலும் இயக்குநர் போன்ற முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தமிழர்கள் என்பது பெருமைக்குரிய விடயம். இஸ்ரோவின் தலைவர்களாகவிருந்த கஸ்தூரிரங்கன், சிவன், அண்ணாதுரை மற்றும் முக்கிய பொறுப்பிலிருந்த வனிதா முத்தையா, வீரமுத்துவேல் ஆகியோர் தமிழர்கள் என்பது ஒருபுறமிருக்க, இந்திய விண்வெளி ஆய்வுத் திட்டங்களின் பிரதான பொறுப்பில் உள்ளவர்களும் தமிழர்களாவர்.

சந்திராயன்-3 திட்டத்தின் இயக்குநர் ஒரு தமிழர். அதே போன்று தற்போது நிகர்ஷாஜி என்ற பெண்ணும் இப்பட்டியலில் இணைந்திருக்கின்றார். ஆதித்யா எல்-1 திட்டத்தின் இயக்குநரான இவர் இஸ்லாமிய தமிழ்ப்பெண் என்பது எமக்கெல்லாம் பெருமை தரக்கூடிய விடயம்.

இவர்களது பதவிகளெல்லாம் தனிநபர் செல்வாக்கினால் வழங்கப்பட்டவை அல்ல. விண்வெளி அறிவியல்துறையில் இவர்கள் கொண்டுள்ள ஆற்றல் மற்றும் தகைமையின் அடிப்படையில் வழங்கப்பட்டதே இப்பதவிகளாகும்.

இவை ஒருபுறமிருக்க, சந்திராயன்-3 மற்றும் ஆதித்யா எல்-1 திட்டங்களை எடுத்துநோக்கினால் அங்குள்ள விஞ்ஞானிகள் குழுவில் அரைப்பங்கினர் பெண்களாவர். பெண்களுக்கு சமஉரிமை வழங்கும் வகையில் பால்நிலை சமத்துவத்தை இந்தியா நடுநிலையுடன் கடைப்பிடிக்கின்றதென்பதில் இந்தியப் பெண்கள் உண்மையிலேயே பெருமைப்பட வேண்டியவர்களாவர்.

உலகெங்கும் பெண்களில் ஒருதரப்பினர் சினிமாவென்றும், நாகரிகமென்றும் மற்றொரு பாதையில் சென்று கொண்டிருக்கையில், இந்தியப் பெண்களில் ஒருதரப்பினர் அறிவியல்துறையில் சாதனைகளைக் குவித்து வருவது பரவசத்துடன் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

Comments