2025 இல் சந்திரனில் மீண்டும் நடமாடவுள்ள மனிதன் | தினகரன் வாரமஞ்சரி

2025 இல் சந்திரனில் மீண்டும் நடமாடவுள்ள மனிதன்

விண்வெளியில் முதலில் தடம் பதிப்பது யார் என்ற போட்டி, பனிப்போரில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இரகசியமாக நடந்து கொண்டிருந்த தறுவாயில்தான், 1957ஆம் ஆண்டு அக்டோபர் நான்காம் திகதி ரஷ்யா ஸ்புட்னிக் என்ற பெயர் கொண்ட உலகின் முதலாவது செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது. ஒரு கூடைப்பந்து அளவும் 85 கிலோ எடையும் கொண்ட செயற்கைக் கோள், மணித்தியாலத்துக்கு 29 ஆயிரம் கி.மீ. வேகத்தில் உலகத்தை 940 கி.மீ உயரத்தில் சுற்றி வந்தது. அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த ரஷ்யாவின் இந்த சாதனையை, உலக மக்கள் வியப்புடன் பார்த்தனர். முதலாளித்துவத்தால் ஆகாத காரியத்தை கம்யூனிசம் சாதித்திருக்கிறது என்ற ரீதியாகவும் இது பார்க்கப்பட்டது.

அமெரிக்கா, 1958ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி எக்ஸ்புளேரர் - 1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவி, ரஷ்யாவுடன் போட்டியில் இறங்கியது. இக்கலம் 1970 மார்ச் 31ஆம் திகதிவரை விண்ணில் பூமியை வலம் வந்தது. மொத்தம் 58 ஆயிரம் தடவைகள் இக்கலம் பூமியை சுற்றி வந்த பின்னர் புவியின் வளி மண்டலத்தில் சிக்கி எரிந்து போனது. பின்னர் 1961 ஏப்ரல் 12ஆம் திகதி ரஷ்யா வஸ்டொக் - 1 என்ற விண்கலத்தை ஏவியது. அதில் பயணித்தவர் யூரிககாரின். விண்வெளி சென்ற முதல் மனிதர். மணிக்கு 27,400 கி.மீ. வேகத்தில் பூமியை அவர் சுற்றி வந்தார். அவரது பயண நேரம் 108 நிமிடங்கள். முதலாவது மனிதனை விண்ணுக்கு அனுப்பிய ரஷ்யாவை உலகமே கொண்டாடியது. அவர் வெற்றி வீரராக இலங்கை வந்தபோது கொழும்பில் பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

இனி சும்மா இருக்குமா அமெரிக்கா?

1961 மே ஐந்தாம் திகதி அமெரிக்கா ஃபிரீடம் - 7 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. அதில் பயணித்த இரண்டாவது விண்வெளி வீரரின் பெயர் அலன் ஷெப்பர்ட். 15 நிமிடங்கள் எடையற்ற விண்வெளியில் அவர் பறந்தார்.

இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையே ஆரம்பித்த விண்வெளிப் போட்டி, 1969ஆம் ஆண்டில் நீல் ஆர்ம்ஸ்ட்ரோங்கை சந்திரனில் நிறுத்தியது. சந்திரனில் அடியெடுத்து வைத்த ஆர்ம்ஸ்ட்ரோங் சொன்னபடியே, விண்ணியல்துறையில் அந்த முதல் அடி, பெரும் பாய்ச்சலாகவே அமைந்தது.

சந்திரனில் மனிதனை இறக்க வேண்டும் என்ற எண்ணம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டதற்கான பிரதான காரணம், கம்யூனிச ரஷ்யாவிடம் தோற்றுப்போய்விடக் கூடாது என்ற 'நீயா நானா'வே தவிர வேறொன்றும் கிடையாது. ரஷ்யாவுக்கு மனிதனை சந்திரனில் இறக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்பது புலனாகியதோடு, அபல்லோ 17 உடன் தன் நிலவுப் பயணத்தை அமெரிக்கா நிறுத்திக் கொண்டது. அபல்லோ திட்டத்தின் கீழ் 11 நிலவுப் பயணங்களில் மனிதர்கள் பயணித்திருந்தனர். இந்த 17ஆவது அபல்லோ 1972 டிசம்பர் ஏழாம் திகதி ஏவப்பட்டது. மொத்தம் 12 அமெரிக்க வீரர்கள் 1969 – 1972 காலப்பகுதியில் சந்திரனில் இறங்கினர், நடந்தனர், வாகனங்களை செலுத்தினர் மற்றும் சந்திர மாதிரிகளை பூமிக்கு கிலோ கணக்கில் அள்ளி வந்தனர். ரஷ்யா தனக்கு சவால் விடவில்லை, சந்திரனிலும் உருப்படியான தகவல் எதுவும் தரவில்லை, செலவும் மிகமிக அதிகமாகிக் கொண்டு செல்வதால் அமெரிக்க காங்கிரசும் நிதி ஒதுக்குவதில் கெடுபிடிகள் காட்டத் தொடங்கியது. அது வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டிருந்த நேரம். யுத்த களத்தில் பல ஆயிரம் கோடி டொலர் இழப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்த நிலையில்தான் அந்நாடு பெரும் செலவில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது.

அதன்பின்னர் தன் நிலவுடனான தேன் நிலவை நிறுத்திக் கொண்ட அந்நாடு, பக்கத்து கிரகமான செவ்வாயை ஆராய முற்பட்டது. அங்கே மனிதனை இறக்கி மீண்டும் அழைத்துவர முடியுமா என்பதை விஞ்ஞான ரீதியாக அறிந்து கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியது. 2040க்குள் 225 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ள செவ்வாயை மனிதனால் அடைய முடியும் என நாசா நம்புகிறது. செவ்வாய் கோள் நோக்கிய ஒரு மனிதரைத் தாங்கிய கலத்தை மணிக்கு 39,600 கி.மி. வேகத்தில் அனுப்பி வைத்தால் 162 தினங்கள் பிடிக்கும் என்றும் அங்கே போய் திரும்பி வர ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இவை உத்தேச கணக்குகள் தான். இதைவிட வேகமாகப் பயணிக்க முடியுமா? வழியில் தங்கிச் செல்ல ஒரு தங்கு விடுதியை அமைக்கக் கூடுமா? அண்ட வெளியில் பல மாதங்களாக பயணிக்கும் போது மனித உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய மாற்றங்களை சமாளிப்பது எவ்வாறு என ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. எனினும் 2050ஆம் ஆண்டுக்குள் அது நிகழலாம் என்று விண் விஞ்ஞானிகளும் விஞ்ஞான எழுத்தாளர்களும் நம்புகிறார்கள்.

செவ்வாய் விஷயம் இவ்வாறிருக்க, ஐம்பது ஆண்டுகளின் பின்னர் சந்திரன் மீது நாடுகளுக்கு காதல் பிறந்தது ஏன் என்பதைப் பார்ப்போம்.

சந்திரப் பயணத்தை எப்படி நடத்துவது என்பதை 50 ஆண்டுகளுக்கு முன்னரேயே அமெரிக்கா பாதை போட்டுக் கொடுத்துவிட்டது. இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் பல புதிய பணக்கார நாடுகள் தோன்றிவிட்டன. அவை பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, தொழில்நுட்ப ரீதியாகவும், புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதாகவும் முன்னேற்றம் கண்டுள்ளன. எனவே தமது பொருளாதார பலத்தை உலக அளவில் வெளிப்படுத்துவதானால் ஒன்றில் செலவுமிக்க போரில், அமெரிக்காவைப்போல, ஈடுபடவேண்டும் அல்லது செலவு பிடித்த விண்வெளி ஆய்வில் ஈடுபட வேண்டும்.

சந்திர ஆய்வுகளை ஏன் மேற்கொள்கிறோம் என்பதற்கு, அங்கே தண்ணீர் உள்ளதா? பிராண வாயுவை தண்ணீர் மூலம் உருவாக்க முடியுமா? மனிதர் வாழக் கூடிய தளம் அமைப்பது சாத்தியமா என்றெல்லாம் அறிவியல் காரணங்களை இந்நாடுகள் வெளியிட்டு வந்தாலும், உண்மைக் காரணம் தமது பொருளாதார பலத்தை உலகுக்கு வெளிப்படுத்துவதுதான். இதற்கு ஒரு எளிமையான உதாரணமும் சொல்லலாம்.

கொழுத்த பணக்காரர்களில் சிலர் பெயரும் புகழும் கூடவே அரசியல் அதிகாரங்களும் கைவர வேண்டும் என்பதற்காக கையிலுள்ள பணத்தை செலவு செய்து அரசியலுக்கு வருவார்கள். வேறு சிலர் தமது பணத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி மேடையேறி பட்டங்களையும், பொன்னாடைகளையும் பெற விரும்புவார்கள். பலரும் தன்னைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும், புகழ்பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

சீனா, இந்தியா, ஜப்பான், இஸ்ரேல், தென்கொரியா, ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகள் சந்திர ஆய்வில் அதிக அக்கறை காட்டுவதை இந்த உதாரணத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நோக்கங்கள் புரியும். அதேசமயம், மிகவும் சிக்கலான தொழில்நுட்பங்களை இப் பயணங்களின் பேரில் கையாளும் போது, நுட்பமான தொழில்நுட்பத்துறையில் அறிவு விருத்திக்கு அது வழி கோலுகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். உலகெங்கும் வளர்ந்துவரும், எதிர்கால போட்டிச் சந்தையாக மாறவுள்ள 'ஏ ஐ' என அறியப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறை (Artificial Intelligiance) விண்வெளிப் பயணங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு துறையாகும்.

சந்திரயான் - 3 கடந்த 23ஆம் திகதி சந்திரனில் இறங்கப் போகிறது என அனைவரும் எதிர்பார்த்திருந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக ரஷ்யா லூனர் - 25 என்ற விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்பி வைத்ததோடு அது 21ஆம் திகதியே நிலவின் தென்துருவத்தில் இறங்கும் எனவும் ரஷ்யா அறிவித்தபோது, அது இந்தியாவுக்கு முகச் சுளிப்பை ஏற்படுத்தவே செய்தது.

ஆனால் இந்தியாவின் நல்ல காலமோ என்னவோ, சுற்றுப் பாதையின் உயரத்தைக் குறைக்கும் முயற்சியில் ஏற்பட்ட தவறுகள் காரணமாக ரஷ்ய கலம் சந்திரத் தரையில் மோதிச் சிதறியது. தென் துருவத்தில் கலமொன்றையும் ரோவர் வாகனத்தையும் இறக்கிய முதல்நாடு என்ற பெயரை இந்தியாவும் பெற்றுக் கொண்டது. விண்வெளியில் மனிதனை பறக்கவிட்ட முதல் நாடு என்ற பெயருடன் அமெரிக்காவுக்கு விண்வெளித்துறையில் போட்டியாக நின்ற ரஷ்யா, இந்தியாவின் கன்னி முயற்சியோடு போட்டிபோட முடியாமை அந்நாட்டுக்கு ஒரு பெருத்த பின்னடைவுதான். சந்திர ஆய்வுகளில் கிடைக்கக்கூடிய அறிவியல் தகவல்களுக்கு அப்பால், நாடுகளுக்கு முக்கியம் பெயரும் புகழும்தான் என்பதை, ரஷ்யா முந்திக் கொள்ள முனைந்ததை மற்றொரு உதாரணமாகக் குறிப்பிட முடியும்.

தற்போது நாடுகளின் சந்திர ஆய்வுகள் தென் துருவத்தில் நிலைத்திருப்பதற்கான காரணம், உறைபனி நிலையில் அங்கு காணப்படக்கூடிய தண்ணீர்தான். துருவத்தின் இருளான, குளிர்மிகுந்த பகுதிகளில் காணப்படும் ஆழமான சந்திர கிண்ணக் குழிகளில் உறைநிலையில் தண்ணீர் காணப்படுவதாக தெரிய வந்ததையடுத்தே இந் நாடுகளுக்கு தென் துருவத்தின் மீது கவனம் திரும்பியிருக்கிறது.

தற்போது, பொருளாதாரத் தடை, உக்ரேனில் நீண்ட யுத்தம் போன்ற சிக்கல்களினால் பின்னடைவுகளை சந்தித்துள்ள ரஷ்யாவுக்கு சந்திரனில் மனிதனை அனுப்பும் திட்டமொன்றில் அக்கறை இருக்குமோ தெரியவில்லை. ஆனால் தன்னை உலக அளவில் நிலை நிறுத்த வேண்டிய அவசியம் கொண்ட சீனாவுக்கு தென்துருவத்தில் தன் வீரர்களை இறக்கி திரும்பி அழைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இந்தியாவுக்கும் அந்த இலக்கு உள்ளது. 2030க்குள் இரண்டு நாடுகளுமே அதைச் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

சந்திரனின் தென் துருவ பந்தயத்தில் அமெரிக்காவும் உள்ளது. அது 2025 இல் தென்துருவத்தில் இருவரை இறக்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆர்டமிஸ் என இத்திட்டம் அழைக்கப்படுகிறது. இது கிரேக்க வேட்டைக் கடவுளின் பெயர். அபல்லோவின் இரட்டைச் சகோதரி.

அமெரிக்காவின் திட்டம், முதலில் 'கேட்வே' என்ற பெயர் கொண்ட சந்திர ஆய்வு கூடமொன்றை சந்திர வட்டப் பாதைக்கு அனுப்புவதாகும். இந்த ஆய்வு கூடம் நான்கு வீரர்கள் தங்கக் கூடியதாக இருக்கும். இங்கே சந்திரனில் இறங்கி திரும்பிவரக்கூடிய ஒரு சந்திரகலமும் அதனுள் ஒரு ரோவர் வாகனமும் இருக்கும். பூமியில் இருந்து பயணிக்கும் ஆர்டமிஸ் கலத்தையும், இந்த ஆய்வு கூடத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

எனினும் இந்த 'கேட்வே' கூடத்தை சந்திரவட்டப் பாதையில் நிறுத்தி வைக்கும் திட்டம் மிகுந்த பணச்சுமை கொண்டதாக இருப்பதால் இது 2025 க்குள் சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை.

ஆர்டமிஸ் - 1 கடந்த நவம்பரில் சந்திர வட்டப்பாதையை நோக்கி ஏவப்பட்டது. சந்திரனில் இருந்து 130 கி.மீ. உயரத்தில் அது நிலவை சுற்றி வந்ததோடு சந்திரனுக்கு அப்பால் 64,373 கி.மீ தூரத்துக்கு சென்று வரவும் செய்தது. இப் பயணம் 25 நாட்கள் நீடித்தது. இறுதியாக அத்திலாந்து சமுத்திரத்தில் இக்கலம் இறங்கியது. பயணம் முற்றிலும் வெற்றி.

இரண்டாவது பயணம் எதிர்வரும் வருடம் நவம்பரில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நான்கு வீரர்கள் பயணிக்கவுள்ளனர். பயண நிபுணத்துவம் பெற்றவர் என்ற வகையில் கிறிஸ்டினா கொக் என்ற பெண்மணி, பயண கமாண்டர் ரீட், வைஸ்மன், கலத்தை செலுத்துபவரான விக்டர் குளோவர், கனடிய வீரரான ஜெரமி ஹான்சன் ஆகிய நால்வரே இதில் பயணிக்கவுள்ளனர். இது பத்து நாள் பயணமாக அமையும். பூமியில் இருந்து சந்திரவட்டப் பாதையை அடைய நான்கு நாட்கள் எடுத்துக் கொள்ளும். அதன் பயணப்பாதை சந்திரத் தரையில் இருந்து 8,889 கி.மீ உயரம் கொண்டதாக இருக்கும்.

1972 இல் அபல்லோ 17 உடன் நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் மனிதனை சந்திரனில் நடமாடச் செய்யும் திட்டத்தின் பின்னர் ஆர்டமிஸ் - 3 தான் மீண்டும் மனிதர்களை சந்திரனில் இறக்கப்போகிறது. இப் பயணம் 2025 இறுதியில் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்து நாட்களைத் தாண்டும் பயணமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படும் இப் பயணத்தில் இரண்டு வீரர்கள் (அவர்களில் ஒருவர் பெண்ணாக இருக்கலாம்) ஐந்து முதல் ஏழு தினங்களை நிலவில் கழிக்கவுள்ளனர். தென் துருவ ஆய்வுகளை நேரடியாகவே மேற்கொள்ளவுள்ள இவர்கள் நிலவிலேயே தின்று, குடித்து, நடந்து திரியவுள்ளனர்.

இதன்மூலம், நிலவில் ஐம்பது ஆண்டுகளின் பின்னர் முதலில் கால் பதித்த நாடு என்ற பெருமையை அமெரிக்கா மீண்டும் பெறவுள்ளது. சந்திரனைத் தாண்டி செவ்வாய்க் கிரகத்தை சென்றடையும் மனித குலத்தின் கனவுக்கு இந்தப் பயணம் அடித்தளமிடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Comments