வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மதரீதியான சர்ச்சைகளுக்கு முடிவு காணப்பட வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மதரீதியான சர்ச்சைகளுக்கு முடிவு காணப்பட வேண்டும்!

பொருளாதார ரீதியில் இலங்கை எதிர்கொண்டுள்ள பின்னடைவுகளிலிருந்து படிப்படியாக மீண்டெழுவதற்கான பிரயத்தனங்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நிலையில், தற்போதைய சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் வகையில் மத அடிப்படையிலான சிலருடைய செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இனம் மற்றும் மதம் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட ஒருசிலருடைய செயற்பாடுகளின் காரணமாகவே கடந்த காலங்களில் நாடு பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இதுபோன்ற நிலைமைகளில் கிடைத்த அனுபவங்களைப் பாடமாக எடுத்துக் கொண்டு நாடு தற்பொழுதுள்ள சூழ்நிலையிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும்.

இருந்தாலும் அரசியல் அதிகாரங்களைத் தங்கவைப்பதற்கும், தமக்கான வாக்குவங்கிகளைத் தக்கவைப்பதற்கும் தென்பகுதியிலும் சரி, வடபகுதியிலும் சரி ஒரு சில தரப்பினர் மதஅடிப்படையிலான விடயங்களைக் கையில் எடுத்துள்ளனர்.

மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சில தரப்பினரால் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்படுவதைக் காண முடிகிறது. இந்த வரிசையில் குருந்தூர் மலையில் பௌத்த மதத்தவர்களுக்கும், இந்து மதத்தவர்களுக்கும் இடையில் முறுகல் நிலைமையை ஏற்படுத்துவதற்கு ஒரு சில தரப்புக்கள் முயற்சிகளை மேற்கொள்கின்றன.

இருந்தபோதும் இதுபோன்ற விடயங்களை வைத்துக் கொண்டு முரண்பாடுகளைத் தோற்றுவிக்க இடமளிக்கப் போவதில்லையென்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றார்.

கண்டிக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்கர்களைச் சந்தித்து இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடியுள்ளார். பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தான் அனைத்துவிதமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தாலும், எந்தவொரு மதப்பிரிவினருக்கும் அநீதி இழைக்கும் வகையில் செயற்படுவதற்கு இடமளிக்கப்படாது என்ற உறுதிமொழியை வழங்கியுள்ளார் ஜனாதிபதி.

'வடக்கில் முரண்பாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளிப்பிரதேசங்களிலிருந்து எவரையும் அழைத்துவர வேண்டாம் என, அப்பகுதி சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அப்பகுதி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துள்ள நிலையில், வெளியிலிருந்து வந்த குழுவினரே முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளனர். அது தொடர்பில் வவுனியா மகாநாயக்க தேரரையும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அதனால் நாம் வெளியிலிருந்து அந்தப் பிரதேசத்திற்கு செல்வதற்கு எவரையும் அனுமதிப்பதில்லை. அது தொடர்பிலான விடயங்களைக் கண்டறியுமாறு தொல்பொருளிலியல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் சட்டத்திற்கு அமைய செயற்படுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மகாவிகாரையில் அகழ்வுகளை மேற்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளோம். வடக்கில் இடம்பெறும் அகழ்வுகளின் அறிக்கைகளை பெற்றுக்கொண்டு அந்தப் பணிகளை முன்னெடுப்போம்' என ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌத்த தலங்களை பாதுகாக்கும் அதேநேரம் முதலில் தொல்பொருளியல் ஆய்வுகளை மேற்கொண்டு அப்பகுதிகளில் மற்றைய மதம் சார்ந்த பிரச்சினைகள் இருக்குமாயின் அதுபற்றி ஆராயவும் தயாராகவுள்ளோம். இருப்பினும் வெளியிலிருந்து வருவோர் அப்பகுதிகளுக்குள் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கத் தாம் இடமளிக்கப் போவதில்லையென்பதை ஜனாதிபதி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அத்துடன், இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாதிருப்பதற்கு மாகாண மதத் தலைவர்கள் குழுவொன்றை நியமிக்கவிருப்பதாவும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். அவ்வாறானதொரு குழுவொன்று நியமிக்கப்படும் பட்சத்தில் விடயங்கள் அந்தக் குழுவின் முன்னிலையில் பேசித் தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

ஜனாதிபதி கூறியதைப் போன்று வெளிப்பகுதிகளிலிருந்து சென்றவர்களே நிலைமைகளை குழப்பி விடுகின்றனர். கடந்த காலத்தில் இதுபோன்ற விடயங்களில் தீவிரமாக செயற்பட்ட தென்பகுதி அரசியல்வாதிகள் சிலர் மக்களைத் தூண்டிவிடப் பார்க்கின்றனர். அதேபோல வடபகுதியில் உள்ள அடிப்படைவாத சிந்தனையுள்ள ஒருசில அரசியல்வாதிகளும் இவ்விடயத்தில் தீவிரமாகவிருக்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் நாட்டில் காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் படிப்படியாக தீர்க்கப்பட்டுவரும் நிலையில், தமக்கான அரசியல் பிடியை இழந்த அரசியல் தரப்புக்கள் இதுபோன்ற சிறு சிறு விடயங்களைக் கையில் எடுத்துக் கொண்டு மேலேறி வந்துவிடலாம் என்று பார்க்கின்றன.

இவ்வாறான தரப்பினர் முன்னெடுக்கும் மதவாத அரசியல் இனியும் மக்கள் மத்தியில் எந்தளவுக்குச் சென்றடையும் என்பது கேள்விக்குறியே. இதுவரை காலமும் மதம், இனம் என வேறுபட்டு ஒவ்வொரு விடயங்களையும் மதவாத, இனவாத கண்ணாடிகளால் பார்த்து நாட்டுக்கு ஏற்பட்ட பின்னடைவிலிருந்து இன்னமும் பாடம் கற்காவிட்டால் நாட்டின் எதிர்காலம் நிச்சயமாகக் கேள்விக்குறியாகவே மாறிவிடும்.

குருந்தூர் மலை விவகாரத்தில் தென்பகுதியிலும், வடபகுதியிலும் உள்ள ஒரு சில தரப்பினரே பிரச்சினையைப் பெரிதுபடுத்துவதாகப் பாதுகாப்பு அமைச்சுக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், இது விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் ஒருசில நபர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் குழப்பங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் ஜனாதிபதி மாத்திரமன்றி அவர் தலைமையிலான அரசாங்கம் மிக மிக உறுதியாக இருப்பது இதன்மூலம் தெளிவாகிறது. இருந்தபோதும் கடந்த காலங்களில் இருந்த ஒரு சில அரசாங்கங்கள் தமது இருப்புக்காக மதவாத செயற்பாடுகளைத் தூண்டிவிட்டிருந்ததும் நமக்கு நினைவிருக்கின்றது. எனினும், இந்த அரசாங்கம் அவ்வாறான அரசியல் உத்திகளைப் பின்பற்றாது பிரச்சினைகளைத் தீர்ப்பதன் ஊடாக நாட்டில் நிரந்தர சமாதானத்தை உறுதிப்படுத்தவும், அதன் ஊடாக நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பின்னடைவைச் சீர்செய்வதிலும் அதிக நாட்டம் காட்டி வருகிறது.

பொருளாதாரப் பிரச்சினையிலிருந்து மீட்சிபெறுவதற்கு சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச அமைப்புக்களின் உதவிகளை நாடியிருக்கும் பின்னணியில் மத, இன அடிப்படையிலான குழப்பங்களைத் தூண்டி நாட்டின் அமைதியைக் குலைப்பதற்கு இடமளிக்கப்படக் கூடாது. அவ்வாறு ஏற்படக்கூடிய குழப்பங்கள் நாட்டுக்குக் கிடைக்கக் கூடிய உதவிகளைத் தடுப்பதாவே அமைந்துவிடும். எனவே, குறுகிய அரசியல் சிந்தனையுடன் செயற்படும் தரப்பினர் நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்ததாகும்.

Comments