திருப்பம் காட்டினார் பத்திரண | தினகரன் வாரமஞ்சரி

திருப்பம் காட்டினார் பத்திரண

கையை மிக தாழ்வாக சுழற்றி பந்தை வீசும் பாணியை சர்வதேச கிரிக்கெட்டில் பிரபலப்படுத்தியவர் லசித் மாலிங்க. ஆனால் அவர் பாணியில் பந்துவீசும் மதீஷ பத்திரணவின் கை அவரை விடவும் தாழ்வாக சுழல்கிறது. இதனாலேயே அவரால் புதிய பந்துகளில் மாலிங்க அளவு சோபிக்க முடியவில்லை. அதாவது அவரால் பந்தை அதிகம் சுவிங் செய்ய முடியவில்லை.

ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்கொள்ள கடினமான யோக்கர்கள், பெளன்ஸர்கள் வீசுவதில் பத்திரண தேர்ந்துவிட்டார். பந்தை மெதுவாக வீசுவதற்கு அவர் மாலிங்கவிடம் இருந்து கற்றுக்கொண்டார்.

மத்திய ஓவர்கள் மற்றும் கடைசி ஓவர்களில் பத்திரணவின் பந்து அதிகம் தாக்கம் செலுத்துவதாக மாறி வருகிறது. இந்த ஆண்டு இந்திய பிரீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்த வீரராக பத்திரண மாறினார்.

என்றாலும் 20 வயதேயான பத்திரண இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர் அல்ல. அவர் பற்றி அணியில் இன்னும் உறுதியான நம்பிக்கை வரவில்லை. வீரர்கள் காயப்பட்டதால் இடைவெளி நிரப்புதற்கே அணியில் இடம்பெற்று வருகிறார்.

துஷ்மன்த சமீர மற்றும் டில்ஷான் மதுஷங்க உடல் தகுதியுடன் இருந்திருந்தால் பத்திரணவுக்கு இலங்கை அணியில் இடம்பிடிப்பது என்பது கடினமாக இருந்திருக்கும். சமீர மற்றும் லஹிரு குமார காயமடையாது இருந்திருந்தால் பத்திரண அண்மையில் நடந்த உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இலங்கையில் இடம்பெற்றிருக்க மாட்டார்.

ஆசிய கிண்ணத் தொடரிலும் இதே கதைதான் சமீன, லஹிரு குமார மற்றும் மதுஷங்க உபாதை ஏற்பட்டதாலேயே அவருக்கு இடம் கிடைத்தது. ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை ஆடிய பங்களாதேஷுடனான முதல் போட்டியில் பத்திரண பதினொருவர் அணியில் இடம்பெற்றதும் இடைவெளி நிரப்புவதற்காகத் தான்.

என்றாலும் கண்டிக்கு அருகில் பல்லேகலவில் இடம்பெற்ற அந்த ஆட்டத்தில் பத்திரணவின் பந்துவீச்சில் இதுவரை இல்லாத முதிர்ச்சி, திறமை தெரிந்தது. இது தான் பல்லேகலவில் அவர் ஆடிய முதல் சர்வதேச போட்டி.

பந்துவீச அழைக்கப்பட்ட முதல் ஓவரில் எதிர்பாராத பெளன்ஸர் ஒன்றை வீசி தனது முதல் விக்கெட்டை சாய்த்தார். தாமதித்து பந்துக்கு துடுப்பை சுழற்ற விக்கெட் காப்பளரிடம் பிடிகொடுத்தார் ஷகீப் அல் ஹசனின். 5 ஓட்டங்களுடன் வெளியேறிய ஹசனின் ஆட்டமிழப்பு பங்களாதேஷுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

பின்னர் மத்திய வரிசையில் வந்த அனுபவ துடுப்பாட்ட வீரர் முஷ்பீகுர் ரஹீமையும் பத்திரணவால் வீழ்த்த முடிந்தது. தலைக்கு மேலால் வந்த பெளன்ஸர் பந்தை அடிக்க அதனை திமுத் கருணாரத்ன பெளண்டரி அருகில் பிடியெடுத்தார். பின் வரிசையில் தக்சின் அஹமட்டை டக் ஆவுட் செய்த பத்திரண கடைசி விக்கெட்டாக முஸ்தபிசுர் ரஹ்மானையும் பூச்சியத்திற்கு வெளியேற்றினார்.

இதன்மூலம் பங்களாதேஷ் அணியை 164 ஓட்டங்களுக்கு சுருட்ட இலங்கை அணியால் முடிந்ததோடு போட்டியில் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டவும் முடிந்தது. துஷ்மன்த சமீர, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க, போதாக்குறைக்கு சுழல் வீரர் வனிந்து ஹசரங்கவும் இல்லாத நிலையில் களமிறங்கிய இலங்கை அணிக்கு பந்துவீச்சே பெரும் கவலையாக இருந்தது.

என்றாலும் முதல் போட்டியில் பத்திரணவின் பந்துவீச்சு இதுவரை காணாத அளவுக்கு நேர்த்தியாக இருந்தது. தனது குறுகிய ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில் அவர் பந்தை மிக கட்டுக்கோப்போடு வீசிய இன்னிங்ஸாக இதனை குறிப்பிடலாம். இந்தப் போட்டிக்கு முன்னர் பத்திரண ஓவர் ஒன்றுக்கு தலா 6.48 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால் இந்தப் போட்டியில் 4.17 சராசரியையே பெற்றார். இது அவரது பந்துவீச்சு நேர்த்தியாக இருந்ததை உறுதி செய்ய போதுமானது.

பங்களாதேஷுடனான போட்டியில் அவர் 7.4 ஓவர்கள் பந்துவீசி 32 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன்னர் நான்கு ஒருநாள் போட்டிகளிலேயே ஆடி இருந்த பத்திரணவின் சிறந்த பந்துவீச்சு இதுவென்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனால் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கையின் இளம் பந்துவீச்சாளர் என்ற சமிந்த வாசின் சாதனையை பத்திரண முறியடித்திருக்கிறார். பத்திரண இந்த நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தும்போது அவரது வயது 20 ஆண்டு, 256 நாட்களாகும். முன்னதாக சமிந்த வாஸ் 20 வயது 280 நாட்களில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

பத்திரணவின் இந்த பந்துவீச்சு மிக முக்கிய திருப்பத்தை காட்டுகிறது. தனது பந்துவீச்சு பற்றி நம்பிக்கை அதிகரிக்கும்போது அவர் அணியில் ஸ்திரமான இடம் ஒன்றை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

“அவரது ஆட்டத்திறன் கொஞ்சம் காலமாக அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது” என்று இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறுகிறார்.

“ஐ.பி.எல் தொடரில் அவருக்கு நல்ல அனுபவம் கிடைத்ததோடு தொடர்ந்து உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் அவர் எம்முடன் வந்தார். புதிய பந்தில் எப்படி பந்து வீசுவது என்பது பற்றி நாம் அதிகம் பணியாற்றினோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

என்றாலும் பங்களாதேஷுடனான போட்டியில் பத்திரண பதினொராவது ஓவரில் வைத்தே பந்துவீச அழைக்கப்பட்டார். எதிர்பார்த்தது போல் அவர் கடைசி ஒவர்களில் சிறப்பாகவே பந்துவீசினார். பத்திரணவின் வேகத்தை எதிர்கொள்ள தக்சின் அஹமட் தடுமாறியதை காண முடிந்தது.

என்றாலும் ஒரு முழுமையான பந்துவீச்சாளராவதற்கு அவர் புதிய பந்திலும் அதிக கட்டுப்பாட்டுடன் பந்து வீச வேண்டி இருக்கிறது. “அறிவுறுத்தல்களை அவர் விரைவாக புரிந்துகொள்கிறார். போட்டியில் உடன் அதனை செயற்படுத்துகிறார். அதனை அவர் தமது போக்கில் செயற்படுத்துகிறார். அவர் புதிய பந்தை பெறுவதற்கு நீண்ட காலம் செல்லாது” என்கிறார் சில்வர்வுட்.

ஆசிய கிண்ண தொடரில் நடப்புச் சம்பியனாக இலங்கை இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. தனது இரண்டாவது மற்றும் கடைசி குழுநிலை போட்டியில் இலங்கை அணி வரும் செவ்வாய்க்கிழமை (05) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. அது வும் பாகிஸ்தானின் லாகூர் நகரிலேயே அந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் போர் சுற்றுக்கு முன்னேற இந்தப் போட்டியில் இலங்கை வெல்வது கட்டாயமாகும். தொடர்ந்து சுப்பர் போர் சுற்றில் பெரும்பாலும் பலம் மிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை இலங்கை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

தொடர்ந்தும் இலங்கை அணி பந்துவீச்சில் பலவீனமாகவே தெரிகிறது. பங்களாதேஷுடனான போட்டியில் கசுன் ராஜித்தவுடன் சேர்ந்து சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவே வீசினார். தீக்ஷனவுக்கு புதிய பந்தை கையாண்டு பழக்கம் இருப்பதோடு அந்தப் போட்டியில் அவர் 8 ஓவர்கள் பந்து வீசி 19 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தவிர தனஞ்சய டி சில்வா, துனித் வெள்ளாலகே மற்றும் தசுன் ஷானக்க ஆகிய வீரர்களே பந்துவீச்சு இடைவெளியை நிரப்பினார்கள். எனவே பத்திரணவின் பந்துவீச்சில் தொடர்ச்சியான போக்கு நீடிப்பது இலங்கை அணி ஆசிய கிண்ணத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு கட்டாயக் காரணியாக மாறியிருக்கிறது.

Comments