இறைவரி திருத்த சட்டமூல வாக்கெடுப்பு | தினகரன் வாரமஞ்சரி

இறைவரி திருத்த சட்டமூல வாக்கெடுப்பு

அரச தரப்பு எம்.பிக்களுக்கு விடுமுறை அனுமதி வழங்கியது ஏன்?

– ஆளும் கட்சி பிரதான அமைப்பாளர் விளக்கம்

இறைவரி திருத்தச் சட்டமூலத்தை பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்ற முடியுமென்று அரசாங்கம் ஏற்கெனவே உறுதியாக நம்பியிருந்ததால், அரசாங்கத்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களது வேறு சில அத்தியாவசியப் பணிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் தெரிவித்தது.

லொஹான் ரத்வத்த, திஸ்ஸகுட்டி ஆராச்சி, ஜகத்குமார, நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் அரசாங்கக் கட்சி அலுலகத்தில் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்திருந்தனர். தாங்கள் பாராளுமன்றத்துக்கு மிக அருகிலேயே இருப்பதால், வாக்களிப்பில் பிரச்சினை ஏற்பட்டால், விரைவில் வரலாமென்றும் அறிவித்திருந்ததாகவும், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகம் தெரிவித்தது. மஹிந்த ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, ஜனக பண்டார தென்னகோன், கீதா குமாரசிங்க ஆகியோர் சுகயீனமடைந்துள்ளதாகவும், ஆளும் கட்சி அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு திகதி நிர்ணயிக்கப்படுவதற்கு முன்னரே மேலும் 5 எம்.பி.க்கள் வெளிநாடு செல்ல அனுமதி பெற்றுள்ளனர். அவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால் பாதிப்பில்லையென்பதால் அவர்களை மீள அழைக்கவில்லை சமல் ராஜபக்ஷ, விதுர விக்கிரமநாயக்க, தம்மிக்க பெரேரா, திலும் அமுனுகம, மர்ஜான் ஃபலீல் ஆகிய உறுப்பினர்களே வெளிநாடு சென்றுள்ளனர். இருப்பினும், இறைவரி திருத்தச் சட்டமூலத்தை 45 மேலதிக வாக்குகளால் அரசாங்கம் நிறைவேற்ற முடிந்ததாக, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 7ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இறைவரி (திருத்த) சட்டமூலத்துக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் அனுமதி வழங்கினார். இதன்படி, செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் இந்தச் சட்டம் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Comments