
– ரூ. 200 மில். செலவில் இறக்குமதி செய்யப்படும் ரயில் பெட்டி
– உள்ளூரில் உற்பத்தி செய்ய ரூ. 21 மில். மட்டுமே செலவு
நான்கு வருடங்களுக்குள் 42 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவை மீதப்படுத்தி ரயில் பெட்டிகளை முழுமையாக புனரமைப்புக்கு உட்படுத்தும் வேலைத்திட்டமொன்றை TANTRI Trailers நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
எனினும், இத்தகைய நிறுவனமொன்று ரயில் பெட்டி புனரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற போதும், அதனுடனான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு போக்குவரத்து அமைச்சின் தொழில்நுட்பப் பிரிவு பணிப்பாளர் நாயகத்தினால், ரயில்வே பொது முகாமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டு, வேறொரு ஒப்பந்தத்தின் கீழ் 29 ரயில் பெட்டிகள் திருத்தப்பட்டுள்ளதால், 5,200 மில்லியன் ரூபாவை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய நிறுவனமான TANTRI Trailers நிறுவனம் 200 ரயில் பெட்டிகளை ஒரு ரயில் பெட்டி 12 மில்லியன் ரூபா என்ற வகையில் முழுமையாக புனரமைப்பு செய்துள்ளதுடன், அதனையடுத்து மேலும் 100 ரயில் பெட்டிகளை முழுமையாக திருத்துவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 50 பெட்டிகளை முழுமையாக திருத்தியுள்ள அந்த நிறுவனம், பின்னர் நாட்டில் ஏற்பட்ட கொவிட் -19 சூழ்நிலை காரணமாகவும் டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் ஏற்பட்ட உற்பத்திச் செலவுகள் அதிகரிப்புக் காரணமாகவும் ரயில் பெட்டிகளுக்காக பெற்றுக்கொள்ளும் கட்டணத்தை அதிகரிக்கப் போவதாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதற்கிணங்க ஒரு ரயில் பெட்டியை முழுமையாக திருத்துவதற்கு 21 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதுடன், அதனை பெற்றுக்கொடுப்பதற்காக போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி சமர்ப்பித்துள்ள அமைச்சரவை பத்திரத்துக்கும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வருடம் ஜனவரி 14ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதத்தில், நிதி அமைச்சர் என்ற வகையில் அவர் வழங்கிய அனுமதி தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நிலையில் நிதி அமைச்சரினால் அமைச்சரவை அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள திட்டம் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு தெரியாமல் 50 ரயில் பெட்டிகளில் 21 ரயில் பெட்டிகளை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கையை நிறுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சின் தொழில்நுட்பப் பிரிவு பணிப்பாளர் நாயகத்தினால் ரயில்வே பொது முகாமையாளருக்கு கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது உலக சந்தையின் விலை நிலைவரப்படி இந்தியாவிலிருந்து மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியை இறக்குமதி செய்வதனால் ஒரு ரயில் பெட்டியை கொள்வனவு செய்வதற்கு 162 மில்லியன் ரூபா செலவாகும். அத்துடன் கப்பல் கட்டணம், சுங்கக் கட்டணம், துறைமுகக் கட்டணம் ஆகியவற்றுடன் சேர்த்து அது 180 மில்லியனாக அமையும். அதேவேளை, சீனாவிலிருந்து இவ்வாறு ஒரு ரயில் பெட்டியை கொள்வனவு செய்வதனால் 233 மில்லியன் ரூபா செலவாகும்.
அந்த வகையில், பொதுவாக 200 மில்லியன் பெறுமதியான ரயில் பெட்டியொன்றை 21 மில்லியன் ரூபாவுக்கு முழுமையாக புனரமைப்பு செய்வதற்கு இரண்டு வருட முழுமையான பொறுப்புடனான தேசிய நிறுவனமொன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அந்த ஒப்பந்தத்தை இவ்வாறு சீர்குலைத்துள்ளமை ஏற்க முடியாது.
இதனால் புதிய ரயில் பெட்டிகளை கொள்வனவு செய்வதனால் அரசாங்கத்துக்கு பெருமளவு செலவை ஏற்க வேண்டி வரும். நாட்டில் தற்போது ரயில் பெட்டிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக காணப்படுவதால், பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பிலிருந்து தலைமன்னார், மாத்தளை, பெலியத்தவரை சேவையில் ஈடுபடுத்தப்படும் ரயில்கள் மற்றும் கடுகதி ரயில்கள் பலவும் இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தந்த்ரி நிறுவனம் தற்போது மூன்று ரயில் பெட்டிகளை தேசிய ரீதியில் உற்பத்தி செய்யும் திட்டம் தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளதுடன், அதன் மூலம் அரசாங்கத்துக்கு பாரிய நிதியை மீதப்படுத்திக்கொள்ள முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.