
சுற்றுலா வீஸா பெற்று தொழிலுக்கு அனுப்புவது சட்டவிரோதமான நடவடிக்கையாகுமென, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தது.
சுற்றுலா வீஸா வாயிலாக சர்வதேச நாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்று பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பட்சத்தில், எவ்வித பொறுப்பையும் வேலைவாய்ப்பு பணியகம் ஏற்றுக்கொள்ளாதெனவும், அப்பணியகம் அறிவித்துள்ளது. அத்துடன், தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வது மிகக் கட்டாயமாகுமெனவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, சுற்றுலா வீஸாவில் ஓமானுக்குச் சென்று பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்து வந்த ஒருவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உதவியுடன் இலங்கைக்கு மீண்டும் அழைத்து வரப்பட்டு, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில், பாதிக்கப்பட்டவரின் மனைவி அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து அந்நபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். மேலும், இவரை சுற்றுலா வீஸா மூலம் தொழிலுக்கு அனுப்பிய மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.