நாவல் மரம் தந்த பாடம் | தினகரன் வாரமஞ்சரி

நாவல் மரம் தந்த பாடம்

ப. அருந்தவம்

கனிப்பனைத் தமிழ் கலவன் பாடசாலையில் விவசாய பாடம் கற்பிக்கும் ஆசிரியர் பாலசுப்பிரமணியம். இவரை எல்லோரும் அன்பாக மணியம் மாஸ்டர் என்றே அழைப்பர். இவர் கற்பித்தலுக்கு மேலதிகமாக பாடசாலை முகாமைத்துவ செயற்பாடுகளுக்கும் இணை பாடவிதான செயற்பாடுகளுக்கும் தன்னாலியன்ற பங்களிப்பை வழங்கிவரும் ஓர் ஆசிரியரும் கூட.  

இப்பாடசாலையின் தரம் நான்கு மாணவர்கள் கல்விச் சுற்றுலா ஒன்றின் நிமித்தம் அருகிலுள்ள குளம்சார் நீரியல் சூழல் ஒன்றை அவதானிக்கச் சென்றனர். இவர்களின் வகுப்பாசிரியருடன் உதவியாக மணியம் மாஸ்டரும் சென்றிருந்தார்.  

அப்போது மாணவர்கள் தமது குளச்சூழல் அவதானத்தின் பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வரும் வழியில் சிறிய நாவல் மரமொன்று அதன் பக்க வேர்கள் வெளியில் தெரியும் வண்ணம் சாய்ந்து வளர்ந்திருந்தது. இம் மரக்கன்று இப்போது விழுமோ எப்போது விழுமோ என்ற நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தது.  

வாடிய பயிரைக் கண்டால் வாடும் குணங்கொண்ட விவசாய ஆசிரியர் மணியம் மாஸ்டர் அந்தச் சிறு மரத்தை மண்ணோடு பெயர்த்து பத்திரமாக எடுத்து வந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்.  

இதைக் கண்ட மாணவியொருவர் "ஆசிரியரே இதை எதற்கு எடுத்துக்கொண்டு வருகிறீர்கள்?" என்று கேட்டார்.  

இதற்கு மணியம் மாஸ்டர்,  உலகில் இறைவனால் படைக்கப்பட்ட எந்த உயிரினமும் அழிவடையவிடக் கூடாது. இச்சிறு மரத்தின் நிலையை சகலரும் பார்த்தீர்கள் அல்லவா?   இதை இப்படியே நாம் விட்டுவிட்டு சென்றுவிட்டால் இன்றோ அல்லது நாளையோ சரிந்து விழுந்து இறந்துவிடும். இதை வேறு இடத்தில் நட்டுவைத்தால் இம்மரம் தப்பிப் பிழைத்து விடுமில்லையா?" என பிள்ளைகளை நோக்கி வினாத்தொடுத்தார்.  

இதற்கிடையே ஒரு மாணவன் "இச்சிறு மரத்தைப் பற்றிக் கவலைப்படுவதா? எத்தனையோ மனிதர்கள் இன்று அநாதைகளாக வாழ்கின்றனரே! அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதைவிடுத்து..." என்றான்.  

இதற்கு ஆசிரியர் "மனிதனுக்கு உதவ அறிவும், கை, கால்களும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மரங்கள் அப்படியல்ல, அவற்றுக்கு நாம்தான் உதவி செய்ய வேண்டும். உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மனித உயிரும் தாவர உயிரும் ஒன்றுதான். உலகில் படைக்கப்பட்ட மனித உயிரும், தாவர உயிரும் ஒன்றுதான். உலகில் படைக்கப்பட்ட சகல உயிர்களையும் சமமாகப் பார்ப்பதுதான் தர்மம் எனக் கூறியதுடன் பாடசாலையின் ஓரமாக சிறப்பான இடமொன்றைத் தெரிவுசெய்து நாவல் மரத்தை நாட்டினார் மணியம் மாஸ்டர்.

மரம் நாட்டி எட்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. மாணவர்களும் இன்று பன்னிரண்டு வருட பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்து க.பொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்ற ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்.

இப்போது பாடசாலை மூன்றாம் தவணையின் இறுதிநாள். மணியம் மாஸ்டரும் தான் நட்ட நாவல் மரத்தின் பக்கமாக வந்துகொண்டிருந்தபோது குறித்த எட்டு ஆண்டுகளின் முன் தரம் 4இல் கல்விபயின்று இன்று க.பொ.த (உ/த) வகுப்பில் பயிலும் சில மாணவரும் அப்பக்கமாக வந்தனர். தான் நட்ட நாவல் மரம் பெரிய மரமாகி பழங்கள் தொங்கும் அழகைக் கண்டு இன்பக் கண்ணீரில் மிதந்த ஆசிரியர், "மாணவர்களே இந்த மரம் எதுவெனத் தெரிகிறதா?" என வினவினார்.

சிறிது நேரம் கூட யோசிக்காத மாணவர்கள் "சேர் நீங்கள் நட்ட மரம்தானே?" என கேட்டனர்.

"ஆம்... ஆம்...!"  என தொடர்ந்த மணியம் மாஸ்டர், அன்றைக்கு இம் மரத்தை காப்பாற்றாமல் விட்டிருந்தால் இன்று உங்களுக்கு இனிமையான இப்பழங்கள் கிடைத்திருக்குமா? எனக்குப் பயன்படாவிட்டால் பிறருக்குப் பயன்படுமே என எண்ணியே இதனை அன்று நான் நாட்டினேன். "பாருங்கள் பறவைகள் பல நாவல் பழத்தை உண்டு பசியாறுவதை.."

ஆம்! அன்பான ஆசிரியரே "மரங்கள் எங்களுக்கு மட்டுமல்ல; பல உயிரினங்களுக்கும் அரும்பணி செய்கின்றன. சூரிய சக்தியை பிற உயிர்கள் பயன்படுத்தக் கூடிய சக்தியாக மாற்றக் கூடியவை மரங்களே என்பதையும் நாம் இன்று கற்று அறிந்துள்ளோம். இனி எங்கள் வாழ்வில் மரங்களை வளர்த்து எல்லா உயிர்களுக்கும்  நன்மை செய்வோம்" எனக்கூறினார்.

இம் மாணவர்களின் இனிய வார்த்தைகளால் மிகவும் மகிழ்வுடன் வீடு செல்கிறார் மணியம் மாஸ்டர்.  

Comments