![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/07/27/q5.jpg?itok=zPur_U5g)
“குடி குடியைக் கெடுக்கும்.” என்றகாலம் போய் இப்போது “குடி உயிரைப்பறிக்கும்.” என்பதாக மாறியுள்ளது. புகைத்தல், மது பாவனைஎன்பன ஆரோக்கியத்துக்கு கேடு என்ற அறிவித்தலுடன்தான் அவை விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு காற்போத்தல் மது புட்டியில் ஒருகுடியானவனுடைய நிம்மதியான சில மணித்துளிகள் அடங்கியிருக்கிறதாம். ஒரு நித்தக் குடிகாரருடைய பொன்மொழி அது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், குடிபோதையில் வாகன மோட்டியதால் நடந்த வாகன விபத்துக்கள் அதிகம். மிக இளம்வயதினர் உந்துருளிகளை ஓட்ட தடை இருக்கிறது. ஆனாலும் கடந்த மாதத்தில் ஐந்தாம் ஆண்டு படிக்கும் மாணவனும் எட்டாம் ஆண்டு படிக்கும் ஒருமாணவனும் மோட்டார் சைக்கிளோடி விபத்துக்குள்ளானதில் இருவருமே சாவடைந்துள்ளனர். அடுத்து கிளிநொச்சியில் இரு மாணவர்கள் கஞ்சா பாவித்துவிட்டு அந்தபோதையில் தண்டவாளத்தில் நின்று தமது வண்டவாளத்தை பேசி இழுபட்டு ஒருவாறு வெளியேறினாலும், பின் தன் நண்பனையும் வெளியே இழுக்க முயல்கையில், ரயிலில் மோதுண்டு சாவடைந்தனர் உடல்கள் சிதறியிருந்தது..
இப்படி அநேக சம்பவங்களை நான் கூறலாம். இதையொட்டியதாக எல்லோரிடமுமே ஒவ்வொரு சம்பவங்களோ சாவுகளோ தெரிந்துமிருக்கலாம். இன்று நேற்றல்ல வெகுகாலங்களாக குடியினால் ஏற்படும் இந்த அசம்பாவிதங்கள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. ஆயினுமென்ன, அதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு யாரும் திருந்தியதாக இல்லை. போதை என்பது எப்படி வந்தாலும் அது தீமைதான். போதைக்காகவே மதுபான விற்பனையும், புகைக்கும் சாதனங்களும் பலவகைகளில் பலபெயர்களில் பல தரங்களிலும் விற்பனையாகின்றன. இவற்றின் மூலம் பெருந்தொகைப்பணம் அரசின் கஜானாவுக்கு செல்கிறது. அதை இழக்க அரசாங்கம் ஒருபோதும் விரும்பாது. அப்படி விரும்பினால் அரசாங்கத்துக்கு காற்றுப்போய் அது ‘ரிம்’ மிலதான் ஓடவேண்டியதாக இருக்கும். ஆக ‘நாய் வாழ்ந்தா என்ன? பூனை சிம்மாசனம் ஏறினா என்ன?’ எங்கட தேவைய நாங்கள் நிரவியே தீருவோம் என்பது அரச கொள்கை.
உங்களுக்கு தெரி யுமோ? சாதாரணமாக ஒரு போத்தல் சாராயம் என்பது கூலிசெய்பவனுக்கு கனவுதான். அவனுடைய நாள் வேலைக்கான கூலியைவிட அதன் விலைஅதிகம். விரும்பினால் எப்பவாவது விசேட தினங்களில் மட்டும் அதை வாங்க முடியும். ஆனால் அன்றாடம் உடலுழைப்பில் ஈடுபடுபவனுக்கு அவனது உடல் அலுப்பு மறந்து தூங்க குடித்தால்தான் உண்டு. அவர்களுக்கு போதை வேண்டும். அவர்களுக்காகவென்றே மலிவான விலையில் கிடைப்பது கசிப்பு கஞ்சா, பான்பராக் போன்றவை. இப்போது தாராளமாக புழக்கத்தில் வந்துவிட்டன. யார் விற்கிறார்கள், யார் முதலாளி, அந்த இறுதி நுகர்வாளருக்கு எதுவுமே தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. இந்த போதைப் பொருட்களில் மிகமலிவான கசிப்பு விற்பனையில் இறுதி நுகர்வாளனை சந்திப்பவர்கள் அநேகமாக பெண்கள்தான்.
இவர்களை நீதிமன்றில் நிறுத்தினால் அவர்கள் கண்ணீர் விட்டுக் கதறுவார்கள். தமக்கு உணவுகூட கஸ்டமாக உள்ளது. அதனால்தான் இந்த தொழிலுக்கு வந்தேன். என்பார்கள். அவர்களது கண்ணீரில் நீதி கரைந்து போகாது. அவர்களுக்கு குறைந்தபட்ச அபராதமோ குறைந்தகால சிறைத்தண்டனையோ கிடைக்கலாம். நேற்றுவரை அரைச்சதம்கூட என்னால் தேடமுடியவில்லை என்றழுத அந்தப்பெண் பத்தாயிரம் பதினையாயிரம் என விதிக்கப்படும் அபராதத் தொகையை உடனடியாக கட்டிவெளியே வந்துவிடுவாள். அவர்களுடைய முதலாளி அந்த அளவுக்கு விசுவாசமாக நடந்து கொள்வான்.
போர் நடந்த காலத்தில் பாரியகுற்றங்களுக்கு மரண தண்டனைதான் என்று இருந்த காலத்திலும் எமது பகுதியில் எல்லைப்புறங்களில் கஞ்சா விளைந்தது. கசிப்பு பின்தங்கிய கிராமங்களின் மூலாதார தொழிலாக இருந்தது. அதாவது ஒரு குடும்பம்கூட விலகாமல், அத்தனை குடும்பங்களும் பங்கேற்கும் தொழிலாக அது இருந்ததுதான் காரணம். பொருட்களை மிதிவண்டிகளில் கொண்டு வந்து சேர்ப்பவர்கள் பானைகள் செய்துகொடுப்பவர்கள். விறகுகொத்திக் கொடுப்பவர்கள் ஊறல்போடும் விற்பன்னர்கள், அதைவடித்து பங்கிடுவோர், அங்கிருந்து அதை சிறு பரல்களில் கடத்துவோர் அதை ஐந்து லீட்டர் கலன்களுக்கு மாற்றுவோர் அதை துணைக் கிராமங்களுக்கு கொண்டு செல்வோர், என அனைவருக்கும் வேலைவாய்ப்புண்டு. பாடசாலைப் பைகளில்கூட கசிப்பு பயணிக்கும். ஆனால் அதைக்கண்டும் காணாமல் போகவேண்டிய சூழல் எமக்கிருந்தது. ஏனெனில் அதன் ஸ்தாபகர்கள் தமது தொழிலை பிடிபடாமல் நடத்திக் கொண்டிருந்தனர் என்பது மட்டுமல்ல தொழிற்படும் இடம் மறைவிடத்தை சுற்றி பாரிய வேலிகளை கொண்டிருந்தது. தொலைவில் வருவோரை இனங்காட்ட கிராமங்கள் தயாராக இருந்தன.
அயற் கிரமங்களில் சிவப்பு சேலைகள் காயப்போட்டிருந்தால் பகைவர் நடமாட்டம் என்பதையும், பச்சை, வெள்ளைநிற சேலைகள் காய்ந்து கொண்டிருந்தால் ஆபத்தில்லை என்பதையும் நாம் பின்னர்தான் அறிந்தோம். இதற்காக அந்த கிராமத்திலிருந்து சிலரை அமைப்பில் இணைத்தார்கள். கசிப்பு கலன்களுடன் பிடிபட்டவர்கள்தான். ஆயினுமென்ன தொழிலையோ வியாபாரத்தையோ நிறுத்தமுடியவில்லை.
போதை அத்தகையது. எமதூர்க் கவிஞன் ஒருவன் பாடினான்
‘நித்தம் ஒருபோத்தல் சுத்தம் செய்கின்ற நேசருக்கோ விறுவிறுப்பு
அவர் நினைவில் உறவாடும் மனைவி திருவாயில் நெடுகலுமே புறுபுறுப்பு’ அந்தக்கால கவிஞனும் மானிடக்கும்மி என்ற பதிப்பில் பாடினான்.
“கள்ளுச்சாராயம் குடியாதே அபின் கஞ்சா மதுவையும் கொள்ளாதே உள்ளம் மயங்கிடும் கண்ணும் சிவந்திடும் ஓட்டாண்டி ஆகுவாய் மானிடனே”
நித்தம் மது அருந்துபவருடைய குடலில் மதுசாரம் படிந்துவிடுமாம். அது அவருக்கு நோய்கள் வரும்போது குடிக்கும் மருந்துகள் எதையும் குடலில் ஒட்ட விடாதாம். எனவேதான் குடிகாரருக்கு வருத்தம் வந்தால் மதுவே மருந்தாக பயன்படுத்துவார். அவருடைய மூளையும் மதுசாரத்தினால் அடிக்கடி மயங்குவதால். மற்றவர்களுடைய அறிவுரைகளை ஏற்கவே மாட்டார் என நான் படித்திருக்கிறேன். அது உண்மைதான் என்பதை குடிமக்களுடன் வாழ்ந்ததால் அனுபவ வாயிலாக அறிந்துமிருக்கிறேன். என்று தணியுமிந்த மதுபானத்தின் தாகம்.
தமிழ்க் கவி பேசுகின்றார்