![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/07/28/colearth-rise-on-moon-nasa-image135122646_7156593_20072019_VKK_CMY.jpg?itok=JN-OPtdZ)
அபல்வோ- 11 விண்ணில் செலுத்துவதற்கான அனுமதி கிடைத்தும் அதை விண்ணேற்றுவதற்கான பணிகள் ஆரம்பமாயின. 9,8,7,6, என எண்ணப்பட்டு சட்டர்ன் ஏவுகணை பேரோசையுடன் மேலே கிளம்பத் தொடங்கியது.
அபல்லோ -11 சீறிக்கிளம்பி விண்ணில் ஏறிய ஆறாவது வினாடியில் அது வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டது. 12ஆவது நிமிடத்தில் பூமியின் சுற்றுப் பாதையை அபல்லோ சென்றடைந்தது. அதன்பின்னர் அபல்லோவை கண்காணித்து வழிநடத்தும் பொறுப்பை ஹுஸ்டன் ஆய்வு நிலையம் ஏற்றுக்கொண்டது. உலகின் 17 இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பாரிய அண்டனாக்கள் அபல்லோவில் இருந்து கிடைக்கும் சமிக்ைஞகள், தகவல்களை ஹுஸ்டனுக்கு அனுப்பும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கலிபோர்னியா, ஸ்பெயின், அவுஸ்திரேலியா, ஆகிய இடங்களில் இவை அமைக்கப்பட்டிருந்தன. மேலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்கள், எட்டு தகவல் தொடர்பாடல் விமானங்கள் என்பன இப்பணியில் ஈடுபட்டிருக்க, யு.எஸ்.எஸ். ஹோர்ன்ட் என்ற கடற்படைக் கப்பல் ஹவாய் தீவுகளுக்கு தென்கிழக்கே 1200 மைல் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. தமது நிலவுப் பயணத்தை முடித்துக் கொண்டு இங்கே தான் மூன்று வீரர்களும் கடலில் இறங்குவார்கள். அவர்களை புளோரிடாவுக்கு மீட்டு அழைத்து வருவது ஹோர்னட்டின் பணி.
பூமியை சுற்றி வந்து கொண்டிருந்த அபல்லோ கலத்தில் பயணித்த மூவரும் தமது கலம் சந்திர பயணத்துக்கு தயார் நிலையில் உள்ளதா என்பதை பரிசிலித்துப் பார்ப்பதற்காக ஸூஸ்டன் கட்டுப்பாட்டு நிலையம் இரண்டரை மணித்தியாலங்களை வழங்கியிருந்தது. அனைத்தும் சரியாக இருப்பதாக வீரர்கள் தரைகட்டுப்பாட்டு நிலையத்துக்கு அறிவித்ததும் சட்டர்ன் மூன்றாவது கட்டத்தை இயக்கி பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட்டு சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
பூமியில் இருந்து 115 மைல் உயரத்தில் பூமியை சுற்றிவந்து கொண்டிருந்த அபல்லோ கலம், மணிக்கு 24 ஆயிரம் மைல் வேகத்தில் சந்திரனை நோக்கிய தன் மூன்றுநாள் பயணத்தை ஆரம்பித்தது. உலகம் முழுவதும் உள்ள மக்கள், சந்திரனுக்கு செல்பவர்கள் பூமிக்குத் திரும்பி வருவார்களா? என்ற கேள்வியுடன் பயணம் தொடர்பான செய்திகளை உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கினர் ஏனெனில் விண் வஸ்துகள் எவற்றையும் விட மனிதனுடன் மிகவும் நெருங்கிய உறவைப் பேணி வந்திருப்பது சந்திரன் மட்டுமே. எனவே அபல்லோவின் சந்திரப்பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதில் வியப்பிருக்க முடியாது.
1969காலப்பகுதியில் பெட்டறி ரேடியோ பாவனைக்கென இரண்டு செங்கல் உயரத்துக்கு அல்லது புளொக்கல் அளவுக்கு கடைகளில் பெட்டறி விற்பார்கள். அதில் உள்ள மின்சாரத்தில் தான் வானொலி வேலை செய்யும். சுவிட்சைப் போட்டு திருகினால் கொர கொரவென்ற சத்தம் காதைப் பிளக்கும். அந்த நாரசமான ஓசைகளை எல்லாம் தவிர்த்து ஒரு வழியாக ஸ்டேஷனைப் பிடித்து அதில் மீட்டரை நிலைநிறுத்தி செய்திகளை செவிமடுப்பதென்பது பலருக்கும் கைவராத கலை. ஒரு வீட்டில் அவ் வீட்டித் தலைவர் மட்டுமே வானொலியை இயக்குவார். வேறு எவருமே கை வைக்க மாட்டார்கள். எங்கள் வீட்டில் என் அண்ணனுக்கு மட்டுமே அக்கலை கைவந்திருந்தது. இந்திய வானொலி, பிபிஸி, வொய்ஸ் ஒப் அமெரிக்கா என வெளிநாட்டு வானொலி நிலையங்களை எங்கள் வீட்டுக்குள் கொண்டு வந்து வெற்றிப் புன்னகை சிந்துவார்!
ஈகள் விண்கலம் இப்படித்தான் சந்திரனில் இறங்கிது - ஒரு ஓவியப் பார்வை.
69ம் ஆண்டில் நல்ல வேளையாக எங்கள் வீட்டில் சோனி டிரான்சிஸ்டர் வந்து குந்தியிருந்தது. அப்போதுதான் ஆறு டோர்ச் பெட்டறியில் இயங்கும் டிரான்சிஸ்டர் ரேடியோக்கள் இலங்கைக்கு வரத் தொடங்கியிருந்தன. அதில் சிரமமின்றி ஷோர்ட் வேவ் பிடித்து பி.பி.ஸி, வொய்ஸ் ஒப் அமெரிக்காவுக்கு செல்லாம். எனவே அபல்லோ சந்திர பயண விவரங்களை நேரடியாகவே எங்களால் தெரிந்து கொள்ள முடிந்தது. அபல்லொ புறப்பட்ட நாள் முதல் திரும்பி பூமிக்கு வரும்வரை இலங்கையில் அனைத்து பத்திரிகைகளும் ஒஹோவென விற்பனையாகின. கடைக்கு காலையிலேயே சென்றால்தான் பத்திரிகைகளை வாங்கலாம். எல்லாப் பத்திரிகைகளிலும் அடுத்த ஆறு நாட்களுக்கு அபல்லோதான் முன்பக்கச் செய்தி! பெரிதும் சிறிதுமாக ஏராளமான செய்திகள் பத்திரிகைகளில் இடம்பிடித்திருந்தன. கென்னடி முனைக்கு தன் கணவன் பயணிக்கும் அபல்லோ புறப்படுவதைப் பார்க்க வந்த ஆர்ம்ஸ்ட்ரோங்கின் மனைவி, தன் இரண்டு மகன்மாருடன் ஹுஸ்டனுக்குத் திரும்பிச் செல்ல மூன்று மணித்தியாலம் விமானத்தில் பயணிக்க வேண்டியிருந்தது. இக்காலப்பகுதியில் காணவர் ஆர்ம்ஸ்ட்ரோங் விண்வெளியில் 50 ஆயிரம் மைல்களைத் தாண்டியிருந்தார் என்று வெளியான ஒரு செய்தி பலருக்கும் மலைப்பை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையில் வாழ்ந்து மறைந்த விஞ்ஞான புனைக்கதை எழுத்தாளர் ஆர்தர் சி கிளார்க் இந்த சந்திர பயணத்தில் உணர்வு பூர்வமான அக்கறை கொண்டிருந்தார். “கடந்த இருபது ஆண்டுகளாக நான் அழுததும் இல்லை, பிரார்த்தித்ததும் இல்லை. இன்று நான் இரண்டையுமே செய்திருக்கிறேன். கடந்த காலத்தின் இறுதித் தினமாக இன்றைய தினத்தை உணர்கிறேன்” என்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவர் தன் மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். பழைய யுகத்தின் இறுதிநாள் என்று அவர் குறிப்பிட்டது அபல்லோ -11 விண்ணுக்கு அனுப்பப்பட்ட தினத்தை. புதிய விண்வெளி யுகம் பிறந்திருப்பதாக அவர் கருதியதைத்தான். உலகமெங்கும் அபல்லோ பேச்சாக இருக்க, அப்போது மாசேதுங்கின் ஆட்சியின் கீழ் இருந்த செஞ்சீன மக்களை மட்டும் இச் செய்தி சென்றடையவில்லை. உலக மக்கள் தொலைக்காட்சிகளிலும் வானொலிகள் ஊடாகவும் அபல்லோ பயணத்தைப் பார்த்து கேட்டுக் கொண்டிருக்க, சீனமக்கள் மட்டும் யாங்ஸ்டே ஆற்றில் தங்கள் தலைவர் மாவோ நீச்சலடித்த சாதனையின் மூன்றாவது ஆண்டு நினைவு விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்!’
சந்திரனுக்கான ஒரு வழிப்பயணம் அறுபது மணித்தியாலம் கொண்டது. இப் பயணத்தின் போது வீரர்கள் நன்றாகத் தூங்கி ஓவ்வெடுத்துக் கொண்டார்கள். அவ்வப்போது ஹூஸ்டனுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். ஜன்னல் வழியே தெரியும் நீலக்கிரகனமான பூமியைப் பார்த்து வர்ணித்தார்கள். ஒழுங்காக சாப்பிட்டார்கள்.
செவ்வாயில் மனிதர்கள் - ஒரு கற்பனை ஓவியம்
இதற்கு முன்னர் விண் பயணம் மேற்கொண்டோர் பேஸ்ட் வடிவிலான உணவுகளையே பற்பசையை பிதுக்குவது போல பிதுக்கி சாப்பிட்டார்கள். சந்திரபயணத்தின்போது ஃபிரீசரில் வைக்கப்பட்டு காயந்து போகச் செய்யப்பட்ட உணவுகளையே பிரதானமாக உண்டார்கள். டியூபில் உள்ள சாண்விச் கலவையை சாதாரண பாண் துண்டுகளில் பூசி சாண்விச் தயாரித்துக் கொண்டார்கள். அவர்களுக்கான உணவுகள் அலுமினிய பொதிகளில் அடைக்கப்பட்டு பிளாஸ்டிக் கயிறுகளினால் கட்டப்பட்டிருந்தன. எடையற்ற விண்வெளியில் அவை அங்குமிங்கும் பறந்துவிடக் கூடாது என்பதால் இந்த ஏற்பாடு. உணவு பார்சலைத் திறந்து கரண்டியால் மெதுவாக உண்ணவேண்டும். உருளைக் கிழங்கு செலட் பேக்கன் வாசத்துடன் தயாரிக்கப்பட்டிருந்ததாம். சிக்கன் செலட் அருமையாக, சுவையாக இருந்தது என்று பின்னர் பேசிக் கொண்டார்களாம். உண்ட பின்னர் விசேட துவாயினால் வாயையும் உடம்பையும் துடைத்துக் கொண்டார்கள். உடலில் ஆங்காங்கே தெறித்து விழுந்திருக்கக்கூடிய உணவுத் துகள்களை அத் துவாய் ஏற்றி எடுத்து விடும்! பற்பசையால் பல் விளக்கி விட்டு எச்சிலை எங்கே துப்புவது? துப்பத் தேவையில்லாத புதிய ரக பசை அப்பல்லோவுக்காகத் தயாரிக்கப்பட்டிருந்தது. விளக்கி விட்டு விழுங்கிவிட வேண்டியதுதான். எடையற்ற சூன்ய பிரதேசத்தில் எச்சிலைத் துப்பினால் அது கீழே விழாது. அப்படியே அந்தரத்தில் உலவிக் கொண்டிருக்கும். இதனால் ஒரு குழாயில்தான் மூன்று வீரர்களும் சிறுநீர் கழித்தார்கள். சிறுநீர் கழித்ததுமே அது ஐஸ் கட்டியாக மாற்றப்பட்டு விடும்!
அபல்லோ வீரர்களுக்கு அறுபதுவகையான உணவுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. உணவுக்காக தினமொன்றுக்கு ஒரு வீரருக்கு அக் காலத்திலேயே 150முதல் 200 டொலர்கள் செலவானதாம்.
குழந்தைகளுக்கு இடையில் ‘பேட்’ அணிவிப்பார்களே அதே மாதிரி அபல்லோ வீரர்களும் இடுப்பில் விசேடமாக தயாரிக்கப்பட்ட பேட் அணிந்து கொண்டார்கள். மலக் கழிவு இப்படித்தான் வெளியேற்றப்பட்டது. ஒரு விண்வெளிப் பயணம் என்பது, இந்த மாதிரியான பல சங்கடங்களைக் கொண்டது தான்! ஸ்கைலெப், தற்போதுள்ள விண்வெளி ஆய்வு நிலையம் என்பனவற்றில் விண்வெளி வீரர்கள் ஒரு வருடத்துக்கும் மேலாக வாழ்ந்திருக்கிறார்கள். எடையற்ற சூழலில் மனித உடலும் உள்ளமும் எத்தகைய மாற்றங்களை அடையும் என்பதை அறிவதற்காகவும் இச் சூழலில் எடை குறைகிறதா, கூடுகிறதா, நோய்கள் ஏற்படுகின்றனவா என்பதை எல்லாம் இந்த விண்வெளி ஆய்வு நிலையங்களில் வீரர்களை தங்க வைப்பதன் மூலம் விஞ்ஞானிகள் அறிந்து கொண்டார்கள்.
சந்திரனுக்கான பயணம் மூன்று தினங்களே நீடிக்கும். ஆனால் இப்போது அடுத்த கிரகமாகக் குறிவைக்கப்பட்டிருக்கும் செவ்வாய்க் கிரகத்துக்கான பயணம் மாதக் கணக்கில் நீடிக்கக் கூடிய பயணம். எனவே செவ்வாய்க் கிரகத்துக்கான பயணத்தில் மூவருக்கு மேற்பட்டோர் பயணம் செய்ய வேண்டியிருக்கும். சூரியனில் இருந்து 22,79,39,200 (141634800 மைல்) கி.மீ. தூரத்தில் செவ்வாய்க்கிரகம் அமைந்துள்ளது.
இப் பயணத்தில் ஏழு பேராவது கலந்து கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறான நேரடிப் பயணங்களின்போது சிலரை தூங்க வைத்து விட்டு மேலும் சிலர் விழித்திருக்கச் செய்து. பணியாற்றும் ஏற்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டி அவசியம் ஏற்படும். ஏனெனில் எடையற்ற விண் வெளியில் குறிப்பிட்ட இட வசதிக்குள் மாதக் கணக்கில் சிலர் புழங்கி வரும்போது உடல் அயர்ச்சி, குணமாறுபாடு, மன அழுத்தம் போன்ற தன்மைகள் உருவாகும் சாத்தியம் அதிகம். எவ்வளவுதான் பயிற்சிகள் எடுத்திருந்தாலும் அடிப்படையில் கோபம், தாபம், பொறாமை எரிச்சல் போன்ற குணவியல்புகள் கொண்டவர்கள்தானே மனிதர்கள்!
எனவே ஒரு குழுவுக்கு மன நெருக்கடி, அயர்ச்சி, சோர்வு, வீட்டு (உலக) ஞாபகம் என்பன ஏற்படும்போது அவர்களை தூங்குவதற்கு அனுப்பிவிட்டு தூங்கி ஓய்வெடுத்திருக்கும் குழுவை பணியில் அமர்த்தும் முறை கைகொள்ளப்பட வேண்டியிருக்கும். மேலும் இத்தகைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்காத ரோபாக்களையும் பணிகளில் ஈடுபடுத்த வேண்டியிருக்கும். இத்தகைய நெடிய பயணங்களில் ஈடுபடும். வீரர்கள் தாம் பயணம் செய்யும் விண்கலத்தைப் பற்றி தொழில்நுட்ப ரீதியாக அக்குவேறு ஆணிவேறாக அறிந்து வைத்திருக்கவும் வேண்டும். அவசியமானால் கலத்துக்கு வெளியே சென்று பழுதுபார்ப்பு பணிகளையும் செய்யும் திறன்படைத்தவர்களாக இருக்கவும் வேண்டும்.
செவ்வாய்க்கிரகம் தொடர்பாக போதுமான ஆய்வுகள் தற்போது செய்யப்பட்டுள்ளன. சந்திரனுக்கு செல்வதற்கு முன்னர் இந்த அளவுக்கு ஆய்வுகள் செய்யபடவில்லை என்பதை கவனிக்க வேண்டும். செய்யப்பட்ட ஆய்வுகள் தொலைநோக்கிகள் மூலமும் பின்னர் சந்திர சுற்றுவட்டப்பாதையில் சஞ்சரித்து வந்த இரண்டு அப்பல்லோக்கள் மூலமும் மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது. அல்ட்ரினும் ஆர்ம்ஸ்ட்ரோங்கும் இறங்கும் இடம் உறுதியான தளமாக இருக்குமா அல்லது புதை மணலாக் இருக்குமோ என்பது தெரியாத நிலையிலேயே அவர்கள் சந்திரத் தரையில் இறங்கினார்கள்.
நிலவை சென்றடைந்த அட்லாண்டிக் விண்கலம் (அபல்லோ என்பது முழு விண்கலத்துக்கும் சூட்டப்பட்ட பொதுப் பெயர். சட்டர்ன் பூஸ்ட்டர் ரொக்கட்டே அதன் உச்சியில் பொருத்தப்பட்டிருந்த வீரர்கள் அமர்ந்திருந்த அட்லாண்டிக் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்த விண்கலத்தை எடையற்ற விண்வெளிக்கு இட்டுச் செல்லவும் பின்னர் அது புவி ஈர்ப்பில் இருந்து விடுபட்டு சந்திரனை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கவும் உறுதுணையாக இருந்தது. இந்த அட்லாண்டிக் விண்கலத்தின் மூக்கில் ‘ஈகள்’ (பருந்து) எனப் பெயர் சூட்டப்பட்ட சந்திர கலம் பொருத்தப்பட்டிருந்தது. ஹூஸ்டனில் இருந்து கட்டளை வந்தததும். எட்வின் அல்ட்ரினும் ஆர்ம்ஸ்ரோங்கும் மெல்லத் தவழ்ந்து ஈகள் என்ற சந்திர கலத்தினுள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டனர். எட்டுகால் பூச்சி அல்லது சிலந்தியைப் போன்ற தோற்றம் கொண்ட இந்த ஈகள் கலமே தாய்க்கலமான அட்லாண்டிக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சந்திர தரையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.
ஈகள் கலம் சந்திரத் தரையில் இருந்து 50 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே இறங்கி தரையைத் தொட வேண்டும். மெதுவாக அது 34 ஆயிரம் அடிக்கு இறங்கியபோது உயரத்தைக் கணித்துக் கூறும் சிறிய கம்பியூட்டர் குளறுபடி செய்யத் தொடங்கியது. அது ஒரு நெருக்கடியில் இருப்பது போலத் தோன்றியது. நெருக்கடியாக இருந்தால் அக்கம்பியூட்டர் மறுபடி முதலில் இருந்தே ஆரம்பிக்கும். அவ்வாறு செய்யுமானால் தாம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்பது ஆர்ம்ஸ்ட்ரோங்குக்கு தெரியாமல் போய்விடும். உயரத்தை மிகச் சரியாகக் கணிக்க முடியாமல் போனால் வேகத்தை மட்டுப்படுத்த முடியாமல் கலம் தடாலென சந்திரத் தரையில் விழுந்து நொறுங்கிப் போகலாம்.
அவ்வாறு நிகழ்ந்தால் இருவரும் தாய்க் கலத்துக்கு திரும்ப முடியாமல் சந்திரனிலேயே மூச்சுவிட முடியாமல் இறந்துபோக வேண்டியிருக்கும். எனவே ஆர்ம்ஸ்ட்ரோங் இதைத் தவிர்ப்பதற்காக செய்ய வேண்டிய வேலை எல்லாம், தரை இறங்குவதை உடனடியாக நிறுத்தி விட்டு, மேலே கிளம்பும் ரொக்கட்டை இயக்கி, தாய்க்கலத்துடன் மீண்டும் இணைவதுதான் அவ்வாறானால் உலகமே எதிர்பார்த்திருக்கும் மனிதன் சந்திரனில் கால் பதிக்கும் அந்த நிகழ்வு நடைபெறாது தள்ளிப் போயிருக்கும்!
தனது பிரச்சினையை அபல்லோ கெப்டன் ஹுஸ்டனுக்கு அறிவித்தார். அப்போது ஹூஸ்டன் கட்டுப்பாட்டு அறையின் வழிகாட்டல் பிரிவில் பொறுப்பாக அமர்ந்திருந்தவர் 27 வயதான பொறியியலாளரான ஸ்டீவன் பேல்ஸ், சட்டென ஒரு தீர்மானத்துக்கு வந்தார். “தொடர்ந்தும் அந்தக் கம்பியூட்டரிடம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உயரம் தொடர்பான தகவல்களை எங்களுக்கு அனுப்பும்படி செய்யுங்கள். இங்கிருந்து நாங்கள் உங்களை வழி நடத்துவோம் என்று கட்டளையிட்டார் பேல்ஸ். அதன்படி ஈகள் தரையை நோக்கி இறங்க ஆரம்பித்தது.
ஈகள்: நாங்கள் கீழே இறங்குகிறோம்... எங்களை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்
ஹுஸ்டன் : ஈகள் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது
ஹூஸ்டன் : உயரம் 1600 அடி, 1400 அடி நன்றாகத்தான் போகிறது
ஈகள் : 700 அடி, 400 அடி, 300அடி, ஈகிளின் நிழலை சந்திரத் தரையில் பார்க்க முடிகிறது.
இந்தத் தருணத்தில் ஆர்ம்ஸ்ட்ரோங்கின் குறுதி அழுத்தம் நிமிடத்துக்கு 156என எகிறியதாம். பின்னர் “இந்தத் தருணத்தை என் வாழ்வில் மிக நீண்ட 22 நிமிடங்கள் அவை” என வர்ணித்தாராம் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சன்.
கீழே பார்த்த ஆர்ம்ஸ்ட்ரோங், கால்பந்தாட்ட மைதானம் அளவுக்கு ஒரு சந்திர பள்ளமும் கற்களும் தெரிகின்றன என்று பதற்றத்துடன் சொன்னார். கற்களின் மீது இறங்குமானால் கலம் கவிழ்ந்து இருவரும் வெளியேவர முடியாத நிலை ஏற்படலாம். உடனடியாக ஈகிளில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய ரொக்கட்டுகளைப் பயன்படுத்தி அப்பகுதியில் இருந்து ஈகிளை அப்பால் நகர்த்தினார் ஆர்ம்ஸ்ட்ரோங். இப்போது கலத்தை மெதுவாக இறக்க வேண்டும்.
நாற்பது அடி உயரத்தில் கீழே இறங்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் பிரதான ரொக்கட் நிறுத்தப்பட்டது. சந்திரனின் குறைவான ஈர்ப்பு விசையின் உதவியுடன் புழுதியை கிளப்பி விட்டபடி ஈகள்கலம் சந்திர தரையில் இறங்குவதற்கு ஐந்து அடி இருக்கும் போது சொக்கட் விசை முற்றிலுமாக நிறுத்தப்பட, ஈர்ப்பு விசை உதவியில் தன் மூன்று கால்களை பரப்பியபடி சந்திர தரையில் இறங்கியது ஈகள். “ஹூஸ்டன், இது அமைதிக்கடல் தளம், ஈகள் இறங்கிவிட்டது” (Honston Tranquility base here, The eagle has Landed” ) என்று உலகத்துக்கு அறிவித்தார் ஆர்ம்ஸ்ட்ரோங். அபல்லோ -11 பயணதிட்டத்தின் முக்கால்வாசி நிறைவேறி விட்டது. அடுத்ததாக சந்திரனில் கால் பதிக்க வேண்டியதே பாக்கி!
(அடுத்த வாரமும் பயணிப்போம்)
டொமினிக் ஸ்தனிஸ்லோஸ்