இலக்கு சமஷ்டியாக இருக்க மிஞ்சியது சமுர்த்தி மட்டுமே | தினகரன் வாரமஞ்சரி

இலக்கு சமஷ்டியாக இருக்க மிஞ்சியது சமுர்த்தி மட்டுமே

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது? தமிழ் மக்கள் மட்டுமல்ல, முஸ்லிம்களும் எவருக்கு ஆதரவளிப்பது? என்ற கேள்வி தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு முன்னே எழுந்துள்ளது.  

ஜனாதிபதித் தேர்தலில் யாரெல்லாம் போட்டியிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. அதற்குள் யாருக்கு ஆதரவு என்ற கேள்வியா? என்று யாரும் கேட்கக் கூடும். அதாவது தமது கட்சியின் சார்பில் அல்லது தமது அணியின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று கட்சிகளே முடிவெடுக்க முடியாத நிலையிலிருக்கின்றன. அப்படியிருக்கும்போது தமிழ், முஸ்லிம் மக்கள் யாருக்கு ஆதரவளிப்பது என்று ஏன் நாம் அவசரப்பட வேணும் என.  

எப்படியோ இன்னும் மூன்று மாதங்களில் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல் வந்தே தீரும். அப்பொழுது எந்தச் சிந்தனையுமில்லாமல் முன்னே நிற்கும் வேட்பாளர்களில் யாராவது ஒருவருக்கு வாக்களிக்க முடியுமா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ முஸ்லிம் காங்கிரஸோ கையைக் காட்டுவோருக்குக் கண்ணை மூடிக் கொண்டு வாக்களித்து விட்டு வரமுடியுமா?  

எனவேதான் நாம் யாரை ஆதரிப்பது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.  

யாரை ஆதரிப்பது என்பதைச் சற்று மாற்றி, எந்தத் தரப்பை ஆதரிப்பது என்றே இப்பொழுது பார்க்க வேண்டியுள்ளது.  

ஏனென்றால் –  

1. ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைப்பதே எதிர்காலத் தீர்மானம் என்று கூறப்படுகிறது. அப்படியென்றால் யார் ஜனாதிபதி என்பதில் எந்த முக்கியத்துவமும் இல்லையல்லவா. அப்படியான நிலையில் சம்பிரதாய பூர்வமான – அதிகாரங்கள் குறைக்கப்பட்ட ஜனாதிபதிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. பதிலாக அவர் சார்ந்த அணிக்கு அல்லது கட்சிக்கே முக்கியத்துவம் இருக்கப்போகிறது. எனவே தனி நபரான ஜனாதிபதியைப் பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாக நாம் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ள தரப்பைப் பற்றியே சிந்திக்க வேண்டியள்ளது.  

2. தற்போதைய நிலையில் இன்னும் அதிகாரமுடைய ஜனாதிபதியே பதவியிலுள்ளார். அவர் ஜனாதிபதிக்கான அதிகார எல்லையைக் குறைக்காத வரையில் அடுத்து வரவுள்ள ஜனாதிபதிக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பது உண்மையே. இதனால்தான் கரு ஜெயசூரிய அதிகாரத்துக்கு வந்தால் ஜனாதிபதிக்கான அதிகாரத்தைக் குறைப்பார் என்று கூறுகிறார் பிரதமர். அப்படியென்றால் நிச்சயமாக யாரை நாம் ஆதரிப்பது என்று யோசிக்க வேண்டுமே என நீங்கள் கேட்பதில் நியாயமுண்டே. அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பு சாதுவாக இருப்போர் அதிகாரத்துக்கு வந்த பிறகு அதற்கு நேர்மாறாகவே மாறி விடுகிறார்கள். சனங்களிடம் பகிரங்கமாகவே தெரிவித்த வாக்குறுதிகளை எந்தச் கூச்சமும் இல்லாமல் அப்படியே மீறி விடுகிறார்கள். மாறிச் செயற்படுகிறார்கள். இதைத் தடுப்பது எப்படி? இதற்கான உத்தரவாதம் என்ன? அதாவது இதற்குச் சட்டமூலம் அல்லது தேர்தல் விதிமுறையில் ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படலாமா?  

3. தம்முடைய தரப்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை ஆதரிக்குமாறு அரசியல் கட்சிகளோ கூட்டணிகளோ கோரினால், தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்படுவதை மீறாமலே செயற்படுவதற்கான உத்தரவாதம் என்ன? இதை உறுதிப்படுத்துவது யார்? தேர்தல் விஞ்ஞாபனத்தை சட்டபூர்வமான ஆவணமாக்குவதே இதற்குச் சரியானதாகும் என்று சிலர் கூறுவதை இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டும்.  

4. சிறுபான்மையினங்களின் பாதுகாப்பையும் அரசியல் அந்தஸ்தையும் இருப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுவோம் என்று வழங்கப்படும் உறுதியுரை. இதை மீறாமலிருப்பதற்கான பொறிமுறை இரண்டும் முக்கியமானது. இதை வெறும் வாக்குறுதிகளில் – நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த காலப் படிப்பினைகள் எமக்குத் தந்த பாடங்கள் முக்கியமானது.  

இப்படிப் பல விடயங்கள் உண்டு. ஆனால், இதையெல்லாம் கவனத்து நடைமுறைக்குக் கொண்டு வருவதென்பது இலகுவானதல்ல. இருந்தாலும் நாம் இவற்றிற் கவனம் செலுத்தியே ஆக வேண்டியுள்ளது.  

ஏனெனில் இனியும் நாம் ஏமாளிகளாக இருந்து விட முடியாது. கடந்த 2015 இல் மிகப் பெரிய நம்பிக்கையோடு, மிகக் கூடுதலான நம்பிக்கையோடு சிறுபான்மையினச் சமூகங்கள் மைத்திரிபால சிறிசேனவைத் தெரிவு செய்திருந்தன.  

ஏறக்குறைய மிகுந்த சவாலின் மத்தியிலேயே சிறிசேன பதவிக்கு வந்தார். இதற்குக் காரணமானவர்கள் சிறுபான்மையினச் சமூகத்தினர் என்று மைத்திரிபால சிறிசேனவே நன்றி கூறியுமிருந்தார்.  

ஜனாதிபதியின் மீதான சிறுபான்மைச் சமூகத்தினரின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இன்று அப்படியே காணாமலாகி விட்டன. காணாமலாக்கப்பட்டு விட்டன. இதையிட்டு யாராவது அந்தத் தரப்பிலிருந்து பேசுகிறார்களா?  

இதைப்போலவே தற்போதைய அரசாங்கத்தையும் அதிகாரத்துக்குக் கொண்டு வந்ததும் அதைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதும் சிறுபான்மையினத்தவரே. ஆனாலும் சிறுபான்மையினச் சமூகத்தினர் இந்த அரசாங்கத்தின் மூலமாகப் பெற்ற நன்மைகள், உத்தரவாதங்கள் என்ன?  

எதுவுமில்லை.  

ஆக மிஞ்சியது சமஸ்டிக்குப் பதிலாக சமுர்த்தி மட்டுமே என்று சிவசக்தி ஆனந்தன் கூறியது உண்மையே.  

இதற்கும் மேல் என்றால், கம்பரலியா என்ற கிராமிய அபிவிருத்தித்திட்டம் என்ற போர்வையில் மாகாண அதிகாரத்தை மீறிச் செயற்பட விளையும் மத்தியின் விளையாட்டுக்களே. அதுவும் குறை நிலை அபிவிருத்தியே.  

எனவேதான் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ள வேட்பாளரில் யாரை, எந்த அடிப்படையில் ஆதரிப்பது என்று சிந்திக்க வேண்டியுள்ளது.  

இது சிறுபான்மைச் சமூகத்தினர் மிக மிக மிக விழிப்பாக இருக்க வேண்டிய சந்தர்ப்பம். இதைப் புரிந்து கொண்டு

இதைச் சரியான முறையில் எதிர்கொள்ள வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருப்பது நம் கவனத்திற்குரியது. “ஜனாதிபதி தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தீர்மானங்களுக்கு எதிராகவும், கடந்தகால தவறுகளை திருத்திக் கொள்வதற்காகவும் சகல தமிழ் தரப்புக்களும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் சார்பில் எமது நிலைப்பாட்டை தீர்மானமாக எடுத்து அதனை சர்வதேச சமூகத்திற்கு வழங்கவேண்டும். அதற்கு இணங்கும் தரப்புக்களையே ஆதரிக்கவேண்டும். இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வரும்போதெல்லாம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவ்வித நிபந்தைகளையும் விதிக்காது நம்பிக்கையின் அடிப்படையில் ஆதரவினை வழங்கி வருகின்றனர்.  

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட மைத்திரி- – ரணில் கூட்டரசுக்கு எவ்வித நிபந்தனைகளையும் விதிக்காது அவர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் அவர்கள் இனவாதிகள் அல்லர் என கூறினர். நல்லாட்சி அரசு உருவகப்பட்டதும் நாம்தான் இந்த ஆட்சியை கொண்டு வந்தோம் என மேடை மேடையாக பிரசாரம் செய்தனர்.  

ஆனால் இப்போது அதே அரசு எம்மை ஏமாற்றி விட்டது என கூறுகின்றனர். இவர்கள் அரசுக்கு எவ்வித நிபந்தைகளையும் விதிக்காது தங்களின் நலன்களுக்காக அரசினை காப்பற்றி விட்டு இப்போது தேர்தல் வரப்போகின்றது என்றவுடன் தங்கள் பல்லவியை மாற்றுகின்றனர். கடந்த கால தவறுகளின் அடிப்படையிலாவது இனிவரும் தேர்தல்களில் தமிழ் தரப்புக்களுக்கு அடிப்படையாக என்னென்ன விடயங்கள் தேவை உடனடியாக என்ன

விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் போன்ற விடயங்களை ஆராய்ந்து வியூகம் வகுக்க வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தரப்புக்களையும் ஒன்றிணைக்க சிவில் சமூகம் முன்வரவேண்டும். சிவில் சமூகங்களின் முயற்சியில் அனைத்து தமிழ் தரப்புக்களும் ஒன்றாக இணைந்து தமிழ் மக்களின் நலன் தொடர்பில் கூடி ஆராய வேண்டும்” என எச்சரித்து சிவில் சமூகத்தின் பங்களிப்பை வலியுறுத்தியிருக்கிறார்.  

இவ்வாறே சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரான முருகேசு சந்திரகுமாரும் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்கிறார். “புத்திசாலித்தனமாகச் சிந்தித்து, நிதானமாக முடிவுகளை எடுத்துச் செயற்பட வேண்டும். கடந்த காலத்தில் நடந்தது என்ன என்பதை ஆராய்ந்து பார்ப்பது இந்தச் சந்தர்ப்பத்தில் அவசியம். தமது தனிப்பட்ட நலன், கட்சி நலன்கள் போன்றவற்றுக்காகத் தவறான முறையில் வழிகாட்டும் அரசியல் தலைமைகளின் சொற்களை நம்பாமல் சுயமாகச் சிந்திக்க வேண்டும்.  

இந்தப் பணியில் நேர்மையான முறையில் (கட்சி மனோபாவத்துடன் செயற்படாமல்) அரசியல் ஆய்வாளர்களும் ஊடகத்துறையினரும் செயற்படுவது அவசியம். நிலைமைகளைக் கூர்மையாக ஆராய்ந்து சரியான பாதையைக் கண்டறிந்து காண்பிப்பது இவர்களுடைய கடமை. இவர்கள் முயற்சித்தால் தவறான திசையில் பயணிக்கும் அரசியல் தலைமைகளை வழிப்படுத்தலாம். அவற்றின் தவறான முடிவுகளைக் கட்டுப்படுத்தலாம்.  

ஆகவே, தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றமடையாத வகையில் அரசியல் பெறுமானங்களைப் பெறக் கூடிய – அதற்குப் பொருத்தமான தரப்பை ஆதரிக்க முன்வர வேண்டும். மீண்டும் சொல்கிறேன். அரசியலில் நிரந்தர எதிரியோ நிரந்தர நண்பர்களோ இல்லை. நல் வாய்ப்புகளை எவரின் மூலமாகப் பெற முடியும்? யார் எமது அடிப்படைக் கொள்கைக்கும் மக்கள் நலன்களுக்கும் பொருத்தமானவராக இருக்கிறார் என்று பார்த்துச் சிந்திப்பதே நல்லது. கடந்த காலத்தைப்போல இனியும் ஏமாற முடியாது” என.  

ஆகவே தமிழ், முஸ்லிம் சிவில் சமூகம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மிகக் கூர்மையான விழிப்புணர்வோடு செயற்பட வேண்டும். அரசியற் கட்சிகளைக் கடந்து சிந்திக்க வேண்டும். புதிய நிலைமை ஒன்றை உருவாக்குவதற்கான பங்களிப்பை வழங்க வேண்டும். இதற்கான கால அவகாசம் மிகமிகக் குறைவானது. இதைக் கவனத்திற் கொண்டு செயற்படுவது அவசியம்.  

கருணாகரன்

Comments