வர்த்தக சகடோட்டம் என்றால் என்ன? | தினகரன் வாரமஞ்சரி

வர்த்தக சகடோட்டம் என்றால் என்ன?

இன்றைய உலகில் நாம் காண்கின்ற பொருளாதாரங்களில் மிகப் பெரும்பான்மையானவை சந்தைப் பொருளாதாரங்களாகும்.  அதாவது சந்தையை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரத் தீர்மானங்களை எடுப்பவையாகும். இத்தகைய பொருளாதாரங்களின் செயலாற்றலானது எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது.  மனித வாழ்வில் நாளாந்தம் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைப் போலவே நாடுகளின் பொருளாதாரங்களிலும் ஏற்ற இறக்கங்கள் என்ற பொருளாதாரத் தளம்பல்களை உருவாக்குகின்றன. இப்பொருளாதாரத்  தளம்பல்களே   வர்த்தக சகடோட்டம் (Business cycle)  என அழைக்கப்படுகிறது.

ஒரு பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சிப்போக்கினையோ அல்லது தொடர்ந்து வீழ்ச்சிப் போக்கினையோ அனுபவிக்காது என்பதை விளக்க இந்த சகடோட்ட எண்ணக்கரு உதவுகிறது.

ஒரு முழுமையான வர்த்தக சகடோட்டம் நான்கு கட்டங்களைக் கொண்டிருக்கும்

01.     உச்சக்கட்டம் அல்லது பொருளாதார பூரிப்பு அல்லது சுபீட்ச நிலை. (Peak of Prosperity of boom )

02.     பொருளாதாரப் பின்னடைவு (Recession)

03.     மிகக் குறைந்த வளர்ச்சிக் கட்டம் (Trough)

04.     பொருளாதார மீட்சிநிலை (Recovery)

உலகின் எந்த ஒரு பொருளாதாரமும் இந்த நான்கு கட்டங்களில் ஏதாவது ஒன்றிலே இருக்க வேண்டும் இனி இந்த நான்கு கட்டங்களினதும் தனித்துவமாக பண்புகளையும் ஒவ்வொரு கட்டடத்திலிருந்தும் அடுத்த கட்டத்திற்கு நகரும் செயன்முறையையும் நோக்கலாம்.

முதலாவது கட்டமாகிய பொருளாதார செழிப்பு அல்லது சுபீட்ச நிலை எல்லோராலும் விரும்பப்படும் சிறப்பான கட்டமாகும். உயர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அல்லது உயர்ந்த பொருளாதார வளர்ச்சி எய்தப்படும் கட்டம் இதுவாகும். நாட்டு மக்களின் வருமான மட்டங்கள், குறிப்பாக, அன்றாடங்காய்ச்சிகளின் அல்லது தற்காலிக வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளோரின் வருமானங்கள் பெரிதும் அதிகரிக்கும், வேலைவாய்ப்புகளுக்கு பஞ்சமே இருக்காது, நாட்டில் முதலீடுகள் மிகப் பெரியளவில் அதிகரிக்கும் காலம் இதுவாகும்.

மக்களின் வருமானம் அதிகமாக இருப்பதால் அந்தளவு பொருட்கள் சேவைகளை வாங்கி நுகர முற்படுவார்கள். இதனால் உற்பத்தியாளர்கள் அவற்றை அதிகளவில் உற்பத்தி செய்வார்கள். முதலீட்டு அதிகரிப்பு தொழில்வாய்ப்பு பெருக்க, அது மக்களின் வருமான மட்டங்களை அதிகரிக்க அதனால் பொருட்கள், சேவைகள் மீதான கேள்வி அதிகரிக்க அது உற்பத்தியாளரைத் தூண்டும் உற்பத்தியாளர்கள் மென்மேலும் முதலீடுகளைச் செய்து உற்பத்தியை பெருக்குவதன் மூலம் இலாபமீட்ட முற்படுவார்கள். இச் செயன் முறையால் உற்பத்திகள் அதிகரிக்க அது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் மறுபுறம் மக்களின் அதிகரித்த நுகர்வு அவர்களின் வாழ்க்கைத்தரத்தில் மேம்பாட்டை ஏற்படுத்தும். இக்காரணத்தாலேயே இக் கட்டத்தை பொருளாதார செழிப்புக்காலம் அல்லது சுபீட்சகாலம் என்கிறோம்.

இக்கட்டத்தில் பொருளாதாரத்தில் விலை மட்டங்கள் உயர்வடைந்து பணவீக்கம் ஏற்படும் ஆனாலும் மக்களின் வருமான மட்டங்களும் உயர்வாக இருப்பதால் மக்களால் அவற்றைக் இலகுவாக கொள்வனவு செய்யமுடியும்.

இவ்வாறான ஒரு செழிப்பு தொடர்ச்சியாக நிலவவேண்டும் என எல்லோரும் விரும்பினாலும் அவ்வாறான ஒரு பொருளாதாரச் செழிப்பு தொடர்ச்சியாக நீடிப்பதில்லை. பொருளாதாரத்திற்குள்ளேயும் வெளியேயும் காணப்படும் பல்வேறு காரணங்களால் அச்செழிப்பு நிலையில் பாதிப்பு ஏற்படும். உதாரணமாக, பொருளாதார செழிப்பில் உள்ளபோது முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை செய்வார்கள் எனக் கண்டோம்.

அந்த முதலீடுகள் ஒரு கட்டத்திற்கு அப்பால் உரிய இலாபங்களைத் தராது போய்விடும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு பொருளாதாரத்திற்கு பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்யும் ஆற்றல் (Capacity ) மட்டுப்பட்டதாகும்.  ஒரு தண்ணீர் தொட்டிக்கு ஒரு கொள்ளளவு உள்ளது போல் பொருளாதாரத்திற்கும் உண்டு. கொள்ளளவுக்கு மேல் தண்ணீரை ஊற்றினால் அது வழிந்தோடிவிடும். அதேபோல ஒரு பொருளாதாரத்தின் கொள்ளளவை விட அதிகமாக முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டால் அதன் இலாப வீதங்கள் வீழ்ச்சியடையும். எனவே சுபீட்ச காலத்தில் முதலீட்டாளர்கள் மேலும் மேலும் இலாபம் உழைக்கும் உந்துதலில் மேற்கொள்ளும் மிகை முதலீடுகள் இலாப வீதங்களை வீழ்ச்சியடையச் செய்வதால் முதலீட்டாளர்கள் மத்தியில் “பொருளாதாரத்திற்கு ஏதோ மோசமாக நிகழ்வை விட்டது” என்ற பீதி (Panic) ஏற்படும். இதனால் பெரிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை குறைப்பர். இதனைக் கண்ட சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளரும் முதலீடுகளை பீதி காரணமாக குறைத்து விடுவர். எனவே பொருளாதார சுபீட்சத்தின்போது காணப்பட்ட வர்த்தக நம்பகத்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டு பொருளாதாரம் இரண்டாவது கட்டமாகிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கும்.

முதலீட்டில் ஏற்படும் வீழ்ச்சி, சங்கிலித் தொடரான விளைவுகளை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும். முதலில் வேலைவாய்ப்புகள் குறையும். உற்பத்தி குறையும் மக்களின் வருமானங்கள் குறையும். அவர்களின் கொள்வனவு ஆற்றல் வீழ்ச்சியடையும். பொருட்கள் சேவைகளுக்கு அவர்கள் எழுப்பும் கேள்வி வீழ்ச்சியடையும். இது பொருளாதார, வளர்ச்சியை குறைக்கும். வேலையின்மையை அதிகரிக்கும். இக்கட்டத்தில் பணவீக்கம் குறைவடைந்தாலும் மக்களின் வருமான மட்டங்கள் குறைவதால் அவர்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும்.

நடைமுறையில் ஒரு பொருளாதாரப் பின்னடைவை அடையாளப்படுத்த மொத்த உற்பத்தியின் அதிகரிப்பு வீதமாகிய பொருளாதார உள்நாட்டு வளர்ச்சி வீதம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சி வீதம் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்கு குறைவடைந்து சென்றால் அந்நாடு பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

மேலே நாம் கண்ட முதலீட்டு வீழ்ச்சி என்ற காரணிக்கு அப்பால் வேறுபல காரணிகளாலும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படலாம். அசாதாரண அரசியல் சூழ்நிலை, உள்நாட்டு குழப்பங்கள், வானிலை வேறுபாடுகளால் ஏற்படும் வரட்சி, வெள்ளப் பெருக்கு, புயல் போன்ற இயற்கைக் காரணிகள், எண்ணெய் விலை உயர்வு, வர்த்தகத் தடை போன்ற வெளிநாட்டுக் காரணிகளாலும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்படலாம். இலங்கையில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் பின்னடைவுகளுக்கு எந்தக் காரணிகள் அதிகளவில் பங்களிப்புச் செய்திருக்கலாம் என்பது இப்போது தெளிவாகப் புரிந்திருக்கும்.

ஒரு பொருளாதாரப் பின்னடைவு ஏற்படும்போது அதனைத் தடுத்து நிறுத்தி பொருளாதாரத்தை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றி பயணத்தை மேற்கொள்ள கொள்கைகளை அமுல்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அவற்றை செயற்படுத்தத் தவறும் பட்சத்தில் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் மோசமடைந்து மூன்றாவது கட்டமாகிய மிகக்குறைந்த வளர்ச்சிக் கட்டத்தில் வீழ்ந்து விடும். இந்த வீழ்ச்சி மிக ஆழமானதாகவும் தீவிரமாகவும் இருக்கும் பட்சத்தில் அது பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி “பொருளாதார மந்தம்” (Depression) என்னும் மிக மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும் உலகப் பெருமந்தம் (Great Depression) என அழைக்கப்படும் ஒரு கால கட்டம் 1929- 1936 காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டது.

உலகின் முன்னணிப் பொருளாதாரங்களைக் கொண்ட இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பலவும் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்தன. அமெரிக்கர்கள் காலை உணவுக்காக சமூக சேவை நிலையங்களுக்கு முன்பு வரிசையில் நின்று உணவு வாங்கும் புகைப்படங்கள் இன்றும் இணை வெளியில் காணப்படுகின்றன. ஆயினும் அப்படியான ஒரு நிலை அதன் பின்னர் ஏற்படவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மூன்றாவது கட்டமாகிய மிகக்குறைந்த வளர்ச்சிக் கட்டத்தில் பொருளாதாரத்தின் வளர்ச்சி மிகக் குறைவாக இருக்கும் முதலீடுகள் மிகக்குறைவாக இருக்கும். உற்பத்தி மிகக்குறைவாக இருக்கும், வேலையின்மை மிக அதிகமாக இருக்கும் மக்களின் வருமானமட்டங்கள் மிகக் குறைவாக இருப்பதால் பொருட்கள் சேவைகளுக்கும் அவர்கள் எழுப்பும் கேள்வி மிகக்குறைவாக இருக்கும். மக்களின் வாழ்க்கைத்தரம் மோசமானதாக மாறும். பொருளாதாரத்தின் நம்பகத்தன்மை மிகவும் குறைந்த மட்டத்தில் இருக்கும்.  விலைகள் குறையாக இருந்த போதிலும் பொருட்கள் சேவைகளை வாங்குமளவுக்கு மக்களிடம் வருமானம் இருக்காது.

இந்த மோசமான காலகட்டமும் ஒரு பொருளாதாரத்தில் தொடர்ச்சியாக நீண்டகாலத்திற்கு நிலவ முடியாது. ஒரு பொருளாதாரத்தின் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட முடியாது. அவ்வாறு நிகழ்வதும் சாத்தியமில்லை. எனவே அந்த குறைந்தபட்ச உற்பத்தியை மேற்கொள்வதை  உறுதிப்படுத்தும் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். பொருளாதாரம் மிகக்குறைந்த செயலாற்றத்தில் உள்ளபோது அதனை பேணிச் செல்லத் தேவையான முதலீட்டு அதனை பேணிச் செல்லத் தேவையான முதலீட்டு மட்டங்களைவிடபொருளாதாரத்தின் மூலதன மட்டம் குறைவடையும் போது புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை ஏற்படும்.

இது, ‘மோசமான காலம் முடிந்து விட்டது நிலைமை வழமைக்கு திரும்புகிறது’ என்னும் செய்தியினை முதலீட்டாளருக்கு வழங்கும். இது முதலீடுகளை படிப்படியாக அதிகரிப்பதால் பொருளாதாரம் நான்காவது கட்டமாகிய “மீட்சிக் கட்டத்தை" நோக்கி நகரும்.

முதலீடுகள் வழமைக்கு திரும்ப உற்பத்தி அதிகரிக்கும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். வருமான மட்டங்கள் அதிகரிக்கும். பொருட்கள் சேவைகள் மீதான கேள்வி அதிகரிக்கும். இதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் படிப்படியாக அதிகரிக்கும். இவ்வாறு ஏற்படும் பொருளாதார மீட்சி படிப்படியாக வலுவடைந்து மேலும் ஒரு பொருளாதார செழிப்புக் கட்டத்தை நோக்கி நகரும்.

ஆகவே ஒரு செழிப்புக் கட்டத்தில் இருந்து மற்றொரு செழிப்புக் கட்டம் வரையிலான நான்கு கட்டங்களையும் உள்ளடக்கியது ஒரு “வர்த்தக சகடோட்டம்” என அடையாளப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை குறைத்து பொருளாதாரத்தை சராசரியான ஒரு வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல வேண்டியது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

Comments