![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/08/04/col2164222199_7206849_01082019_VKK_CMY.jpg?itok=YQ5ddscp)
வரட்சி வாட்டி எடுக்கின்றது. மழையின்மையால் பயிர்கள் ஒருபுறம் வாடிக்கிடக்க கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குடிநீருக்காக இன்னொருபுறம் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தனைக்கும் மத்தியில் இன்பரதி எதையும் அலட்டிக்கொள்ளாதவராக தாங்கியொன்றின் குழாயை திறந்ததும் பொலபொலவென வந்த நீரை ஒரு சுத்தமான வாளியில் எடுத்து வந்து இலாவகமாக சமையலை முடித்துக்கொண்டு குடிப்பதற்காகவும் போத்தல்களில் நீரை நிரப்பி வைக்கின்றார்.
கிணறுகள் வற்றிக்கிடக்கும் இக்காலத்தில் இன்பரதிக்கு மட்டும் எப்படி இந்த நீர் வசதி என்பதை நாம் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொண்டோம். அது மழை நீராம்! மழைக்காலத்தில் கிடைக்கும் தூய்மையான நீரை தொட்டிகளில் சேர்த்து பயன்படுத்துகின்றேன் என உஷாராக பதிலளிக்கின்றார்.
இன்பரதி ஐந்து பிள்ளைகளின் தாய். அவர் கிளிநொச்சி முசரன்பட்டி பிரதேசத்தில் வசிப்பவர். மூத்த மகன் தொழிலுக்குச் செல்கின்றார். ஒரு மகள் வீட்டில் இருக்கின்றார். ஏனைய மூன்று பிள்ளைகளும் பாடசாலை மாணவர்கள். காலையில் எழுந்து சமைப்பதற்கும் குடிப்பதற்கும் சுத்தமான குடிநீர் தேடி கட்டுக்கிணறு தேடிச்சென்ற இன்பரதிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இம்மழைநீர் சேகரிப்புத் தாங்கி பேருதவியாக அமைந்துள்ளது.
வானிலிருந்து விழும் ஒரு துளி மழைநீரையும் பயன்படுத்தாது, வீணாக கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டாமென பராக்கிரமபாகு மன்னன் கூறிய பொன்மொழிக்கு மேற்படி மழை நீர் சேமிக்கும் திட்டம் அர்த்தம் வழங்கியுள்ளதனை உணரமுடிகின்றது.
குடிப்பதற்கு உகந்த மிகத் தூய்மையான நீரென்றால் மழை நீரைத் தவிர்ந்த வேறொரு சிறப்பான தெரிவு இருக்கவே முடியாது. எமது மன்னர்கள் நீர்ப்பாசனத்தின் தலைச்சிறந்த நிபுணர்களாக இருந்துள்ளனர். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இலங்கைக்கு, காலநிலை பெரும் சவாலானதொரு விடயம். எனவே மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து மழையில்லா காலங்களில் பயன்படுத்தும் அக்கால மன்னர்களின் யோசனை மீண்டும் உள்வாங்கப்படுவது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதொரு விடயமாகும்.
எங்களுக்கு குழாய் நீர் வசதி இல்லை. குளிப்பதற்கும் ஆடைகளை துவைப்பதற்கும் ஆறுகளைத் தேடிச் செல்வோம். சமைக்கவும் குடிக்கவும் கட்டுக்கிணற்றில் போய் நீர் எடுத்து வரவேண்டும். ஆனால் யு.எஸ்.எயிடின் நிதியுதவியுடன் இலங்கை மழைநீர் சேகரிப்பு அமையம் எங்களுக்கு இத்தாங்கிகளை நிர்மாணித்து வழங்கின.இதற்காக நான் அவர்களுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன், என்றும் இன்பரதி தெரிவித்தார்.
மழைநீர் குடிநீராக...
மழை பெய்யத் தொடங்கியதும் அதே நீரில் கூரையை கழுவி, தாங்கியின் மூடியை மூடிவிடுவோம். அதன்பின் தாங்கிக்குள் தூய்மையான நீர் நிரம்பும். பின்னர் தேவையான நேரம் குழாயை திறந்து நீரை எடுத்துக்கொள்வோம் என இன்பரதி கூறும்போது அவர் குரலில் தன்னம்பிக்கையை உணரமுடிந்தது.
அமையத்தின் பொறுப்பாளரான டொக்டர் தனுஜா ஆரியநந்த, பாம் நிறுவனத்தின் பங்குடமையின் கீழ் யுஎஸ்எயிட் அமைப்பின் நிதியுதவியுடன் அனர்த்தங்களை சந்திக்கும் கிளிநொச்சி,பதுளை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களில் ஆர்வம் காட்டிய 391 குடும்பங்களுக்கு இந்நீர் தாங்கிகளை அமைத்துக் கொடுத்திருப்பதாக கூறினார்.
எமது மூன்று வருட செயற்திட்டம் எதிர்வரும் செப்டம்பருடன் நிறைவடைகிறது. எமது திட்டத்தின் கால அளவு நீடிக்கப்படுமென நம்புகின்றோம். நாம் வீடுகளுக்கு மேலதிகமாக 48 பாடசாலைகளில் மழை நீர்த்தாங்கிகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்தோம். அதில் 46 திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. அதேபோன்று உலர்வலயங்களிலுள்ள 10 வைத்தியசாலைகளுக்கும் நீர்த்தாங்கிகளை நிர்மாணித்துக் கொடுத்துள்ளோம்," என்றும் தெரிவித்தார்.
1996 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் நாட்டின் தேசியக் கொள்கைகளில் இடம்பிடித்துள்ளதுடன் சமூக சேவைகள் அமைச்சின், சமூக சேவை ஸ்தாபனமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மழைநீரை சேகரித்து பயன்படுத்த விரும்புபவர்கள் எவராக இருந்தாலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். நிர்மாணிக்கப்படும் தாங்கிகளின் கொள்ளளவு, வலயம் மற்றும் நுகர்வின் தேவைக்கு ஏற்ப வித்தியாசப்படும். உதாரணமாக உலர்வலயத்திலுள்ள வீடுகளாயின் 8 ஆயிரம் லீற்றர்.
வைத்தியசாலைகளுக்கு 10 ஆயிரம் தொடக்கம் 16 ஆயிரம் லீற்றர் மற்றும் பாடசாலைகளுக்கு 30 ஆயிரம் லீற்றர் கொள்ளளவுடைய தாங்கிகள் தேவைப்படும். 900 மில்லிமீற்றரிலும் குறைவான மழைவீழ்ச்சி கொண்ட உலர்வலய வீடுகளுக்கு சுமார் 50 சதுர மீற்றர் பரப்புக் கொண்ட தாங்கிகளை நிர்மாணிக்க வேண்டும். இதற்காக சுமார் 70 ஆயிரம் தொடக்கம் 80 ஆயிரம் ரூபா வரை தேவைப்படலாம். மழை நீர் சேகரிப்பதற்கு ஆர்வம் உடையவர்கள் எம்மை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு எம்மாலான பங்களிப்பை வழங்க தயாராக இருக்கின்றோம்.
தனிப்பட்ட ரீதியில் தாங்கிகளை நிர்மாணிக்க விரும்புவோருக்கும் எமது அமையம் தேவையான ஆலோசனைகளை வழங்கத் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
லக்ஷ்மி பரசுராமன்