விலங்குகளைவிடவும் கேவலமா போச்சு மனிசச் சாதி | தினகரன் வாரமஞ்சரி

விலங்குகளைவிடவும் கேவலமா போச்சு மனிசச் சாதி

நகர சபை அலுவலகத்தில் நாற்றமெடுத்த தொலை பேசிகளின் அழைப்பு   பாத்ரூம் பைப் அடைச்சுப்போச்சு கக்கூசுப் பைப்பும் அதோடதான் சேந்து வருது அதால.. ரூமுக்க தண்ணி தேங்கிது இழுக்கப் பஞ்சிப்படுது. ஒருக்காப் பாக்கச் சொல்ல கவனிக்கிறியளில்ல. ம்...  

ஏன் நேற்று ஒரு பெடியன அனுப்பினமே,   அப்ப நாங்கள் கோயிலுக்குப் போயிட்டம் போல ப்ளீஸ் இண்டைக்கொருக்கா அனுப்பி விடுறியளோ..?  

ஓ...சொறி இண்டைக்கு அவனுக்கு பஸ்ஸ்ராண்ட பக்கம் டியூட்டி வர மாட்டான். அது ஒரு பெரிய பிரச்சனையில்லை. எப்பன் மேல்மூடியக் கழட்டிப்பாருங்க ஏதும் சோப்புக் கடதாசியள் போய் உள்ளுக்க அடைச்சிருக்கும்    உவ்வேக். நானோ? நான் கெளரி நோன்போட உதுகளுக்க கை வைக்க ச்சீக். ஆரையாவது உடன அனுப்புங்க...  

ம்...என்னங்கோ செய்யிறது இஞ்சயும் ஆள் பற்றாக்குறை. ம் பாப்பம் காலம டியூட்டி முடிச்சிட்டுவாற ஆரையும் பிடிச்சு அனுப்பி விடுறன். நீங்கள் ஆரும் வீட்டில நிக்கவேணும்.  

கலோ! நான் புளியங்குளத்திலிருந்து கதைக்கிறன். எங்கட வீட்டடியில சாக்கடை தேங்கி நிக்கிது அத ஒருக்கா கிளியர் பண்ணி விடுங்க.  

ஆ... ஓம்....பாக்கிறம்  

மழைக்காலமும் வந்திரும். இந்த மழை வெள்ளம் ஒருபக்கம் வடியமாட்டாம ரோட்டில தேங்க, உள்ள கழிவு வாய்க்காலுகளும் தேங்கத் துவங்கிவிடும். ஒருதடவை தெருவில இறங்கி நடந்து போயிற்று வந்தா, தெருவில காணுற அரியண்டங்கள் சொல்லி மாளாது. பத்தாக்குறைக்கு நாய், பூனை மாடுகள் எல்லாத்துக்கும் தெருத்தான் ரொய்லெட், படுக்கையறை, இந்த தெருவிலயே படுத்து காதலிச்சு கலியாணப் பேச்சுவார்த்தை, அடிபிடி, கலியாணம், பிள்ளைப்பெறு எல்லாத்தையும் நடத்தி முடிக்குதுகள். மனிசர் மக்கள் இரவில நடமாடுறதே கஸ்டம்.  

இது போதாதெண்டு அத்தாப்பத்தியத்தில வீடுகளைக் கட்டி வச்சிட்டு, அதுக்க வாற குப்பை கூளங்களையும் கழிவுத் தண்ணிவாய்க்காலுகளையும் நைசா ரோட்டில திருப்பி விடுற பிரசையளும் எங்கட ஊருக்க குறைவில்லை. அட பாவியள். குலைய வெட்டிப்போட்டு தெருவில கிடக்கிற கானுக்க வாழைக்குத்தியளப் போட்டா பெரிய மழை வர அது முக்கித்தக்கி நகர்ந்து போய் தண்ணிப்போக்குகளுக்க தலையக் குடுத்திட்டு, அங்காலும் போக மாட்டாம இஞ்சாலயும் வர மாட்டாம அடைஞ்ச்சு போகும் எண்டது தெரியாமயே செய்யினம். ஏன் வளவுக்க நட்ட குரோட்டன் செடியள் கப்பாத்துப் பண்ணி அதையும் தூக்கிப்போடுறா தெருவில. அதுகும் பத்தாதெண்டு பிளாஸ்டிக் போத்தலுகள், பியர்டின்னுகள், பொலித்தீன் பையள், எல்லாந்தான் தண்ணியில போகுது.  

நகரம் எண்டதுக்கும் நரகம் எண்டதுக்கும் பெரிய வித்தியாசமில்லை நடு எழுத்தை இடம் மாத்தி வைச்சாப்போதும், நகரங்கள் பெரும்பாலும் நரகமாகத்தான் இருக்கிறது, இந்த நகரங்களின் சுத்தம் நகரசபைத் துப்புரவுத் தொழிலாளர்களை நம்பித்தான் இருக்கு. நாலு நாளைக்கு அவன் லீவு போட்டிட்டா நாறிப்போகும்.  

 தன்னை வாழ வைக்க அழுக்கைச் சாப்பிடுகிற மீனையும் காகத்தையும் கூட கவிஞன் பாடுவான் ஆனா தன்ர சிறு ஊதியத்துக்காக இந்த அழுக்கையெல்லாம் அள்ளிக் கொட்டுகிற மனிதனை நாங்கள் எவ்வளவுக்கு மதிக்கிறோம். அவனை நடு வீட்டுக்குள்ள வைக்க எத்தனை பேர் தயாரா இருக்கிறம் இல்ல. தெருவில சந்தையில கண்டா நட்போட உரையாடுறமா? இல்ல நம்ம வீட்டு அழுக்கை அள்ளிப்போட வந்தவனுக்கு நாம் மதிப்பளிக்கிறோமா? குறைஞ்ச பட்சம் அவனை மனிதனாக மதிக்கிறோமா? நாம் மட்டுமல்ல அவனுக்கு கட்டளைபோடுற மேலதிகாரிகளில் எத்தனை பேருக்கு அவயட பிரச்சனை விளங்கியிருக்கு.  

அண்மையில வவுனியா மாவட்ட சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் பற்றி நகர சுகாதார உத்தியோகத்தர் குறிப்பிடும் போது, ஒரு திடுக்கிடும் தகவலைத் தந்தார். அங்கு வேலைபார்க்கும் சுத்திகரிப்புத் தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் நாற்பதுகளின் நடுவிலான வயதிலுள்ளவர்கள் இவர்களிடம் கடினமான வேலைகளைக் கொடுக்க முடியவில்லை காரணம் அவர்கள் நோய் வாய்ப்பட்டவர்களாகவும் இயலாமையுடையோராகவும் உள்ளனர். அதற்காக அவர்களை வேலையிலிருந்து நிறுத்தவும் முடியாது. எனவே இருப்பவர்களை வைத்தே சமாளிக்கிறோம். நகரத்தில் பஸ்தரிப்பு நிலையம், பஜார் வீதி, ஆஸ்பத்திரி சுற்றுவட்டவீதி அவை தினசரி பார்க்க வேண்டிய இடங்கள். ஏனைய பகுதிகளுக்கு வாரம் ஒருமுறைதான்.குப்பைகள் அகற்ற முடியும் என்றார் .  

ஒரு நல்ல மனிசன் அந்த ஏலாத ஆக்கள வைச்சுக்கொண்டு ஏன் சம்பளம் குடுக்கோணும் புது ஆக்கள சேர்க்கலாமே எண்டார். அட பாவியளா அந்த ஏலாமை எப்பிடி வந்தது எண்டத யோசிக்காம. இவங்கள நன்றி கெட்டவங்கள் எண்டு சொல்லாம வேற என்ன சொல்லுறது.  

எந்த முதலாளியும் ஒருவனுடைய ஆரோக்கியத்தை குறைக்கிற அல்லது இழக்கிற மாதிரியான வேலையை தொழிலாளிக்கு குடுத்து அதால அவருக்கு இழப்பு ஏற்பட்டா. அந்த முதலாளிக்கு எதிரா நட்டஈடு கோர பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உரிமையுண்டு எண்டது சட்டம். அந்த உரிமையக்கூட இந்த ஏழைத்தொழிலாளி பெற முடியாது. காரணம் அவன் மதுபானப் பாவனையாலதான் உடம்பைக் கெடுத்துக் கொள்ளுறான்.  

 அண்மையில நகர சபையில நான் அவதானிச்ச விசயம். ஒரு நவ நாகரீகப் பெண்மணி தனது துணையுடன் வந்து ஒரு முறைப்பாட்டைக் கொடுத்தார். விபரமாவது ,  

 நேற்று நீங்கள் அனுப்பின உங்கட ஊழியன் வெறியில வந்தான். நான் வேலையப் பாக்கப் போக முடியேல்ல அடிக்கடி கெட்ட வார்த்தை பேசினான், அவங்களுக்கு டிசிப்பிளினக் கத்துக் குடுக்கேல்ல. என்ரவீட்டுக்கு குடிச்சிட்டு வந்ததுமில்லாம அவன்ர இடுப்பில் ஒரு குவாட்டர் போத்தலும் இருந்தது.  

 அந்தத் தொழிலாளி வரவழைக்கப்பட்டான். அதிகாரி கேள்விகேட்டார்.  

என்ன வேலை செய்யப்போன நீர் ?  

அவயட கக்கூசு அடைச்சிருந்தது. அதை கிளியர் பண்ணப் போன நான் ..  

அந்த அம்மா ஆரெண்டு தெரியுமோ? அங்க குடிச்சிட்டுப் போயிருக்கிறாய்? முறைப்பாடு வந்திருக்கு. எனக்கு இதுக்கு பதில் அறிக்கை வேணும் இண்டைக்கே.  

 அவன் மெளனமாகப் போனான். அந்த அம்மா திமிராக எழுந்து போனார். நான் நினைத்தேன் பெரீய்ய்ய்யய அந்தஸ்தில உள்ளவை கழிக்கும் மலத்திலும் சென்ற் மணம் வீசுமோ?  

பின்ன என்னங்க அவனும் மனிசன் தானே, தாங்கள் கிட்டவும் நிற்க விரும்பாத, தங்களால உருவான அழிவை அழுக்கை, எந்த நவீன உபகரணங்களும் இல்லாம கைய வச்சு கலக்கி அள்ளப்போறவன்.

தனக்கு அந்த அருவருப்பு தெரியக் கூடாது எண்டதுக்காக கொஞ்சம் தண்ணியடிச்சு கொஞ்சம் மயக்கத்திலதானே செய்ய முடியும். அது முடிய அவனும் மற்றவையப்போல தான் கையால சாப்பிடுறான். தெருவில அரியண்டத்தப் பாத்திட்டே சாப்பிடுற நேரம் நினைவு வந்தா ஓங்காளிக்கிறவை அவனுக்கும் அந்தநேரம் தன்ர வேலைத்தலம் நினைவு வராதோ. அப்ப என்ன செய்யலாம். நீங்களெல்லாம் தூங்கும்போதும் உங்கட அன்றாட வேலையையும் அடுத்த நாள் வேலையையும் நினைக்காம படுக்கிறீயளா சாப்பிடுறியளா? அது போலத்தானே அவனும்,  

இப்பிடி நாள் தோறும் கழிவுகளே வாழ்க்கையா வாழுறவனை, மனிதனா நினைக்கிற பண்பாடு எத்தினை பேருக்கு இருக்கு, அவங்கள் திமிரில அலையிறாங்கள் குடிகார மட்டையள் என்றொருவர் சொன்னார். இருக்குந்தானேப்பா ஊரையே சுத்தப்படுத்திறவன். ஆர் லீவு போட்டுப் படுத்தாலும் அசையாத நகரம் இவர்கள் லீவு போட்டா அசையும். வீட்டுக்கு வீடு பதறும் அப்படியிருந்தாலும் அவனுக்குரிய பணியையோ பிரச்சினைகளையோ பார்க்க யாரும் நினைப்பதில்லை.  

இன்னும் இவர்களை வைத்துத் தொழில் வழங்குவோர், வேறு வகையிலான பிரச்சினைகளையும் எதிர் நோக்குகின்றனர். ஒரு தொழில் வழங்குநரின் புறணி,  

வவுனியாவில் பாரம்பரியமாக தொழில் செய்பவர்களே தலைமுறை தலைமுறையாக இந்த வேலையைச் செய்கின்றனர். வைத்தியசாலையிலும் நகர சபையிலும் அவர்களே வேலை செய்கிறார்கள், அது மட்டுமல்ல எல்லோரும் ஒருவருக்கொருவர் உறவினர்களுமாவார்கள். இவர்களது உறவினர்கள் கண்டிப்பகுதியில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் திருமணம், சாமத்தியச் சடங்கு, செத்தவீடு என்று வந்து விட்டால் ஒட்டுமொத்தமாக பலர் விடுப்பில் போய்விடுகிறார்கள் ஒன்றும் செய்ய முடியாது,  

இந்த ஏழைத்தொழிலாளர்கள் தமது சம்பளத்தில் பெரும்பகுதியைக் குடித்தே அழித்து விடுவதால், இவர்களுடைய வீடுகள் எப்போதும் வறுமையாகவே இருக்கிறது. பெருமளவு சொத்துக்களை சேர்க்க எண்ணுபவர்கள் மிககுறைவு கேளிக்கைகளில் பொழுதையும் பணத்தையும் செலவிடுகின்றனர்

கல்வி கற்று பெரிய அளவில் பதவிகளுக்காக முயற்சி செய்வதில்லை. காரணம் குறைந்த வயசிலேயே பெற்றவர்கள் நோய்வாய்ப்பட்டு விடுகின்றனர். குடும்பச்சுமை விரைவில் இவர்களைச் சேர்கிறது தொடர்ச்சியாக கிருமிகளுடன் வாழ்க்கை நடத்துபவர்கள் இவர்கள்.  

இவர்களுடைய சுமையை மேலும் மேலும் இந்த சமூகமே அதிகரிக்கிறது. குப்பைக்கென வாளிகள் இருக்கும் தொட்டிகள் இருக்கும், ஆனால் அந்த வாளிகளையும் தொட்டிகளையும் சுற்றியே குப்பைகள் வீசப்படுகின்றன. ஏனென்றால் கிட்டப்போக அருவருப்பு அவர்களுக்கு கையுறைகள் வழங்கப்படுகின்றன.ஆனால் கால்களுக்கு பாதுகாப்பில்லை. இன்னும்கூட நவீனமான கழிவகற்றும் முறைகள் வடக்கு, கிழக்கில் எல்லா இடங்களிலும் இல்லை. பொலித்தீன் பைகள் மரம் செடிகள், காட்போர்ட் பெட்டிகள் என்பவை கழிவு வாய்க்காலை இது அடைக்கும் என்று தெரிந்தும், அவற்றை வாய்க்காலில் போடுவோர், திருந்தவேணும். ஆடு, மாடு, நாய் வளர்க்கிறவை அதுகள் இந்த மழைக் காலத்தில நிம்மதியா இருக்கக் கூடியளவில நல்ல கொட்டகையள் வைச்சிருக்க வேணும்.   ஒரு கொட்டகைகூட இல்லாமல், பல மாடுகளை வளர்த்து, அவற்றை நகரத் தெருக்களில் உறங்கி மலசலங் கழிக்க வைச்சுட்டு, விடியக்காத்தால எழும்பி மாடுகளைச் சாய்ச்சுக் கொண்டே பால்கறந்து விக்கிற பலபேரை எனக்குத் தெரியும். நாய்களையும் தெருநாய்களாக்கி அவற்றுக்கொரு முடிவுகட்ட வேணும்.  

இந்த மாரிகாலத்தில சில இடங்களில மனிசரே தெருவில மலங்கழிச்சு வைக்கினம். காணாததுக்கு கடைச்சந்துகளில சிறுநீர் கழிக்கிறவையள் ஏராளம். எங்கயாவது கடையளுக்கு இடையில நடக்க முடியுதா பாருங்க. விலங்குகளைவிடக் கேவலமா போச்சு மனிசச் சாதி. நாங்கள் வாழுற மண்ணை சுத்தமா வைச்சிருக்க வேணுமெண்டதையும் சுத்தமா மறந்து போறியள். அதை சுத்திகரிக்க வாறவயை மதிக்க வேணுமெண்டதையும் சுத்தமா மறந்து போறியள்.

 உலகம் எவ்வளவோ மாறிட்டுது வீட்டுக்கு வீடு இன்ர நெற்றில உலவினது போய் இப்ப கையிலயே இன்ர நெற்றக் கொண்டு திரியிறம். ஆனா வாழ்க்கை? இன்டர்நெற்றுக்குள்ள தான் எங்கட பண்பாடு வந்திட்டுது. இந்த நிலை மாறவேணுமெண்டதையும் சுத்தமா மறந்து போகாதையுங்கோ.

தமிழ்க் கவி பேசுகின்றார்

Comments