கிறிஸ் கெயில், அப்ரிடியின் அதிரடி ஆட்டம் | தினகரன் வாரமஞ்சரி

கிறிஸ் கெயில், அப்ரிடியின் அதிரடி ஆட்டம்

கனடா குளோபல் ரி-20 லீக்கிலும் தொடர்கிறது

இந்தியன் பிரிமியர் லீக் பாணியிலான போட்டித் தொடர்கள் தற்போது எல்லா நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கனடாவிலும் ‘கனடா குளோபல்- ரி/20லீக்’ தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.

மொன்றியல் ரைகர்ஸ், பிராம்டன் வூல்வ்ஸ், வினிபெக்டன் ஹவுக்ஸ், வென்கூவர் நைட்ஸ், டொரண்டோ நெஷனல், எட்மொண்டன் ரோயல்ஸ் ஆகிய ஆறு அணிகள் கலந்து கொள்ளும் மேற்படி தொடரில் முதல் சுற்று ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன் இரு போட்டிகயில் மோத வேண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்குத் தெரிவாகும். அதில் வெற்றி பெறும் அணிகள் 11ம் திகதி டொரொன்டோ நகர மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும்.

இத்தொடரில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பிரபல வீரர்கள் விளையாடி வருகின்றனர். கிறிஸ் கெயில், யுவராஜ் சிங், ஷஹீட் அப்ரிடி, ஜோஜ் பெய்லி, கிரான் பொலார்ட், சுனில் நரேன், கிறிஸ் லின், தினேஷ் சந்திமால், டூ பிளசிஸ், அன்ரூ ரஸல், சதாப் கான், உமர் அக்மால் என முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

மேற்படி தொடரில் கடந்த வாரம் நடைபெற்ற வான்கூவர் நைட்ஸ்-மொன்ட்ரீயல் ரைகர்ஸ் அணிகளுக்கிடையில் பிராம்டனில் நடைபெற்ற போட்டியொன்றில் வான்கூவர் அணி வீரரான மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் ஆரம்ப வீரராக களமிறங்கி 54பந்துகளில் 12சிக்ஸர் 7பவுண்டரிகளுடன் 122ஓட்டங்களைப் விளாசியுள்ளார். இவரின் அசுர வேக அட்டத்தின் காரணமாக ரி- டுவண்டி வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்களாக வான்கூவர் நைட்ஸ் அணி 276ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் கடும் மழை குறுக்கிட்டதால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இத்தொடரில் கடந்த வாரம் நடைபெற்ற மற்றொரு போட்டி பிராம்ப்டன் வூல்வ்ஸ்- எட்மோண்டன் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகீட் அப்ரிடியின் அதிரடி ஆட்டத்தில் பிராம்ப்டன் வூல்வ்ஸ் அணி வெற்றி பெற்றது. இதில் அப்ரிடி 40பந்துகளுக்கு முகம்கொடுத்து 5சிக்கர்கள், 10பவுண்டரிகள் அடங்கலாக 81ஓட்டங்களை விளாசியிருந்தார்.

பந்து வீச்சிலும் திறமைகாட்டிய அவர் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் இலங்கை வீரர் தினேஸ் சந்திமால் விளையாடும் மொன்றியல் ரைகர்ஸ் 4போட்டிகளில் 2வெற்றிகளுடன் 5புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், பிராம்ப்டன் வூல்வ்ஸ் 4புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலுமுள்ளது.

அதிரடி வீரர் கிறிஸ் கேயில் இதுவரை 177 ஓட்டங்களைப் பெற்று முதலிடத்திலுள்ளார். பந்துவீச்சில் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் எஸ். சோதி 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி விக்கெட் கைப்பற்றியோர் வரிசையில் முதலிடத்திலுள்ளார்.

Comments