![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/08/10/q12.jpg?itok=gEo0EgSc)
மெய்நிகர் உலகம் நமக்கு தரும் நண்பர்களும் அவர்களின் குழாமில் நாம் அடையும் நல்ல அனுபவங்களும் வெறும் மாயையா? அது மாயை என்பது ஒரு மிகையான ஒழுக்கவாத கூற்றல்லவா? இன்று நமது கணிசமான நண்பர்கள், காதலர்கள் ஏன் கணவர் / மனைவியர் கூட மெய்நிகர் உலகில் இருந்து வந்தவர்கள் அல்லவா? மெய்நிகர் உலகில் இருந்து முழுக்க துண்டித்து விட்ட பிறகு நமது “நிஜ” உலகம் எவ்வளவு தட்டையாக, அலுப்பாக, “டல்லாக”, நிறமற்றதாக மாறுகிறது? எவ்வளவு தொடர்புகளை நாம் இழக்க நேர்கிறது? இந்த சிக்கலை எப்படி எதிர்கொள்வது?
ஸிஸெக் போன்ற முக்கியமான சமகால தத்துவ அறிஞர்கள் “மெய்நிகர்” எனும் பதத்தையே கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். Philosophy in the Present எனும் நூலில் Philosophy is Not a Dialogue எனும் சுவாரஸ்யமான நீண்ட அத்தியாயத்தில் மெய்நிகர் உலகை ஏன் ஒரு மாற்று எதார்த்தமாய் காணக்கூடாது, அப்படி காண்கையில் நமது நிஜ உலகம் எனும் புலப்பாடு (phenomenon) கேள்விக்கு உள்ளாகும், அப்படி நிகழ்வது ஆரோக்கியமானது அல்லவா என கேட்கிறார். இந்த கேள்வி சற்றே அத்வைத வேதாந்திகள் மாயை பற்றி சொல்வதற்கு இணையானது. மாயை என்பதை நாம் சீரியஸாய் எடுத்துக் கொள்ளும் போதே, அதை மற்றமையாய் காணாமல் அதன் போக்கை உணரும் போதே, அதை கையாள்வது சுலபமாகும். அதன் வழியே நாம் பிரம்மனைக் காணமுடியாது. பிரம்மனையும் மாயையையும் இருமைகளாய் காணக் கூடாது என்பதே அத்வைத சாரம். ஸிஸெக் இதை இன்றைய மெய்நிகர் உலகை முன்னிட்டு விவாதிக்கிறார். ஆனால் மெய்நிகர் என்பது மெய்யே என அவர் கூறுவதில்லை. அந்த சாத்தியத்தை ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தினால் உண்மைக்கு இன்னும் நெருக்கமாய் செல்ல முடியும் என்கிறார்.
இந்த தத்துவார்த்த விவாதத்துக்குள் மேலும் போவது இப்போதைக்கு அவசியமல்ல.
அதை விட நாம் இதுவரை விவாதித்த விசயங்களை சுருக்கமாய் காண்போம்: பேஸ்புக் நம் காலத்தின் மிகப்பெரிய தத்துவக் குழப்பத்துக்கு நம்மை ஆட்படுத்துகிறது. அது ஒரு தத்துவக் குழப்பம் என விளங்காத நிலையில் நாம் அதிகமாய் அதில் ஆட்படுகிறோம். ஆட்பட ஆட்பட, அன்றாட உலகில் காலம் வைக்கும் கோரிக்கைகளுக்கு நம்மால் செவிசாய்க்க முடியாமல் போகிறது. அவை என்ன?
அன்றாட உலகில் notification என்ற ஒன்று இல்லை. அது நம்மை பேசும் படி, உரையாடும்படி தூண்டுவதில்லை. அது உடனுக்குடன் நம் முதுகை தட்டிக் கொடுப்பதில்லை. அங்கு புதுப்புது பிரச்சினைகளும் செயல்களும் கொண்டாட்டங்களும் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருப்பதில்லை. அங்கே எல்லா உலக செய்திகளையும் உடனுக்குடன் யாரும் நம்முடன் பகிர்ந்து கொள்வதில்லை. அங்கே அன்பும் வெறுப்பும் பொட்டலம் கட்டி நம் கைகளில் தரப்படுவதில்லை. அங்கு உங்கள் நண்பர்களையும் விரோதிகளையும் தனித்தனியாய் பாத்தி கட்டி ஒதுக்க முடியாது. நண்பர்களுடன் மட்டும் உரையாடி இணக்கமாய் உணர முடியாது. அங்கு உங்கள் குழுவை சேராதவர்களை நீங்கள் புறக்கணிக்க முடியாது. அங்கே நீங்கள் ஏற்புநிலையில் சதா இருக்க முடியாது. நீங்கள் ஒரு ஹோட்டலில் வாடிக்கையாளர் போல காத்திருக்க முடியாது. உங்கள் மேஜைக்கு எதுவும் வந்து சேராது. யாருக்கும் தொடர்ந்து உணவு தந்து கொண்டும் இருக்க முடியாது. பேஸ்புக்கில் நீங்கள் ஒரே சமயம் வாடிக்கையாளராகவும் சிப்பந்தியாகவும் இருக்கிறீர்கள்.
நிஜ உலகில் இது எதுவுமே இல்லை. நிஜ உலகில் நீங்களாகவே முயற்சி செய்து ஒவ்வொன்றையாய் அடைய வேண்டும், ஏமாற்றங்களை சகிக்க வேண்டும், அர்த்தங்களை உற்பத்தி செய்து நீங்களாகவே வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும், எல்லாவித சிக்கல்களையும் மகிழ்ச்சிகளையும் கட்டமைப்புகளைத் தாண்டி எதிர்கொள்ள வேண்டும்.
நிஜ உலகம் கட்டற்றது. ஆனால் பேஸ்புக்கும் கட்டற்றது போலத் தோன்றுகிறது. எவ்வளவு படித்தாலும் தீராத அளவுக்கு செய்திகளும் உணர்ச்சித் தூண்டல்களும் சாகச அனுபவங்களும் கொண்டது பேஸ்புக். ஆனால் அது உங்கள் முயற்சியை கோராதது. அதனாலே கொஞ்ச நேரம் பேஸ்புக் ஹோம்பேஜை விரலால் நகர்த்தி நகர்த்தி நாம் அலுத்து விடுவோம். அதன் கொண்டாட்ட மனநிலை மேலோட்டமானது எனத் தோன்றும். இப்போது நீங்கள் நிஜ உலகுக்கு மீளும்போது அதன் கட்டற்ற நிலை நமக்கு புலப்படாது, அதை உணரும் திறனை நாம் தற்காலிகமாய் இழந்திருப்போம். நிஜ உலகம் மிகத் தட்டையாய், நிறமற்றதாய், அதன் காலம் மிகமிக மெதுவானதாய், அதன் வெளி மிகமிக சுருங்கியதாய் நமக்குப்படும். ஆனால் சரி இது தான் நிஜ உலகம், பேஸ்புக் இதை விட மேல் என்று தோன்றினால் நாம் திரும்ப அங்கேயே போய் விடலாம். எந்த சிக்கலும் இல்லையே?
ஆனால் அப்போது தான் நமக்கு மற்றொரு உண்மை உறைக்கிறது. நிஜ உலகில் உள்ள சில விசயங்கள் பேஸ்புக்கில் ஒருபோதும் சாத்தியமில்லை. பேஸ்புக்கில் சண்டை போடலாம், ஒருவரது குரலைக் கேட்கலாம், லைவ்வாக ஒருவர் செய்யும் காரியங்களை கவனித்து கருத்தைக் கூறி அவருடன் உரையாடலாம். எதிர்காலத்தில் நமது லைவ் பின்னூட்டங்கள் கூட நேரலையாக காணொளி பின்னூட்டங்களாக வெளிப்படுத்தும் சாத்தியம் வரலாம். அப்போது பல்வேறு பேர்கள் பல்வேறு காலங்களில் வெளிகளில் ஒரே தளத்தில் தோன்றி பேசுவது சகஜமான ஒன்றாகும். அந்தளவுக்கு நம் வாழ்வின் எல்லைகளை மெய்நிகர் உலகம் விரிவுபடுத்தும். இன்னும் அது எல்லைகளை பலமடங்கு நொறுக்கலாம். ஆனால் ஒரு சிக்கல்: மெய்நிகர் உலகில் உறவுகளை உருவாக்கலாம், அங்கு இருந்தபடியே அன்றாட வேலைகளை முடிக்கலாம், நீங்கள் சமைப்பதை, சாப்பிடுவதை, குடிப்பதை, குளிப்பதை பகிர்ந்து கொள்ளலாம்; அங்கு நீங்கள் காதலிக்கலாம், மெய்நிகர் செக்ஸ் கூட வைத்துக் கொள்ளலாம், ஆனால் பேஸ்புக்கில் நீங்கள் மரணமடைய முடியாது.
இது என்ன அபத்தப் பேச்சு? யாரும் அப்படி கோரவில்லையே? ஏன் அப்படி கோர வேண்டும்? ஏன் பேஸ்புக்குக்குள் ஒருவர் சாக வேண்டும்?
இங்கு தான் நாம் மரணம் என்பது நம் வாழ்வின் மிகப்பெரிய வசீகரங்களில் ஒன்று என புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கை நமக்கு போதிக்கும் மிகப்பெரிய பாடங்களில் ஒன்று மரணம் மட்டுமே கட்டற்ற ஒன்று என்பது; மரணம் கட்டற்ற ஒரு நிலை எனும் போதும் அது ஒரு அறுதியான முற்றுப் புள்ளியையும் கொண்டது என வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது. எட்டி விடும் தூரமே மரணம், ஆனால் அதை தொட்டு விட முடியாது. அன்றாட வாழ்வு என்பதே மரணம் நோக்கிய பாய்ச்சல் தான் என்கிறார் ஜெர்மானிய தத்துவ அறிஞர் மார்ட்டின் ஹைடெக்கர். சரி, முடிவை நோக்கி பாயும் அளவுக்கு ஏன் முடிவு வசீகரமாய் உள்ளது. ஒரே காரணம் தான் - முடிவு என்பது முற்றுமுடிவு அல்ல.
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு” (குறள் 339)
சாக்காடு என்றால் சாவு. தூங்கும் போது நாம் போகும் உலகம் எதுவென அறிவோம். அது ஒரு தற்காலிக முற்றுப் புள்ளி; அதை தீண்டி உணர்ந்தால் நாம் விழித்துக் கொள்வோம், அப்போது முற்றுப்புள்ளி காற்புள்ளி ஆகும். காற்புள்ளியை நாம் புரிந்து கொள்ளும்போதே அதுவே முற்றுப்புள்ளி என்பதையும் அறிந்து கொண்டிருக்கிறோம். அதுவே முடிவு, அதுவுமே தொடர்ச்சி. மரணம் என்பது ஒரு அந்தரத்தை நோக்கிய திறந்த வாசல் என்கிறார் ஹைடெக்கர். மரணமடையும் ஒருவர் கூட தன் முடிவு என்ன என்பதைக் காண முடியாது.
ஆக, மரணம் பற்றின திகைப்பு கடைசி மூச்சு விடும் போதும் நம்மிடம் இருக்கும். இதை நாம் உள்ளுக்குள் தெளிவாக உணர்ந்திருக்கிறோம். ஆகையால் தான் உலகின் மிகப்பெரிய சாகசமாய் மரணம் உள்ளது. நமது பல போதை மருந்துகள், கலை நாட்டங்கள், சாகச விளையாட்டுகள் மரணத்தை தொட்டு விட்டு ஓடிவரும் குழந்தை விளையாட்டுகளே. மரண விழைவே வாழ்வின் ஆதார சுகம். ஒரு குழந்தை தன் தாயின் முலையை நோக்கி எம்புவது போல நாம் மரணத்தின் காம்பில் கண் சிமிட்டும் அந்த பால் திவலையை நோக்கி பாய்ந்தபடியே இருக்கிறோம் - ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும், இரவும் பகலும்.
ஆகையால், பேஸ்புக்கே மெய்யுலகம் என நினைக்கத் தலைபடுபவரது உள்ளுணர்வில் ஒரு பெரிய அதிர்ச்சி வந்து தாக்குகிறது. மரணம் நோக்கிய பாய்ச்சலை நீங்கள் பேஸ்புக்கில் நிச்சயம் அனுபவிக்க முடியாது. பேஸ்புக் முடிவற்ற பாய்ச்சல் கொண்டது. ஆனால் அதன் முடிவின்மை முடிவுடன் கூடியது அல்ல. முடிவின் எல்லையில் தான் அசலான முடிவின்மையை நீங்கள் காண முடியும். ஒன்றின் மற்றொரு பக்கமல்லவா இன்னொன்று? பேஸ்புக் ஒரு ஒற்றை உலகம். முடிவின் எல்லையில் நீங்கள் நிற்க முடியாது என்பதே அதன் கட்டற்ற தன்மையை செயற்கையாய் மாற்றுகிறது. இதனாலே பேஸ்புக்குக்குள் “உறங்குவது போல சாகாட்டை” அடைய முடியாது என்பதே பெரிய குறையாய் குறிப்பிட்டேன்.
இதை தத்துவார்த்தமாய் நாம் விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறோம் என்றாலும் உள்ளுணர்வால் அறிகிறோம்.
நாம் மெய்யென்று அறிந்தது மெய்யல்ல என அறியும் போது நமக்கு திரும்பிப் போக வழி தெரிவதில்லை. ஏனென்றால் மெய்நிகரில் பழகிய அளவுக்கு நாம் மெய்யுலகில் பழகவில்லை; மெய்யுலகை பொய்யென நம்ப வேறு தலைப்பட்டு விட்டோம். இந்த இடைப்பட்ட நிலைமை நம்மை மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆட்படுத்துகிறது.
வாழ்வின் மிகப்பெரிய ஆன்ம நெருக்கடிகளே உளவியல் சிக்கல்களாய் வெடிக்கின்றன. பேஸ்புக் நம்மை தற்போது அத்தகைய ஒரு நெருக்கடியில் மென்னியை பிடித்து தள்ளி உள்ளது. பெரிய எண்ணிக்கையில் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் உளவியல் மருத்துவனையில் சேர்க்கப்படுகிறார்கள்; மன அழுத்தம், தீவிர போதைப் பழக்கம், வேலையிலும் குடும்ப உறவுகளிலும் அக்கறையின்மை, முழுக்க சிதைந்த உடல்நலம் என மக்கள் அல்லோலப்படுகிறார்கள். இப்பிரச்சினையின் அடிவேர் தத்துவத்தில் தான் உள்ளது, வெளிப்படையாய் இது ஒரு நடைமுறை வாழ்க்கை சிக்கல் எனத் தோன்றினாலும்.
விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் அக்கதை உங்களுக்கு வெகு பரிச்சயமானது. அதே சாத்தானைப் போன்றே இச்சாத்தானும் ஆப்பிளை புசிக்க சொல்லி அதன் பலன்களை நம்மை நம்ப வைத்து விட்டது. ஒரு கடி கடித்து விட்டோம், மெய்நிகர் உலகின் கடிக்க கடிக்க தீராத ஆப்பிளை கீழே வைக்கவும் நாம் அறிய மாட்டோம். விவிலிய சாத்தானை விட பேஸ்புக் சாத்தான் ஆக ஆபத்தானவன்!
அபிலாஷ் சந்திரன்