![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/08/18/Capture--1.jpg?itok=E2dSW5LQ)
விவசாயியின் மகன் விளையாட்டுப் போட்டியில் சாதனைபடைத்துள்ளார். கனடாவில் அல்பிரட் துரையப்பாவின் பேரனுக்குப் பொலிஸ் தலைமைப் பதவி கிடைச்சிருக்கிறதாம். மலையகத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன் சீனாவில் நடைபெற்ற உடற்கட்டமைப்பாளர் போட்டியில் வெற்றிபெற்றிருக்கிறாராம்.
இப்பிடியான கருத்தாடல் எல்லாம் என்னத்தைக் குறிக்கிறது?
நிச்சயமாகத் தாழ்வுச் சிக்கல் என்கிறார் நண்பர். அதெப்படி?
விவசாயியின் மகன் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறாமல், யாருடைய மகன் வெற்றி பெற வேண்டும்? விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இன்னாருடைய மகனால்தான் முடியும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா? மலையகத்தைச் சேர்ந்த ஒருவரால் வெற்றி பெற முடியாது; ஆனால், இவர் வெற்றி பெற்றிருக்கிறாரா? என்று பல கேள்விகள் எழுகின்றன அல்லவா? இதெல்லாம் அவரவர் மனக்குறை; தாழ்வுச் சிக்கலேயன்றி வேறொன்றும் இல்லை.
அதேபோன்று, அல்பிரட் துரையப்பாவின் பேரனுக்குப் பொலிஸ் தலைமை பதவியாம்! என்பது தாழ்வுச்சிக்கலா? இல்லை. அஃது உயர்வுச் சிக்கல்!
தன்னைத் தாழ்த்திக் கொண்டிருப்பவன் சாதித்தால், தனது பிரிவைச் சொல்லிப் பெருமைப்படுவதாக நினைத்துக்ெகாண்டாலும், நிச்சயமாக அது உயர்வுச் சிந்தனையல்ல. நம்மால் முடியாது..ஆனால், சாதித்துவிட்டோம்! என்கின்ற குறுகிய சிந்தனை. அதேபோன்று ஒன்றைக் கவனிக்க வேண்டும், கனடாவில், அல்பிரட் துரையப்பாவின் வழித்தோன்றல் என்று பார்த்துப் பதவி கொடுத்திருக்கமாட்டார்கள். வெளிநாடுகளில் அப்பிடி கிடையாது. கனேடிய பிரஜை; அறிவில் சிறந்தவன்; திறமையைக் காட்டியதால், பதவி தானாக வந்திருக்கிறது. அதனைவிடுத்து, அவர் இலங்கையர், தமிழர், இன்னாருக்கு இன்னாரின் மகன் என்று பார்த்துப் பதவி கொடுக்கப்படவில்லை.
எங்குப் பிறந்தாலும் வாழ்ந்தாலும் யாராலும் சாதிக்க முடியும். தன்னம்பிக்ைகயும் தளராத நெஞ்சுறுதியும், விடா முயற்சியும் உள்ள எவரும் எங்கும் சாதிக்கலாம். அதில் தமிழர், சிங்களவர், தாழ்ந்தவர், உயர்ந்தவர் என்று கிடையாது. ஏதோ, அந்தச் சாதனையாளர் பிறந்த அல்லது வாழ்ந்த மண்ணைச் சேர்ந்தோர் பெருமைபட்டுக்ெகாள்ளலாம். ஆனால், இதில் பெருமைபடுவதற்கு எதுவும் கிடையாது. ஏனெனில், இந்த மண்ணில் பிறந்த அனைவருமே சாதிக்கப் பிறந்தவர்கள்தான். நமக்கு முதலில் அந்தச் சிந்தனை தெளிவு வளரவேண்டும்.
இந்தத் தாழ்வுச் சிக்கல் பெரும்பாலும் தாழ்வாக உள்ளவர்கள் மத்தியிலும் கற்றவர்கள் மத்தியிலும் காணப்படும் ஒருவித நோயாகும்.
சிங்களப் பாடப் புத்தகத்தில் உள்ள ஒரு விடயத்தைச் சொல்லி அது தவறு என்று விளக்குகிறார் பேராசிரியர் பராக்கிரம நிரியெல்ல. எப்படியென்றால்,
"ஹெரியட் தமிழாக இருந்தாலும், அழகாக இருக்கிறாள்; அவள் சிங்களமும் கதைக்கிறாள். (ஹெரியட் தெமழவுனத் லஸ்ஸனய்; எய சிங்ஹளத் கத்தா கரய்) இந்த வாக்கியத்தின் மூலம் அவர்கள் சொல்ல வருவது என்ன? அல்லது அவர்களின் சிந்தையில் இருப்பது என்ன?
"தமிழர்கள் எல்லோரும் அவலட்சணமானவர்கள். ஆனால், எரியட் அழகானவள்; அவள் சிங்களம்கூடக் கதைக்கிறாள்" என்றால் அதில் என்னத்தைச் சொல்ல வருகிறார்கள்? அவர்களின் எண்ணத்தைச் சொல்ல வருகிறார்கள் அல்லவா? இந்தச் சிந்தனைக்கும் மேலே சொன்ன, 'விவசாயியின் மகன் விளையாட்டில் சாதித்தான்' என்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அதனை அவர்கள் சொல்கிறார்கள். இதனை இவர்கள் சொல்கிறார்கள், அவ்வளவே!
உங்களை யாருடனும் ஒப்பிடாதீர்கள்! ஏனெனில், நீங்கள் மற்றவரைப்போலன்றித் தனித்துவமான திறமையைக் கொண்டிருக்கிறீர்கள்! என்கிறார் பில் கேட்ஸ். சாதனைகள் படைத்த பலர் மிக எளிமையாக, ஏழையாக வாழ்ந்து வளர்ந்தவர்கள் என்பதுதான் வரலாறு. ஆகவே, எந்த நிலையிலிருந்து சாதித்தாலும் அந்தச் சாதனைதான் பெரிதேயன்றிச் சாதித்தவரைத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை! இதே நிலையிலிருந்தே தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முதற்கொண்டு ஏனைய பரீட்சைகளில் சாதிக்கும் பிள்ளைகளையும் நோக்க வேண்டும்.
எல்லாப் பிள்ளைகளும் ஏதோ விதத்தில் சாதிக்கப் பிறந்தவர்கள்தான் என்பதை அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
கல்வி கற்ற எல்லாப் பேராசிரியர்களின் பிள்ளைகளும், பொறியியலாளர்களின், மருத்துவர்களின், சட்டத்தரணிகளின் பிள்ளைகளும் இன்னும் எத்தனையெத்தனை பெரிய சாதனையாளர்களின் பிள்ளைகள்தான் சாதித்திருக்கிறார்களா? என்று ஆராய்ந்துபார்த்தால், பெரும்பாலும் அவ்வாறு இருக்காது என்பது தெரியவரும்.
எனவே, சாதனையாளர்களைத் தாழ்த்திச் சிந்திக்காதீர்கள். சாதனையாளர்களே நீங்கள் தாழ்வாகச் சிந்திக்காதீர்கள்! விஞ்ஞானியின் மகன்தான் விஞ்ஞானியாக வேண்டும் என்று ஒரு விதி இருக்குமானால், நமக்கு டாக்டர் அப்துல் கலாம் கிடைத்திருக்கமாட்டாரே! அவர் கண்ட கனவும் இலட்சியமும் விடா முயற்சியும்தான் அவரை ஒரு விஞ்ஞானியாகவும் ஜனாதிபதியாகவும் நம்மால் பார்க்க முடிந்தது. தேனீர் விற்ற ஒருவரின் மகனால், தேனீர்தான் விற்க முடியும் என்றில்லை.
நாட்டின் பிரதமராகவும் வரமுடியும். விவசாயியின் மகனால் விளையாட்டு வீரனாக மட்டுமல்ல, நாட்டின் ஜனாதிபதியாகவும் வரலாம் என்பதையெல்லாம் கண்டுகொண்டிருக்கின்றோம். சாதனையாளர்கள் எங்கிருந்தும் வரலாம்; வாழ்த்துவோம் வேறுபாடின்றி!