![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/08/24/q2.jpg?itok=Jw3f99ph)
கிறிஸ்டியானோ ரொனால்டோ
பரம எதிரியான மெஸ்சிதான் என்னை சிறந்த வீரராக உருவாக்கினார் என போர்த்துக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோ தெரிவித்துள்ளார். கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரேசில் அணியின் நெய்மர் ஆகியோர் இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரராக கருதப்படுகிறார்கள்.
இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும், மெஸ்சிக்கும் இடையில்தான் கடும்போட்டி நிலவி வருகிறது. இருவரில் யார் சிறந்தவர்கள் என்பதை விவாதிக்காத கால்பந்து ரசிகர்களே இருக்க முடியாது.
மெஸ்சி ஆரம்ப காலத்தில் இருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோ மான்செஸ்டரில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறிய பிறகு இருவருக்கும் இடையில் கடும் போட்டி மனப்பாங்கு ஏற்பட்டது.
கால்பந்து போட்டியின் சிறந்த விருதான பலோன் டி’ஆர்-ஐ இருவரும் தலா ஐந்து முறை வென்றுள்ளனர். கால்பந்து போட்டியில் பரம எதிராக மோதும் இவர்கள், பொது இடங்களில் மிகப்பெரிய அளவில் சந்தித்ததோ, பேசி உரையாடியதோ கிடையாது.
இந்நிலையில் மெஸ்சிதான் என்னை சிறந்த வீரராக உருவாக்கினார் என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில் ‘‘நான் ரியல் மட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் யுவான்டஸ் அணிக்குச் செல்லும்போது மிகவும் ஏமாற்றம் அடைந்ததாக மெஸ்சி ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.
ஏனென்றால் எங்களுக்கு எதிராக கடும் போட்டி நிலவியது. அவரது பக்கத்தில் இருந்து வந்த இந்த கருத்தை நான் மிகவும் ரசிக்கிறேன்.
மெஸ்சி என்னை சிறந்த வீரராக உருவாக்கினார்.
அதேபோல் நானும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் விருதுகளையும், கோப்பைகளையும் வெல்லும்போது அவருக்கு தேள் கொட்டியது போன்று இருக்கும். அவர் வெற்றி பெறும்போது எனக்கும் அதேபோல் இருக்கும்.
எங்களுக்கு இடையில் தொழில்முறையிலான தொடர்பு சிறப்பாக உள்ளது. ஏனென்றால் 15வருடமாக கால்பந்து போட்டியில் விளையாடி வருகிறோம். நாங்கள் ஒருபோதும் இணைந்து இரவு உணவு சாப்பிட்டது கிடையாது.
ஆனால், வருங்காலத்தில் இப்படித்தான் இருக்கும் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. இதில் எந்த பிரச்சினையும் இருப்பதாக நான் பார்க்கவில்லை’’ என்றார்.