![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/09/01/Capture--1.jpg?itok=PPrjYTRH)
நாங்கள் இதையெல்லாம் வருமானத்திற்காகச் செய்றதில்லை. ஒரு சேவையாகத்தான் செய்யிறம், என்று தன்னார்வ தொண்டு அமைப்புகளை வைத்திருப்போர் சொல்லக்கேட்டிருப்பீங்க. நிறையப்பேர் அப்பிடித்தான் சொல்லிக்கொண்டு வாறாங்கள். ஆனால், காலப்போக்கிலை அவங்க செய்யிறது என்ன எண்டது தெரிய வந்துவிடும்.
தங்களுடைய சுயநலத்திற்காகவே அவர்கள் பொதுநலத்தில் கால்வைக்கிறார்கள் என்பது புலப்பட்டுவிடும். அதைத்தான் 'நேற்று இன்று நாளை' என்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி அவர்கள் எம்.ஜி.ஆருக்காக ஒரு பாடல் எழுதியிருக்கிறார். அந்தப் பாடலில், வருகின்ற சரணத்தில்... 'மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்; தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனத்தில் கொள்ளுவார்' என்று.
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் தங்களின் நலத்திற்காகப் பணியாற்றுவோரும் தாங்கள் புரிவது சேவை என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் அலுவலகங்களில், நிறுவனங்களில் பணியாற்றுவோரைப் பார்த்திருப்பீர்கள்... அவர்கள் தாம் செய்வது ஊதியத்திற்கான பணியென்பதை மறந்துவிட்டு, என்னவோ ஊழியம் செய்பவர்கள்போல் காட்டிக்கொள்வார்கள். தாங்கள் பணியாற்றும் நிறுவனத்திற்கு அவர்கள் உதவி புரிவதாக நினைத்துக்கொண்டு சக ஊழியர்களிடம் நடந்துகொள்வார்கள்.
ஆசிரிய தொழில் புரிவோரும் இதற்கு விதிவிலக்கல்ல. தாங்கள் எதிர்கால சமுதாயத்திற்காக சேவை செய்வதாகவே அவர்கள் சொல்லிக்ெகாள்கிறார்கள். உண்மையில் ஆசிரியர்கள் ஊதியம் பெற்றுக்ெகாண்டாலும், அவர்கள் செய்வது காட்டு மூங்கில்களைப் புல்லாங்குழலாக்கும் கலை என்று சொல்வார்கள். எத்தனை பேருக்கு இது பொருந்தும் என்று தெரியவில்லை.
அண்மையில் இலங்கை வந்திருந்த முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனிடம் ஓர் ஊடகவியலாளர் கேள்வியொன்றைக் கேட்டிருக்கிறார். அதாவது, "நீங்கள் இத்தனை ஆண்டுகளாக ஆசிரிய சேவையில் இருந்திருக்கிறீர்கள்! இன்று வல்லமை தாரோயோ என்று மாணவர்களை ஊக்குவிக்கும் உரைகளை நிகழ்த்துகிறீர்கள். ஆசிரிய சேவையின் அனுபவங்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள முடியுமா?"
அதற்கு அவர் அளித்த பதில்,
"ஆசிரிய சேவையாற்றியதாகச் சொல்கிறீர்கள்! உண்மையில் நான் ஆசிரிய சேவை ஆற்றவில்லை. பணிதான் ஆற்றியிருக்கிறேன். அதற்கு எனக்குச் சம்பளம் தந்தார்கள். நான் சேவை எதுவும் செய்யவில்லை"
கேள்வி கேட்ட நண்பருக்குத் தூக்கிவாரிப்போட்டிருக்கிறது! எந்தச் சொல்லைப் பயன்படுத்தினாலும் அதற்குப் பதில் சொல்கிறார். உண்மையில், அவரிடம் மிகவும் பயபக்தியுடன்தான் சொற்களைப் பயன்படுத்திப் பேச வேண்டும். ஆசிரியர் என்றால், அவர்தான் ஆசிரியர். சேவைக்கும் பணிக்கும் பொருள் சொன்ன அவர் எங்கே, தொழிலுக்காக வந்து குவிந்துள்ள இவர் எங்கே? என்று வியந்துபோகிறார்.
பொதுநலம் என்றால், என்ன என்பதற்குத் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஒருமுறை விளக்கம் சொல்லியிருக்கிறார். கீழே படியுங்கள்!
"பொது நலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால் பந்து போன்றது. இவை இரண்டும் காற்றால் இயங்குகின்றன. புல்லாங் குழல் முத்தமிடப்படுகின்றது. கால் பந்து காலால் உதைக்கப்படுகின்றது. ஏன்? தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால் பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசை வடிவில் மற்றவர்களுக்கு கொடுப்பதால் புல்லாங்குழல் முத்தமிடப் படுகிறது. சுயநலம் உள்ள மனிதர்கள் புறக்கணிக்கப் படுவார்கள். பொதுநலம் உள்ள மனிதர்கள் போற்றப்படுவார்கள்.
அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த வேளையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. ஆபிரகாம் லிங்கன் அப்போது ஜனாதிபதியாக இருந்தார். சிக்கல் மிகுந்த அந்த வேளையில் ஒரு மூதாட்டி, ஆபிரகாம் லிங்கனை அணுகி அவருக்கு ஆறுதல் கூறுவதாக நினைத்து ஒன்றைச் சொன்னார். “ஜனாதிபதி அவர்களே, எதற்கும் கவலைப்படாதீர்கள், கடவுள் நம் பக்கம் இருக்கிறார். அவர் நம்மைக் காப்பாற்றுவார்” என்று சொன்னார்.
இதற்கு பதில் அளித்த ஆபிரகாம் லிங்கன், “தாயே உங்கள் அன்பு மொழிக்கு நன்றி. நம்மைக் கடவுள் காப்பாற்றுவார் என்று எனக்கு நன்றாகத் தெரியும். அது அவருடைய கடமை. ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் நம் பக்கம் இருக்கிறாரா என்பதை விட கடவுளின் பக்கம் நாம் இருக்கிறோமா என்பது தான் எப்போதும் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது” என்று ஆபிரகாம் லிங்கன் சொன்னாராம்.
இதைப் போல, எனது அரசின் மீது அவதூறுகளைப் பரப்பி, பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு, மக்களை தங்கள் பக்கம் வரவழைத்து விடலாம் என்று சிலர் பகல் கனவு கண்டு கொண்டு இருக்கின்ற சூழ்நிலையில், மக்களின் பக்கம் நாம் இருக்கிறோமா என்று நினைத்தே எனது அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் அமைந்துள்ளன. மக்களும் எனது அரசிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு என்னென்ன வழிகளில் எல்லாம் நன்மை செய்ய இயலுமோ, அந்த வழிகளைப் பற்றியே நான் சதா சர்வ காலமும் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார் ஜெயலலிதா. சிந்தித்துப் பார்ப்போம்!