![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/09/01/colmissing-people-1024x688152422127_7327978_31082019_VKK.jpg?itok=ioRP2GeZ)
கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களை மறந்துவிட்டு அன்றே கிடப்பில் போட்டுவிட்டு நாம் எதிர்காலத்தை நோக்கி வெற்றிகரமாக நகரமுடியாது. மாறாக நீதியின் மீது கட்டியெழுப்பப்படும் சமாதானத்தின் மூலமே முன்னோக்கிப் பயணிக்கமுடியும்'இலங்கையில் கடந்த சில மாதகாலமாக பேச்சளவில் கூட ஓரங்கட்டப்பட்டிருந்த இறுதிப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்புக் கூறல் கடப்பாடு என்ற விடயம் கடந்த 19ம் திகதி முதலாக மீண்டும் பேசுபொருளாகியிருக்கின்றது.
இலங்கையின் புதிய இராணுவத்தளபதியாக லெப்டினற் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமையை அடுத்தே இறுதிப்போரில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் பற்றி பல்வேறு தரப்பினரும் கரிசனையை வெளிப்படுத்த வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அடங்கலாக சர்வதேச சமூகம், ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர், மனித உரிமை ஆணையாளர், உட்பட ஐ.நா சமூகம், புலம்பெயர் சமூகம், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், உள்ளுர் சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ்க் கட்சிகள் என பல்வேறு தரப்பினரும் சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஆழ்ந்த கரிசனையை வெளிப்படுத்தியிருப்பதுடன் பொறுப்புக்கூறல் தொடர்பான நம்பிக்கைக்கு வீழ்ந்த பேரடியெனவும் முற்றுப்புள்ளியெனவும் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை வர்ணித்துள்ளனர்.
2009ம் ஆண்டில் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மேற்குலக நாடுகளின் கரிசனைகளையும் மீறி இலங்கைக்கு ஆதரவாக மாற்றப்பட்டது.
ஆனால், அயராத முயற்சிகளின் பலனாக 2012, 2013 ,2014 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக தீர்மானங்கள் பொறுப்புக்கூறல் நல்லிணக்க விடயங்களில் இலங்கை காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன.இலங்கையில் 2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை அடுத்து மார்ச் மாதத்தில் கொண்டுவரப்படவிருந்த தீர்மானம் பிற்போடப்பட்டு செப்டம்பர் 2015ல் இலங்கை அரசாங்கம், மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் 30/1இற்கு ஒப்புதல் அளித்ததுடன், நிலைமாறுகால நீதி வழிமுறையொன்றின் ஊடாக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கு முன்னொருகாலமும் இல்லாதவாறு தனது உறுதிமொழியினையும் வழங்கியது.
குறிப்பாக மோதலுடன் தொடர்புடைய விடயங்களில் உண்மையைக் கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், இழப்புக்கள் மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றிற்கு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகள் ஊடாக தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உறுதிமொழியளித்தது. நான்கு ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையிலும், இலங்கையின் அரசியல் நிலைமை நிலையற்றதாகவே காணப்படுவதுடன், நிலைமாறுகால நீதிக்கான அனைத்து உறுதியளிப்பும் அரசாங்கத்திற்குள்ளேயே நலிவடைந்துள்ளதாகவே காணக்கூடியதாக உள்ளது. 2018 ஆம் ஆண்டின் இறுதிக் காலகட்டத்தில் அரங்கேறிய அரசியல் சதி முயற்சிகள் கூட்டணி அரசாங்கத்திற்குள்ளே தீவிரமான பிளவுகள் இருப்பதையும் துலாம்பரமாகக் காட்டியது. கட்சி அரசியலுக்குள் காணப்படும் பெரும் ஊழல்கள், ஜனாதிபதியின் விருப்பங்களுக்கு மத்தியில் சில அரச நிறுவனங்கள் எளிதில் பாதிப்படையும் நிலைக்கு உள்ளாகியிருத்தல் மற்றும் நிலைமாறுகாலம் முழுமையாக நலிவடைந்துள்ளமை ஆகியனவற்றை துலாம்பரமாகக் காணக்கூடியதாக இருந்தது.
நிலைமாறுகால நீதியைப் பொறுத்தமட்டில், நம்பகத்தன்மைமிக்க பொறுப்புணர்வுக்கான எதிர்ப்பு வலுவடைந்து வரும் நிலையில், அரசாங்கத்திற்குள் இருந்து ஆதரவளித்த சிலர் அதிலிருந்து விலகியுள்ளதொரு போக்கினை அவதானிக்க முடிகின்றது. 2019ன் இறுதியிலும் 2020இலும் நாங்கள் பல முக்கியமான தேர்தல்களை எதிர்நோக்கியுள்ளதால் எந்தவொரு நிலைமாறுகால நீதி செயன்முறையும் மறுவரையறை செய்யப்படுவதற்கோ அல்லது முடிவுறுத்தப்படுவதற்கோ உள்ளாகக்கூடும். அரசியல் சதிமுயற்சியின் ஊடாக முன்னைய ஆட்சியாளர்கள் ஆட்சி பீடம் ஏற்றப்பட்ட அக்குறிப்பிட்ட சில மாதங்களிலேயே இவ்விடயம் சார்ந்த செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்கள் மீதான கண்காணிப்பும் அச்சுறுத்தல்களும் தீவிரமாக்கப்பட்டதுடன், ஊடக சுதந்திரமும் மட்டுப்பாடுகளுக்கு முகம்கொடுத்தது. ஆகவே இத்தேர்தல்களின் பெறுபேறுகளின் மூலம், 2015 இற்கு முன்னரான அடக்குமுறை மீள ஏற்படுவதற்கான வாய்ப்புகளைப் பற்றி சிந்திக்க வைக்கின்றது.
தற்போது பரந்தளவில் அரசியலில் காணப்படும் தளம்பல் அல்லது ஸ்திரமற்ற நிலையில் நிலைமாறுகால நீதி விடயத்தில் காணப்படும் சர்ச்சைமிக்க நிலவரங்கள் காரணமாக எதிர்வரும் ஆண்டில் அரசாங்கத்தின் அரசியல் ரீதியான ஆர்வம் பெருமளவு குன்றுவதற்கோ அல்லது முற்றுமுழுதும் இல்லாமல் போவதற்கோ வாய்ப்புகளும் உள்ளன.
கடந்தகால குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் ஆகியவற்றைப் பற்றிய விடயங்கள் விளித்துரைக்கப்பட வேண்டும் எனும், உலகளாவிய புரிதலானது நிலைமாறுகால நீதியின்' தேவையினை வலுவூட்டுகின்றது. இவ்வருடத்தின் மே மாதம் மோதல் முடிவுற்று பத்து ஆண்டுகள் கடந்துள்ளது என்பதை நினைவூட்டினாலும், மோதல்களின் போது இரு தரப்பும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் எனும் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மையிலிருந்தும் அது சார்ந்த நம்பகத்தன்மைமிக்க பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து வெகுதூரம் விலகியிருப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இச்சமூகம் நீண்டகாலத்தில் நல்லிணக்கம், சமத்துவம், ஜனநாயக நிலையுறுதி ஆகியவற்றைக் கொண்ட சட்டத்திற்கு மதிப்பளிக்கக்கூடியதொரு சமூகமாக நிலைமாற்றம் அடைய வேண்டுமாயின், நிலைமாறு கால நீதி செயன்முறை சார்ந்த 30/1 தீர்மானத்தினை செயற்படுத்துவது மிகவும் அத்தியாவசியமானதாகும்.இச் சந்தர்ப்பத்தில் அரசியல் ரீதியில் மிகவும் யதார்த்தமானதொரு விடயத்தினை குறிப்பிட்டாக வேண்டும். 2015 ஆம் ஆண்டின் ஆட்சி மாற்றத்தைப் பொறுத்தமட்டில் அதன் மிக முக்கியமான பங்காளர்களாக சிறுபான்மை சமூகங்கள் இருந்துள்ள அதேவேளை, இச்சமூகத்தைச் சேர்ந்த இனக்குழுமங்களே மோதல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டு காலத்தை நோக்குமிடத்து, நிலைமாறு கால நீதிக்கான அரசியல் விருப்பார்வம் குறைவடைந்து அல்லது இல்லாதொழிந்து போயுள்ள அதேவேளை அதற்கெதிரான எதிர்ப்பு அலைகள் வலுப்பெற்றுள்ள நிலையில் அதன் நோக்கெல்லை வியத்தகு அளவிற்கு குறுகியுள்ளதென்பது மறுக்க முடியாததொரு விடயமாகும்.
ஆகவே, நிலைமாறுகால நீதிக்காக ஆதரித்து வாதாடுகின்ற இராஜதந்திரிகளும், சிவில் சமூகங்களும், ஊடகங்களும் அவர்களுடைய அணுகுமுறையினை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் நிலைமாறு நீதிக்கான வழி முறையமைப்பு அரசின் உயர்மட்டத்தில் உள்ளவர்களுடன் நேரடியாக பணியாற்றுவதாக அமைந்திருந்ததெனினும், அதற்கான நுழைவாயில்கள் துரிதமாக மூடப்படுவதை உணரமுடிகின்றது.
ஆகவே, அடுத்துவரும் ஆண்டில் பங்கீடுபாட்டாளர்கள் கடந்த காலத்தில் அடைந்து கொண்டவற்றை வலுவூட்டிக்கொள்வதையும் அரச நிறுவனங்களில் கீழ் வரிசையில் உள்ளவர்கள் மத்தியில் ஆற்றலையும் அறிவினையும் கட்டியெழுப்புவதையும் நிலைமாறு கால நீதிக்காக பொதுமக்களை அணிதிரட்டும் விடயத்தையும் முன்னுரிமைப்படுத்தல் வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டு காலத்தில் தீர்மானம் 30/1 இன் மூலம் அடைந்துகொள்ளப்பட்ட மிகவும் உறுதியான பெறுபெறு யாதெனில் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் (OMP) தாபிக்கப்பட்டமையாகும். அது முழுமையான செயல் வடிவத்தைப் பெறாவிட்டாலும் அது மிகவும் வலுவுடைய சட்ட ஆணையை பெற்றுக்கொண்டுள்ளதுடன், பெருமளவு சுயாதீனமான ஆணையாளர்களையும் கொண்டுள்ளமை அதன் சிறப்பியல்பாகும். இவ் அலுவலகத்தின் பணியானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கடந்த கால ஆட்சியின் போது குறிப்பாக இனரீதியிலான மோதல்கள் மற்றும் ஏனைய அரசியல் மற்றும் சிவில் கலவரங்கள் காரணமாக, கடத்தப்பட்ட அல்லது காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது அல்லது எங்கிருக்கின்றார்கள் என்பதைக் கண்டறிவதே அதற்குள்ள பிரதான ஆணையாகும்.
ஆகவே 20,000க்கும் மேற்பட்ட காணாமற் போனவர்களைப் பற்றிக் கண்டறிதல் சமூக ரீதியிலும் சட்ட ரீதியிலும் வலியுறுத்தி நிற்கின்றதொரு தேவையாக உள்ளது. இதற்கு மேலதிகமாக காணாமற் போவதற்கு வழிசமைத்த அரச நிறுவனங்களின் அடக்குமுறை மற்றும் குற்றவியல் சார்ந்த கொள்கைகள் மற்றும் நடத்தைகள் பற்றிய உண்மைகளை கண்டறிவதற்கும் இவ் அலுவலகத்திற்கு தத்துவம் உள்ளதுடன், இவ்விடயம் உண்மையைக் கண்டறியும் பிரயத்தனங்களுக்கு பங்களிப்பு வழங்குவதுடன் நீதியை நிலைநாட்டுவதற்கும் இட்டுச் செல்கின்றது.
தொடக்கம் முதற்கொண்டே காணாமற் போனவர்களுக்கான அலுவலகம் பல்வேறு அரசியல் அமைப்புகளினது பாரிய எதிர்ப்புகளுக்கு உள்ளாகியதுடன் தொடர்ந்தும் இந்நிலை நீடிக்கின்றது. இந்நிலையினை எதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் மத்தியில் இந்த அலுவலத்தைப் பற்றி ஆதரித்து வாதாட வேண்டுமென்பதுடன் அரச நிறுவனங்கள் இவ் அலுவலகத்தின் புலனாய்வு விடயங்களில் உடனுழைக்கின்றார்கள் என்பதை உறுதிசெய்தல் வேண்டும்.
நிலைமாறுகால நீதி செயன்முறைக்கு ஒத்தாசை வழங்கும் பொருட்டு அரச நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை, மனித உரிமைகளுக்கு இசைந்தொழுகுதல் மற்றும் ஆற்றல் ஆகியவை உறுதிப்படுத்தப்படும் ஆண்டாக 2019 ஆம் ஆண்டு இருத்தல் வேண்டும். இறுதியாக, 2019 ஆம் ஆண்டு தாராளவாத ஜனநாயகம், உண்மை மற்றும் நீதி ஆகிவற்றின் பால் மக்களை அணிதிரட்டும் ஆண்டாக அமைந்திட வேண்டும்.
2018 ஆம் ஆண்டு ஆட்சிக்கவிழ்ப்பு, ஜனநாயகத்தில் மக்கள் கொண்டுள்ள பலத்தை வெளிக்காட்டுவதற்கு ஆதாரமாக அமைந்தது. இலங்கை வரலாற்றில் ஒருபோதும் பொது மக்கள் உள்நாட்டு அலுவல்களில் தூய்மையான ஆட்சி, சட்டத்தின் சுயாட்சி மற்றும் அடிப்படை உரிமைகள் போன்றவற்றை வலியுறுத்தி இவ்வாறாக ஈடுபட்டதாக காண இயலாது. இலங்கை ஜனரஞ்சகமான செயற்பாடுகளைத் தவிர்த்து ஜனநாயகக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட இயங்குநிலையுள்ள ஜனநாயகத்தை நோக்கிப் பயணம் செய்ய வேண்டுமாயின் இந்த முன்னேற்றம் பேணிவரப்பட்டு முன்னேற்றப்பட வேண்டும்.
அரசியல்வாதிகளும் கொள்கை வகுப்பாளர்களும் தங்களுடைய தொகுதிகளுக்கு வகைபொறுப்பு கூறுபவர்களாக மாற்றப்பட வேண்டும்.
நிலைமாறு கால நீதிக்கு மதிப்பளித்து கடந்த கால விடயங்களுடன் பரிமாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கும், உண்மையைக் கண்டறிவதற்கும் மோதலின் போது அனைத்துத் தரப்புகளும் புரிந்த குற்றங்கள் தொடர்பாக நீதியினை நிலைநாட்டுவதற்கும் அனைத்து இனங்களுக்கு மத்தியிலும் பங்கீடுபாட்டாளர்கள் விழிப்புணர்வினை கட்டியெழுப்புதல் வேண்டும்.2020 இல் எந்த அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறினாலும் நம்பகத்தன்மை கொண்டதொரு நிலைமாறுகால நீதிச் செயன்முறையொன்றிற்கு கட்டாயமாக பொதுமக்களின் ஒத்தாசையும் அழுத்தமும் தேவையாகவிருக்கும்.
2019 ஆம் ஆண்டு அவ்வாறானதொரு விடயத்திற்கான விழிப்புணர்வினையும் ஒத்துழைப்பினையும் கட்டியெழுப்புகின்றதொரு ஆண்டாக அமைதல் வேண்டும். தமக்கு வேண்டப்படும் அரசாங்கம் அமையும் போது அன்றேல் தமது தேவைகள் இருக்கின்ற அரசாங்கத்தினால் பூர்த்திசெய்யப்படும் போது சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குலகம் இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக அடக்கிவாசிப்பதும் தாம் நினைத்தவை நடக்கவில்லை என்றால் அதுதொடர்பில் பெருங்குரல் எழுப்புவதும் இலங்கை விடயத்திலும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.
சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் வீழ்ந்துவிடாமல் தமது சொந்த மக்களின் எதிர்காலத்தை மனதிற்கொண்டு கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கருதப்படும் குற்றங்கள், அத்துமீறல்களால் பாதிப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதை பதவியில் இருக்கின்ற பதவிக்கு வரப்போகின்ற அரசாங்கங்கள் உறுதிசெய்யுமானால், நிலையான சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிசெய்ய முடியும். இதன் மூலம் தங்குதடையற்ற அபிவிருத்தியை நாட்டில் முன்னெடுக்கவும் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பவும் முடியும்.
அருண் ஆரோக்கியநாதன்