தேசியத் தலைவர்களின் பாராட்டைப் பெற்ற தீரன் எம்.எஸ். செல்லசாமி | தினகரன் வாரமஞ்சரி

தேசியத் தலைவர்களின் பாராட்டைப் பெற்ற தீரன் எம்.எஸ். செல்லசாமி

டி.எம் என்றால் மிகுதியை முடித்து வைக்க உங்களுக்குத் தெரியும். சௌந்தரராஜன் என்று சொல்லி விடுவீர்கள். பாகவதர் என்றால் அவர் ஏழிசை மன்னன்தான். பீ.எச். என்றால் மிகுதியை சட்டென சொல்லி விடுவார்கள். இலங்கையிலும் எம்.எஸ்.என்றால் அவர் ஒரே ஒருவர்தான். எம்.எஸ். செல்லசாமி, முத்து சங்கரலிங்கம் செல்லசாமி. மேலும் செல்லசாமி என்றதும் உங்களுக்கு, பிடிக்குமோ பிடிக்காதோ, இன்னொருவர் பெயரும் தானாகவே வந்து விழும். அது வேலம்மாள் என்ற பெயர். செல்லசாமியுடன் சேர்ந்து வரும்.

சில வருடங்களாக இந்தப் பெயர் பெற்ற பெயரை ஊடகங்கள் உச்சரிக்க மறந்திருந்தன. செல்லசாமி இலங்கையில்தான் இருக்கிறாரா அல்லது இந்தியாவுக்கு சென்று விட்டாரா, உடல் நிலை எப்படி? என்ற கேள்விகளுக்கு எந்தப் பதிலும் இல்லை. அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. ஒரு முதுபெரும் மலையக அரசியல்வாதியை சந்தித்தேயாக வேண்டுமே என்ற அங்கலாய்ப்பில் விசாரித்தபோது அவர் நாரஹேன்பிட்டி வீட்டில் வசிப்பதாக தகவல் கிடைத்தது. செல்லசாமிக்கு நெருக்கமான ஜெனிபர் பெர்னாண்டோ எங்களை அவரிடம் அழைத்துச் சென்றார்.

முகமெங்கும் பூரிப்புடன் வேலம்மாள் செல்லசாமி எம்மை வரவேற்று முன் அறையில் அமரச் செய்தார். சில நிமிடங்களில் சாரம், ஷேர்ட் அணிந்த வயதான ஒரு மனிதர் வாக்கர் உதவியுடன் உள்ளே வந்தார். மிகவும் குள்ளமான தோற்றம். ஆழ்ந்து பார்த்தபோது அவர்தான் நாம் காணவந்த செல்லசாமி ஐயா என்பதை உணர்ந்து கொண்டோம். இப்போது அவருக்கு வயது 94. சில வருடங்களில் நூற்றாண்டைத் தொடப்போகிறார். காலமும் முதுமையும் அவரை மாற்றியிருந்தது. இந்த வயதிலும் அவரால் நினைவு படுத்தி பேச முடிகிறது. சொல்வதை காதில் வாங்கி பதிலை சொல்கிறார். மூப்புதான் அவருக்கு நோயே தவிர அவர் அதே பழைய செல்லசாமியாகத்தான் இருக்கிறார்.

இளமையில்...

எண்பதுகளில் தேசிய அரசியலில் இ.தொ.கா தலைவர்களை சிங்களக் கட்சிகள் தொண்டா – செல்வா என்று தான் அறியும், தொண்டா – செல்வா என்பது ஒரு சமயத்தில் செல்லா – தொண்டா என அறியப்பட்டபோதுதான் இ.தொ.காவில் சிக்கல்கள் எழுந்திருக்கும் எனத் தோன்றுகிறது. ஏனெனில், மலையக பெருந்தோட்டங்களில் இ.தொ.கா வை ஒரு பெரும் தொழிலாளர் சக்தியாக மாற்றி அமைத்ததில் எம்.எஸ்.சின் பங்களிப்பு மிக முக்கியமானது இ.தொ.காவின் ஏற்றத்துக்கு தவிர்க்க முடியாத உந்து சக்தியாக விளங்கிய அவர், எண்பதுகளில் இ.தொ.காவை கொழும்பிலும் கட்டி எழுப்பினார். கோல்பேஸ் ஹோட்டலில் தொழிற்சங்கம் அமைத்து தொழிற்சங்க ரீதியாக வெற்றிபெற்ற அவர், எலிபண்ட் ஹவுஸ் நிறுவனத்திலும் தொழிலாளர்களுக்காக போராடி தொழிலாளர்களுக்கு நன்மைகள் பெற்றுத்தந்தார். பெருந்தோட்ட சங்கமொன்று கொழும்பில் காலூன்றி ‘எங்கும் செல்லசாமி என்பதே பேச்சு’ எனச் சொல்ல வைத்தவர் செல்லசாமி மட்டுமே! ஒரு மலையக தொழிற்சங்கமொன்று கொழும்பில் தன்னை நிலை நிறுத்தி வளர்த்துக் கொண்டதோடு தேர்தல்களில் வெற்றிபெறும் அளவுக்கு வாக்காளர்களை இ.தொ.காவுக்கு சேகரித்துக் கொடுத்திருந்தார். கொழும்பில் இன்று தமிழ் வேட்பாளர்கள் தேர்தல்களில் நின்று வெற்றி பெறமுடிகிறது என்றால், தலைநகரில் தமிழர்களுக்கு ஒரு அடித்தளமிருக்கிறது என்றால் அதை முதன் முதலாக உருவாக்கி வைத்தவர் எம்.எஸ். செல்லசாமியே! இதை எவருமே மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

செல்லசாமி மேல்மாகாண சபை உறுப்பினராகவும் பின்னர் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தபோது மிகச் சுறுசுறுப்பாக செயல்படும் செயல்வீரர் என்ற பெயரை, தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, சிங்களவர் மத்தியிலும் பெற்றிருந்தார். பாராளுமன்றத்தில் அவர் ஆங்கிலத்திலும் சொற்பொழிவு நிகழ்த்துவார். காமினி திசாநாயக்க, லலித், காமினி பொன்சேகா, அனுர பண்டாரநாயக்க போன்றோர் அதைக் கேட்டு ரசிப்பார்களாம். சிங்களத்தில் ‘சஹாயட செல்லா’ என அன்புடன் அழைப்பார்கள். இதன் அர்த்தம் உதவியென்றால் செல்லாதான் என்பதாகும்.

பொற்கால நாயகர்கள்: ஆறுமுகன், தொண்டமான், பி.பி. தேவராஜ் மற்றும் எம்.எஸ்.செல்லசாமி

இப்படிப்பட்ட அந்த மனிதரைத்தான் நாங்கள் அன்று சந்தித்து பேசினோம்.

செல்லசாமி 1926நவம்பர் 12ஆம் திகதி மடகும்புற தோட்டத்தில் பிறந்தார். மடகும்புற தலவாக்கலைக்கும் பூண்டுல் ஓயாவுக்கும் இடையே அமைந்துள்ள தோட்டம். அமைச்சர் திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் திலக்கராஜ் உட்பட பல பிரபலங்கள் தோன்றிய தோட்டம் அது. அவருடைய அப்பா முத்து சங்கரலிங்கம் ஒரு கங்காணி. குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர். மூன்று ஆண்கள் மூன்று பெண்கள். இவர் ஆறாவது. அந்தக் காலத்து ஜே.எஸ்.சி (எட்டாம் கிளாஸ்) வரைப் படித்தார். பின்னர் பகவந்தலாவையில் வே. இளையதம்பி. கடையில் வேலைக்கு சேர்ந்தார். அது ஒரு மளிகை, புடவை, ஹோட்டல் எனச் சகலதையும் உள்ளடக்கிய அந்த காலத்து சுப்பர் மார்க்கட்! அங்கே இளைஞன் செல்லசாமி தன் வழக்கமான சுறுசுறுப்போடு பலவேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யத் தொடங்கினார்.

அக் காலத்தில்தான் இலங்கை இந்திய காங்கிரஸ் உதயமானது. 1942காலப்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இலங்கையும் இந்தியாவும் இருந்ததாலும் பல லட்சக்கணக்கான இந்தியத் தமிழர்கள் இலங்கையில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்ததாலும் இந்தியக் கலைஞர்கள் இலங்கைக்கு அடிக்கடி வந்து கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

(மிகுதி அடுத்த வாரம்)  

உரையாடியவர் : அருள் சத்தியநாதன்
புகைப்படங்கள் : மணி ஸ்ரீகாந்தன் 

Comments