![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/09/08/24col444-%282%29143022200_7362714_07092019_VKK_CMY.jpg?itok=jHNAnIRG)
தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பஸ் சாரதிகளுடன் ஓர் உரையாடல்
ஊதாராணி, பச்சை ராணி, உமயங்கனா, பபசரா எனப் பல பெயர்கள் கொண்ட தனியார் பஸ்கள் உள்ளன. இ.போ.சபையின் பஸ்களுக்கும் பட்டப் பெயர்கள் உள்ளன. எவ்வாறாயினும் பயணிகளின் உயிர் சார தியின் கைகளில்தான். சாரதி உடலளவிலும் மனதளவிலும் நலமாக இருக்கும் வரை பயணிகளுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களின் வாழ்க்கையில் நாமறியாத பக்கமும் ஒன்றுண்டு அவ்வாழ்க்கையின் ஒரு பகுதியே இக் கட்டுரை சொல்கிறது.
ஒவ்வொரு நாளும் வழக்கம்போல் எனது பணிநேரத்தில் ஜன்னலினூடாக வெளியே பார்க்கும்போது டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையின் அடுத்த பக்கம் உள்ள தாழ்ந்த பகுதியே எனது கண்ணுக்குத் தோற்றமளிக்கும். சில வருடங்களுக்கு முன் பற்றைக்காடாக காணப்பட்ட இடம். தற்போது வெட்டி துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த இடம் அந்த பஸ், கார் போன்ற வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது.
இன்று இந்த இடத்தில் தமது நாட்களை சிலர் கடத்துகின்றார்கள். இந்த இடத்தைப் பற்றியும் அங்கு தமது நேரத்தை கடத்துபவர்கள் பற்றியுமே நாம் பேசப்போகிறோம்.
அண்மைகாலமாக இடம்பெற்று வரும் விபத்துகள் எண்ணிலடங்காதவை. அண்மையில் களுத்துறையிலும் பல உயிர்களை காவு கொண்ட பஸ்விபத்தொன்று நிகழ்ந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு விபத்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில தசாப்த காலங்களுக்கு முன்னர் நமது நாட்டில் எந்த மூலைக்கு செல்ல வேண்டும் என்றாலும் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது. நாட்டில் எந்தவொரு பஸ் நிலையத்திலிருந்தும் தூர இடங்களுக்கு பயணத்தை மேற்கொள்ளலாம். இதனால் பயணங்கள் இலகுவானாலும் ஆபத்து நிறைந்தல்ல எனக் கூற முடியுமா?
“பஸ் ஓட்டும் தொழில் என்பது காற்றின் மீது இரும்பை கொண்டு செல்லும் தொழிலாகும். மனிதர்களின் உயிருக்கான பொறுப்பு எம் கைகளிலேயே உள்ளது. அதனால் நாம் எப்போ தும் அவதானத்துடனயே செயல்படுகின்றோம். நாம் ஒரு நாளைக்கு இரண்டு மணித்தியாலமே நித்திரை கொள்கின்றோம். சில வேளைகளில் அதுவுமில்லை. பொஸிசாரிடமிருந்தும் தப்பவேண்டும். சின்னத்தவறு செய்தாலும் தண்டப் பணம் செலுத்த வேண்டும். சில வேளைகளில் பிரயாணிகளிடமும் ஏச்சும் வாக்குகின்றோம். இந்த தொழில் நினைப்பது போல் இலகுவானதல்ல. வெற்றிலையை சாப்பிட்டோ தேநீரை அருந்தியோ எமது தூக்க கலக்கத்தை போக்கிக் கொள்கின்றோம்” என்கிறார் ஒரு நெடுந்தூர பஸ் சாரதி ஒருவர். அவர் அவ்வாறு கூறினாலும் பொறுப்பில்லாத சாரதிகளையும் நாம் காண்கின்றோம். புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
“நேற்று இரவே வந்தோம். தற்போதுதான் பயணத்தை ஆரம்பிக்கப் போகின்றோம். இப்போது எமக்கு நேரமில்லை” என்று ஒரு சாரதி எம்மைத் தவிர்த்துவிட்டார்.
நாம் எம்முடன பேசக்கூடிய சாரதியொருவரை தேடி இறுதியில் லேக்ஹவுசுக்கு முன்பாக உள்ள அந்த இடத்துக்குச் சென்றோம். முதலில் நாம் சூரியவெவயிலிருந்து வந்த பஸ் சாரதியொருவரையே சந்தித்தோம். பஸ் நிறுத்தப்பட்டிருந்தாலும் அதன் எஞ்ஜின் நிறுத்தப்பட்டிருக்கவில்லை.
“உடனேயே எஞ்சினை நிறுத்த முடியாது. நாம் காலையில் ஐந்து முப்பத்தைந்துக்கு வந்தோம். இங்கு வரும் போது பத்தரை மணியைத் தாண்டிவிட்டது. இங்கு கொஞ்சநேரம் ஓய்வெடுத்த பின்னர் குளித்து சாப்பிட திரும்பவும் செல்ல வேண்டிய நேரம் வந்து விடும். நாம் இந்த பஸ்வில் தொடர்ந்து ஒருவாரம் வேலை செய்துவிட்டு விடுமுறை எடுப்போம். அதன் பின்னர் இன்னொரு சாரதியும் நடத்துனருமே வேலை செய்வார்கள். என அந்த வண்டியின் சாரதி சமி கூறினார். நடத்துனராக சானக்க பணிபுரிகின்றார்.
“நாம் பஸ்வண்டியில் பயணிகளுக்கு சிரமத்தை தாரதவாறே வானொலியை ஒலிக்கச் செய்வோம். எமது வண்டியில் பயணிப்பவர்கள் யாரும் பாட்டு நன்றாக இல்லை என்று குறை கூறுவதில்லை. பஸ் வண்டி சாரதிக்கு நாளொன்றுக்கு 2000 ரூபாவும் நடத்துனருக்கு 1500 ரூபாவும் வழங்குவார்கள்.
பல நூறு கிலோ மீற்றர் துரம் கடந்து வரும் இந்த வேலை சொகுசான வேலையல்ல. சிலர் குழுக்களாக சுருட்டு பிடிப்பது மதுபானம் அருந்துவது என இருக்கின்றார்கள் தான். அவர்கள் பஸ் வண்டியை நிறுத்திவிட்டு மாலையில் அருந்துவார்கள் குளித்து உடைமாற்றியபின் வண்டியை எடுத்துச் செல்வார்கள். ஆனால் அவர்களின் போதை குறைந்திருக்குமா? இவர்களுக்கு தூக்கமும் குறைவு. தூக்கக் கலக்கத்துடன் வாகனம் ஓட்டும் சாரதிகள் எவ்வாறு பாதைவிதிகளை மதித்து நடப்பார்கள் என எதிர்பார்க்க முடியும்? பிரயாணிகளுக்கு திறமை மிக்க சேவையை எவ்வாறு வழங்குவார்கள்?
“சில சாரதிகளும் நடத்துனர்களும் பிரயாணிகளிடம் தரக்குறைவாகவும் நடந்து கொள்கின்றார்கள்.”
தூரப்பயண பஸ் சேவையைப் பற்றி ஆராயச் சென்ற போது சந்தித்த நண்பரொருவர் இவ்வாறு கூறினார்.
நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றில் எட்டிப்பார்த்தேன். பஸ் வண்டியின்சாரதி ஒரு ஆசனத்திலும் நடத்துனர் இன்னொரு புறமும் நித்திரை செய்து கொண்டிருந்தார்கள். இன்னொரு இடத்தில் வண்டியின் டயரை சிலர் மாற்றி கொண்டிருந்தார்கள்.
சுட்டெரிக்கும் வெயிலில் கொஞ்சமும் காற்று வீசாத பஸ் வண்டியினுள் பல மணித்தியாலங்கள் அவர்கள் காலத்தை கடத்துகின்றார்கள்.
இங்கு பஸ் நிறுத்துவதற்கு நாளொன்றுக்கு முன்னூற்று ஐம்பது ரூபாவை கட்டணமாக வழங்குகின்றோம். குளிக்க தண்ணீர் உண்டு. மலசலகூடம் இருந்தாலும் துப்பரவில்லை. நாம் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் ஒரே இடத்தில் தான் தண்ணீர் பெறுகின்றோம். நாமும் எமது குடும்பத்தை காப்பாற்றவே தொழில் செய்கின்றோம். இது சொகுசான வேலையல்ல என்றார் பெயர் ஊர் குறிப்பிட விரும்பாத ஒருவர்.
விடியற்காலையில் கதிர்காமத்திலிருந்து வந்த பஸ்வண்டி சாரதியை சந்தித்துப் பேச்சுக் கொடுத்தோம்.
“நாம் அரைச் சொகுசு பஸ்ஸிலேயே கடமையாற்றுகின்றோம். 53 பிரயாணிகள் செல்ல முடியும். நின்றபடி பிரயாணம் செய்ய அனுமதிப்பதில்லை. கொழும்புக்கு வந்து மீண்டும் கதிர்காமம் சென்றதும் பஸ் வண்டியை கழுவுவோம். கழுவுவதற்கு 600 ரூபாய் கொடுப்போம். பின்னர் அங்குள்ள அறையில் நித்திரை செய்வோம். வீட்டில் தூங்குவது போல் தூங்கமுடியாது. நாம் அதிகமாக சாப்பிட மாட்டோம். சாப்பிட்டால் நித்திரை வரும். எங்களுக்கு இருப்பது இறைவனின் ஆசியே எம்மால் முடிந்தபோதெல்லாம் கதிர்காமத்துக்கு சென்று பூஜை செய்வோம். வண்டி சாவியை கோயிலுக்கு அளித்து நேர்த்திக் கடனை புதுப்பிப்போம். எப்போதும் பிரயாணிகளின் உயிருக்கான பொறுப்பு எம் கைகளிலேயே உள்ளது என எண்ணுவோம்”. மன்னார் கண்டி பஸ் வண்டியின் ஆரம்ப கால ஒட்டுனர் விக்ரமசிங்க.
“நான் தான் அந்தப் பாதையில் முதன் முதல் வண்டியை கொண்டு சென்றேன். அப்போது புலிகள் தாக்குதல் நடத்துவார்கள். குண்டு வெடிக்கும். இடையில் இராணுவத்தினர் வண்டியை நிறுத்துவார்கள்.
இன்று போல் அன்று பாதைகள் ஒழுங்காக இருக்கவில்லை. நான் இப்போது சில வருடங்களாக மாத்தளை கொழும்பு பாதையிலேயே பஸ் செலுத்துகின்றேன். மாத்தளையிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டால் கொழும்புக்கு 10.30 மணியளவிலேயே வருவோம். இடையில் தேநீர் அருந்தவும் நிறுத்த மாட்டோம். ஏனென்றால் வேலைக்கு செல்பவர்களுக்கு தாமதமாகி விடும்.
நான் சாரதி அனுமதிப்பத்திரத்தை 1984ம் ஆண்டே பெற்றேன். இன்றுள்ள இளைஞர்கள் இந்த தொழிலின் கௌரவத்தை காப்பதில்லை.
பஸ் வண்டியின் நடத்துனரான ஹெட்டியாரச்சி 2008ம் ஆண்டு பெப்ரவரி 2ம் திகதி தம்புள்ளையில் புலிகளால் தாக்குதலுக்குள்ளான பஸ்ஸின் நடத்துனராவார்.
‘அன்று ருவன்வெலிசாயவில் நடைபெற்ற செவ்வந்திப்பூ பூஜைக்கு செல்பவர்களே வண்டியில் இருந்தார்கள். பஸ்ஸை தம்புள்ளை பஸ்நிலையத்திலிருந்து வெளியே எடுக்கும் போதே குண்டு வெடித்தது. நான் வண்டியின் பின்புற தகவருகிலேயே இருந்தேன். அதனால் பிழைத்தேன்.
தற்போது நாம் மாத்தளை கொழும்பு பஸ்ஸில் வேலை செய்கின்றோம். பிரயாணிகளை அன்புடன் நடத்துகின்றோம். சண்டை பிடித்துக் கொண்டு இந்த வேலையை செய்ய முடியாது. மகிழ்ச்சியாக இருக்கவே நாம் விரும்புகின்றோம்.” என்று கூறி முடித்தார் ஹெட்டியாராச்சி.
இவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த நடத்துனர்கள் அப்படி எண்ணினாலும் சிலர் அவ்வாறு எண்ணுவதில்லை. சில பஸ் வண்டிகளில் ஓட்டுனருக்கு மேலதிகமாக நடத்துனரும் ஓட்டுனர் வேலையை செய்கின்றார். பின்னால் வரும் பஸ்வண்டிகளை பார்த்து தங்களுடைய வண்டியின் வேகத்தை அதிகரிக்குமாறு கூறுவதால் விபத்துக்கு அவர்கள் காரணமாகியிருக்கின்றார்கள். கடந்த சில நாட்களாக நடைபெற்ற விபத்துகளை எடுத்துக் கொண்டால் ஓட்டுனர்கள் நித்திரை யின்றி வண்டியை செலுத்தியமையினால் ஏற்பட்ட விபத்துகளே அதிகம்.
“இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அல்லது வாரத்துக்கு ஒருமுறை ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மாறுவதாக கூறினாலும் நாம் முழு மாதமும் வேலை செய்த சந்தர்ப்பங்களும் உண்டு. ஒரு நொடி கண்ணை மூடினாலும் விபத்து ஏற்பட்டு விடும்.
பயணிகளின் உயிருக்கு பொறுப்பானவர் சாரதியே. இன்று சில பயணங்கள் முடிவடைவது 600 கிலோ மீற்றர்களுக்கு அப்பாலாகும் பஸ் வண்டியின் சாரதிகளுக்கு, நடத்துனர்களுக்கு மாத்திரமல்ல பஸ் வண்டிகளுக்கும் ஓய்வு தேவை.
சிலர் வண்டியில் தண்ணீர், எண்ணெய் இருக்கின்றதா வண்டி நல்ல நிலைமையில் உள்ளதா எனப் பார்ப்பதில்லை. அவர்களின் அந்த அக்கறையின்மையால் சிரமப்படுவது பிரயாணிகளே.
“நாம் இன்னும் சிறிது நேரத்தில் புறப்பட இருக்கின்றோம். டிரைவர் அண்ணன் தூங்குகிறார். நான் பஸ்ஸை சுத்தம் செய்து விட்டு, குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து செல்கின்றேன். குளித்து ஆடை மாற்றி விட்டு செல்வோம். இங்கு அருகாமையில் உணவருந்த இடமில்லை” எனப் பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் நிரப்பிய போத்தல்களை எடுத்து செல்லும் நடத்துனர் கூறிச் செல்கின்றார்.
தனியார் பஸ்வண்டிகள் நிறுத்துவதற்கு நிரந்தரமான இடமில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சரியாக தூங்காத ஓய்வு எடுக்காத இந்த மனிதர்கள் பணியை சரியாக செய்ய வேண்டுமென்றால் அவர்கள் தொடர்பில் பொறுப்பு கூறும் நிறுவனங்கள் இதைவிட அக்கறை எடுப்பது மிக அவசி யம். அது நாட்டில் விபத்துக்களை குறைக்க உதவும்.
இனோகா சமரவிக்ரம
தமிழில்: வீ. ஆர். வயலட்