டெஸ்ட் வரலாற்றில் குறைந்த வயதில் தலைவராக தெரிவான ரஷீட் கான் | தினகரன் வாரமஞ்சரி

டெஸ்ட் வரலாற்றில் குறைந்த வயதில் தலைவராக தெரிவான ரஷீட் கான்

பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் கடந்த (05) ஆரம்பமான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக விளையாடிய ரஷீட் கான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் அணிக்கு தலைமை தாங்கிய பெருமையை பெற்றுள்ளார்.  

பங்களாதேஷூக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதலில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் ஒன்பது இடங்களுக்குள் இடம்பெறாததன் காரணமாக குறித்த போட்டியானது டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்குள் உள்ளடக்கப்படவில்லை. 

ஆப்கான் கிரிக்கெட் சபையானது ஆரம்பத்தில் மூவகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் மூன்று அணித் தலைவர்களை நியமித்திருந்தது. கடந்த உலகக் கிண்ண தொடரிலிருந்து ஒருநாள் அணித் தலைவராக குல்படீன் நயீப், ரி 20அணித் தலைவராக ரஷீட் கான் மற்றும் டெஸ்ட் அணித் தலைவராக ரஹ்மத் ஷாஹ் ஆகியோர் செயற்பட்டிருந்தனர்.  

நிறைவுக்கு வந்த உலகக் கிண்ண தொடருடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் பல அதிரடியான நிகழ்வுகள் இடம்பெற்றன. அதில் ஒரு அம்சமாக அணித் தலைவர் மாற்றம் நிகழ்ந்தது. கடந்த ஜூலை மாதம் 12ஆம் திகதி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையானது புதிய அணித்தலைவரை அறிவித்தது. அதன்படி மூவகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே அணித்தலைவர் என்ற அடிப்படையில் 20வயது இளம் சுழல் பந்துவீச்சாளர் ரஷீட் கான் நியமனம் பெற்றிருந்தார்.  

இந்த போட்டியின் அணித் தலைவராக நியமனம் பெற்றதன் பின்னர் (05) பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் அணித் தலைவராக களமிறங்கி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இளம் அணித் தலைவராக ரஷீட் கான் பதிவாகியுள்ளார். ரஷீட் கான் சரியாக 20வயது 350நாட்களில் டெஸ்ட் அணித்தலைவராக விளையாடி, சிம்பாப்வே டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் தைபுவின் 15வருட பழைமை வாய்ந்த வரலாற்று சாதனையை முறியடித்துள்ளார்.  

 

Comments