![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/09/14/q1.jpg?itok=zpAANyCC)
கடந்த மாதம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்து விடைபெற்ற லசித் மாலிங்க கடந்த வாரம் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ரி/20போட்டியில் அசத்தலாகப் பந்து வீசி கிரிக்கெட் உலகை ஆச்சரித்துக்குள்ளாக்கியுள்ளார்.
பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் 30வயதைக் கடந்தால் காயங்களாலும், உடல் உபாதைகளாலும் அவதிப்பட்டு விளையாட முடியாமல் ஓய்வு பெறுகின்றனர். இப்படி ஓய்வுபெற்றவர்களில் உலகின் பிரபல வேகப்பந்து வீச்சாளர்களான மெல்கம் மார்சல், மைக்கல் ஹோல்டிங், டெனிஸ் லிலி, ஜவகல் சிறிநாத், கிறிஸ் மொரிஸ், கிறிஸ் கெயின், வக்கார் யூனூஸ், பிளின்டொப் போன்ற பல வேகப்பந்து வீச்சாளர்களைக் குறிப்பிடலாம். ஆனால் கொட்னி வோல்ஷ், கட்லி அம்ரோஸ், கிளேன் மெக்ராத், சமிந்த வாஸ் போன்றோர் அணியின் தேவை கருதி நீண்ட காலம் விளையாடினர். சமகாலத்தில் களத்திலிருக்கும் ஹேசல்வூட், மிச்செல் ஸ்டாக், டிரன்ட் போல்ட், மொஹம்மட் ஆமீர், ஹசன் அலி, மொஹம்மட் சமி, புவனேஷ்வர் குமார், கமரூன் ரோச், காகிசோ ரபாடா, லக்மால் போன்றோர் அடிக்கடி காயத்துக்குள்ளாகி அணியில் இடம்பெறுவதும், விடுவதுமாக விளையாடி வருகின்றனர். ஆனால் கபில் தேவ், இயன் பொத்தம், ரிச்சர்ட் ஹெட்லி, இம்ரான் கான், வஸீம் அக்ரம் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் 35வயதைக் கடந்தும் அணியில் இடம் பெற்று விளையாடினர். அதற்குக் காரணம் அவர்கள் சகலதுறை ஆட்டக்காரர்களாக துடுப்பாட்டத்திலும் அணிக்கு கூடிய பங்களிப்பு செய்தமையாலாகும்.
இன்றைய நாளில் சர்வதேச டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், ரி/20எனத் கிரிக்கெட் தொடர்கள் அதிகமாகவுள்ளதாலும், மேலும் ஒவ்வொரு நாடுகளிலும் ரி/20லீக் தொடர்கள் நடைபெறுவதாலும் வீரர்கள் விரைவாக களைப்படைவதுடன் உடல் உபாதைக்குள்ளாகின்றனர். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களின் நிலைமை இன்னும் மோசமடைகின்றது.
ஆனால் இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க 36வயதைக்கடந்தும் இன்னும் துல்லியமாகப் பந்துவீசி வருகின்றார். சில போட்டிகளில் அவர் சொதப்பலாகப் பந்துவீசினாலும் தன்னை சுதாகரித்துக் கொண்டு விரைவாக அடுத்த போட்டிக்கு தன்னை முழுமையாகத் தயார்படுத்திக்கொள்கிறார். இலங்கை அணியாகட்டும் அல்லது பிரிமியர் லீக் தொடர்களாகட்டும் இவரின் பங்களிப்பே அவ்வணிகளின் அண்மைய வெற்றிகளுக்கு துரும்புச் சீட்டாக அமைந்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் பல்லேகலயில் நடைபெற்ற போட்டியில் தொடர்ச்சியாக 4பந்தில் 4விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ரி/20போட்டிகளில் இச்சாதனையச் செய்த 2வது வீரராக லசித் மாலிங்க இடம்பெற்றுள்ளார்.
இதற்கு முன் ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் ரஷீத் கான் சிம்பாப்வே அணிக்கு எதிராக இச்சாதனையச் செய்திருந்தார். சர்வதேச ஒருநாள், ரி/20ஆகிய இரு வகைப்போட்டியிலும் இச்சாதனையைச் செய்த ஒரே வீரர் லசித் மாலிங்கவே.
2004ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகத்தைப் பெற்ற இவர் இலங்கை மண்ணில் உருவான வேகப்பந்து வீச்சாளர்களில் உலகளவில் புகழ் பெற்ற வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். வித்தியாசமான சிகையலங்காரமும் அவரின் தனித்துவத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
2007ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் ஒரே பந்து விச்சாளர் லசித் மாலிங்க. ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மூன்று முறை ஹெட்ரிக் சாதனைபடைத்த ஒரே வீரரும் இவரே. 2007ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராகவும் 2011ம் ஆண்டு கென்யா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஹெட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அத்தோடு உலகக் கிண்ணத் தொடரில் இரு முறை இச்சாதனையைப் புரிந்த ஒரே வீரரும் இவரே.
மாலிங்கவின் சாதனைகள் ரி/20போட்டிகளிலும் தொடர்ந்த வண்ணமேயுள்ளது. கடந்த நியூசிலாந்துடனான போட்டியின் போது தொடர்ச்சியாக நான்கு பந்தில் நான்கு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
அதில் கொலின் மொன்றோவின் விக்கெட்டை வீழ்த்தி இவ்வகைப்போட்டியில் 100விக்கெட்டை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இப்போட்டியில் லசித் மாலிங்க எடுத்த ஹெட்ரிக் விக்கெட் ரி/20போட்டியில் அவரது 2வது ஹெட்ரிக் ஆகும். மொத்த சர்வதேச போட்டிகளில் 5முறை ஹெட்ரிக் சாதனை புரிந்து பாகிஸ்தான் வீரர் வஸீம் அக்ரமின் சாதனையை மாலிங்க முறியடித்துள்ளார்.
36வயது லசித் மலிங்க கடந்த காலங்களில் தனது யோக்கர் பந்துகளினாலும், ஊடகங்களுக்கு வழங்கும் சூடான கருத்துக்களினாலும் பேசுபொருளாக பத்திரிகைச் செய்திகளிலும், வலைத்தலங்களலும் வலம் வந்தார்.
அவர் வீசும் வேகப்பந்து போலவே, தனது மனதில் தோன்றும், தனக்கு சரி எனப்படும் கருத்துக்களை வெளியிடுவதற்கு தயங்காதவர். இதனால் அவர் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு.
அண்மையில் ஒரு நாள் போட்டியிலிருந்து விடைபெறும் போது அவர் ரி/20உலகக் கிண்ணம் வரை அவ்வகைப் போட்டியில் நிலைப்பதிருப்பீர்களா என்ற ஊடகங்களின் கேள்விக்கு மாலிங்கவின் பதில் அவ்வகையிலான பாணியிலேயே அமைந்திருந்திருந்தது.
“பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் என்னை போன்று ரி/20கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வேறு யாரும் இருக்கமாட்டார்கள். என்னைப் பெரிதுபடுத்துவதற்காக நான் இதைக் கூறவில்லை. நான் நீண்ட நாட்கள் இந்நிலைமையையே அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
ரி/20உலகக் கிண்ணத் தொடருக்கு முன் எமக்கு இன்னும் 19போட்டிகள் உள்ளன. எனவே இப்பொழுதிலிருந்தே இளம், புதுமுக வீரர்கள் சுமார் 20தொடக்கம் 25பேரடங்கிய குழுவொன்றை அமைத்து பயிற்சியளிக்க வேண்டும். உலகக் கிண்ணம் நெருங்கும் தருணத்தில் இதைச் செய்ய முடியாது. தலைவர் நான் என்பதனால், எனக்குத் தேவையான விதத்தில் விளையாடக் கூடியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும் என எனது கொள்கையை நான் தேர்வுக்குழுவிடம் கூறுவேன். அதற்கு அவர்களின் பதில் எவ்வாறு அமையும் என்பதையும் பார்ப்பேன். சாதகமான பதில் கிடைக்குமானால் இருப்பேன். இல்லை என்றால் சென்று விடுவேன்’ என்று சூடாகவே பதிலிளித்திருந்தார்.
தேர்வுக்குழுவும் ரி/20உலகக் கிண்ணம் வரை லசித் மாலிங்கவையே தலைவராகத் தேர்வு செய்தது.
இதனடிப்படையில் சில சிரேஷ்ட வீரர்களுககு ஓய்வு வழங்கி இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணி அண்மையில் முடிவுற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் இரு போட்டியிலும் தோல்வியுற்று தொடரை இழந்திருந்தாலும் இறுதிப் போட்டியில் அபாரமாகப் பந்து வீசி இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார் லசித் மாலிங்க.
எம்.எஸ்.எம். ஹில்மி