![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/10/13/Capture.jpg?itok=s7w0rvsp)
சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். சிரியாவின் வடக்குப் பகுதியில் குவிந்துள்ள குர்திஸ் தனிநாட்டுப் படைகள் மீது துருக்கி மேற்கொள்ளும் இராணுவத் தாக்குதல் காரணமாக அமெரிக்கப் படைகளை திரும்ப பெறுவதாக அவரது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் குர்திஸ் படைகளை பயன்படுத்தி ஈராக் மீதான தாக்குதலையும் சதாம் ஹுசனையும் அழித்த அமெரிக்கா தனது நலனுக்கான இன்னோர் நகர்வை தற்போது மேற்கொண்டுள்ளது.
சிரியா மீதான போரின் போதும் குர்திஸ் படைகளை பயன்படுத்திய அமெரிக்கா அதன் நகர்வுகள் ரஷ்யாவிடம் வீழ்ந்த நிலையில் குர்திஸ் தனிநாட்டுப் படைகளை கைவிடும் நிலைக்கு ஜனாதிபதி ட்ரம்ப் வந்துள்ளார். ஆனால் அமெரிக்க நிர்வாகம் ட்ரம்பின் நகர்வுகளை நிராகரித்ததுடன், அவ்வாறு இலகுவில் குர்திஸ் போராளிப் படைகளை கைவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்க படைகள் வெளியேற்றத்தினால் எழுந்துள்ள அரசியலை தேடுவதாக அமையவுள்ளது.
முதலாவது அமெரிக்காவின் வெளியேற்றத்தினை தந்திரோபாய நிகழ்வென இராணுவ ஆய்வாளர்கள் விதந்துரைக்கின்றனர். துருக்கியுடனான உறவை அமெரிக்கா முறித்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் நேட்டோ அங்கத்துவ நாடு என்ற வகையில் செயல்பட முனைவதாகவும் அத்தகைய விமர்சகர்கள் விபரிக்கின்றனர். ஆனால் சவூதிக்கும் துருக்கிக்கும் முரண்பாடு எழும்போது அமெரிக்கா சவூதி பக்கமே நின்றது என்பதுவும் கவனிக்கத்தக்க விடயமாகும். அண்மையில் சவூதி-, ஈரான் போரை நிகழ்த்த திட்டமிட்ட அமெரிக்காவுக்கு சவூதி மன்னனின் நகர்வு ஏமாற்றமளித்தது. அது மட்டுமன்றி துருக்கியும் ரஷ்யா தயாரிப்பான எஸ்-−400 ஏவுகணைகளை கொள்வனவு செய்திருந்தமை அமெரிக்காவுக்கு நெருக்கடியான விடயமாக அமைந்திருந்தது. நேட்டோ அணிநாடு ஒன்றின் ரஷ்ய ஆதரவு அமெரிக்க நலன்களுக்கு மட்டுமல்ல நேட்டோ நாடுகளுக்கே ஆபத்தானதாக அமையும் என்பதன் விளைவான தந்திரோபாயமாக இதனை கொள்ள முடியும். ஆனால் ட்ரம்ப் இன் முடிவுக்கு அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் அதிக எதிர்ப்பு ஏற்பட அதனை சமாதானப்படுத்திக் கொள்ள துருக்கியை எச்சரித்துள்ளார். தாக்குதல் மேற்கொள்ள துருக்கிக்கு அனுமதி வழங்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியே தெரிவித்துள்ளார்.
இரண்டாவது, துருக்கிய இராணுவத்தின் தாக்குதலின் பிரதான இலக்கு சிரிய ஜனநாயகப் படைகளையும் (Syrian Democratic Forces -SDF) குர்திஸ் மக்கள் பாதுகாப்புப் படைப் பிரிவையும் (Kurdish People's Protection Units -YPG) அழித்தொழிப்பதேயாகும். மிக நீண்ட காலமாக குர்திஸ் விடுதலைப் போராட்டத்தினை நிராகரித்துவரும் துருக்கி குர்திஸ் விடுதலைப் படைகளை பயங்கரவாத அமைப்பாகவே கருதுகின்றது. இது பற்றி துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் குறிப்பிடும் போது துருக்கியின் எல்லைப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள சிரிய ஜனநாயகப் படைகளுக்கு எதிராக துருக்கி தாக்குதல் நடத்தும். இந்தத் தாக்குதல் தரை வழியாகவும் வான்வழியாகவும் இருக்கலாம். எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் என்று கருதும் குழுக்களை அழிப்பதற்காக இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
மூன்றாவது, மேற்குறிப்பிட்ட குர்திஸ் போராளிப் படைகளுக்கும் சிரியா ஜனாநாயகப் படைப் பிரிவுக்கும் பெருமளவு ஆயுத உதவி இராணுவ பயிற்சிகள் மற்றும் பொருளாதார உதவிகளை அமெரிக்கா வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஏறக்குறைய குர்திஸ் படைப் பிரிவுக்கும் ஜனநாயக படைக்குமான அனைத்து உதவிகளையும் வழங்கி அவற்றை வளர்ச்சியடைச் செய்ததில் அதிக கவனம் செலுத்திய நாடு அமெரிக்காவாகவே உள்ளது. ஐ.எஸ். பிரிவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பாரிய பங்களிப்பை வழங்கிய சிரிய ஜனநாயக படையணி தற்போது அமெரிக்காவின் நடவடிக்கையால் கைவிடப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் முதுகில் குத்தும் நடவடிக்கை என ஜனநாயக படைப்பிரிவு வர்ணித்துள்ளது.
எனினும் எமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தை எத்தகைய இழப்பையும் சந்தித்தாவது பாதுகாப்போம் என தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது நலனுக்காகவே இவ்வகை நடவடிக்கையை எடுத்துவருவதாக இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அமெரிக்கா விலகி நிற்பதன் மூலம், துருக்கி எல்லைகளை கடந்து குர்திஸ் மக்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட பின்பு கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் குர்திஸ் பொதுமக்கள் எனத் தெரியவருகிறது.
நான்காவது இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் துருக்கி இராணுவத்தினரை எதிர்கொள்வதற்காக தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் பாரிய மனிதகேடய போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக குர்திஸ் மக்கள் தெரிவித்துள்ளனர். இப்போரை எதிர்கொள்வதற்காக எல்லையிலுள்ள பெரு நகரங்களை நோக்கி வயது வேறுபாடின்றி குர்திஸ் மக்கள் குவிந்துள்ளனர். இதே நேரம் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் முன்னாலும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக தெரியவருகிறது. துருக்கியின் இத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து குர்திஸ் இனத்தவர்கள், அராபியர்கள் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் உலகமெங்கும் செயல்பட்டு வருகின்றனர்.
ஐந்து, கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும். அதாவது இஸ்லாமியத்திற்கு எதிரான போரை தொடக்கிய அமெரிக்கா அதனை தந்திரோபாய ரீதியில் எதிர் கொள்ள முனைகிறது. ஆரம்பத்தில் ஐ.எஸ் அமைப்பினை உருவாக்கி இஸ்லாத்திற்கு எதிராக இஸ்லாத்தையே தூண்டிவிட்டு அழிவுக்கு உள்ளாக்கியது. அதன் தொடர்ச்சியாகவே துருக்கி எதிர் குர்திஸ் இனத்தின் மீதான தாக்குதலாகும். இப்பிராந்தியத்தில் ஒரு போரை திட்டமிட்ட அமெரிக்கா அதனை ஏதாவது ஒரு நாட்டுடன் தொடர்புபடுத்தி நிகழ்த்தவிரும்பியது. ஆரம்பத்தில் ஈரானுடன் சவூதியை மோதவிடத் திட்டமிட்டது. அவ்வாறே சிரிய விடயத்தை கையாள முனைந்தது. அதில் ரஷ்யாவின் செல்வாக்கினால் முடியாது போனது. இருந்த போதும் அமெரிக்கா தனது முயற்சியை கைவிடவில்லை. அதன் ஒரு கட்டமாகவே துருக்கிய வடசிரியத் தாக்குதல் அமைந்துள்ளது.
எனவே, துருக்கியத் தாக்குதல் குர்திஸ் இனவிடுதலைக்கு பெரும் சவாலாக அமையவுள்ளது. அமெரிக்காவின் நலன்களை முதன்மைப்படுத்திய உறவையும் உதவியையும் நிரந்தரமானதாக கருதும் போராளிக் குழுக்களுக்கு சிறந்த பாடமாக அமையவுள்ளது. அதிலும் இஸ்லாமிய அமைப்புக்கள் அதிக எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய அரசியல் அமெரிக்காவின் மேற்காசிய நலன்களை பாதிப்பதாக அமையும் என்ற தகவல் தவறானதாக அமையமுடியாது. இது ரஷ்யாவுக்கு உடனடி இலாபகரமானதாக அமைந்தாலும் நீண்டகாலத்தில் பாதிப்பானதாக அமைய வாய்ப்புள்ளது.
கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்