![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/10/20/19col----1karthapur-gurduwara111000927_7584199_19102019_VKK_CMY.jpg?itok=0Dq8c1w7)
வொஷிங்டனில் எனக்கு கிடைத்த இன்னுமொரு நண்பிதான் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த குல்ஷன். நான் அங்கிருந்த மூன்று வாரங்களும் எமது உறவு நட்புக்கும் மேல் சகோதர வாஞ்சையுடன் அமைந்தது. அறிமுகமான நாள் முதல் எங்களுக்குள் அத்தனை நெருக்கம்!
குல்ஷனின் தயவால் எனக்கு வொஷிங்டனிலுள்ள 'குர்துவாரா'வை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது. 'குர்துவாரா' என்பது சீக்கியர்களின் கோயில். உலகம் முழுவதும் பரந்து வாழும் சீக்கியர்கள் அவர்கள் குடியிருக்கும் இடங்களில் குர்துவாரவையும் அமைத்துக் கொள்வார்கள்.
சீக்கியரான குல்ஷன் பாக்கிஸ்தானின் லாஹூர் மாநிலத்தின் கர்தார்புர் பிரதேசத்திலுள்ள நரோவல் எனும் இடத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். குல்ஷனின் கணவர் நரோவல் பிரதேசத்திலுள்ள குர்துவாராவின் 'கிரந்தி சிங்' ஆக உள்ளார். அப்படியென்றால் அவர்தான் அப்பிரதேசத்தில் வாழும் சீக்கியர்களின் மதத் தலைவர். அதனால் குல்ஷன் குடும்பத்தினர் குர்துவாராவிலேயே தங்கியிருந்து அவர்களுடைய குருவின் வழிகாட்டலின்படி தங்கள் சமூகத்துக்கான சமய பணிகளையும் தொண்டுகளையும் முன்னெடுத்து வருகின்றனர். சமயம், சமூகம், கணவன், பிள்ளைகள், பெரிய குடும்பமென பாரிய பொறுப்புக்கள் இருந்தாலும் குல்ஷன் அலுவலகம் சென்று வேலை பார்க்கும் ஒரு பெண். அவர் சிறு கடன் வழங்கும் நிறுவனமொன்றின் பணிப்பாளராக செயற்பட்டு வருகின்றார்.
கணவர் மதத்தலைவர் என்பதாலோ என்னவோ குல்ஷனுக்கு சமய பக்தி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வொஷிங்டனில் எங்களுக்கு வேலைப்பளு சற்று குறைவு என்பதனால் குல்ஷனுக்கு அங்குள்ள குர்துவாரா சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அவர் அந்த ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்தும் அது நிறைவேறாததனால் தன்னுடைய ஆசையை என்னிடமும் காந்திடமும் கூறினார்.
குர்துவாரா பற்றி நான் அப்போதுதான் அறிந்து கொண்டேன். சகல மதங்களின் கோட்பாடுகள் மற்றும் புதுப்புது விடயங்களை ஆராயும் ஆர்வம் கொண்டவர் காந்த். எனக்கோ எம்மதமும் சம்மதம் என்பதால் நாங்கள் இருவரும் குல்ஷனுடன் புறப்பட்டோம்.
குல்ஷன் தன் கணவன் மற்றும் குழந்தைகளுடன்
முதலில் பாதணிகளை கழற்றி அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு கை, கால்களை அலம்பினோம். பின்னர் குல்ஷன் அந்த கைக்குட்டையால் தன்தலையை மறைத்துக் கட்டியதுடன் எங்களுக்கும் கட்டி விட்டார்.
பிரார்த்தனை செய்யும் இடத்துக்கு மாடிப்படிகளில் ஏறிச் சென்றோம். அங்கே உருவச்சிலைகளோ கடவுளின் படங்களோ இருக்கவில்லை. மாறாக தேர் போன்று அமைக்கப்பட்ட சிறியதொரு கட்டுமானத்துக்குள் திறந்த நிலையில் ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. இந்துக்க ளுக்கு 'பகவத் கீதை' கிறிஸ்தவர்களுக்கு'பைபிள்' இஸ்லாமியர்களுக்கு 'குர்ஆன்' போன்று இது சீக்கியர்களின் புனித புத்தகம். இதனை அவர்கள் 'குரு கிராந்த் சஹீவ்' என்று அழைக்கிறார்கள். குல்ஷன், புனித புத்தகத்தை நோக்கி மண்டியிட்டு அமர்ந்து கைகளை ஏந்தியபடி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். குல்ஷனைப் போன்றே நானும் காந்தும் மண்டியிட்டு அமர்ந்துக் கொண்டோம். நாம் சென்றிருந்த வேளை குர்துவாராவின் மதகுரு இல்லாததனால் அவருடைய மனைவி குறிப்பிட்ட நேரத்தில் அங்கே வந்து அவர்கள் பாஷையில் ஒரு பக்தி பாடலைப் பாடி புத்தகத்தை மூடி விட்டுச் சென்றார்.
தினந்தோறும் காலையிலும் மாலையிலும் குறிப்பிட்ட நேரத்தில் புத்தகத்தை திறந்து, மூட வேண்டுமாம். அதனை மதகுரு அல்லது அவருடைய மனைவி மட்டுமே செய்யலாமாம். சீக்கியர்களுக்காக அப்புத்தகம் படைக்கப்பட்டுள்ளது என்பதே அவர்களுடைய நம்பிக்கை. காலை பிரார்த்தனையுடன் மதகுரு அப்புத்தகத்தின் ஒரு பக்கத்தை எதேச்சையாக திறந்து, அப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை வாசிப்பார். அந்நாளுக்குரிய குருவின் பொன்மொழியாக அவர்கள் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.
குரு கிராந்த் சஹீவ் புனித நூல்
அதுமட்டுமல்ல, இந்த குர்துவாராவிலுள்ள விசேட அம்சம் என்ன தெரியுமா? நாள்தோறும் எந்நேரத்திலும் ஜாதி, மதம், குலம் பாராமல் பசியென வரும் அனைவருக்கும் இங்கு பசி தீரும் வரை உணவு பரிமாறப்படும்.
இது உலகம் முழுவதும் அமைந்துள்ள குர்துவராக்களில் முன்னெடுக்கப்படும் வழக்கமென குல்ஷன் கூறும்போது கூட நான் அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை ஆனால் குல்ஷனை சந்தித்த அனைத்து அமைப்புக்களிலுள்ள அமெரிக்கர்களும் குர்துவாராவில் உணவு வழங்கி ஆற்றப்படும் சேைவயை பற்றி ஆச்சரியத்துடன் கூறியபோதுதான் என்னாலும் அதன் மகத்துவத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது. குர்துவாராவின் சேவைக்கு வெள்ளையர்கள் மத்தியில் அதிக முக்கியத்துவமும் மதிப்பும் காணப்படுவதை என்னால் நேரில் பார்க்ககூடியதாக இருந்தது.
சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஆண்களின் பெயருக்குப் பின்னால் 'சிங்' என்றும் பெண்களின் பெயருக்குப் பின்னால் 'கோர்' என்றும் சேர்த்து உச்சரிக்கப்படும். குல்ஷனும் தன்னை 'குல்ஷன் கோர்' என்றுதான் அடையாளப்படுத்திக் கொள்வார்.
சீக்கியர்கள் தங்கள் சமூகத்தின் பேரில் மிகவும் பெருமை கொண்டவர்கள். சீக்கியர்களின் பண்பாட்டின்படி அவர்கள் தலைமயிரை வெட்டுவதில்லை. ஆண் குழந்தைக்குகூட பிறந்தது முதல் தலைமயிரை வளர்த்து அதனை அள்ளி தலையின் முன்புறமாக குடுமியிட்டு அதன்மீது தலைப்பாகை அணிந்து அழகு பார்ப்பார்கள். பெரிய மீசை, நீண்ட தாடியென வளர்ந்த ஆடவர்களும் கம்பீரமாக இருப்பார்கள். அதுதான் சீக்கியர்களின் அடையாளம்.
அமெரிக்கா செல்லும்போது விமானத்திலும் விமான நிலையங்களிலும் பல இளம் சீக்கியர்களை கண்டேன். அதில் சில பெண்களுடன் பேசக்கிடைத்ததில் அவர்கள் உயர் படிப்புக்காக கனடா செல்வதாகக் கூறினார்கள். சீக்கிய இளைஞர்கள் என்னதான் நவீன பாணியில் ஆடை அணிந்திருந்தாலும் தலைப்பாகையையும் மீசையையும் கைவிடுவதில்லை.
குல்ஷன் மிக பொறுப்பான பெண்.சட்டம் மற்றும் வெளிவிவகார கற்கை நெறிகளை கற்றுத் தேர்ந்திருந்த அவர் உருது, ஹிந்தி, பஞ்சாபி, பெர்சு, சிந்தி, ஆங்கிலமென பல மொழிகளை பேசக்கூடியவர்.
நினைவுகள் தொடரும்...
லக்ஷ்மி பரசுராமன்