பொருளாதாரத்தை உடன் தூக்கி நிறுத்துவோமென்பது சாத்தியமானது அல்ல | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதாரத்தை உடன் தூக்கி நிறுத்துவோமென்பது சாத்தியமானது அல்ல

உலக வங்கியானது கடந்த வாரம் தெற்காசிய வட்டகை நாடுகளின் எதிர்கால பொருளாதாரம் நோக்கிய ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. உலகளாவிய ரீதியில் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மிக மெதுவாக செல்வதுடன் உலக வர்த்தகமும் உலகின் கைத்தொழில் உற்பத்தியும் தேக்க நிலையில் உள்ளதொரு புறச்சூழலில் சில பிராந்தியங்கள் உயர் வளர்ச்சியுடன் தாக்குப் பிடித்திருக்க முடியும் என்ற நம்பிக்கை நிலவிய சூழலில் இப்போது வெளியிடப்பட்ட இந்த அறிக்கை அதனைத் தகர்த்திருக்கிறது. 

கைத்தொழில் மற்றும் வர்த்தகத்தின் தேக்கநிலையுடன் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்து செல்வது உலகின் ஏனைய பிராந்தியங்களைவிட தெற்காசியப் பிராந்தியத்தில் மிகத் தீவிரமாக இடம்பெற்றுவருவதாக சுட்டிக்காட்டும் அந்த அறிக்கையானது, இந்த ஆண்டின் அண்மைய காலாண்டு செயலாற்றங்களை நோக்கும்போது தெற்காசியாவை இனிமேலும் உலகின் மிகத் துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் பிராந்தியமாக கருத முடியாது என்னும் கவலையான தகவலைத் தெரிவிக்கிறது. பெரும்பாலான தெற்காசிய நாடுகளில் 2019ல் எதிர்வு கூறப்பட்டுள்ள சராசரி பொருளாதார வளர்ச்சி வீதங்கள் நீண்டகால சராசரி வளர்ச்சி வீதங்களைவிட குறைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

அட்டவணையில் குறிப்பிடப்பட்ட தகவல்களின் படி இறுதி மூன்று நிரல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள வளர்ச்சி வீத எதிர்வுகூறல்களில் அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்டுள்ளவை எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவின் சதவீதத்தை காட்டுகிறது. உதாரணமாக 2019ஆம் ஆண்டில் இலங்கையின் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி வீதம் 2.7% ஆகும். ஆனால் 2019 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிலவிய சூழலில் அவ்வளர்ச்சி வீதம் (0.8) இனால் குறைவடையும் என மீள எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதாவது 2019ல் இலங்கையின் வளர்ச்சி வீதம். 1.9% ஆக இருக்கும் என்பது இதன் கருத்தாகும். அதேபோல் 2020 ஆண்டிற்கான எதிர்வு கூறப்பட்ட பொருளாதார வளர்ச்சி வீதம் 3.3% ஆகும் இது 0.3% இனால் மேலும் வீழ்ச்சியடையும் என உலக வங்கி எதிர்பார்க்கிறது எவ்வாறாயினும் 2021இன் எதிர்வு கூறப்படும் வளர்ச்சி வீதமாகிய 3.7% இல் மாற்றங்கள் இருக்காது என்றும் உலக வங்கி கருதுகிறது. 

இலங்கை உட்பட தெற்காசிய நாடுகள் பலவற்றிற்கான வளர்ச்சி எதிர்வுகூறல்களை உலக வங்கி கீழ்நோக்கி நகர்த்தியுள்ளது. தெற்காசியாவின் மிகப்பெரிய பொருளாதாரங்களாகிய இந்தியாவின் வளர்ச்சி வீதங்களும் கீழ் நோக்கி நகர்த்தப்பட்டு 2019ல் 4.5% ஆகவும் 2020ல் 6.3%ஆகவும் 2021இல் 6.9% ஆகவும் இருக்குமென தற்போது எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதேபோன்றே பாகிஸ்தானின் வளர்ச்சி சாத்தியங்கள் குறித்த எதிர்வு கூறல்களும் கீழ்நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. 

உலக வங்கியின் எதிர்வுகூறலின் படி தெற்காசிய பிராந்தியத்தில் அதி கூடிய வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படும் நாடு வங்காள தேசமாகும். தற்போது சீராக்கம் செய்யப்பட்ட எதிர்வு கூறல்களின் படி அடுத்துவரும் 3 வருடகாலப்பகுதியில் சராசரியாக 7% இற்கு மேற்பட்ட வளர்ச்சியை அந்நாடு பதிவு செய்யுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. நேபாளம், பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகளும் சார்பளவில் ஐந்து சதவீதத்திற்கு மேற்பட்ட வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆசியாவின் ஆச்சரியமாக பார்க்கப்படும் இலங்கை இந்த எதிர்வுகூறலில் ஏனைய எட்டு தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இறுதி நிலையில் உள்ளது. ஆப்கானிஸ்தான் மட்டுமே இலங்கைக்கு அடுத்தபடியான கீழ் மட்டத்தில் உள்ளது. 

இலங்கையில் 2019ஆம் ஆண்டு வளர்ச்சி சாத்திய எதிர்வு கூறல் கீழ்நோக்கி நகர்த்தப்பட்டமைக்கு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்களே காரணமென உலக வங்கி கூறுகிறது. இந்த வளர்ச்சி வீதம் கடந்த நான்கு வருட காலப்பகுதியில் எய்தப்பட்ட வளர்ச்சி வீதங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். என்றாலும் ஆய்வாளர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி வீதத்தை விட இது அதிகமாக உள்ளது எனவும் உலகவங்கி அறிக்கை குறிப்பிடத்தவறவில்லை. 2019ல் இரண்டாம் காலாண்டில் இலங்கையின் தனியார் நுகர்வுச் செலவீடு சுமார் 8% இதனால் வீழ்ச்சியடைந்தது அதாவது மக்கள் ஈஸ்டர் தாக்குதல்களை தொடர்ந்து ஏற்பட்ட பீதி, பதட்டம் காரணமாக உணவுப் பொருள் உள்ளிட்ட ஏனைய பொரு ட்களை கொள்வனவு செய்வதை குறைத்துக் கொண்டனர். 

அதேபோன்று தனியார் துறையின் முதலீடுகளும் இதே காலப்பகுதியில் சுமார் 25% இதனால் துரிதமாக வீழ்ச்சியடைந்தது. பொருளாதாரத்தின் நிச்சயமற்ற சூழல் அதிகரித்து சென்றமையும் அரச கொள்கைகளின் தெளிவற்ற தன்மைகளும் இதற்குக் காரணமாக அமைந்திருந்தன. 

2019 இன் மூன்றாம் காலாண்டில் தேர்தல் பற்றிய எதிர்வு கூறல்களும் குழப்பங்களும் நிச்சயமற்ற தன்மைகளை கணிசமானளவு அதிகரித்துள்ளன. நவம்பர் 16ல் இடம்பெறவுள்ள தேர்தலில் எய்தப்படும் முடிவுகளை எடுத்து இந்த நிச்சயமற்ற சூழல் பற்றிய பிரச்சினை முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும் கீழ் மட்டத்தில் உழன்று கொண்டிருக்கும். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை உடனடியாக நிமிர்த்தி துரிதமாக மேல்நோக்கி நகர்த்தக்கூடிய வல்லமை எந்தவிதமான அரசியல் மாற்றங்களுக்கும் கிடையாது என்பதே கள யதார்த்தமாகும். 

இலங்கையில் கடந்த நான்காண்டுகளாக பொருளாதார வளர்ச்சி கீழ் மட்டத்தில் இருந்ததுடன் தேக்க நிலையிலும் காணப்பட்டது. துரதிர்ஷ்டம் என்னவென்றால் தெற்காசியாவில் பலவீனமானதாக நாம் கருதிய நாடுகளை விட மிகக்குறைந்த வளர்ச்சிப் பாதையில் இலங்கை பயணித்தமையாகும். ஏற்கெனவே பட்டுப்போயிருந்த இலங்கையின் பொருளாதார, வளர்ச்சியில் 2018 ஒக்டோபரில் ஏற்பட்ட அரசியல் குளறுபடிகளும் 2019 ஏப்ரலில் ஏற்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களும் மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த நிலைக்கு தள்ளிவிட்டிருந்தது. 

கீழ்மட்ட பொருளாதார வளர்ச்சியுடன் தற்போது அரசின் கஜானா காலியாகியுள்ள நிலையில் உடனடியாக அரச செலவீடுகளில் ‘வெட்டு’களை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. இறை வருமானங்களை அதிகரிக்கும் நோக்கில் உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தனி நபர்களின் வீடுகளுக்கும் காரியாலயங்களுக்கும் அவர்களது மலசல கூடங்களுக்கு தொகுதி தொகுதியாக ‘வரிகொடு’, ‘வரி கொடு’ என்று ஆவணங்களை அனுப்பி அலப்பறை செய்து கொண்டுள்ளனர். ஒருவரின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி ஒருவருக்கு ஒரு வரி ஆவணத்தை மட்டும் அனுப்ப முடியாத நிலையில் உள்ள வரி செயற்படுத்தல் கட்டமைப்பு, எதிர்வரும் தேர்தலில் வாக்காளர்களை கணிசமானளவு வெறுப்படையச் செய்யும் என்பதை மறுக்க முடியாது. அதேபோல தனியார் துறையின் கம்பனி வருமான வரிக்கட்டமைப்பும் சிக்கலானதாகவும் குளறுபடி மிக்கதாகவும் உள்ளது.  

வருமான வரிவீதங்களை கணிசமாகக் குறைத்து வரி அடிப்படையை விரிவாக்குவதன் மூலம் அதிக வரி வருவாயை திரட்ட முடியுமேயன்றி உயர் வரிவீதங்களையும் பலவீனமான வரி நடைமுறைகளையும் பயன்படுத்தி வரியிறுப்பாளர்களை கசக்கிப் பிழிவதன் மூலம் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியாது. மாறாக மக்களின் வெறுப்பையே சந்திக்க நேரிடும். 

தேர்தலொன்று வரவுள்ள சூழலில் சர்வதேச நிறுவனம் ஒன்று வளர்ச்சி சாத்தியங்களை கீழ்நோக்கி நகர்த்தியுள்ள புறச்சூழலில் நாட்டின் பொருளாதார மீட்சி குறித்து உடனடியாக சிந்திக்க முடியாத ஒரு நிலையில் உள்ளோம். 

ஆயினும் நாம் ஆட்சிக்கு வந்தால் சந்திரனையும் சூரியனையும் கொண்டு வருவோம் என்றோ – சுபீட்சத்தை ஏற்படுத்துவோம் என்றோ உடனடியாக பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவோம் என்றோ எவரும் கூறினால் அது மிகப்பெரிய நகைச்சுவையாகும். 

நிதி விரயங்களைத் தவிர்ப்பதன் மூலம், முன்னுரிமைத் தெரிவுகளை தொழில் ரீதியாக மேற்கொண்டு நீண்டகால பொருளாதார திட்டமிடல் அடிப்படையில் தடம்புரண்ட ஒரு புகையிரத்தை மீள தண்டவாளத்தில் நிறுத்தவது போல மிக மெதுவாகவும் திடமாகவும் மேற்கொள்ளப்படவேண்டிய  செயற்படாக அது அமைய வேண்டும், அலப்பறையான செயற்பாடுகள் மூலம் பொருளாதாரம் மேலும் மோசமான நிலைக்கு செல்லுமே தவிர மீட்சி ஏற்படாது. இலங்கையர்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் இது. 

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

Comments