அரையிறுதி ஆட்டங்கள் இவ்வார இறுதியில் | தினகரன் வாரமஞ்சரி

அரையிறுதி ஆட்டங்கள் இவ்வார இறுதியில்

கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த 9வது றக்பி உலகக் கிண்ணத் தொடரின் முதற் சுற்று ஆட்டங்கள் கடந்த வாரம் முடிவுற்று தற்போது காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காலிலிறுதி ஆட்டங்களுக்கு போட்டியை நடத்தும் ஜப்பான், அயர்லாந்து, நடப்புச் சம்பியனான நியுசிலாந்து, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், வேல்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய எட்டு அணிகள் தெரிவாகியுள்ளன. 

கால் இறுதி ஆட்டங்கள் நேற்று சனிக்கிழமை ஒயிடா நகரில் இங்கிலாந்து- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெறும் முதல் போட்டியுடன் ஆரம்பமானது. நேற்று நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் நியூசிலாந்து- அயர்லாந்து அணிகள் டோக்கியோ நகர மைதானத்தில் மோதின. இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் காலிறுதி ஆட்டங்களில் வேல்ஸ்-பிரான்ஸ் அணிகள் மோதும் போட்டி ஒயிடாவிலும், ஜப்பான்- தென்னாபிரிக்க அணிகள் மோதும் போட்டி டோக்கியோவில் நடைபெறவுள்ளன. 

சனிக்கிழமை நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் 26ம் திகதி முதலாவது அரையிறுதிப் போட்டியிலும், இன்று நடைபெறும் காலிறுத்திப் போட்டிகளிலும் வெற்றிபெறும் அணிகள் 27ம் திகதி அரையிறுதிப் போட்டிகளில் மோதவுள்ளன. இறுதிப் போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி யோகாஹமா நகரில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

உலக தர வரிசையில் 3ம் இடத்திலுள்ள இங்கிலாந்து அணி இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் முதற் சுற்று ஆட்டங்களில் பிரான்ஸ், ஆஜென்டீனா, டொங்கா, அமெரிக்கா ஆகிய நான்கு அணிகளுடன் மோதி மூன்று வெற்றிகள், ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவுடன், 3போனஸ் புள்ளிகளைப்பெற்று மொத்தம் 17புள்ளிகளைப் பெற்று சி பிரிவில் முதலிடம் பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

இதுவரை மூன்று முறை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள இங்கிலாந்து அணி 2003ம் ஆண்டு கிண்ணம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

றக்பி உலகின் பிரபல அணியான அவுஸ்திரேலிய அணி ஆரம்பப் போட்டியில் வேல்ஸிடம் தோல்வியுற்று சற்று பின்னடைவைச் சந்தித்தாலும் தன்னை சுதாகரித்துக் கொண்டு பிஜி, ஜோர்ஜியா, உருகுவே அணிகளை வெற்றி கொண்டு 4போனஸ் புள்ளிகளுடன் மொத்தம் 16புள்ளிகளைப் பெற்று டி பிரிவில் இரண்டாமிடத்தைப் பெற்று காலிறுதிக்குத் தெரிவானது. அவுஸ்திரேலிய அணி இதுவரை மூன்று முறை இறுதியாட்டத்துக்குத் தெரிவாகி 2முறை கிண்ணம் வென்ற அணியாகும். இம்முறை ஆரம்பம் முதலே கிண்ணம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் முன்னிலை பெற்ற அணிகளில் அவுஸ்திரேலிய அணியும் ஒன்று. 

றக்பி உலகத் தரவரிசையில் 4வது இடத்திலுள்ள வேல்ஸ் அணி இம்முறை தனது பிரிவில் இடம்பெற்ற பிரபல அணியான அவுஸ்திரேலிய அணியை இலகுவாக வெற்றிகொண்டு காலிறுதிக்கு முன்னேறியது. அப்பிரிவில் இடம்பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்ற வேல்ஸ் அணி 19புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது. காலிறுதியில் பிரான்ஸ் அணியை எதிர்த்தாடவுள்ளது. இதுவரை உலகக் கிண்ணத் தொடரில் 3ம் இடம் பெற்றதே அவ்வணியின் உச்சபட்ச சாதனையாகும். 

அனைத்து உலகக் கிண்ணத் தொடர்களுக்கும் தெரிவாகியுள்ள பிரான்ஸ் அணி இம்முறை சி பிரிவில் நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகள், ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவுடன் 15புள்ளிகளைப் பெற்று 2ம் இடம் பெற்று காலிறுதிக்குத் தெரிவானது. காலிறுதியில் வேல்ஸ் அணியைச் சந்திக்கின்றது. 1987, 1999, 2011ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியும் இன்னும் கிண்ணம் வெல்லாத துரதிருஷ்ட அணியாக பிரான்ஸ் அணி திகழ்கின்றது.  

உலகத் தரவரிசையில் முதலாவது இடத்திலிருக்கும் நியூசிலாந்து அணி றக்பி உலகின் ஜாம்பவானாகத் திகழ்கின்றது. முதற் சுற்றில் தான் சந்தித்த 4போட்டிகளில் 3வெற்றிகளையும், 1வெற்றி தோல்வியற்ற முடிவுடன் 16புள்ளிகளைப் பெற்று காலிறுதிக்குத் தெரிவாகியுள்ளது. நடப்புச் சம்பியனான நியூசிலாந்து இதுவரை நான்கு முறை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி அதில் மூன்று முறை கிண்ணம் வென்ற அணியாக வலம்வரும் அவ் அணி 2001, 2015ம் ஆண்டுகளில் கிண்ணம் வென்ற அணியாகும். ஹெட்ரிக் வெற்றிக்காக நம்பிக்கையுடன் இம்முறை களமிறங்கியுள்ளது. 

தரவரிசையில் 2ம் இடத்திலுள்ள அயர்லாந்து அணி முதல் சுற்றில் 3வெற்றி ஒரு தோல்வியைப் பெற்று 16புள்ளிகளுடன் பிரிவு ஏ இல் இரண்டாம் இடம்பெற்று காலிறுதிக்குத் தெரிவாகியுள்ளது. இதுவரை 9உலகக் கிண்ணத் தொடரிலும் விளையாடியுள்ள அயர்லாந்து அணி இன்று வரை அரையிறுதிக்கு முன்னேறவில்லை. 6முறை காலிறுதிக்கு முன்னேறியதே அவ்வணியின் உலகக் கிண்ண உச்சபட்ச சாதனையாகும். 

முதன் முறையாக றக்பி உலகக் கிண்ணக் காலிறுதிக்குத் தெரிவாகியுள்ள ஜப்பான் அணி இம்முறை முதற்சுற்று ஆட்டங்களில் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, சொமாவா, ரஷ்யா ஆகிய அணிகளைச் சந்தித்து அனைத்து அணிகளையும் வெற்றிபெற்று மூன்று போனஸ் புள்ளிகளுடன் 19புள்ளிகளைப் பெற்று அப்பிரிவில் முதலிடத்தைப் பெற்று காலிறுதிக்குத் தெரிவாகியுள்ளது. இவ்வுலகக் கிண்ணத் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய ஜப்பான் அணி மொத்தமாக 115புள்ளிகளைப் பெற்றதோடு எதிரணிக்கு 62புள்ளிகளை விட்டுக்கொடுத்துள்ளது. முதற் சுற்று ஆட்டங்களில் 48புள்ளிகளைப் பெற்று ஜப்பான் அணி வீரர் டமோரா இவ் உலகக் கிண்ணத் தொடரில் கூடிய புள்ளிகளைப் பெற்றோர் வரிசையில் முதலிடத்திலுள்ளார். 

காலிறுதிக்குத் தெரிவாகியிருக்கும் மற்றைய அணி தென்னாபிரிக்காவாகும். இதுவரை இரு முறை கிண்ணம் வென்றுள்ள அவ்வணி உலக தரவரிசையில் 5வது இடத்திலுள்ளது. முதற் சுற்றில் நியூசிலாந்திடம் தோல்வியுற்றாலும் இத்தாலி, நமீபியா, கனடா ஆகிய அணிகளை இலகுவாகத் தோற்கடித்து காலிறுதிக்குத் தெரிவாகியது. மூன்றாவது முறையாகவும் கிண்ணம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கிறங்கியுள்ளது தென்னாபிரிக்க அணி. 

20நாடுகள் கலந்துகொண்ட இவ்வுலகக் கிண்ணத் தொடரில் ரஷ்யா, அமெரிக்கா அணிகள் முதற் சுற்றில் தாம் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எம்.எஸ்.எம். ஹில்மி

Comments