அவர்கள் எங்கே? | தினகரன் வாரமஞ்சரி

அவர்கள் எங்கே?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனயின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச கடந்த வாரம் சங்க்ரிலா ஹோட்டலில் நடத்திய முதலாவது ஊடகவியலாளர் மாநாடு சிக்கல் நிறைந்ததாக இருந்தது. 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அவரது பதவிக்காலத்தில் சந்தித்த உரிமை மீறல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த கோட்டாபாய ராஜபக்ச ஓரளவுக்கு சிரமப்பட்டார். 

“நீங்கள் அனைவரும் நடந்து முடிந்ததைப் பற்றியே இன்னும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எதிர்கால இலங்கையின் ஜனாதிபதியாகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கப்போகிறது. நாம் அது பற்றி பேசுவோமா?” என்று தன்னிடம் கேள்வி கேட்ட ஊடகவியலாளர்களிடம் கோட்டா திருப்பிக் கேட்டபோது அவர்கள் எதிர்த்துப் பேசவில்லை. அப்படியென்றால் நாம் தொடர்ந்து பேசுவோம் என்று கூறியதன் மூலம் ஊடகவியலாளர்களின் கேள்விக்க கணைகளில் இருந்து கோட்டா தப்ப முடியாது. 

அபிவிருத்திக்கான அவசியம், வடக்கு கிழக்கில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு, ஆகியவை பற்றி அடுத்து பேசப்பட்டதால் வடக்கில் காணாமற் போனோர் பற்றிய கேள்விகள் கேட்பது குறைந்தது. 

எனினும் 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்தபோது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றி கேட்கப்பட்டபோது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் காணாமற் போனவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 784 பேர் என்று  பதிலளித்தார். இவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டு சமூகத்தினருடன் சேர்க்கப்பட்டதாக கோட்டா குறிப்பிட்டார். 

அதே நேரம் இராணுவத்திடம் சரணடைந்த தமது உறவினர்கள் மீண்டும் திரும்பவில்லை என்று வடக்கு கிழக்கில் உள்ள பல குடும்பங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனரே அது பற்றி என்ன கூறுகிறீர்கள் என்று ஒரு கேள்வி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்கப்பட்டது. “இது ஒரு குற்றச் சாட்டே தவிர யதார்த்தம் அல்ல” என்று கோட்டா பதிலளித்தார். 

அத்துடன் காணாமற்போனவர்களை பற்றிய பெயர் விபரங்களை வழங்கிய குடும்பங்களின் பட்டியல் எதுவும் இல்லை.   

அத்துடன் அவர்கள் எந்தத் தினங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள் என்ற விபரங்களும் இல்லை. அத்துடன் இராணுவத்தினரிடம் உள்ள காணாமற்போனோரின் அதிகார பூர்வ எண்ணிக்கைகளுடன் மேற்படி குடும்பங்கள் கூறும் எண்ணிக்கை ஒத்துப்போகவில்லை என்றும் கோட்டா மேலும் கூறுகிறார். 

அதே நேரம் தனது சகோதரர் மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் இது பற்றி ஆராய இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இறுதி யுத்தத்தையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய திகதிகள், இடங்கள் ஆகிய விபரங்கள் அதில் இடம்பெறுகின்றன

2013இல் இராணுவத்தினரிடம் யுத்தத்தையடுத்து சரணடைந்த விடுதலைப்புலிகள் தொடர்பாக சரணடைந்த குடும்பங்கள் 14 ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. நீதிமன்றத்துக்கு அவர்கள் சமர்ப்பித்த முறைப்பாட்டு மனுக்களில் முல்லைத்தீவில் உள்ள அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்த பின்னர் இராணுவம் கேட்டுக்கொண்டபடி அவர்களிடம் சரணடைந்ததாக கூறியுள்ளனர்.

முறைப்பாட்டின்படி, சரணடைந்த புலிகள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டு தயாராக இருந்த பஸ்களில் ஏற்றப்பட்டதாகவும், அவர்கள் (விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள்) பஸ்களில் ஏற்றப்பட்டதை அவர்களது குடும்பங்கள் பார்த்துக்கொண்டிருந்ததாகவும், விசாரணைகளின் பின்னர் புலிகள் இயக்க உறுப்பினர்கள் திரும்பிவருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களது குடும்பங்கள் இருந்த போதிலும் அவர்கள் திரும்பிவர வில்லையென்றும்  குடும்பங்கள் கூறியுள்ளன. 

2010மே மாதத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தார். (LLRC) யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற பாரதூரமான உரிமை மீறல்கள் பற்றி அதில் பேசப்பட்டன.

அதன் இறுதி அறிக்கை நவம்பர் 2011இல் வெளியிடப்பட்டது அந்த அறிக்கையில் 2009மே மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களில் 1018பேர் காணாமற் போயுள்ளதாக குறிப்பிட்டப்பட்டிருந்தது.  

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களில் பல காணமற்போனவர்களுடன் சம்பந்தப்பட்டிருந்ததால் அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சர்வதேச ரீதியிலான அழுத்தம் அதிகரிக்கப்பட்டது. காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். 

இந்த ஆணைக்குழு 2013 ஆகஸ்டில் அமைக்கப்பட்டது. இது பரணகம ஆணைக்குழு என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம அதற்குத் தலைமை தாங்கியிருந்தார். 

இந்த ஆணைக்குழுவின் அமர்வுகளில் கிடைத்த காட்சியங்களின்படி, இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைநத பல நபர்கள் பஸ்கள் மற்றும் ஏனைய போக்குவரத்துக்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டவர்களே இப்போது காணாமற்போனவர்களாக கருதப்படுகின்றனர் என்று பரணகம ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

காணாமற் போனோருக்கும் இறுதி யுத்தத்ததையடுத்து சரணடைந்தவர்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் வலியுறுத்திக்கூறுகிறார். இதே நேரம் 4ஆயிரம் இராணுவத்தினர் காணாமற் போயுள்ளதாகவும் அவர் கூறுகிறார். மோதலின் உச்சக்கட்டத்தில் இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாத நிலையில் இவ்வாறானவர்கள் காணாமற்போனோர் என்றே கணிக்கப்படுவார்கள் என்று கேட்டாபய ராஜபக்ச கூறுகிறார்.  

முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் இந்த கூற்றையடுத்து தமிழ்ப் பத்திரிகையொன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்திடம் இருந்து இடைத்த தகவலாக 2019 ஆகஸ்டின் வெளியிட்டிருந்தது. 

இலங்கை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்திடம் இருந்து கிடைத்த தகவல்களின்படி 2009மே 19ஆம்  திகதி 10,790பேர் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இந்த தகவல் மற்றும் கோட்டபாய ராஜபக்ச கடந்த அக்டோபர் 15 ஆம் திகதி வழங்கிய தகவல் ஆகியவற்றையும் கணித்து இறுதி யுத்தத்தையடுத்து 13,784பேர் இராணுவத்தினரிடம் சரணடைந்ததுடன் 2994 பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருப்பதாகவும் அந்த பத்திரிகையில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

அத்துடன் யுத்தத்தின் பின் மஹிந்த அரசாங்கம் மேற்கொண்ட புனரமைப்பு திட்டம் உலகில் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட திட்டம்.

வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற ஒரு திட்டம் செயற்படுத்தப்படவில்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாய ராஜபக்ச மார்தட்டிக்கொள்வது குறிப்பிடத்தக்கதாகும்.

மனோஜ் கொலம்பகே

Comments