![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/10/27/5352colthumbnail093822346_7618317_26102019_VKK_CMY.jpg?itok=DTGLNlbL)
பாகிஸ்தானிலிருந்து வந்த மூன்று பெண்கள் எம்முடன் பயணித்தனர். அதில் மீரப் லோதியை எனக்கு சட்டென பிடித்துப்போய்விட்டது.
இஸ்லாமியரான மீரப் லோதி ஒரு மனோதத்துவ ஆலோசகர். அவர் 'ரொசேன்' எனும் அமைப்பின் தலைமைத்துவ அதிகாரியாக செயற்பட்டு வருகின்றார். அவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. படிப்பு, பதவிக்கு ஏற்றாற்போல அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் தன்னம்பிக்கையும் ஊக்குவிப்பும் கலந்திருக்கும். இவ்வளவு இளம் வயதில் இத்தனை பெரிய ஆளுமையா என நானே பல தடவைகள் மீரப்பை பார்த்து வியந்திருக்கின்றேன்.
கிட்டதட்ட இரண்டு நாள் விமானப் பயணங்களைத் தொடர்ந்தே நாம் அமெரிக்காவை சென்றடைந்திருந்ததால், அமெரிக்காவை பார்த்த சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும் பயண களைப்பும் அனைவரையும் வாட்டியெடுக்கத்தான் செய்தது. நேர வித்தியாசம் வேறு உடம்பை உலுக்கியது. தெற்காசிய நாடுகளுக்கிடையிலான நேர வித்தியாசம் போலன்றி அமெரிக்காவுடனான நேர வித்தியாசம் பாரிய இடைவெளியை கொண்டதாக அமைந்திருந்தது. இங்கே எங்களுக்கு இரவாக இருக்கும்போது அமெரிக்காவில் அது காலையென்பதால் எம்மையறியாமலே நித்திரை சுழற்றி அடித்தது. அதுவரைக்காலமும் சாப்பிட்டு பழக்கப்பட்டிருந்த நேரத்திற்கு அலாரம் அடித்தாற்போல சிறுகுடல் பசியில் வயிற்றை கிள்ளியெடுக்கும். என்னடா செய்வது என்ற தடுமாற்றத்தில் இருந்தபோது, அனைத்துக்கும் காரணம் மனமே சளைக்காதீர்கள். உஷாராக இருங்கள். நான் உற்சாகமாக இருக்கின்றேன் என மனதுக்குள் பல தடவைகள் சொல்லுங்கள், என்று எங்களிடம் உற்சாகமாகப் பேசி, இதெல்லாம் 'ஜூஜூபி மெட்டர்' என்ற உணர்வை எங்களிடம் ஏற்படுத்துவார் மீரப்லோதி.
எம்மில் யாராவது விளையாட்டுக்கு எதிர்மறையாகவோ தன்னம்பிக்கையை இழந்த மாதிரியோ பேசினால்கூட அது அவருக்கு பிடிக்காது. தனியே அழைத்துச் சென்று அப்படி நினைக்ககூடாது, சொல்லக்கூடாதென எங்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுக்கும் மீரப்புக்கு அவருடைய வயதைப் பார்க்கிலும் முதிர்ச்சி அதிகம் என்பதுதான் எனது கணக்கெடுப்பு.
மீரப் மதப்பற்று நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண். மூன்று அண்ணாக்களுக்குப் பின்னர் தவமிருந்து பெற்றெடுத்த பெண் பிள்ளையாம். அதுவும் தன் தந்தை வழி குடும்பத்தில் மீரப் மட்டுமே பெண்ணாம்.
மீரப்புக்கு இது முதலாவது வெளிநாட்டுப் பயணம். அமெரிக்க நிகழ்ச்சித் திட்டத்துக்கு தான் தெரிவானதை அறிந்ததும் அவரது குடும்பத்தார் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததுடன் சந்தோஷமாக வழியனுப்பி வைத்துள்ளார்கள் என்று அவர் சொல்லும்போது பாக்கிஸ்தானில் தொடர்ந்தும் பல 'மலாலா'க்கள் உருவாகி வருவதை எண்ணி நான் எனக்குள் சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.
மீரப் பாகிஸ்தானிய பாணியில் எப்போதும் சல்வார் கமிஸ் அணிந்திருப்பார். அவர் பாடசாலை முடிந்த ஆரம்ப நாட்களில் 'அபாயா' அணிந்திருந்தாராம். தனது தந்தையும் சகோதரர்களும் அதனை கைவிடுமாறு தன்னை தொடர்ந்து வற்புறுத்தவே ஒரு வயதுக்குப் பின்னர், தான் எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றிய தீர்மானத்துக்கு வந்து சல்வார் கமிஸை தேர்ந்தெடுத்தாராம். தனது ஆடைகளை தானே வடிவமைத்துக்கொள்ளும் திறமை கொண்டவர்.
அமெரிக்க பயணத்துக்கு தயாரானபோது தான் எடுத்து வந்த ஆடைகளைப் பார்த்த மூத்த சகோதரர், அமெரிக்காவுக்கு எதுக்கு இத்தனை சல்வார் கமிஸ்? கொஞ்சம் சேர்ட்டுக்களையும் காற்சட்டைகளையும் வாங்கிட்டுப்போனால் பயணத்துக்கு சௌகரியமாக இருக்குமே!,என்றாராம். இதனை மீரப் சொல்லும்போது அவருக்கு கிடைத்துள்ள முற்போக்கான அண்ணாக்கள் மற்றும் சுதந்திரம் பற்றி என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
மீரப் லோதி அமெரிக்க அதிகாரிகளுடன்
அமெரிக்காவிலும் பாக்கிஸ்தான் பெண்ணாக தன்னை பிரதிபலிக்கவே மீரப் விரும்பியிருந்ததால் அண்ணாவின் அன்புக் கட்டளையை அவர் நிராகரிக்க வேண்டியதாயிற்று. பல வர்ண சல்வார் கமிஸ்களை அணிந்து முந்தானையால் அழகாக தலையை மூடியிருப்பார். முதுகலைமாணி பட்டம் பெற்ற நாகரீகமான பெண் என்றாலும் ஆடவர்களுடன் கைகுலுக்குவதை அறவே தவிர்த்துக்கொண்டார்.
கைகுலுக்கி அறிமுகம் ஆகுவதே மேலைத்தேய பாணி என்றாலும் ஆடவர்களுடன் அறிமுகமாகும்போது மீரப் தனது உள்ளங்கையை தன் நெஞ்சில் வைத்து அழுத்தி, தலையை சாய்த்து வணக்கம் சொல்வார். அவருடன் கைகுலுக்கும் நோக்கில் முதலில் கையை நீட்டும் அமெரிக்க ஆடவர்களும் மீரப் செய்வதை ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டு அடுத்த கணமே, அவர்களும் தங்கள் உள்ளங்கையை நெஞ்சில் வைத்து தலை சாய்த்து மீரப்புக்கு திரும்ப வணக்கம் சொல்லும் காட்சி, நாடுகளைக் கடந்த மக்களின் புரிதலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு!
அங்கிருந்த மூன்று வாரங்களிலும் அவ்வப்போது வீட்டு நினைவுகள் வந்து மனம் சோர்வடைந்தால்கூட மீரப்புடன் பேசினால் எனக்குள் ஒரு தன்னம்பிக்கை வந்துவிடும். தனது மூத்த அண்ணி சர்வதேச அமைப்பொன்றின் பாக்கிஸ்தான் பிரதிநிதியாக வேறு நாட்டில் வேலை பார்ப்பதனால் அவர்களின் ஒரே மகளை மீரப் தான் கடந்த ஆறு வருடங்களாக வளர்த்துள்ளார். இதனால் வேலை பார்க்கும் தாய் பிள்ளைகளிடம் நடந்து கொள்ள வேண்டிய விதம் மற்றும் பிள்ளைகளிடம் உருவாக வேண்டிய புரிந்துணர்வு என்பது பற்றியெல்லாம் நேரம் கிடைக்கும்போது மீரப் என்னிடம் கலந்துரையாடுவார்.
அதுமட்டுமல்ல, மீரப் சுவையாக சமைப்பார். நாம் தங்கியிருந்த ஹோட்டல்களில் சமைப்பதற்கான வசதிகள் இருந்தால் போதும் உடனே காய்கறிகள், முட்டை என்பவற்றை வாங்கி வந்து உணவு தயாரிப்பார். காலையிலேயே அன்றைய நாளுக்குத் தேவையான உணவுகளை தயாரித்து எடுத்து வந்துவிடுவார். ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளை உண்பதை அறவே தவிர்த்திருந்தார். அப்படியே இடையில் பசியெடுத்தாலும் ஏற்கனவே கையிருப்பில் வைத்துள்ள பாதாம்களை எடுத்து நொறுக்க ஆரம்பித்து விடுவார்.
தன்னம்பிக்கை இழந்தோர், தற்கொலை முயற்சி செய்வோர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுப்பாலினத்தவர்களென பலதரப்பட்டவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கிய மற்றும் விரிவுரைகள் நடத்திய அனுபவம் மீரப்புக்கு இருந்தது.
என்றாலும் ஒரே இடத்திலிருந்து வேலை பார்ப்பதைவிட வெளியே களத்துக்குச் சென்று பணியாற்றுவதிலேயே அவருக்கு கூடுதல் ஈடுபாடு இருந்ததனால், அவர் தற்போது பாகிஸ்தான் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று பொலிஸாருக்கான மனோதத்துவ ஆலோசனைகளை வழங்குவதை தொழிலாக கொண்டுள்ளார்.
இதன்போது கைதிகள், சந்தேகநபர்கள், குற்றவாளிகளை கையாள வேண்டிய விதம், விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்களை பெறும்போது அதனை வழங்குவோரின் மனநிலை, குழந்தைகள் மற்றும் பெண்களிடம் காணப்படும் பொலிஸார் மீதான அச்சத்தைக் களைய முன்னெடுக்கப்பட வேண்டிய அணுகுமுறைகள் என்பன தொடர்பான அறிவுறுத்தல்கள், பயிற்சிப்பட்டறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை பொலிஸ் அதிகாரிகளுக்கு மீரப் தனது அமைப்பின் சார்பில் வழங்கி வருகின்றார்.
நினைவுகள் தொடரும்..............
லக்ஷ்மி பரசுராமன்