![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/10/26/ara%20amara.png?itok=pHelmeCv)
பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடுவது நகரத்திலா, கிராமத்திலா? என்று திடீரென ஒரு கேள்வியைக் கேட்டார் ஒரு நண்பர். எடுத்த எடுப்பில் கிராமத்தில்தான் என்றேன்.
சரியாகச் சொன்னீர்கள்! நானும் அப்பிடித்தான் நினைக்கிறன். கிராமத்திலதான் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களோடு கொண்டாடலாம். சொந்தக் காரங்க வீடுகளுக்குப் போகலாம்; பேசலாம்; பழகலாம், என்று அடுக்கிக் ெகாண்டே போனார். என்னிடம் கேள்வி கேட்டவர், என்னைப் பதில் சொல்ல விடவில்லை. அவர் மட்டுமில்லை, இப்பிடி பல பேர் இருக்கிறார்கள். அடுத்தவரை பேச விடமாட்டார்கள். அதுதான் "அத்தனைக்கும் ஆசைப்படு, அடுத்தவனைப் பேசவிடு" என்று ஒரு முறை இந்தப் பத்தியில் எழுதினேன்.
சரி, அதை விடுவம்.
இண்டைக்குத் தீபாவளி. இதை Deepavali என்றும் Diwali என்றும் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். சிங்களத்தில் Deepavaali தீப்பவாளி என்றும் எழுதுகிறார்கள். தைப்பொங்கலைச் சிலர் 'பைத்தொங்கல்' என்று கிண்டலாகச் சொல்வார்கள். சிங்களத்தில் பண்டிகைகளை மட்டுமல்ல தமிழ்ப் பெயர்களையும் சரியாக உச்சரிக்கமாட்டார்கள்.
சுப்பிரமணியத்தை சுப்பிரமாணியம் என்றும் கதிர்காமரை கதிரகாமு என்றும் விநாயகமூர்த்தியை, விநயாகமூர்த்தி என்றுமே சொல்வார்கள்; எழுதுவார்கள். ஆனால், சிங்களப் பெயர்களைத் தமிழில் உச்சரிக்கும்போது சரியாகச் சொல்ல வேண்டும் என்பார்கள். ஒரு வகையில் இதனை ஏற்றுக்ெகாள்ளத்தான் வேண்டும். பெயர்களை நமக்கு ஏற்றமாதிரி எழுதவோ, உச்சரிக்கவோ முடியாது. என்றாலும், தமிழுக்ேக உரிய தனித்துவத்தையும் மாற்ற முடியாது!
பண்டாரநாயக்க என்ற பெயரைத் தமிழில் பண்டாரநாயக்கா என்றுதான் எழுதவேண்டும். சேனாநாயக்கா, திசாநாயக்கா என்பதே சரி. ஏனெனில், தமிழில் உயிரெழுத்தில் சொற்கள் நிறைவுறா! இன்னொன்றைப் பாருங்கள், சிங்களத்தில் பம்பலப்பிட்டிய, கொள்ளுப்பிட்டிய, எம்பிலிப்பிட்டிய, திவுலப்பிட்டிய என்று எழுதுவார்கள். சிலர் அதனை அப்பிடியே 'ய' சேர்த்து எழுதுவார்கள். தமிழில் அப்பிடி எழுதுவதில்லை. சிங்களத்தில் 'ய' சேர்க்காமல் எழுதினால், 'பம்பல' மாவாகிவிடும். சிங்களத்தில் 'பிட்டி' என்றால் மா. இன்னொன்றையும் பாருங்கள், சிங்களத்தில் ஒற்றைச் சொல்லைச் சொல்வதற்கு 'ய' வைச் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது பன்மையாகிவிடும். 'சருங்கலய' என்றால், ஒரு பட்டம். சருங்கல, சருங்கல் என்றால் பட்டங்கள் என்றாகிவிடும்.
அதுமாதிரி, அவர்களுக்குச் சொல்ல வேண்டும், இன்றைய பண்டிகையானது 'தீபவாளி' அல்ல, தீபாவளி என்று. தீபவாளி என்பது தீபங்கள் நிறைந்த வாளி என்றாகிவிடும். இது தீபங்களின் ஆவளி. ஆவளி என்பது வரிசை. தீபங்களை வரிசையாக வைத்து வணங்கும் பண்டிகை. ஏன் அப்படி ஒரு பண்டிகை. அதையும் சற்றுச் சுருக்கமாக மீண்டும் இங்கே நினைவுபடுத்திக்ெகாள்வோம்!
தீபாவளிப் பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.
நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்மனிடமிருந்து ஒரு வரத்தைப் பெறுகிறான். அதாவது, எனது தாயாரின் கையால்தான் எனக்கு மரணம் நிகழ வேண்டும். வேறு யாரும் என்னை அழிக்க முடியாது என்பதுதான் அந்த வரம்.
நரகாசுரனின் கடும் தவத்தை மெச்சிய பிரம்மனும், வேறு வழியின்றி அந்த வரம் கொடுக்கிறார். அதன் பிறகு நரகாசுரனின் அட்டகாசம் அதிகரிக்கிறது. கடவுள்களின் அன்னை என்று கூறப்படும் அதிதியின் காது வளையங்களையே திருடியவன் நரகாசுரன். அது மட்டுமா, பல்வேறு கடவுளர்களின் 16ஆயிரம் மகள்களைக் கடத்தி வந்து தன் அந்தப்புரத்தில் சிறை வைத்தவன் என்ற மரியாதையும் அவனுக்கு உண்டு.
நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துப் போனதையடுத்து அனைத்து கடவுளர்களும் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை சந்தித்தனர். நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என முறையிட்டனர்.
கடவுளர்களே வந்த முறையிட்டதால், நேரடியாக கிருஷ்ணர் களம் இறங்கினார். நரகாசுரன் பெற்ற வரம் குறித்து அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி சத்யபாமாவை (இவர் பூதேவயின் மறு உருவம் என்பதால்) அழைத்துக் கொண்டு செல்கிறார்.
நரகனுக்கும், கிருஷ்ணனுக்கும் இடையே கடும் சண்டை தொடங்குகிறது. அப்போது நரகாசுரன் எய்த ஓர் அம்பு தாக்கி கிருஷ்ணன் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனைக் குறி பார்த்து தாக்குகிறார். நரகாசுரன் வீழ்கிறான்.
பின்னர் கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.
நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணெய் தேய்த்து தலை முழுகினார். இதுதான் இன்றளவும் தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடருகிறது.
தீபாவளியின் இன்னொரு கதையும் உண்டு.
இராவணனை வென்று சீதையை மீட்கிறார் ராமன். பின்னர் சீதையுடன் அயோத்திக்குத் திரும்புகிறார். மன்னனாக முடி சூடுகிறார். இதைத்தான் தீபாவளியாக மக்கள் கொண்டாடினராம்.
இராமரும், சீதையும் அயோத்திக்கு வந்தபோது அன்று அமாவாசை இரவு. இதனால், இருளில் தாங்கள் எங்கே போகிறோம் என்பது தெரியாமல் தடுமாறியுள்ளனர். இதையடுத்து அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு அகல் விளக்குகளை ஏற்றி ஒளி கூட்டினர்.
இதனால் ஏற்பட்ட வெளிச்சத்தில், தீப ஒளியில், சரியான பாதையில் நடை போடத் தொடங்கினராம் இராமரும், சீதையும். இதனால்தான் தீபாவளிக்கு தீப ஒளித் திருநாள் என்ற பெயரும் வந்தது.உண்மையில் உள்ளத்திலுள்ள இருளை அகற்றி ஔியேற்றிக்ெகாள்ளும் திருவிழாவாகவே இந்தத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்!