பாக்தாதியின் கொலை: அமெரிக்காவின் வாய்ப்புக்களை அதிகரித்துள்ளதா ? | தினகரன் வாரமஞ்சரி

பாக்தாதியின் கொலை: அமெரிக்காவின் வாய்ப்புக்களை அதிகரித்துள்ளதா ?

அமெரிக்கா மீதான இரட்டைக் கோபுர தாக்குதலை அடுத்து பயங்கரவாதம் என்பது கோட்பாடாகவும் நடைமுறை அரசியல் கருத்தாகவும் வளர்ச்சி அடைந்திருந்தது. அமெரிக்கா சோசலிஸத்தின் வீழ்ச்சிக்கு பின்பு உலகத்தை அமெரிக்காவுக்கு ஏற்ப வளைப்பதில் இஸ்லாத்துக்கு எதிரான பயங்கரவாதம் என்ற கருத்தியலை திட்டமிட்டு வளர்த்தது. அதன் திட்டமிடலுக்கு கிடைத்த முதல் முதலீடு இரட்டைக் கோபுரத் தாக்குதலாகும். அதற்கு முதல் பலியானவர் பின் லேடன். இரண்டாவது பலியானவர் அபுபக்கர் அல் பக்தாதி ஆவார். இக்கட்டுரையும் ஐ.எஸ். அமைப்பின் தலைமை மீதான அமெரிக்கத் தாக்குதலையும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் தேடுவதாக உள்ளது.  

மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் அதிகம் பிரபலமான நபர் அபூபக்கர் அல் - பாக்தாதி (Abu Bakr al- Baghdadi-1 971 -2019) என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 1971.26ஒக்டோபர் ஈராக்கில் உள்ள சம்ர்ரா எனும் நகரில் பிறந்த பாக்தாதியின் இயற்பெயர் இப்ராஹிம் அல்வாத் இப்ராஹிம் அல் - பத்ரி என்பதாகும். சுன்னி முஸ்லிமான பாக்தாதி தீவிர மத அடையாளங்களை பின்பற்றுவதுடன் அடிப்படைவாதியாகவும் விளங்கினார். 1990களில் பாக்தாதில் அமைந்துள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில், இஸ்லாம் மதம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு கலாநிதிப் பட்டம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 2003இல் பாக்தாதி நிறுவிய இஸ்லாமிய அடிப்படைவாதக் குழு அமெரிக்கப் படைகள் மீதும் அதன் கூட்டணிப் படையினர் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தமை அவரது முதல் கட்ட இராணுவ நகர்வாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமன்றி ஈராக் மீதான அமெரிக்க நகர்வுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்ததுடன் அண்மைய நாட்கள் வரை சிரியாவில் நிலை கொண்டிருந்த  அந்நியப் படைகள் மீதான தாக்குதலை திட்டமிட்டு வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 2004இல் இவர் ஈராக் அரசால் கைது செய்யப்பட்டு புக்கா முகாமில் அடைக்கப்பட்டதாகவும் பின்பு அந்த செய்தியில் உண்மையில்லை என்று ஈராக் அரசு அறிவித்ததுவும் பதிவாகவுள்ளது. அதன்பின் 2006இல் ஈராக்கில் மறு நிர்மாணம் செய்யப்பட்ட அல் -கெய்தா அமைப்புடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அப்போது முஜாஹிதீன் ஷுரா பிரிவு ஒன்றினை ஏற்படுத்தியிருந்தமையும் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலை இவ்வமைப்பு வெற்றிகரமாக எதிர் கொள்ளவும் வழிவகுத்தவராக பாக்தாதி விளங்கினார். அமெரிக்க விமானத் தாக்குதலில் முஜாஹிதீன் ஷுரா தலைவர் அபு முசாப் அல் - ஜார்காவி கொல்லப்பட்ட பின் அதன் பெயர் Islamic State of Iraq என்று மாற்றப்பட்டது. 2010இல் அதன் தலைவர் அபு உமர் அல் பாக்தாதி அமெரிக்க விமானப்படையின் தாக்குதலில் கொல்லப்பட்ட பின், ஐ.எஸ் இன் தலைவராக அறியப்பட்டவர் பாக்தாதி. அவரும் தற்போது கொல்லப்பட்டுள்ளார். தற்போது  அபு ஆயுப் அல் - மசிரி ஐ.எஸ் அமைப்பின் தலைவராக அறிவிக்கப்பட்டனர்.  

ஏனைய தலைவர்களை விட பாக்தாதி, மிக இரகசியமாக தனது இருப்பிடத்தை வைத்திருந்தார் என்பதுவும் பொது வெளியில் அவரைக் காண்பது அரிதான சந்தர்ப்பத்திலேயே என்றும் அறியமுடிகிறது. ஆனாலும் குர்திஸ் உளவாளி மூலம் ஐ.எஸ் உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு இந்த தகவலை அறிந்ததாக அமெரிக்க புலனாய்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்  அறிய வருகிறது. முன்னாள் ஐ.எஸ் உறுப்பினர் மூலமே பாக்தாதியின் இருப்பிடம் அடையாளம் காணப்பட்டதாகவும் காட்டிக் கொடுத்ததற்காக 25மில்லியன் அமெரிக்க டொலர் அந்நபருக்கு வழங்கவுள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வுத் துறை அறிவித்துள்ளது. பாக்தாதி கொல்லப்பட்ட முறை ஏறக்குறைய பில் லேடன் கொலை போன்றே அமைந்துள்ளது. இத்தாக்குதல் உலகத்திற்கு இலாபமானது என்று கூறுவதனைவிட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்க்கு தான் இலாபம் என்று குறிப்பி-ட முடியும். காரணம், அவர் சிரியாவிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ளப் போவதாக அறிவித்த போது அதிக விமர்சனத்தை அன்றிலிருந்து இன்றுவரை எதிர் கொண்டு வருகிறார். அது மட்டுமன்றி உக்ரைன் விவகாரத்தில் ஜனநாயகக் கட்சியினரது குற்றச்சாட்டுக்கும் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் தாக்குதலும் பாகத்தாதி கொல்லப்பட்டுள்ளமையும் அவரது எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் என்ற அந்தஸ்துக்கு வந்த நெருக்கடிகளை தகர்த்துள்ளது. இத் தாக்குதல் பற்றி ட்ரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது.  

தொடர்ச்சியாக இரண்டு வாரங்களாக அவர் எங்கள் படைகளின் கண்காணிப்பிலிருந்தார். வெற்றிகரமாக இந்த தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்னர் சில திட்டங்களை மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்ததாக்குதலுக்காக அமெரிக்க விமானங்கள் சில ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த வான்வெளியில் பறக்க வேண்டிய நிலை காணப்பட்டது. அதற்கு அனுமதியும் கிடைத்தது. இது மிக ஆபத்தான தாக்குதலாக அமைந்திருந்தது. இத் தாக்குதலை இரகசிய இருப்பிடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பாக்தாதி சுரங்கப் பாதை முழுவதும் கத்திக் கொண்டே ஓடி, சிணுங்கி, அழுது கொண்டே உயிரிழந்தார். தான் அணிந்திருந்த தற்கொலை அங்கியை வெடிக்கச் செய்து பாக்தாதியும் அவரது மூன்று மகன்களும் உயிரிழந்தனர். அவருடன் மூன்று குழந்தைகளும், இரண்டு மனைவிகளும் உயிரிழந்திருப்பதாகவும். கொடூரமான மற்றும் வன்முறையாளராக இருந்த அல் - பாக்தாதி ஒரு நாய் போல, ஒரு கோழை போல் இறந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார். உலகம் இனி பாதுகாப்பாக இருக்கும் என ட்ரம்ப் சூளுரைத்தார். அத்துடன் இந்த பணிக்கு உதவியதற்காக ட்ரம்ப்  ரஷ்யா, துருக்கி, சிரியா, ஈராக் மற்றும் குர்திஸ்தானியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.  

மீண்டும் ஒரு தடவை ட்ரம்ப்பை ரஷ்யா காப்பாற்றி விட்டதாக விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் ட்ரம்ப் குறிப்பிட்டது போல் ஐ.எஸ் அமைப்பானது தனது நடவடிக்கையை கைவிடும் என்று கருதுவது கடினமானதே. அதன் கட்டமமைப்பும் வடிவமும் தொடரானது. அதன் ஆயுத பலம் வேறு எந்த அமைப்பிடமில்லாத அளவு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, உலகம் அமைதியாக இருப்பதென்பதோ பயங்கரவாதம் முடிவுக்கு வருவதென்பதோ பாக்தாதியின் கொலையுடன் நிறைவு பெறும் விடயம் கிடையாது. இன்னோர் வகையிழல் கூறுவதானால் பயங்கரவாதம் இல்லாது விட்டால் அமெரிக்காவும் அதன் வல்லரசு வலுவும் காணாமல் போய்வி-டும். அதனால் அதனை பாதுகாப்பதே அமெரிக்காவும் உலக ஆதிக்கத்திற்காகப் போட்டியிடும் சக்திகளும் என்பது மறுக்க முடியாது.  

எனவே பாக்தாதியின் கொலையானது ஐ.எஸ் அமைப்பின் தாக்குதலை தீவிரப்படுத்த உதவும் ஒரு நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. தொடர்ச்சியாக அப்பகுதியில் அமெரிக்காவின் பிரசன்னத்தை நிலையானதாகவும் வலுவானதாகவும் ஆக்குவதுடன் அமெரிக்காவின் வெளியேற்றத்திற்கான வாய்ப்புக்களை கைவிடுவதாகவே அமையவுள்ளது. மேற்காசியாவில் ஏனைய வல்லரசுகளுடன் ஒப்பிடும் போது பின்தங்கியிருந்த அமெரிக்கா மீண்டும் முதலிடத்தை தக்க வைக்க தி-ட்டமிட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் அமரிக்காவின் வலு அதிகரிக்கவும் ரஷ்யாவுடனும் சீனாவுடனும் போட்டி போடவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

Comments