எதேச்சதிகாரமா ஜனநாயகமா ? | தினகரன் வாரமஞ்சரி

எதேச்சதிகாரமா ஜனநாயகமா ?

இலங்கை மிக நீண்ட ஜனநாயகப் பாரம்பரியங்களை பின்பற்றிய நாடு. ஆயினும், அவ்வப்போது பதவிக்கு வந்த அரசாங்கங்கள் அபிவிருத்தி செயல்முறையில் அல்லது தேசத்தை கட்டியெழுப்புதல் என்ற செயல்முறையில் விட்ட தவறுகள், காட்டிய பாகுபாடுகள், ஓரங்கட்டல்கள் என்பன ஜனநாயகத்தையும் அபிவிருத்தியையும் நாட்டின் ஐக்கியத்தையும் பெரிதும் கேள்விக்குட்படுத்தியுள்ளன. இதற்கு இன தேசியவாத அரசியலும் முக்கிய காரணமாகும்.  

அமெரிக்காவில் அமைந்துள்ள உலகின் மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான Massachusetts Institute of Technology (MIT)யின் பொருளியல் பேராசிரியரான DaronAcemoglu மற்றும் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கைத்துறைப் பேராசிரியர் James Robinson ஆகியோர் அண்மையில் வெளியிட்ட நூலில் வாதிடுவதுபோல் இன்று பல நாடுகளில் அரசுக்கும் சமூகத்திற்கும் இடையில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இது தனிப்பட்ட அபிவிருத்திக்கும் பொருளாதார செழுமைக்கும் பெரிதும் அவசியமாகும். இவர்கள் சுதந்திரத்தை மிக எளிமையாக வரையறுக்கின்றார்கள். மக்கள் வன்முறையில் இருந்து விடுபட்டு, அச்சுறுத்தல் மற்றும் இழிவான, சட்டத்திற்குப்புறம்பான செயற்பாடுகளில் இருந்து சுதந்திரமாக வாழும் நிலை என குறிப்பிடுகின்றார்கள்.

சுதந்திரமான சூழல் ஒன்று காணப்படும்போது, இவர்களின் கருத்துப்படி, மக்களால் சுயாதீனமான தெரிவுகளை, செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும். அத்துடன், காரணமில்லாத தண்டனைகள், மூர்க்கத்தனமான சமூக தடைகளின்றி வாழமுடியும் என வாதிடுகின்றார்கள். சில நாடுகளில் சாதாரண மக்களின் சுதந்திரம் அரசாங்கத்தினால், அதன் நிறுவனங்களிளால், சமூகத்தில் ஒரு பிரிவினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நிலையினை நாம் அவதானிக்க முடியும்.

அதன்போது சட்டத்தினை ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்குகளுக்கு அப்பால் சென்று முறையற்ற வகையில் பயன்படுத்தும் நிலை ஏற்படும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கையர்கள் முன் காணப்படும் முக்கியமான வினா இதுவாகும். குறிப்பாக, சிறுபான்மை மக்கள் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாகும்.  

ஆட்சிமுறை தொடர்பாக இடம்பெற்ற பல ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டிருப்பது யாதெனில், மிகவும் பலம் பொருந்திய, எல்லையற்ற அதிகாரங்களைக் கொண்ட அரசுகள் ஏதேச்சாதிகார ஆட்சியை மேற்கொள்ளும் அதேவேளை, பலவீனமான அரசொன்று நிலவும் போது சட்டமில்லாத நிலை ஏற்படும் என்பதாகும். இவ்விரண்டு போக்கினையும் நாம் இலங்கையில் பார்க்கலாம்.

ராஜபக்ஷவின் 10 வருட ஆட்சி முதலாவது கூற்றுடன் ஒத்துநிற்பதனையும் இரண்டாவது கூற்று தற்போதைய அரசாங்கத்துடன் ஒத்துநிற்பதனையும் அவதானிக்க முடியும். ஆகவே, இவை இரண்டுக்கும் இடைப்பட்ட ஆட்சியொன்றின் தேவை இன்று காணப்படுகின்றது.  

சுதந்திரத்தை அடைந்துக்கொள்ள மற்றும் உறுதி செய்ய சிவில் சமூக அமைப்புக்கள் தொடர்ந்தும் போராட வேண்டும். அது அரசின் அதிகாரத்துக்கு எதிரான போராட்டமாக அமையும். இத்தகைய போராட்டங்கள் சாதாரண மக்களின் சுதந்திரத்தை உறுதிசெய்ய உதவும். சுதந்திரம் சட்டத்தால் உறுதி செய்யப்பட்டாலும், அரசாங்கத்தின் அதிகாரத்தினைக் கட்டுப்படுத்த அரசியலமைப்பு ரீதியாக தடைகள் மற்றும் சமன்பாடுகள் காணப்பட்டாலும், பலமான சக்திகள் அதிகாரத்திற்கு வரும்போது அவை சாதாரணமாக மீறப்படும் - தனிப்பட்ட நலன்களுக்காக அல்லது ஒரு சமூகத்தின் நலன்களுக்காக மீறப்படலாம். இதனை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில், இலங்கை உட்பட, நாம் வெளிப்படையாகவே அவதானிக்கலாம். பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் (இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான்) அரசியலமைப்பு ரீதியாக அடிப்படை உரிமைகள் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ளன.

ஆயினும், பதவியில் இருக்கும் பலமான சக்திகள் அல்லது அதிகாரம் ஒரு சிலரிடம் அல்லது தனிநபரிடம் அல்லது குடும்பத்திடம் குவியும்போது அவை சாதாரணமாகவே மீறப்படுகின்றன.

மறுபுறமாக, அரசு பலவீனமாக காணப்படும்போது இக்காரியத்தினை சமூகத்தில் பலமான அல்லது ஆதிக்கம் செலுத்தும் இன, மத, சாதி அடிப்படையிலான குழுக்கள் கைப்பற்றி அடிப்படை உரிமைகளை மீறுகின்றன. இதன்போது அடிப்படை உரிமைகள் எழுத்தளவில் மட்டுப்படுத்தப்படுகின்றன. இது தென்னாசியாவில் மாத்திரமன்றி வளர்ந்து வரும் பல நாடுகளில் பொதுவான தோற்றப்பாடாகும்.  

இதற்கு மிக சுவாரஷ்யமான உதாரணமொன்றை Daron Acemoglu மற்றும் ஜேம்ஸ் ரொபின்சன் ஆகியோர் The Narrow Corridor : States, Societies and the Fate of Liberty” (2019) என்ற நூலில் வழங்கியுள்ளார்கள். இந்நூல் கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டது. இவ்விரு நூலாசிரியர்களே Why Nations Fail என்ற உலகின் மிகவும் புகழ்பெற்ற நூலை எழுதியுள்ளார்கள்.

இவர்கள் முன்வைக்கும் உதாரணம் யாதெனில், சுமார் 4200 வருடங்களுக்கு முன்னர் உருக் யுகத்தில் (4000-  3200 B C) சுமேரியன் நகரில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அங்கு கில்கமெஸ் என்பவர் ஆட்சியாளராக இருந்துள்ளார். இவர் சர்வாதிகார ஆட்சியாளர். இவர் சகல வசதிகளையும் கொண்ட பிரம்மாண்டமான நகரமொன்றை மக்களுக்கு வழங்கினார். அதற்கு மாற்றீடாக அவர்களின் சுதந்திரத்தை முழுமையாக அவருக்கு வழங்குமாறு கோரினார் .

அதன் மூலம் மக்களின் சுதந்திரத்தினை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான சம்மதத்தினைப் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர், மக்கள் தமது மகன்களை கில்மெஸ்சின் கொலை விளையாட்டுக்கு தியாகம் செய்யவேண்டி ஏற்பட்டது. அத்துடன், இளம் பெண் பிள்ளைகளை அவரின் காமத்துக்கு இரையாக்கினார்.  மக்கள் கொடூரமான ஆட்சியின் தாக்கத்தினை தாங்க முடியாமல் அவரின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக போராட ஆரம்பித்தார்கள்.

அவரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த அரசியலமைப்பு ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆயினும், அவை (அரசியலமைப்பு ரீதியான வரையறைகள், கட்டுப்பாடுகள்) பின்னர் கில்கமெஸ்சின் விருப்பங்களுக்கு ஏற்பவே செயற்படுத்தப்பட்டன. காரணம், ஆட்சியாளரின் அதிகாரம் சகல துறைகளிலும் மேலோங்கிக் காணப்பட்டது.

இதன் மூலம் புலப்படுவது யாதெனில், எதேச்சாதிகார ஆட்சியின் கீழ் சட்டங்கள் இருந்தாலும் அவை ஆட்சியாளருக்கு சார்பாகவே பிரயோகிக்கப்படும் என்பதாகும். இது இன்று பெரும்பாலான வளர்ந்து வரும் நாடுகளில் நாம் காணும் பிரச்சினையாகும். இலங்கையில் இந்நிலைமையினை 2005 / -2014 வரையிலான காலத்தில் தெளிவாக அவதானித்தோம். மறுபுறமாக, மக்களின் உரிமையை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு ஜனநாயகத் தேர்தல் மூலம் அதிகாரத்திற்கு வரும் தரப்பினர் பின்னர் சில தீய சக்திகளுடன் இணைந்து மக்களின் ஜனநாயக உரிமைகளை சுதந்திரத்தை அடக்க முற்படுவர்.  

இலங்கையை பொறுத்தவரை அப்போது காணப்பட்ட (2005-2014) ஏதேச்சாதிகார ஆட்சியினை இல்லாது செய்ய பல சமூக சக்திகள் முன்நின்று செயற்பட்டன. ஆனால், அவை இன்று மெளனிகளாக காணப்படுகின்றன.  காரணம், தற்போதைய அரசாங்கத்தை எதிர்க்கட்சியை மற்றும் ஏனைய முற்போக்கான அரசியல் சக்திகளை வன்முறை குணம் கொண்ட பெளத்த அடிப்படைவாத சக்திகள் கைப்பற்றியுள்ளன. ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி என்பவற்றுக்கு சார்பாக குரல் கொடுக்கும் தரப்பினரின் செயற்பாடுகள் மீது பெரியளவிலான செல்வாக்கு செலுத்தி வருகின்றன. ஆகவே, இலங்கை போன்ற நாடுகளில் ஜனநாயகத்திற்கான தொடர்ச்சியான போராட்டம் அவசியமாகும்.

ஜனநாயகம் நிறுவனமயப்படுத்தப்படாத நாடுகளில் இத்தகைய போராட்டங்களே மானிட சுதந்திரத்திற்கான பாதைகளை ஓரளவேனும் திறந்துவிடும் - அதன் மூலம் ஏதேச்சாதிகாரத்துக்கான பாதையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.    

கலாநிதி இரா. ரமேஷ்,
சிரேஷ்ட விரிவுரையாளர்,
பேராதனைப் பல்கலைக்கழகம்.

Comments