மாற்றுப் பாலினத்தவர்களுக்கு கௌரவமளிக்கும் அமெரிக்க பண்பாடு | தினகரன் வாரமஞ்சரி

மாற்றுப் பாலினத்தவர்களுக்கு கௌரவமளிக்கும் அமெரிக்க பண்பாடு

மாற்றுப் பாலினத்தவரை அடையாளப்படுத்தும் வானவில் கொடி

ஒரு நாள்  பொஸ்டனில் வீதியை கடப்பதற்காக நாம் காத்திருந்தபோது பயணிகளை ஏற்றிய திறந்த பஸ் வண்டியொன்று அவ்வழியாகச் சென்றது. அந்த பஸ்ஸின்  வெளிப்புறத்தில் வானவில்லின் நிறங்கள் வரிசையாக பூசப்பட்டிருந்தன. அது எனக்கு ஒரு சாதாரண பஸ்ஸாகவே தென்பட்டது. என்றாலும் என்னுடன் இருந்த ஸ்ரேயா, "ஓ! அது பாலின சமூகத்தாருக்குரிய (எல்.ஜி.பி.டி.கியு) பஸ் என்று கூச்சலிட்டார்"  

"எதை வைத்து பஸ் அவர்களுக்குரியது என்று அடையாளம் கண்டீர்கள்?" என்று நான் கேட்டதற்கு, "பஸ்ஸில் பூசப்பட்டிருந்த வர்ணங்கள் பாலின சமூகத்தாரை பிரதிநிதித்துவப்படுத்துபவை. அது அவர்களின் கொடி" என்று எனக்கு விளக்கமளித்தார். 

ஸ்ரோயா சென், எமது குழுவில் இந்தியாவின் பிரதிநிதி.  கல்கத்தாவை பிறப்பிடமாகக் கொண்ட பெங்காளிப் பெண்ணான இவர் மாநிற அழகியாகவே எனக்குப்பட்டார். பெண்களின் அழகுக்கும் ஆளுமைக்கும் சருமத்தின் நிறம் ஒரு பொருட்டே இல்லை என்பதை எனக்கு அமெரிக்காவிலிருந்த நாட்களில் புரிய வைத்தவர் ஸ்ரேயா.  

இந்தியர்களை பிரதிபலிக்கும் குர்த்தா, பெரிய பொட்டு என  அலங்கரித்து வலம் வரும் ஸ்ரேயாவின் வெளித்தோற்றம் மட்டுமல்ல, மனதும் அவ்வளவு அழகானது. எமது மூன்று வார பயணத்தில் நான் ஸ்ரேயாவிடம் கண்ட குணாதிசயங்களை பொறுமை, புரிதல், அக்கறை, விட்டுக்கொடுப்பு, பாதுகாப்பு என அடுக்கிக் கொண்டே போகலாம். 

தலைமைத்துவப் பண்பு நிறைந்த ஸ்ரேயா எங்கள் குழுவை தானாகவே முன்வந்து அழகாக வழிநடத்தினார். மின்னுயர்த்தியில் கீழ் மாடியிலிருந்து மேல் மாடிக்குச் செல்லவேண்டியிருந்ததால் அனைவரும் வந்து சேரும் வரை காத்திருந்து, எங்களை எண்ணிப்பார்த்து அனைவரும் இருப்பதை உறுதிசெய்து கொள்வார். ஏன்! வீதியை கடக்கும்போதுகூட அனைவரையும் கடக்கச் செய்ததன் பின்னரே தான் கடப்பார். முன்பின் அறிமுகம் இல்லாத வெவ்வேறு நாட்டவர்களான எங்களை இத்தனை அக்கறையோடும் அன்போடும் பார்த்துக்கொள்ளும் அவருடைய இயல்பில் போலியில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும். 

ஒருவரை எமக்குப் பிடித்திருந்தால் அவரது நடை, உடை, பாவனை , ஒப்பனையை நாமும் பின்பற்றலாம். ஆனால் அவர்களின் மனதை பின்பற்றுவதென்பது இயலாத காரியம். அப்படியே செய்ய நினைத்தாலும் அது போலியாகத்தான் இருக்கும். மனிதர்களுக்கு கிடைத்துள்ள மனம் இயற்கையின் வரம்! என்பதை இப்பல்நாட்டு நண்பர்கள்  உணரவைத்தார்கள். 

பொஸ்டனில் வீதியோரமாக நடந்து செல்லும்போது ஒரு பெரிய தேவாலயத்தைக் கண்டேன். அங்கும் முன்வாயிலில் பாலின சமூகத்தினரை பிரதிபலிக்கும் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததுடன் அனைவரையும் வரவேற்கின்றோம் என எழுதப்பட்ட வரவேற்பு பலகையொன்றும் மாட்டி வைக்கப்பட்டிருந்தது. நான் அமெரிக்காவில் பார்த்த ஆறு மாநிலங்களுள் பொஸ்டனில் பாலின சமூகத்தினரின் கொடி பல இடங்களில் பறக்கவிடப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. அம்மாநிலம் அனைத்து வகையான மக்களுக்கும்   கெளரவம் அளிப்பதை அதிலிருந்து புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. 

ஆங்கில இலக்கியம் மற்றும் பாலினம் தொடர்பில் கற்றுத் தேர்ந்திருந்த ஷ்ரேயா எந்தவொரு நபரையும் அல்லது விடயத்தையும் அணுகும்போது அதிலொரு முதிர்ச்சியை நான் கண்டேன். தற்போது அவர் புதுடில்லியிலுள்ள பெண்களை சட்டரீதியாக வலுவூட்டும் தன்னார்வு தொண்டு நிறுவனமொன்றின் பணிப்பாளராக கடமையாற்றி வருகின்றார். அவரிடமுள்ள ஆளுமை நிச்சயம் இந்தியப்பெண்களை வலுவூட்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

அமெரிக்காவில் என்னுடன் இருந்த இன்னுமொரு பாகிஸ்தான் நண்பிதான் மெஹ்விஷ் மரியா. கராச்சிப் பெண்கள் எவ்வளவு உஷார் என்பதற்கு மெஹ்விஷ் சிறந்த எடுத்துக்காட்டு. பாகிஸ்தானின்  யுனிசெப்   அமைப்பில் தலைமைத்துவப் பொறுப்பிலிருக்கும் அவர் ஒரு மொடர்ன் பெண்மனி. 

மெஹ்விஷ் ஒரு சாப்பாட்டு பிரியை! எங்கு சென்றாலும் அந்த ஊருக்கேயுள்ள தனித்துவமான உணவுகளை வாங்கி ருசிப்பதே அவரது முதல் வேலையாக இருந்தது. அவருக்கு சமைப்பதும் மிக பிடித்தமானதொரு வேலை. தான் இத்தொழிலுக்கு வந்திராவிட்டால் நிச்சயம் ஒரு ஹோட்டல் நடத்தியிருப்பாராம். அது மட்டுமல்ல, அவரை ஒரு 'கூகுள் மெப்' என்றுகூட சொல்லலாம். மெஹ்விஷ்ஷூக்கும் இது அமெரிக்காவுக்கான முதல் விஜயம் என்றாலும் அவர் கொஞ்சம்கூட சளைக்காமல் தனது கைப்பேசியிலுள்ள கூகுளை தட்டிவிட்டு எல்லா இடங்களுக்கும் தனியாக ரயில், பஸ் ஏறி வலம் வருவார்.    எமக்கு கிடைத்த ஒவ்வொரு இடைவேளையிலும் அமெரிக்காவிலுள்ள பல இடங்களை, சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு எமக்கும் மெஹ்விஷ் மூலம் கிட்டியது.    பாகிஸ்தானில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் அந்நாட்டின் ஆட்பதிவுத்திணைக்களத்தால் பதியப்படுவது இல்லையாம். குறிப்பிட்ட சதவீத தாய்மாரே பிரசவத்துக்காக வைத்தியசாலைக்கு செல்கின்றபோதும் வைத்தியசாலையில்கூட அனைத்து குழந்தைகளும் பதிவது கிடையாதாம்! என மெஹ்விஷ் தெரிவித்தபோது  எம்நாட்டைப் பற்றி நினைத்து பெருமை கொண்டது உண்மைதான்.

மெஹ்விஷ் மரியா

சிறுமிகளின் திருமணம் மற்றும் குழந்தைப்பேறு, சவர அலகுகளின் தவறான பயன்பாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் எச்.ஐ.வி தொற்று என மெஹ்விஷ் தான்  அலுவலக ரீதியாக சமூகத்துக்கு ஆற்றும் பணிகள் தொடர்பில் என்னுடன் கலந்துரையாடினார்.   இந்த விடயத்தை பொறுத்தவரை இலங்கையர்களாகிய நாம் நிறையவே கொடுத்து வைத்தவர்கள். ஏனைய நாட்டின் துன்பக் கதைகளை கேட்கும்போதுதான் எமக்கு நம் நாட்டின் பெருமையை முழுமையாக உணரமுடிகிறது. 

நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது காதல் கணவர் மற்றும் 'விஸ்கி' எனும் அவருடைய பெர்ஷியன் இன பூனைக்குட்டி பற்றி மெஹ்விஷ் சொல்ல தவறவேயில்லை. 

எங்கள் குழுவில் நான்கு ஆண்கள் இருந்ததாக நான் ஏற்கனவே கூறியிருந்தேன். அவர்களுள் ஒருவர் இலங்கையிலிருந்து என்னுடன் வந்திருந்த காந்த். பலருக்கும் படிப்பது கஷ்டமான வேலை. ஆனால் காந்துக்கு படிப்பதுதான் வேலையே. படிக்காமல் இருந்தால் தலையே வெடிச்சிடும் போல இருக்குமாம்! அவரை அறிமுகம் செய்யும்போது அவருடைய பட்டங்களைக்கூறி முடிக்கவே  அதிக நேரம் தேவைப்படும்! இலங்கையின் அரசாங்க நிருவாகச் சேவையைச் சேர்ந்த அவர் தற்போது அலரி மாளிகையின்கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு செயற்திட்டத்துக்கான ஆய்வாளராக  பதவி வகிக்கின்றார்.  

அமெரிக்காவில் நாம் புதிதாக பார்த்த, கேட்ட எந்தவொரு விடயத்தையும் அவர் ஆராயாமல் விட்டுவைக்கவில்லை. அதுமட்டுமா! எங்காவது புத்தகங்கள் விற்பதை பார்த்தால்போதும் அங்கிருந்து காந்தை கழற்றி வருவது சற்று சிரமம்தான். அவர் அங்கிருந்து நாடு திரும்பும்போது நிச்சயம் அவரது பயணப் பொதியில் அரைவாசி புத்தகங்களாகத்தான் இருந்திருக்கும். காந்துடனான பயணமும் நட்பும் நிச்சயம் எனக்கு அறிவுபூர்வமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தது. பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்பதுபோல அவருடனான நட்பின் பின்னர் எனக்கும் படிப்பின் மீது அதீத ஆர்வம் ஏற்படத் தொடங்கியுள்ளது! இந்த மூன்று வாரங்களும் காந்த் எனக்கு மட்டுமன்றி பரிஸ்தா, குல்ஷன், ஷ்ரேயா, மீரப், மெஹ்விஷ் உள்ளிட்ட அனைவருக்கும் பிடித்தமான சிறந்ததொரு கதாபாத்திரமாக விளங்கினார்! அவர் இதற்கு முன்னர் எத்தனையோ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருந்தபோதும் அமெரிக்கப் பயணமும் அதன் மூலம் கிடைத்த நட்பு வட்டாரமும் வாழ்நாளில் மறக்கமுடியாத அனுபவமென்று என்னிடம் அடிக்கடி கூறி மகிழ்வார். 

இப்பயணத்துக்காக  நேபாளத்தில்  இருந்து  இந்திர பிரசாத் ஆரியால் எனும் சட்டத்தரணி வந்திருந்தார். அவர் அந்நாட்டின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர். எப்போதும் அவர் தன்னை 'பிரசிடன்ட்' (தலைவர்) என அறிமுகம் செய்வதால் அவரை மிஸ்டர் பிரசிடென்ட் என எங்கள் குழுவினர் அழைக்கத் தொடங்கினர். நேபாளத்தில் பாரிய தகைமைகளையும் பொறுப்புக்களையும் கொண்டிருந்தபோதும் இந்திரா அனைவருடனும் சர்வசாதாரணமாக பழகினார். எங்கள் குழுவை எப்போதும் நகைச்சுவையுணர்வுடன் வைத்திருக்கும் பொறுப்பு அவரிடமே இருந்தது.  

ஆப்கானிஸ்தான் நாட்டின் அகதிகள் மற்றும் நாடுகடத்தப்பட்டவர்களுக்கான அமைச்சின் சட்ட பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளரான ரசூலியும் பங்களாதேஷின் சிறுபான்மையினருக்கான கவுன்ஸிலின் ஸ்தாபகரும் நிறைவேற்று அதிகாரியுமான காலிட் ஹூசைனும் எம்முடன் அமெரிக்க வந்திருந்தார்கள். இவர்கள் இருவரும் சட்டத்தரணிகளாக இருந்தமையால் அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள சட்டங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டினர். 

காலிட் உருது மொழி பேசும் பிஹாரி இனத்தைச் சேர்ந்தவர். நாடற்றிருந்த பிஹாரி இனத்தவர்களுக்கு நாடுகோரி பங்களாதேஷ் நீதிமன்றத்தில் றிட் மனு தாக்கல் செய்தவர்களுள் காலிட்டும் ஒருவர். பிஹாரி இனத்தவர்கள் இன்று பங்களாதேஷின் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றால் அதன் பெருமை காலிட் மற்றும் அவரது நண்பர்களையே சாரும். 

நினைவுகள் தொடரும்..

லக்‌ஷ்மி பரசுராமன்

Comments