பொருளாதாரமும் வேலைவாய்ப்பின்மையும் | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதாரமும் வேலைவாய்ப்பின்மையும்

வேலையின்மையானது உலகளாவிய ரீதியில் முக்கியமானதொரு பொருளாதாரப் பிரச்சினையாக கருதப்படுகிறது. மேற்குலக நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தேர்தல்களின்போது மிகமுக்கியமான ஒரு மையப்பிரச்சினையாக வேலை வாய்ப்புகளை வழங்குவது தேர்தல் பிரசாரங்களில் பேசப்படும். எந்தக் கட்சி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களைக் கொண்டிருக்கிறதோ அக்கட்சியின் தேர்தல் வெற்றி பிரகாசமானதாக இருக்கும்.

அமெரிக்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவுக்கு எதிராக எடுத்துவரும் வர்த்தகத் தடைகளுக்கு பின்னணியில் உள்ள ஒரே காரணம் சீனாவின் மலிவான ஊழியம் அமெரிக்க வேலைவாய்ப்புகளை கபளீகரம் செய்துவிடுகிறது என்பதுதான். இதனால் அமெரிக்க வேலைவாய்ப்புகளை அமெரிக்காவுக்கு கொண்டு வர வேண்டுமானால் வர்த்தகத் தடைகளை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

இலங்கையிலும் கூட வேலையின்மையை குறைப்பதும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும் பொருளாதாரக் குறிக்கோள்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இலங்கையின் வேலையின்மை வீதம் மிகக்குறைந்த மட்டத்தில் பதிவு செய்யப்பட்ட போதிலும் பிராந்திய ரீதியான வேறுபாடுகள், பால்நிலை வேறுபாடுகள், வயது வேறுபாடுகள், கல்வித்தகுதி வேறுபாடுகள் என்பவற்றிற்கேற்ப வெவ்வேறு பிரிவினர்களிடையே வேலையின்மை வேறுபடுகிறது. உதாரணமாக பெண்கள் மத்தியில் வேலையின்மை உயர்வாக உள்ளது. உயர்கல்வி கற்றோர் மத்தியில் வேலையின்மை உயர்வாக உள்ளமையையும் குறிப்பிடலாம்.

வேலையின்மை என்பதற்கு வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வரைவிலக்கணங்கள் கொடுக்கப்படுகின்றன. பொதுவாக கடந்த மூன்று மாத காலப்பகுதியில் தொழில் செய்யக் கூடிய வயதுப்பிரிவில் உள்ள ஒருவர் முனைப்புடன் திகழும் கூலி வீதங்களில் தனது உளமார்ந்த சேவையினை வழங்கத் தயாராக உள்ளபோதும் அதற்கான வாய்ப்பு கிடைக்காத நிலையை வேலையின்மை என அடையாளப்படுத்தலாம். இதில் சுயமாக தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தொழில் முனைவோர் என்போரும் உள்ளடக்கப்பட்டிருப்பர்.

ஒரு நாட்டின் சனத்தொகையில் தொழில்புரியும் வயது சனத்தொகை என்பதும் நாட்டுக்கு நாடு வேறுபடும். இலங்கையில் 15 வயதுக்கு மேற்பட்டோர் தொழில் புரியும் வயது சனத்தொகையாகக் கருதப்படுகிறது. ஆரம்ப காலத்தில் 15 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்ட சனத்தொகை தொழில் புரியும் சனத்தொகையாக கருதப்பட்ட போதிலும் 54 வயது மேலெல்லை தற்போது கவனத்திற்கொள்ளப்படுவதில்லை. சட்டரீதியாக 18 வயதுக்கு உட்பட்டோர் சிறுவர்களாகக் கருதப்படுவதுடன் கட்டாயம் பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் எனக் கருதப்பட்ட போதிலும் சில குறிப்பிட்ட தொழில்களில் 15 வயதுக்கு மேற்பட்டோரை ஈடுபடுத்தலாம் என்பதால் 15 வயது கீழ் எல்லை தீர்மானிக்கப்படுகிறது. ஆயினும் சர்வதேச நியமங்களின் படி 18 வயதுக்குட்பட்டோரை வேலைக்கு அமர்த்துவது  சிறுவர் வேலைவாய்ப்பு என்ற பிரிவுக்குள் வருகிறது.

இவ்வாறு 15 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையில் சுயமாக தொழில் புரிய விரும்பாதோர் (இல்லத்தரசிகள், அதியுயர் செல்வந்தர்கள் போன்றோர்) சட்ட ரீதியாக தொழில்புரிய அனுமதிக்கப்படாதவர்கள் (முழுநேர மாணவர்கள்) சிறைக் கைதிகள் போன்றோர்) என்னும் பிரிவினரை தவிர்த்து எஞ்சியுள்ளோர் வேலைப்படை, தொழிற்படை அல்லது ஊழியப்படை என அழைக்கப்படுவர். அதாவது.

எனவே தொழிலின்மை (வேலையின்மை) வீதம் பின்வருமாறு கணிப்பிடப்படும்.

இவ்வேலையின்மை வீதத்தை அடிப்படையாக வைத்தே நாடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை முன்வைக்கும்.

இலங்கையில் தற்போதுள்ள நிலையில் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மை உயர்வாக உள்ளது. அதிலும் கல்வி கற்ற இளைஞர்கள் மத்தியில் அதிலும் பெண்கள் மத்தியில் வேலையின்மை உயர்வாக உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. பிராந்திய ரீதியில் பின்தங்கிய பிரதேசங்களில் வேலையின்மை உயர்வாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வேலையின்மை தவிர கீழுழைப்பு (under employment) முக்கிய ஒரு பிரச்சினையாக உள்ளது. மூன்று வகையான கீழுழைப்பு வகைகள் காணப்படுகின்றன.

01. சர்வதேச ரீதியில் நாளொன்றுக்கு 8 மணித்தியாலம் வேலை நேரம் என்பது நியமமாகும். ஒருவர் அதைவிட குறைவான நேரம் வேலை செய்வது கீழுழைப்பின் ஒரு வகையாகும். அதாவது ஒருவர் வேலைவாய்ப்பில் இருப்பார். ஆனால் நாளொன்றில் அனுமதிக்கப்பட்ட நியம நேரத்தை விட குறைவான மணித்தியாலங்கள் வேலை செய்வது கீழுழைப்பின் ஒரு வகையாகும்.

02. ஒருவர் தனது கல்வித்தகுதி, தொழிற்தன்மை, தொழிற் பயிற்சி அனுபவம் என்பவற்றுடன் ஒப்பிடும்போது அதற்கு தகுதியான ஒரு தொழிலில் ஈடுபடாமல் அதைவிட குறைந்த தகைமைகளை தேவைப்படுத்தும் தொழில்களில் ஈடுபடுகின்றமை, கீழுழைப்பின் இன்னொரு வகையாகும். முதுகலைமாணி பட்டம் பெற்ற ஒருவர் பேரூந்து நடந்துனராக, ஓட்டுநராக வேலை செய்வது, பொருளியல் பட்டதாரி ஒருவர் ஆரம்ப பாடசாலை ஆசிரியராக வேலை செய்வது, விஞ்ஞானம் பட்டதாரி ஒருவர் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை செய்வது போன்றவற்றை உதாரணமாக குறிப்பிடலாம்.மூன்றாவது கீழுழைப்பு வகை யாதெனில் ஒருவர் பூரணமாக 8 மணிநேரம் வேலை செய்வது. அவரது கல்வித்தகைமை மற்றும் தொழில்சார் தகைமைகள் மற்றும் அனுபவம் என்பவற்றுக்கு மிகவும் பொருத்துமான தொழிலில் ஈடுபட்டிருப்பார். ஆயினும் அவரது சகபாடிகள் அல்லது சமமான தொழிலில் ஈடுபட்டுள்ளோருடன் ஒப்பிடுகையில் குறைந்த சம்பளம் பெறும் நிலைமை ஆகும். இம் மூன்றாம் வகை கீழுழைப்பு நிலைமை இலங்கையில் பரவலாக அவதானிக்கப்படக் கூடியதாக உள்ளது.

எனவே, வேலையின்மை மட்டுமன்றி கீழுழைப்பு நிலைமையும் நாடுகளுக்கு பிரச்சினைக்குரிய விடயங்களாகும். இவற்றை குறைப்பதற்கு நாடுகள் முனைப்புடன் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றமையும் அவதானிக்கப்பட்டுவருகிறது.

அடுத்து எழும் வினா யாதெனில் எந்த ஒரு நாடும் வேலையின்மையை முழுமையாக நீக்கிவிட முடியுமா? அதாவது வேலையின்மை வீதத்தை பூஜ்ஜியமாக குறைக்க முடியுமா என்பதாகும். கோட்பாட்டு ரீயாகவும் நடைமுறை ரீதியாகவும் வெளிப்படுத்தப்படும் சான்றுகள் வேலையின்மையைப் பூஜ்ஜியமாகக் குறைக்க முடியாது என்பதாகும். எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வேலையின்மையை முழுமையாக நீக்க முடியாது. பிளிப்ஸ் என்ற அறிஞர் ஒரு பொருளாதாரத்தில் எப்போதும் இயற்கை வேலையின்மை (Natural unemployment) நிலவலாம் எனக் கூறுகிறார். இது 5 சதவீதமாக இருக்கலாம் எனவும் கருதுகிறார்.

இந்த இயற்கை வேலையின்மை ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

01.     உராய்வு வேலையின்மை (Frictional unemployment) தொழில் தேடும் கால வேலையின்மை.

02.     கட்டமைப்பு வேலையின்மை (Structural unemployment)

உராய்வு வேலையின்மை என்பது ஒருவர் தான் தற்போது செய்யும் தொழிலை விட்டு மற்றுமொரு சிறந்த தொழில் தேடும் வரையில் வேலையற்றிருப்பதாகும். உதாரணமாக ஒருவர் தொழில்புரியும் போதே உயர்கல்வி அல்லது தொழில்சார் தகைமைகளை பெறும்போது புதிய தகைமைகளுக்கு பொருத்தமான ஒரு தொழிலை தேடும் நோக்கில் வேலையற்றிருப்பதாகும். இலங்கையில் இந்த நிலைமை இல்லை. ஏனெனில் ஒரு தொழிலில் ஈடுபடுபவர் புதிய தொழிலை தேடிப் பெற்று அதில் இணைந்து கொள்ளும் வரையில் ஏற்கனவே செய்துவரும் தொழிலை கைவிடுவது குறைவாகும்.

கட்டமைப்பு வேலையின்மை என்பது பொருளாதாரக் கட்டமைப்பில் அல்லது தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சிகளை பெறும் நோக்கில் தற்போதைய தொழிலில் இருந்து விலகி புதிய திறன்களை பெறும் வரையில் வேலையற்றிருப்பதாகும். இலங்கையில் இவ்வகையிலான வேலையின்மையும் குறைவென்றே கூறலாம். உதாரணமாக இலங்கையில் இலத்திரனியல் தட்டச்சு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதனை தொழில்செய்து கொண்டே பெரும்பாலானவர்கள் கற்றுக் கொண்டனர்.  வெகுசிலரே இலத்திரனியல் தட்டச்சு இயந்திரங்களை கற்றுக் கொள்ள முடியாமல் தொழிலை விட்டு விலகினர். தற்போது கட்டமைப்பு ரீதியான வேலையின்மைக்கு உதாரணமாக பட்டதாரி மாணவர்கள் தனியார் துறையில் தொழில்வாய்ப்புக்கான திறன்களைக் கொண்டிராதபடியினால் வேலையற்றிருப்பதை குறிப்பிடலாம். இதனை தொழிற்சந்தையில் தேவையான திறன்களுக்கும் தொழில் தேடுவோர் வசம் காணப்படும் திறன்களுக்கும் இடையில் பொருத்தப்பாடு இல்லாமையால் (Skill Mismatch) ஏற்படும் வேலையின்மை எனவும் கூறலாம்.

உராய்வு வேலையின்மையும் கட்டமைப்பு வேலையின்மையும் தற்காலிகமாக ஏற்படும் வேலையின்மை நிலைமைகளாகும். இவை குறுகிய காலப் பகுதியிலேயே நீக்கப்பட்டு விடலாம். இத்தகை வேலையின்மை நிலை ஒரு பொருளாதாரத்தில் இயற்கையாகவே காணப்படுவதாகும்.

மாறாக பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக – அதாவது வர்த்தக சகடோட்டம் (Business Cycle) காரணமாக ஏற்படும் வேலையின்மையே தீவிரமான பக்கவிளைவுகளை ஒரு பொருளாதாரத்தில் ஏற்படுத்தவல்லது.

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை, கொழும்பு பல்கலைக்கழகம்

Comments