![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/11/24/Capture--1.jpg?itok=_a36CIvN)
தேர்தல் திருவிழா முடிஞ்சுபோச்சு! நாட்டுக்கு நல்ல காலம் பிறந்திருக்குது! பேஸ்புக்கில் ஜோசியம் சொன்னவங்கள் எல்லாம் திகைச்சுப் போய் நிற்கிறார்கள். அவர்கள் எப்போதுமே தன்மையவாதச் சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதை இப்போது விளங்கிக்கொண்டிருப்பார்கள்.
இப்படித்தான் தேர்தலைப் பற்றிப் பெரியவர் ஒருவரிடம் பிரஸ்தாபித்தபோது, ஐயோ, கனபேர் மூளையைப் பயன்படுத்துவதே கிடையாது! எப்போதுமே புத்தம் புதிதாகவே வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். தேர்தலுக்கு முன்பே அந்தப் பெரிய வரும் என்னைப்போலவே அடித்துச் சொல்லியிருந்தார், இன்னார் வரமாட்டார்; வரவிடமாட்டார்கள் என்று. முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போதும் அலைபேசியில் அழைத்துச் சொன்னார், பாருங்கள் நாம் சொன்னபடிதான் நடக்கும்! என்று. அப்படி த்தான் நடந்தது. ஆனால், இந்த யதார்த்தத்தை ஏற்றுக்ெகாள்வதற்குச் சிலர் ஏனோ தயங்குகிறார்கள். அந்தச் சிலரில் பெரும்பாலான அரசியல்வாதிகளும் அடங்குகிறார்கள்.
மனிதர்களுள் இரு வகையினர் இருக்கிறார்கள். ஒன்றுதான் Sheep man, மற்றையது Super man. முதலாவது மந்தைக் கூட்டம். ஒருவர் எவ்வழியில் செல்கிறாரோ, அதே வழியில் மந்தைகள்போல் பின்தொடர்வது ஒரு இரகம். மற்றையது சுப்பர் மேன் போன்று வித்தியாசமான திறமைகளைக்ெகாண்ட தனி இரகம்.
எனவே, வருங்கால இளைஞர்கள் சுப்பர் மேனாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்பார்கள். ஆனால், இந்தச் சமூக வலைத்தளங்களில் யார் ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னாலும், அதற்கு எத்தகைய பின்னூட்டம் வருகிறதோ, அதைப் பார்த்து மற்றவர்களும் மந்தைகள்போல் அதையே பின்பற்றிக் கருத்துகளைப் பகிர்கிறார்கள். தேர்தல் முடிந்த பின்னரும் அவர்களின் அலப்பறைகள் ஓய்ந்தபாடில்லை! என்கிறார் நண்பர்.
ஒருவர் சொல்கிறார் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததற்கு அவர்களின் கட்சியினர்தான் காரணம் என்று. இன்னொருவர் சொல்கிறார், அவரின் விஞ்ஞாபனம்தான் காரணம் என்று. விஞ்ஞாபனம் மட்டுமல்ல அவரின் பரப்புரைகள் முதற்கொண்டு பிழையானது என்கிறார் நண்பர். நண்பரின் வீட்டுக்கு வந்த பிரேமதாசவின் ஆதரவாளர்கள், துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அதில் 2005ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரைக்குமான பருப்பு விலைப்பட்டியல் இருந்திருக்கிறது. மக்கள் நாட்டைப் பற்றிச் சிந்திக்கிறார்கள், இவர் பருப்பு விலை பற்றிப் பேசுகிறார்; பெண்களின் துவாய் பற்றிப் பேசுகிறார் என்கிறார் அவர்.
அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் பிரசாரமும் மக்களிடம் எடுபடவில்லை. அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை. வண்ண வண்ண வார்த்தை ஜாலங்கள் பாமர மக்களுக்குப் புரியுமா? விமல் வீரவன்சவுடன் ஜேவிபி அவுட்! மக்களுக்குப் புரியும் மொழியில் அல்லவா பேசவேண்டும்.
1999ஆம் ஆண்டு நந்தன குணதிலக 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக்கட்சியின் தலைவர் போட்டியிட்டு 418,553 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார். ஆக, 74,380 வாக்குகள்தான் இந்த இருபது ஆண்டில் அதிகரித்திருக்கிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில், நாட்டிலுள்ள 340 உள்ளூராட்சி மன்றங்களில் 239ஐக் கைப்பற்றியது. மூன்றாவது ஆண்டில் ஒரு ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் அளவிற்கு முன்னேற்றமடைந்திருக்கின்றது. அரசியல் என்றால், இப்பிடித்தான் இருக்க வேண்டும். முன்பெல்லாம் ஜேவிபியிடம் அரசியல் கற்க வேண்டும் என்று சொல்வார்கள். இப்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் அரசியல் கற்க வேண்டும் என்கிறார்கள். அந்தக் கட்சியை உருவாக்கி, வளர்த்தெடுப்பதில் முன்னின்று உழைத்தவர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ. அவரின் நேர்த்தியான முன்னெடுப்புகள்தான் இந்தளவு தூரத்திற்குக் கட்சியைக் கொண்டு வந்திருக்கிறது என்று சொல்கிறார் நண்பர்.
அதென்றால், உண்மைதான். நாட்டு நடப்புகளை, அபிவிருத்தி தொடர்பான தரவுகளை, புள்ளி விபரங்களையெ ல்லாம் விரல் நுனியில் வைத்துச் சொல்லக்கூடியவர் அல்லவா! நண்பர் சொல்வது மெத்தச் சரியென்றேன். இனிப் பாருங்கள், இலங்கை எங்கோ போகப்போகிறது!
எல்லாவற்றையும்விட, சமூக வலைத்தளங்கள் மீதான கவனமும் இருக்க வேண்டும். அவற்றை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் நாட்டின் அபிவிருத்திக்கு நன்மையாக இருக்கும். சீனா போன்ற நாடுகளில் உள்ளதுபோன்று இலங்கையர்களுக்ெகனத் தனித்துவமான ஒரு தொடர்பாடல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். அப்படி உருவாக்கப்பட்டால், போலியான நபர்கள் ஒளிந்திருந்து கருத்துகளைச் சொல்வதற்கு வாய்ப்பிருக்காது. ஊடகங்களில் தெரிந்துகொள்ள வேண்டியதை, ஊடகங்களிலேயே அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். இந்தச் சமூக வலைத்தள அலப்பறைகள் காரணமாக, இளையவர்கள் பத்திரிகை வாசிப்பதும் இல்லை. வானொலி, தொலைக்காட்சிகளில் செய்திகளை அறிந்துகொள்வதும் இல்லை. ஆகவே, இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்பது நண்பரின் ஆதங்கம்!
ஆனால் ஒன்று, இளையவர்கள் தங்களின் திறமைகளை சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளிப்படுத்தி, வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்கள்.
அவ்வாறு காத்திரமான பங்களிப்புகளைச் செய்வதை விடுத்து அரசியல்வாதிகளை விமர்சிப்பதும், பிடிக்காதவரைத் தூற்றுவதும், செய்திகளை வெளியிடுவதுமாய் நேரத்தை வீணாக்குவானேன்? செய்திகளையும் விமர்சனங்களையும் ஊடகங்கள் பார்த்துக்ெகாள்ளும்! நீங்கள் உங்கள் வேலையைச் செய்யுங்கள்!